என் முதல் சினிமா அனுபவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 26, 2022
பார்வையிட்டோர்: 19,544 
 

என் முதல் சினிமா அனுபவம் ஸ்ரீரங்கத்தில் ஒன்பதாவது வகுப்பு அதாவது ஃபோர்த் ஃபார்ம் படிக்கும்போது ஏற்பட்டது. தேர் முட்டியின் அருகில் அச்சு கடை இருக்குமே அங்கே போய் எதுவும் நோக்கமில்லாமல் நின்று ஜிம்மி என்னும் தெரு நாய்க்கு காய்ந்த பிஸ்கட் போட்டுக்கொண்டிருக்கும்போது அச்சு என்னை விளித்து “ஏய் சினிமான்னா உனக்கு இஷ்டம்தானே” என்றான்.

இந்த அச்சு என்பவனைப் பற்றி நிறையக் கதைகளில் சொல்லி யிருக்கிறேன். ஸ்ரீரங்கத்தில் இரண்டாவது மலையாளி. முதல் மலையாளி ஸ்ரீரங்கம் ஐஸ்கூல் வீவிங் மாஸ்டர். அவர், வசந்தா என்றொரு பெண்ணோடு வம்பு பண்ணி விலக்கப்பட்டதை மற்றொரு கதையில் சொல்லியிருக்கிறேன். இந்த அச்சுதன் நாயர் ‘இந்து நேசனி’ல் வந்த டாபர் மாமா வேலை போன்ற பிரயோகங்கள் எல்லாம் எனக்கு அந்தச் சின்ன வயசிலேயே பரிச்சயம் ஆனதுக்குக் காரணகர்த்தன். எப்போதும் பன்னீர்ப் புகையிலை வாசம் பொங்க லேசான கறைபடிந்த சிரிப்புடன் என் போன்ற பையன்களைக் கண்டால் முதல் முதல் கிச்சுக் கிச்சு மூட்டிக் கசக்குவான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஸ்ரீரங்கத்தில் தலைமுறைக் கணக்கில் இருந்தாலும் லேசான மலையாளத் தொடுகை பேச்சில் இருக்கும்.

அப்பேர்பட்ட அச்சு, சினிமா பற்றித் திடீர் என்று கேட்டதின் முழு அர்த்தமும் விளங்காமல் “என்ன அச்சு எதுக்கு கேக்கறே” என்றேன்.

“சுதேசமித்திரன்ல விளம்பரம் வந்திருக்கு, நோக்கு” என்று அரை எட்டாக மடித்துப் படித்தான்.

வீட்டிலேயே சினிமாப் பார்க்கலாம்

வீட்டிலேயே பலவகைத் திரைப்படங்களையும் கண்டு களியுங்கள். ஜெர்மன் மெஷின் மூலம் எந்த மொழியிலும் சினிமாப் படங்கள் பாருங்கள். கண்டிப்பாகப் பணம் அனுப்ப வேண்டாம். உங்கள் வீட்டு விலாசம் மட்டும் அனுப்பவும். பதினைந்து தினங்களில் உங்களைத் தேடி ஒரு விபிபி வரும். அதற்கு ரூபாய் இருபத்தைந்து செலுத்திப் பெற்றுக்கொள்ளுங்கள். திருப்தி இல்லையேல் கண்டிப்பாக பணம் வாபஸ். ஒரு ஹாலிவுட் பிலிம் சுருள் இலவசம்.

– என்று போட்டிருந்தது. அருகில் டாகரோ டைப்பில் ஒரு ஸ்திரீ கஷ்க்கத்தை உயர்த்திக்கொண்டு மரத்தருகில் நிற்க ஒரு உத்தமமான ஜெர்மன் சினிமா ப்ரொக்ஜெக்டரிலிருந்து வெளிச்சம் அவள் மேல் விழுந்து என் கனவுலக சஞ்சாரங்கள் சிலவற்றை உசுப்பின. அருகிலேயே என்னைப்போலச் சின்னப் பையன்கள் சந்தோஷமாக சினிமாப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“அவனுக்கு அட்ரஸ் மட்டும் எழுதறது. உடனே ப்ரொக்ஜக்டர் ஒரு சுருளோட அனுப்பறது.”

“என்ன விலை இருக்கும்?”

இருபத்தைந்து ரூபாய் என்பது அந்த நாட்களில் பெரிய தொகை. ஒரு பவுன் தங்கத்தின் விலை.

“அத்தனை காசா?”

“ஒரு ஆளுக்கு ரெண்டணா டிக்கெட் வெச்சுக்க. ஒரு நாளைக்கு எட்டுபேர் பார்க்க வராதா சினிமைக்கு? அதனால இருபத்தஞ்சு நாள்ள அசல் வந்துரும்; சேஷமெல்லாம் லாபம்!” என்றான் அச்சுதன் நாயர். என்னைப் பார்த்து “நீதான் இங்கிலீஷ் எழுதுவே; நீயே எழுதிப்போடு ஓரண்ணம் கார்டில்”

“பதினைஞ்சு நாள்ள ப்ரொஜெக்டர் வந்துடுத்துன்னா யார் பணம் கொடுக்கறது அச்சு?”

“கேட்டுக்கோ, சித்திரை வீதி சினிமா சங்கம்னு ஒரு சங்கம் தொடங்கு. அதில சந்தா சேரு. நான் முதன் முதலா ஒரு ரூபாய் தரேன்” என்றான்.

எனக்கு உற்சாகம் மேற்பட்டு ரங்கன் கடையில் போய் ஒரு போஸ்ட் கார்டு வாங்கிவந்து “டியர் ஸார் ப்ளீஸ் ஸெண்ட் மி ஒன் ஜெர்மன் மேக் சினி ப்ரொக்ஜெக்டர் வித் பல்ப் அன் ஃபில்ம். ஐ அண்டர்டேக் டு பே ருப்பீஸ் ட்வெண்டி ஃபைவ் அன் ஆனர் த விபிபி பார்ஸல்” என்று அதில் கண்டுள்ள வாசகத்தை காப்பி பண்ணி எழுதித் தபாலிலும் சேர்த்துவிட்டேன். இதனிடையில் “ஸ்ரீரங்கம் சினிமா சங்கம்” ஆரம்பித்தேன். நொண்டி ராமு ரெண்டணா தான் கொடுத்தான். “வனமோகினி” காட்டினா இன்னும் ரெண்டணா சேர்த்துக் கொடுப்பதாக உறுதியளித்தான்.

“வனமோகினில தவமணி தேவி வருவா பாரு, க்ளியரா எல்லாம் தெரியும்” என்றான்.

“எனக்கு இல்லைப்பா. நல்ல தரமுள்ள படங்கள்தான் போடுவோம்.”

“தியேட்டர் எங்க வெக்கப்போறே?” –

“உங்க வீட்டு மாடிலதாண்டா. அங்கதான் யாரும் டிஸ்டர்பன்ஸ் இல்லாம ….”

“அய்யோ எங்க பாட்டி கொன்னுடுவா.”

“பாட்டிகிட்ட சினிமா காட்டறதைப் பத்தி ஏன் சொல்லணும். ஒரு நாளைக்கு மூணு ஷோ போட்டா எட்டு நாள்ள போட்ட பணத்தை எடுத்துடலாண்டா” என்றான் பேபி.

சுரேந்திரன் தன்னிடம் ஒரு இங்கிலிஷ் பிலிம் சுருள் இருப்பதாகவும் ‘டாம் டெய்லர்’ நடித்ததாகவும் சொன்னான். பேசினார்களே தவிர யாரும் பணம் கொடுக்கவில்லை. ஓரணா ரெண்டணா என்றுதான் தந்தார்கள். மொத்த வசூல் அச்சு கொடுத்த ரூபாயையும் சேர்த்து இரண்டு ரூபாய் பத்தணாதான் வந்திருந்தது. வேண்டியது இருபத்தைந்து. அந்த நாள் நெருங்க நெருங்க பலவித மாற்று சாத்தியக்கூறுகளை யோசித்தோம், “விபிபி வேண்டாம்னு சொல்லிட்டா?”

“நேர வந்து மென்னியைப் புடிச்சுடுவான்.”

“அம்ருத்ஸர்ல அட்ரஸ். வரமாட்டான்.”

“அம்ருத்ஸர்ங்கறது எங்கருக்கு?”

புஸ்தகத்தில் அம்ருதஸரசில் எனக்கு தங்கக்கோவில்தான் தெரியும். ஜெர்மன் மிஷின்கள் விற்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது.

எனக்கும் சினிமாவுக்கும் ஏதோ ஒரு ராசி இருந்திருக்கிறது. திடீர் என்று என் சினிமா உலகப் பிரவேசத்தின் சிக்கல் தீர்ந்தது. என் அண்ணனை நேஷனல் காலேஜில் அட்மிஷன் செய்து அவனுக்கு பணம் கட்டியிருந்தது. அதோடு மெடிக்கல் ஸீட்டு கிடைத்ததில் காஷன் டெபாஸிட்டை மட்டுமே திருப்பித் தருவதாக நேஷனல் அப்பாவுக்கு எழுதியிருக்க, அப்பா அப்போது பைக்காராவில் இருந்ததால் என்னிடம் கடிதத்தை அனுப்பி அந்த பணத்தைப் போய் வாங்கிக்கொண்டு வந்துவிடு என ஆத்தரைஸேஷன் கடிதத்தை அனுப்பியிருந்தார். பாட்டிக்கு அந்த லெட்டர் புரியாததால் என்னிடம் கொடுக்கத் தற்காலிகமாக அந்த காஷன் டெபாஸிட் வாபஸ் பணம் ரூபாய் முப்பத்தைந்து வந்தது. அதை ஸ்வாஹா பண்ணி விட்டதால் எனக்கு ப்ரொஜெக்டர் வாங்கப் பணம் கிடைத்தது. இதை பாட்டியிடம் சொல்லாமல் கமுக்கமாக அமுக்கி வைத்து விட்டேன். என்ன ஒரு வாரத்தில் போட்ட பணம் திரும்ப வரப்போகிறதே!

ஆவலுடன் தினம் தபால் கோபால்ராவிடம் விபிபி வந்ததா என்று விசாரித்துக்கொண்டிருக்க, அந்த நாளும் வந்தது. ஏறக்குறைய இரண்டடி கனசதுர அட்டைப்பெட்டி வினோதமான முத்திரை களுடன் பெரிய பெரிய ஸ்டாம்புகள் எல்லாம் ஒட்டி அதனுடன் ரசீது இணைக்கப்பட்டு எங்கள் எதிர்காலக் கனவுகளை கட்டியம் கூறிக்கொண்டு வந்தது.

அச்சு கடையில்தான் அதற்குப் பணம் கொடுத்துவிட்டு கை யெழுத்து போட்டுவிட்டு சுகமான அந்த சுமையை நாங்கள் திறந்தோம்.

முதலில் மேல்மூடியை கஷ்டப்பட்டுத் திறந்ததும் வைக்கோல் போல சமாச்சாரம் வைத்து அடைக்கப்பட்டிருந்தது. வைக்கோலைப் பிரிக்கப் பிரிக்க மேலும் மேலும் வைக்கோலே வந்துகொண்டிருந்தது. “என்னடா ப்ரொஜெக்டரைக் காணோம்.”

“இருடா பொறுமையாக இரு, பத்திரமா பாக் பண்ணியிருக்கான்.”

ஒரு மாட்டுக்கு முழு தீவன அளவுக்கு வைக்கோல் வெளிவந்ததும் ஓர் உருது பேப்பரில் மூடிய சமாச்சாரம் தென்பட்டது. அதை ஆவலுடன் திறந்ததில் –

சினிமா ப்ரொஜெக்டர்!!!

“ரொம்ப சின்னதா இருக்கே?”

“பிலிம் எங்கே ?”

தனியாய்ப் பொட்டலத்தில் இருந்த பிலிம் சுருள் ஒரு பத்தடி நீளம் இருந்தது. கறுப்பு கலரில் ஒரு பிஸ்கெட் பெட்டி சைஸுக்குப் பெட்டி, அதன் நடுவில் ஒரு ஹோல்டர். அதில் ஒரு இருபத்தைந்து வாட் பல்பு சொருகியிருக்க அதன் மின் இணைப்புக்கு மஞ்சள் சிவப்பு ஒயர் முறுக்கல். அப்புறம் காட்டராக்ட்காரர் கண்ணாடிபோல ஒரு லென்ஸ் குழலில் பொருத்தியிருக்க அதனருகில் ஸ்ப்ராக்கெட் வைத்த இரு தகரச் சக்கரங்கள்.

“இவ்வளவுதானா? இதுக்கா இருபத்தஞ்சு ரூபாய்?”

“லென்ஸே இருபது ரூபாய் இருக்கும் தெரியுமா?” என்றான் பேபி, விஷயம் தெரிந்தவன்போல.

“பிலிம்தான் கொஞ்சமா இருக்கு, என்ன பிலிம்?” என்று கூட இணைத்திருந்த கடிதத்தைப் பிரித்தேன். என் பெயர் கூப்பிட்டு, டியர் ப்ரெண்ட் என்று என்னை விளித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆர்டர் வந்திருப்பதால் ஒரு தமிழ் பிலிமின் துண்டு இணைக்கப்பட்டிருக்கிறது என்று எழுதி அந்த அம்ருத்ஸர் கம்பெனி யின் மற்ற உற்பத்திகளான ரப்பர் ஸ்டாம்ப் மெஷின், வீட்டிலேயே ப்ரிண்டிங் ப்ரஸ் போன்றவைகளின் விளம்பரமும் இணைத்திருந்தது.

அந்த பிலிம் ‘ஞான சவுந்தரி’யில் எம்.வி. ராஜம்மா என்று ராமு ஆராய்ந்து சொன்னான்.

அந்த பிலிமை எப்படிச் சுருட்டிப் பொருத்துவது எப்படி ஃபோகஸ் போன்ற சமாச்சாரங்கள் செய்வது என்பதெல்லாம் இப்போது இரண்டாம் பட்சமாகிவிட்டது. இதை எந்த வீட்டு மாடியில் கொண்டுபோய் முதல் வெள்ளோட்டம் பார்ப்பது என்பது பற்றி பிரச்சினை எழுந்தபோது என் வீடுதான் அதற்குத் தோதானது என்று தீர்மானிக்கப்பட்டு எல்லா வைக்கோலையும் மாட்டுக்குப் போட்டுவிட்டு அட்டைப் பெட்டிக்குள் ப்ரொஜெக்டரைப் போட்டுக் கொண்டு மறைத்து அதை நாய்க்குட்டிபோலத் தூக்கிக்கொண்டு நைஸாக மாடிப்படி வழியாக மேலே செல்லலாம் என்றால், பாட்டி திண்ணையில் உட்கார்ந்துகொண்டு மற்றொரு பாட்டியுடன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் சன்னதியில் நடந்த உபன்யாசத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள்.

நான் பாலுவிடம் பெட்டியைக் கொடுத்துவிட்டு அடுத்தவீட்டு மாடி வழியாகக் குதித்து வரும்படி சொல்லிவிட்டு, ஒன்றிரண்டு பாடப்புத்தகங்களை எடுத்துக்கொண்டு, “பாட்டி நான் மச்சுக்குப் போய்ப் படிக்கப்போறேன்” என்று சொல்லிவிட்டு மேலே வந்தோம். சாயங்கால வேளை. இருண்டுகொண்டிருந்தது. கதவைச் சார்த்திவிட்டு நான், பேபி, பாலு, ராமு நால்வரும் அந்த பிலிம் சுருளை செருகி ப்ளக் கனெக்சன் கொடுக்க ப்ளக் பாயிண்டை தேடிக் கண்டுபிடித்து அதனுள் ப்ளக்கைச் செருகியபோது மெலிதான வெளிச்சம் எதிரே இருந்த சுவரில் எம்.வி. ராஜம்மா தேசலாகத் தெரிந்தபோது பேபி அதன் கழுத்தைத் திருகிப் பார்த்தான். திடீர் என்று பொம்மை ஷார்ப்பாகி ஞானசவுந்தரி எதிரே சுவரில் தெரிந்தாள்.

சினிமாவைக் கண்டுபிடித்த எடிஸன் எப்படி உணர்ந்திருப்பான் என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது. முதன் முதலாக எனக்கு ஒரு நவீன பொறியியல் கருவியிடம் பரிச்சயம். இதுவரை நான் பார்த்த மிஷின் எல்லாம் காப்பிக்கொட்டை அல்லது நெல் மிஷின்தான். முதன் முதலாக ஒரு மாயம் நிகழ்ந்து வந்தமைந்த பிம்பத்தில் என் வீட்டின் சுவரில் எம்.வி. ராஜம்மா என்கிற பிரபல நடிகை சிரிக்கிறாள். மெல்ல அந்தச் சக்கரத்தை சுழற்றிப் பார்த்தோம். எம்.வி. ராஜம்மா எம்பி எம்பிக் குதித்தாள். “சரியான ஸ்பீட்ல சுத்தணும்டா” என்று பேபி என்னும் எக்ஸ்பர்ட் சொல்லி வேக வேகமாகச் சுற்றிய போது ஏதோ ஒரு தற்செயலான கதியில் அந்தப் பெண்ணின் உதடுகள் அசைந்தன! புருவங்கள் அகன்றன!!

அந்தக் கணத்தின் சந்தோஷம், இப்போதும் என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது. அதுதான் என் சினிமா வாழ்வின் க்ளைமாக்ஸ், உச்சகட்டம். அதன்பின் நிகழ்ந்ததை சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். பாட்டி கீழே இருந்து “என்னடா மாடில பண்றீங்க. தீச வாசனை வரதே” என்று கேட்டாள்.

அப்போதுதான் அந்த வாசனையை உணர்ந்து எங்கள் கருவியைப் பார்த்துபோது அதன் கருப்பு பெயிண்ட் எல்லாம் பல்பின் சூட்டில் உருகிக்கொண்டிருந்தது. அதை தொடப்போய் ஷாக்கா சூடா தெரியவில்லை. கையை உதறிக்கொண்டேன். அது மட்டுமில்லாமல் அத் தகரப்பெட்டி சூடு தாங்காமல் அதன் சதுரத் தன்மையை இழக்கச் சட்டென்று எங்கோ ஷார்ட்டாகி பல்பிலிருந்து கொஞ்சம் நெருப்புப் பொறி பறக்க சின்னதாக வறுப்பதுபோல் சப்தம் கேட்டு அந்த ராஜம்மா சுருள் பற்றிக்கொண்டு கற்பூர வாசனையுடன் எரிந்தது.

அதேசமயம் ஃப்யூஸ் போய் அந்த வட்டாரத்துக்கே கரண்ட் இல்லாமல் போய்விட்டது. போல் ஃப்யூஸ் போயிருக்க வேண்டும். நாங்கள் ஆடு திருடிய கள்ளர்கள் போல ஓசைப்படாமல் வந்து விட்டோம். அப்புறம் எஸ்.எம்.ஈ.எஸ். ஸிகாரர்களுக்குச் சொல்லி அவர்கள் வந்து ஃப்யூஸ் மாற்ற ராத்திரி எட்டாகிவிட்டது.

இருட்டில் தண்ணீர் கொட்டி அணைத்துப் பெட்டியின் மிச்சங்களை வைத்துக்கொண்டு அச்சுதன் நாயர் கடைக்கு மறுநாள் சென்று அங்கலாய்த்ததும் அம்ருத்ஸர்காரர்களுக்குப் புகார் எழுதியதும் அவர்களிடமிருந்து பதில் வராததும் கதைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்.

இன்று ஏறக்குறைய நாற்பத்தைந்து வருஷம் கடந்தபின் அந்த ‘மேஜிக்’ கணம் என்னுள் மிச்சம் இருக்கிறது. எத்தனையோ சினிமா பார்த்துவிட்டேன். ப்ரீவியூ தியேட்டர்களில், சர்ரவுண்டு சவுண்டு, த்ரிடி, டபுள் பாஸிட்டிவ், மூவியோலா என்று சினிமாவின் சகல ஜாலங்களையும் பார்த்துவிட்டேன்.

அந்த கணத்தின் சந்தோஷம் திரும்பக் கிடைக்கவில்லை.

சட்டென்று ராஜம்மா உயிர் பெற்று உதட்டை அசைத்த கணம்!

– 1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *