அன்புள்ள தங்கவேலு,
பத்து வருஷங்களுக்குப் பிறகு உனக்கு லெட்டர் எழுதுகிறேன். இவ்வளவு காலமாக என்னிட மிருந்து ஒரு சேதியும் வராததைப் பற்றி நீ ஆச்சரியப்பட்டிருக்கலாம். சென்ற பத்து வருஷங்களாக நான் இந்தியாவிலேயே இல்லை. போலீஸ§க்குப் பயந்து, தலைமறை வாக ரங்கூனில் இருந்தேன். நேற்றுதான் சென்னை வந்தேன். வந்தது முதல் உன்னைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக்கொண்டு இருக்கிறேன்! (உன்னைத் தவிர வேறு நண்பன் ஏது?) ஆனால், உன் வீட்டுக்கு நேரில் வருவது உசிதமில்லை. ஆகவே, உன்னை மூர்மார்க்கெட்டில் நாளை மாலை 6 மணிக்கு எதிர்பார்க்கிறேன். முன்பு நாம் வழக்கமாகச் சந்தித் துப் பேசும் மரத்தடியில் நீ வந்து காத்திரு. தவறாமல் வா!
இப்படிக்கு,
உன்னை மறவா நண்பன்,
நடராஜன்.
தங்கவேலுவும் நடராஜனும் பால்யத்தில் நண்பர்களாகத் தான் இருந்தார்கள். அதற்காக, இப்போது ஒரு நல்ல லாபத்தைக் கை நழுவ விடுவதற்குத் தங்கவேலு தயாராக இல்லை!
ஒரு கொள்ளைக் கேஸில் சம் பந்தப்பட்டான் என்று நடரா ஜனை போலீஸார்கள் தேடிக் கொண்டிருந்த விஷயம் அவனுக் குத் தெரியும். அவனைக் கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 500 ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட் டிருந்ததும் தெரியும். ஆகவே, தன்னைச் சந்திக்கப் போகும் நடராஜனைப் போலீஸ்காரர் களிடம் பிடித்துக் கொடுத்து விட்டு 500 ரூபாய் பரிசைப் பெறுவதுதான் புத்திசாலித்தனம் என்று தங்கவேலு தீர்மானித்து விட்டான்.
சரியாக 6 மணி. நடராஜன், தங்கவேலு இருந்த இடத்திற்கு வந்தான். வந்தவன் சட்டென்று ஒரு கடிதத்தைத் தங்கவேலுவின் பையில் போட்டுவிட்டு, “என் னைப் போலீஸ்காரர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஆகவே, இந்த இடத்தில் பேசு வது ஆபத்து! இந்த லெட்டரில் விஷயங்களை எழுதியிருக்கி றேன். அதில் குறிப்பிட்டிருக்கும் இடத்திற்குக் கட்டாயமாக வா!” என்று அவசரமாகக் கூறிவிட்டு, ஒரே பாய்ச்சலில் அங்கிருந்து ஓடினான்.
ஆனால், தங்கவேலு தகவல் தந்திருந்த போலீஸ்காரர்கள் லேசுப்பட்டவர்களா? நடராஜ னைப் பின்தொடர்ந்து ஓடி, ஒரே நிமிஷத்தில் அவனை மடக்கிவிட்டார்கள்.
500 ரூபாம் இனாம் கிடைக் கப்போவது பற்றித் தங்கவேலு அப்போது அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆனால், நடராஜன் தந்த கடிதத்தைப் படித்துப் பார்த்தபோது, அவனுக்கு உண்டான துயரத்திற்கும்கூட அளவே இருந்திருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்புள்ள தங்கவேலு,
கொள்ளையில் நானும் சம்பந் தப்பட்டவன் என்று போலீஸார் நினைத்திருக்கிறார்கள். என்றாலும், நான் உண்மையில் நிரபராதி என்பது கூடிய சீக்கிரம் ருசுவாகப் போகிறது. வக்கீலை வைத்து கேஸ் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறேன். நான் மணக்கப்போகும் பெண் ணின் தகப்பனார் என் விஷயமாக சிரத்தை கொண்டிருக்கிறார். அவர் பெரிய பணக்காரர். ஆதலால், நான் மறுபடியும் மனிதனாக உலகத்தில் தலை நிமிர்ந்து நடமாட முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
என் உறவினர் ஒருவரிடம் என் பனம் 16,000 ரூபாய் இருக்கிறது. என் நட்புக்கு அறிகுறியாக அதை அப்படியே உன்னிடம் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன். நாளைக் காலையில் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் நீ என்னைச் சந்தித்தால், நேரில் விவ ரங்களைச் சொல்கிறேன். உடனே சென்று அவரிடமிருந்து நீ அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ள லாம். ஏழ்மை நிலையில் இருக்கும் உனக்கு இந்த அற்ப உதவியையா வது செய்ய முடிந்திருப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சி!
இப்படிக்கு
உன் நன்மையைக் கோரும்,
நடராஜன்.
– ஆனந்த விகடனில் 40, 50 -களில் பல ஒரு பக்கக் கதைகளை எழுதியவர் ‘சசி’. ( இயற்பெயர்: எஸ்.ஆர்.வெங்கடராமன்). ‘ரமணி’ என்ற பெயரிலும் ‘திண்ணைப் பேச்சு’ கட்டுரைகளை எழுதினார். 14 வருடங்கள் விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்த ‘சசி’ 25 ஏப்ரல் 1956 இல் காலமானார்.