ஆறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மோகனா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 1,956 
 
 

ஆறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மோகனா சொன்ன கலியாணமாகாத கலியபெருமாள் கதை

“கேளாய், போஜனே! ஒரு நாள் மாலை எங்கள் விக்கிரமாதித்தர் ஊட்டியில் உலா வந்துகொண்டிருந்த காலை, அவருக்கு எதிர்த்தாற்போல் நெற்றியில் திருமண்ணுடன் ‘உங்களைப் பார்க்கத்தான் அடியேன் வந்துகொண்டிருக்கிறேன்!’ என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரியவர் வியர்க்க விறுவிறுக்க வந்து நிற்க, ‘யார் நீங்கள், என்ன சேதி?’ என்று விக்கிரமாதித்தர் ஒன்றும் புரியாமல் கேட்க, ‘உட்காருங்கள், சொல்கிறேன்!’ என்ற அவரை உட்கார வைத்து, தாமும் உட்கார்ந்து திருமண்காரர் சொன்னதாவது:

‘உயர்தரப் பள்ளிக்கூடம் ஒன்றின் தலைமை ஆசிரியன் நான்; பெயர் பள்ளிகொண்டான். அதனால் பள்ளிக் கூடத்துக்கு வந்ததும் அடியேன் பள்ளி கொள்ள ஆரம்பித்து விடுவேனோ என்று நீங்கள் தவறாக நினைத்துவிடக் கூடாது, அடியேனுக்கு வீட்டிலும் தூக்கம் வருவது கிடையாது; பள்ளிக்கூடத்திலும் தூக்கம் வருவது கிடையாது. காரணம். என் ஒரே மகன் கலியபெருமாளைப் பற்றிய கவலைதான்!’ என்று அந்த ‘அடியேன்’ தம் நெற்றி வியர்வையை நிலத்தில் விழ வொட்டாமல் துடைத்துக்கொண்டு மேலும் சொல்லலுற்றார்:

‘எஸ். எஸ். எல். ஸி. பரீட்சையை ஏழாவது முறையாக எழுதிய பின்னும் தோல்வியுற்ற என் திருமகனை, ‘இன்னும் எத்தனை முறை இப்படி எழுதுவதாக உத்தேசம்? எதற்கும் ஓர் எல்லை வேண்டாமா?’ என்று நான் கேட்க, ‘இதுகூடவா அப்பா உங்களுக்குத் தெரியாது? அதற்கு இப்போது எல்லை என்று எதுவும் இல்லையாம்; யார் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாமாம்!’ என்று அவன் எனக்குத் தெரியாத எதையோ ஒன்றைச் சொல்வது போல் சொல்ல, ‘அதைக் கேட்கவில்லையடா, மண்டு! நீ அந்த எஸ். எஸ். எல். ஸி. யையாவது காலத்தோடு எழுதிப் பாஸ் பண்ணினால்தானே என்னைப்போல ஒரு வாத்தியாராகவாவது வந்துத் தொலையலாம்?’ என்று நான் அவன் மேல் எரிந்து விழ, ‘நான் ஏன் அப்பா வாத்தியாராக வேண்டும்? எனக்குத்தான் வீட்டிலேயே தூக்கம் வருகிறதே!’ என்று அவன் சொல்ல, எனக்கு வந்த ஆத்திரத்தில் நான் என்னை மறந்து, ‘சாப்பிட்டவுடனே பள்ளிக்கூடத்துக்குப் போனால் தூக்கம் வராமல் வேறு என்னடா வரும்?’ என்று அவன் கன்னத்தில் ஒரு தட்டு தட்ட, அதற்காக அவன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டே ஓடிப் போவா னாயினன்.

ஒரு நாள் ஆயிற்று; இரண்டு நாள் ஆயிற்று. மூன்றாவது நாள் காலை வரை நான் அவனைத் ‘தேடு, தேடு’ என்று தேடுவதும், தினசரிப் பத்திரிகைகளைக் கண்டால் பரபரப்புடன் எடுத்துப் புரட்டிப் பார்ப்பதுமாக இருந்தேன். அவனும் கிடைக்கவில்லை; அவன் ரயிலின் முன்னால் விழுந்தான் என்றோ, லாரியின் முன்னால் விழுந்தான் என்றோ நான் பார்த்த பத்திரிகைகளில் அவனைப் பற்றிய செய்தியும் வரவில்லை. நான்காவது நான் காலை; ‘மெய்வழித் தொண்ட’ரைப் போல் ஆரஞ்சு வண்ணத் தலைப்பாகையுடன் காட்சியளித்த ஒருவன் என்னைத் தேடி வந்தான். ‘நீங்கள்தானே பள்ளி கொண்டான்?’ என்று என்னைக் கேட்டான். ‘அடியேன்தான்!’ என்றேன் நான். ‘இந்தாருங்கள்!’ என்று அவன் என்னிடம் ஒரு கடிதத்ததைக் கொடுத்தான். அதில் கண்டிருந்ததாவது:

‘போலீசாருக்கு; என் மரணத்துக்கு நானோ, என் தாயாரோ காரணமல்ல; எஸ். எஸ். எல். சி பரீட்சையும் என் அப்பாவும்தான் காரணம். ஒழிக, என் அப்பா! ஒழிக, எஸ். எஸ். எல். ஸி. பரீட்சை!
இப்படிக்கு,
கலியபெருமாள்.’

இந்தக் கடிதத்தைப் படித்ததும் ‘ஐயோ, மகனே!’ என்று நான் அலறிக் கொண்டே கீழே சாயப் போக, ஆரஞ்சு வண்ணத் தலைப்பாகைக்காரன் அடியேனைத் தாங்கிப் பிடித்து, ‘கவலைப்படாதீர்கள்! உங்கள் மகனுக்கு ஒன்றுமில்லை; செளக்கியமாகவே இருக்கிறார்!’ என்று அபயம் அளிக்க, ‘எங்கே, எங்கே.’ என்று நான் துடிக்க, ‘இங்கே, இங்கே!’ என்று அவன் என்னை எங்கேயோ அழைத்துக்கொண்டு போவானாயினன்.

வழியில், ‘நீ யாரப்பா? எங்கே இருக்கிறாய்? அவனை எங்கே பார்த்தாய்?’ என்று நான் அந்தப் பிள்ளையாண்டானை விசாரிக்க, ‘நான் ஒரு புகழ் பெற்ற எல். டி.சி. அதாகப் பட்டது, ‘அஸிஸ்டெண்ட்’ என்று சொல்லா நின்ற லோயர் டிவிஷன் கிளார்க்கு; பெயர் கனகம். அடுத்த தெருவில் குடியிருக்கிறேன். நேற்று மாலை நான் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு ஏரிக் கரை வழியாக வந்து கொண்டிருந்தபோது ஏதோ ‘சலசல’வென்று சத்தம் கேட்டது. சுற்று முற்றும் பார்த்தேன்; எனக்கு அருகிலிருந்த ஒரு மரத்தின்மேல் உங்கள் மகன் உட்கார்ந்து ‘திருதிரு’வென்று விழித்துக் கொண்டிருந்தார். ‘பேயோ, பிசாசோ?’ என்று நான் அவரைக் கண்டு பயப்பட, அவர் என்னைக் கண்டு பயந்து சட்டென்று கீழே குதித்தார். குதித்த மனுஷன் நேராகத் தரைக்கு வரவில்லை; கழுத்தில் மாட்டிய கயிற்று வளையத்துடன் மரத்திலேயே தொங்கினார். ‘அடப் பாவமே! இவர் தூக்குப் போட்டுக் கொள்ள வந்த மனுஷன் போலிருக்கிறதே?’ என்று நான் ஓடிப் போய் அவர் கழுத்திலிருந்த கயிற்றைக் கழற்ற, ‘என்னை விடு, விடு என்னை!’ என்று அவர் குதிக்க, ‘கொஞ்சம் பொறுங்கள்’ என்று நான் ‘அந்தக் கயிற்று வளையம் அவருடைய கழுத்தை ஏன் அதுவரை இறுக்காமல் இருந்தது?’ என்று கவனிக்க, அதிலிருந்த முடி சுருக்கு முடியாவிட்டதால் கெட்டி முடியாயிருக்கவே, ‘என்ன ஆளய்யா, நீர்! சுருக்கு முடிகூடப் போடத் தெரியாமலா தூக்குப் போட்டுக் கொள்ள வந்துவிட்டீர்?’ என்று நான் சிரித்துக்கொண்டே அந்த முடியை அவிழ்த்து, அதற்குப் பதிலாக மரத்திலிருந்து கீழே குதித்ததும் கழுத்தை ஒரே இறுக்காக இறுக்கக்கூடிய ‘ஏ ஒன்’ சுருக்கு முடியாகப் போட்டு, ‘ஏதோ என்னாலான உதவி; இந்தாருங்கள்!’ என்று அவரிடம் கொடுக்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ‘என்னை விடு, விடு என்னை!’ என்று குதித்தவர் இப்போது அதைப் பார்த்ததும் திடுக்கிட்டு, ‘எதற்கு?’ என்று கேட்டுக்கொண்டே என்னைப் பார்த்து ‘விழி, விழி’ என்று விழிக்க, ‘தூக்குப் போட்டுக் கொள்ள!’ என்று நான் விளக்க, ‘ஊஹும், உன்னைப் பார்த்த பிறகு எனக்குத் தூக்குப் போட்டுக் கொள்ளவே தோன்றவில்லை!’ என்று அவர் இளிக்க, ‘ஏன்?’ என்று நான் பின்னும் கேட்க, ‘வாழ ஆசை வந்துவிட்டது எனக்கு!’ என்று சொல்லிக் கொண்டே அவர் தம் சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்துக் கிழித்தெறியப் போவாராயினர். சட்டென்று பாய்ந்து நான் அதைத் தடுத்து, அந்தக் கடிதத்தை அவரிடமிருந்து பிடுங்கி என்னவென்று பார்க்க, ‘ஐயோ, அதைப் போலீசாரிடம் கொடுத்துவிடாதே! அவர்கள் என்னைக் கொண்டு போய்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விடுவார்கள்!’ என்று அவர் கத்த, ‘இல்லையில்லை; திருமகனைக் காணாமல் தெருத் தெருவாய்ச் சுற்றிக் கொண்டிருக்கும் உங்கள் அப்பாவிடம்தான் இதை நான் காட்டப்போகிறேன்!’ என்று நான் அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு இங்கே வந்தேன்!’ என்று அவன் சொல்ல, ‘தக்க சமயத்தில் வந்து என் மகனைத் தடுத்தாட் கொண்டஉனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?’ என்று நான் அவனை அப்படியே தழுவிக்கொள்ளப் போக, அவன் சட்டென்று விலகி, ‘சொன்னதே போதும், சொன்னதே போதும்’ என்று அவசர அவசரமாக அருகிலிருந்த ஒரு சிறு வீட்டுக்குள் நுழைவானாயினன்.

அவனைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த நான், ‘எங்கே இருக்கிறான் என் மகன், எங்கே இருக்கிறான் என் மகன்?’ என்று ஆவலே உருவாய் அவனைத் தேட, ‘இதோ இருக்கிறார் உங்கள் மகன், இதோ இருக்கிறார் உங்கள் மகன்!’ என்று அவன் அன்பே உருவாய் அடுக்களையைக் காட்ட, அங்கே பாவி மகன் கரண்டியும் கையுமாக உட்கார்ந்து, சமையல் செய்து கொண்டிருப்பானாயினன்.

‘ஏண்டா, பாவி! கடைசியில் இந்த வேலைக்கா வந்து விட்டாய்?’ என்று நான் அவனை வயிறெரிந்து கேட்க, ‘என்ன குறைச்சல் அப்பா, இந்த வேலைக்கு? வாத்தியார் வேலையைவிட இது நல்ல வேலையாச்சே!’ என்று அவன் மனம் குளிர்ந்து சொல்ல, ‘ஆமாண்டா, வரும்படிகூட இப்பொதெல்லாம் வாத்தியாரைவிட சமையற்காரனுக்குத்தான் அதிகமாயிருக்கிறது!’ என்று நானும் சொல்லிவிட்டு, ‘வாடா, போவோம்!’ என்றேன். ‘எங்கே?’ என்றான்; ‘வீட்டுக்கு!’ என்றேன். ‘எதற்கு?’ என்றான்; ‘இது என்ன கேள்வி? உனக்கு ஒரு கலியாணத்தையாவது பண்ணி வைத்து, நான் என்னுடைய கடனைத் தீர்த்துக்கொள்கிறேன், வாடா!’ என்று நான் அவனை அழைக்க, ‘சரி, பெண்ணைப் பாருங்கள்; வருகிறேன்!’ என்று அவன் சொல்ல, ‘அதுவரை?’ என்று நான் ஒன்றும் புரியாமல் கேட்க, ‘இவருக்கு உதவியாக நான் இங்கே இருக்கப் போகிறேன், அப்பா!’ என்று அவன் தன்னுடன் இருந்த ‘மெய்வழித் தொண்ட’ரை எனக்குக் காட்ட, ‘ஏன், இவருக்கு உதவியாக இங்கே வேறு யாரும் இல்லையா?’ என்று நான் கேட்க, ஆபீசிலிருந்து சீக்கிரமாக வீட்டுக்கு வந்தால், ‘ஏன் சீக்கிரமாக வந்தாய்?’ என்று கேட்கவும், நேரம் கழித்து வந்தால், ‘ஏன் நேரம் கழித்து வந்தாய்?’ என்று கேட்கவும் ஒரே ஒரு பாட்டி இவருக்குத் துணையாக இங்கே இருந்தாளாம். ‘அவளுடைய தொண தொணப்பிலிருந்து தப்ப என்னடா வழி?’ என்று இவர் யோசித்துக் கொண்டிருக்குங்காலையில் அவள், ‘நான் கண்ணை மூடுவதற்குள் காசி, ராமேஸ்வரத்துக்குப் போக வேண்டும்’ என்று சொல்ல, ‘அதுதான் சரியான சந்தர்ப்பம்!’ என்று இவர் அவளைச் சந்தோஷமாக ஒரு ‘டூரிஸ்ட் பஸ்’ஸில் ஏற்றிவிட, ‘அங்கேயே கண்ணை மூடி விட்டால் இன்னும் விசேஷம்!’ என்று அவளும் சந்தோஷமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாளாம்!’ என்று அவன் சொல்ல, ‘அப்படியானால் இவரையும் வேண்டுமானால் அழைத்துக்கொண்டு நீ நம் வீட்டு மாடியறைக்கு வந்துவிடு; இவர் இங்கே கொடுக்கும் வாடகையை அங்கேயும் கொடுத்தால் போதும்!’ என்று நான் சொல்ல, ‘சரி’ என்று இருவரும் எங்கள் வீட்டு மாடியறைக்கே வந்து சேருவாராயினர்.

‘இதற்கு மேல் அவனைத் தனியாக விட்டு வைக்கக் கூடாது!’ என்று நான் அவனுக்குத் தினம் ஒரு பெண்ணாய்ப் பார்க்க, நான் பார்த்த பின் பெண் வீட்டாரும் வந்து அவனைப் பார்க்க, எங்கள் வீட்டில் ‘கலியாணக்களை’ கட்டுவதாயிற்று.

கட்டி என்ன பிரயோசனம்? இதுவரை ஒரு பெண்ணும் அவனுக்குக் குதிரவில்லை; அப்படியே குதிர்ந்தாலும் கடைசி நிமிடத்தில் எதையாவது சொல்லி வெட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள். ‘இதற்கு என்ன விமோசனம்?’ என்று நான் யோசித்துக் கொண்டிருக்கையில் உங்கள் நினைவு அடியேனுக்கு வந்தது; ஒடோடி வந்தேன்!’ என்று பள்ளி கொண்டான் பள்ளி கொள்ளாமல் தன் கதையை சொல்லி முடிப்பாராயினர்.

எல்லாவற்றையும் பொறுமையுடனும், தமக்கே உரிய புன்னகையுடனும் கேட்டுக் கொண்டிருந்த விக்கிரமாதித்தராகப்பட்டவர், ‘வாருங்கள், போவோம்!’ என்று வாத்தியாரை அழைக்க, ‘எங்கே?’ என்று வாத்தியாராகப்பட்டவர் கேட்க, ‘உங்கள் வீட்டுக்குத்தான்!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, ‘அங்கே என்ன இருக்கிறது?’ என்று வாத்தியார் பின்னும் கேட்க, ‘அங்கேதான் விமோசனம் இருக்கிறது ஐயா, அங்கேதான் விமோசனம் இருக்கிறது!’ என்று விக்கிரமாதித்தராகப்பட்டவர் பின்னும் சொல்லி அவரை முன்னால் தள்ளி விட்டுவிட்டுப் பின்னால் செல்வாராயினர்.

பள்ளிகொண்டான் வீட்டை அடைந்ததும், ‘எங்கே இருக்கிறது அந்த மாடியறை?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘இதோ இருக்கிறது அந்த மாடியறை!’ என்று அவர் விக்கிரமாதித்தரை அழைத்துக்கொண்டு போய் அந்த அறையைக் காட்ட, ‘அம்மா கனகம், அம்மா கனகம்’ என்று அந்த அறைக்கு வெளியிலேயே நின்றபடி விக்கிரமாதித்தர் குரல் கொடுக்க, ‘யார் ஐயா அது, என்னை ‘அம்மா’ என்று அழைப்பது?’ என்று கேட்டுக்கொண்டே அந்த ‘மெய் வழித் தொண்டர்’ தன் ‘ஆரஞ்சு வண்ணத் தலைப்பாகை’யை ஒரு கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டே வெளியே வர, ‘நான்தான் அம்மா, விக்கிரமாதித்தன்! என்னைத் தெரியாதா, உனக்கு?’ என்று சொல்லிக்கொண்டே விக்கிரமாதித்தர் அந்தத் தொண்டரின் தலைப்பாகையைத் தம் கையால் எடுக்க, அதிலிருந்து விடுபட்ட பின்னல் சாட்டைபோல் நீண்டு தொண்டரின் முழங்கால் வரை தொங்க, ‘இப்படி ஒரு பெண்ணைத் தனக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எந்தப் பிள்ளையாண்டானாவது இன்னொரு பெண்ணை ஏறெடுத்துப் பார்ப்பானா? அதிலும் ‘உன்னைப் பார்த்த பின் எனக்குத் தூக்குப் போட்டுக் கொள்ளத் தோன்றவில்லை; வாழ ஆசை வந்துவிட்டது!’ என்று சொல்லிவிட்டு?’ என்பதாகத்தானே விக்கிரமாதித்தர் பள்ளி கொண்டானைப் பார்த்துக் கேட்க, ‘பார்க்கமாட்டான்; ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ போல் இருக்கும் இவளைப் பார்த்துவிட்டு இன்னொரு பெண்ணை எவனும் பார்க்க மாட்டான்!’ என்று அவர் சொல்லிவிட்டு, ‘இப்பொழுதுதான் எனக்குத் தெரிகிறது, இவன் ஏன் கரண்டியைக் கையில் பிடித்தான் என்று! இவள் ஆபீஸுக்குப் போய் விட்டால் அடுப்பங்கரையைக் கவனிக்க ஆள் வேண்டுமோ, இல்லையோ? அந்தப் பணியை இவன் இப்போதே தன் சிரமேற் கொண்டுவிட்டான் போலிருக்கிறது!’ என்பதாகத் தானே அவர் மேலும் சொல்லி வியக்க, ‘தம்பி, கலியபெருமானே! இந்த விஷயத்தை ஏண்டா நீ உன் அப்பாவிடம் முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாது?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘நான் ஒரு ஜாதி, இவள் ஒரு ஜாதி! அதனால்தான் இவர் என்ன சொல்வாரோ, என்னவோ என்று பயந்து சொல்லவில்லை!’ என்று அவன் பயப்படாமல் சொல்ல, விக்கிரமாதித்தர் பள்ளிகொண்டான் பக்கம் திரும்பி ‘அதற்காக நீங்கள் யோசிக்காதீர்கள்; இது கலப்பு யுகம்; ‘கலப்பு உரம், கலப்பு விதை’ என்பதுபோல் ‘கலப்புக் கலியாண’மும் வந்துவிட்டது. அதனால் ஜாதி போகிறதோ இல்லையோ, நாள் நட்சத்திரம் பார்த்தாலும் பார்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டு, நீங்கள் சீக்கிரமே இவர்களுடைய கலியாணத்தை ‘உனக்கு நான் சாட்சி, எனக்கு நீ சாட்சி!’ என்ற முறையில் ‘சீர்திருத்தக் கலியாண’மாக நடத்தி முடித்துவிடுங்கள்; கட்டாயம் தங்கப் பதக்கம் கிடைக்கும்!’ என்று சொல்ல, ‘அதைவிட இவனுக்கு ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா?’ என்று அவர் பெருமூச்சு விட, ‘இவளுக்கு வேலை இருக்கும்போது எனக்கு ஏன் அப்பா வேலை? இருக்கவே இருக்கிறது அடுப்பு!’ என்று கலியபெருமாள் அக்கணமே அந்த இடத்தை விட்டுச் சென்று அணைந்து போன அடுப்பை ‘ஊது, ஊது’ என்று ஊதுவானாயினன்.”

ஆறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான மோகனா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; ஏழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான எழிலரசி சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு… என்றவாறு. என்றவாறு…….

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *