கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 21, 2021
பார்வையிட்டோர்: 16,510 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நகைச்சுவை கட்டுரை வேண்டும் என்று கல்கி ஆசிரியர் கேட்டவுடன் பேசாமல் போய் ‘ராஜ்நாராயண் அவர்களைப் பேட்டி கண்டு விட்டால் என்ன’ என்று தோன்றியது. யார் யாரையோ விசாரித்துப் பார்த்தேன், அட்ரஸே கிடைக்கவில்லை. ஏதாவது சர்க்கஸில் சேர்ந்து விட்டாரோ என்று கூட சந்தேகம் வந்து விட்டது.

சரி, எதற்கும் ஒரு கடைசி சான்ஸ் பார்க்கலாம் என்று தீர்மானித்து ஒரு சர்க்கஸ் பபூனை விசாரித்தேன்

அவர், “ராஜ்நாராயண்தான் பெரிய பபூன் என்று உங்களுக்கு யார் சொன்னது? எந்த யுகத்தில் இருக்கிறீர் நீர்? ராஜ்நாராயண் எங்கள் குருவாக இருந்த காலம் உண்டு. இப்போது அந்தக் காலம் மலையேறி விட்டது. ராஜ்நாராயணனிடம் இனி கோமாளித்தனம் என்றும் மீதியில்லை!” என்றார்.

“அப்படியானால் நான் என்ன செய்வது? பபூன்களுக்கெல்லாம் குருவாக இருக்கக் கூடியவர் ஒருவரைப் பேட்டி காண விரும்புகிறேன்!” என்றேன்.

“இப்போது எங்கள் குரு ஜெகஜீவன்ராம் தான், போய் அவரைப் பாருங்கள்!” என்றார் அந்த பபூன்.

ஜெகஜீவன்ராமைச் சந்திக்கப் புறப்பட்டேன், டெல்லியில் விசாரித்தேன். “சஞ்சய் காந்தியைக் கேட்டால் ஜெகஜீவன்ராம் விலாசம் கிடைக்கும்” என்றார்கள்.

“சஞ்சய் காந்தியின் விலாசம் யாரிடம் கேட்டால் கிடைக்கும்?…”

“ஜெகஜீவன்ராமின் மகன் சுரேஷிடம் கேட்டால் கிடைக்கும்”

“சுரேஷ் எங்கிருப்பார்….”

“ஜெகஜீவன்ராம் வீட்டில்”

“ஜெகஜீவன்ராம் வீடு எங்கே இருக்கிறது?”

“சஞ்சய் காந்தியிடம் கேட்டால் தெரியும்!”

kalki1980-03-16_0028-pic– இப்படி நான் ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது, யாரோ ஓடி வரும் சப்தம் கேட்டது. மூச்சிரைக்க ஜெகஜீவன்ராம் தான் ஓடி வந்து கொண்டிருந்தார்.”ஏதோ சஞ்சய் காந்தி, சுரேஷ் என்றெல்லாம் பேச்சு காதில் விழுந்தது!… எங்கே சஞ்சய், எங்கே சுரேஷ்?” என்று மூச்சு முட்ட கேட்டார் ஜெகஜீவன்ராம்.

கிடைத்தது சான்ஸ் என்று அவரைப்பிடித்துக் கொண்டேன், “உங்களிடம் ஒரு பேட்டி வேண்டும்!” என்று கேட்டேன்.

உடனே அவர், “நான் ஜனதாவில் இருக்கிறேன். ஆனால், ஜனதாவை எதிர்க்கிறேன்!” என்றார்.

“எதிர்த்தால் அந்தக் கட்சியை விட்டு வெளியேற வேண்டியது தானே?”

“அப்புறம் எப்படி எதிர்க்க முடியும்?”

“உள்ளே இருந்தால் தான் எதிர்க்க முடியுமா?”

“நிச்சயமாக, நான் பாதுகாப்பு மந்திரியாக இருந்தவன்…. எனக்குத் தெரியாதா? ஒரு நாட்டோடு சண்டை என்றால். அந்த நாட்டுக்குள் போய்த்தானே நாம் சண்டை போட வேண்டும். வெளியே இருந்து சண்டை போட முடியுமா? அந்த மாதிரி தான் இதுவும்!”

“கரெக்ட்… கரெக்ட்!… சரி, உள்ளே இருந்து கொண்டு எப்படி எதிர்க்கப் போகிறீர்கள்?”

“நாலே நாலு அறிக்கை விடுவேன், ஜனதா குளோஸ் ஆகிவிடும்.”

“என் அறிக்கை?”

“ஜனதா மட்டம், ஜனதா சமூக விரோதி. ஜனதா உருப்படாது!”

“மூணு அறிக்கை ஆயிற்று. நாலாவது?”

“நான் ஜனதாவை விட்டு வெளியேறுகிறேன்.”

“இதையே முதல் அறிக்கையாக்கி விட்டால் என்ன?”

“அப்படிச் செய்து விட்டால் மற்ற மூன்று அறிக்கைகள் விட முடியாது!”

“சரி. இவ்வளவு மட்டமான கட்சியில் இத்தனை நாள் எப்படித் தாக்குப் பிடித்தீர்கள்?”

“தேர்தலில் அந்தக் கட்சி ஜெயிக்கும் என்று சொன்னார்கள். என்னுடைய போறாத காலம் நம்பி இருந்து விட்டேன்”

“தோற்றுவிட்டதால் தான் ஜனதா மட்டமாகிவிட்டதா?”

“பின் என்னவாம். தோற்பவன் எங்கேயாவது உயர முடியுமா? தோற்ற கட்சியில் இருப்பது முட்டாள்கள் செய்யும் வேலை”

“பின் ஏன் இன்னும் நீங்கள் ஜனதாவில் இருக்கிறீர்கள்?”

“நான் ஜனதாவில் இருப்பதாக உனக்கு யார் சொன்னது?”

“நீங்கள் தானே சொன்னீர்கள்?”

“எப்போது சொன்னேன்?”

“பேட்டி ஆரம்பத்தில் சொன்னீர்களே?”

”அங்கேதான் பாய்ண்ட் இருக்கிறது…. பேட்டி நடந்து கொண்டிருக்கும்போதே நான் வெளியேறிவிட்டேன்!…”

“இதைச் சந்திரசேகருக்குத் தெரியப் படுத்த வேண்டாமா?”

“அது யார் அது…. சந்திரசேகர்?”

“ஜனதாக் கட்சியின் தலைவர்”

“நான் தான் அந்தக் கட்சியில் இல்லையே? அவருக்கு எதற்கு நான் தெரியப்படுத்த வேண்டும்?”

“சரி, ஜனதாவை விட்டு வெளியேறி விட்டீர்கள், இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்?”

“ஜனதா கட்சியில் சேரப் போகிறேன்.”

“என்ன சார் இது? அந்தக் கட்சியை விட்டு வெளியேறினேன் என்று சொன்னீர்கள், இப்போது அந்தக் கட்சியில் சேரப் போகிறேன் என்கிறீர்களே? இப்போது அந்த கட்சியில் எப்படிச் சேர முடியும்?”

“முட்டாள் தனமாகக் கேள்வி கேட்காதே. நான் ஜனதாக் கட்சியிலேயே இருந்தால் அந்தக் கட்சியில் சேர முடியுமா? வெளியேறினால் தானே சேர முடியும்? அதற்காகத்தான் வெளியேறினேன்”.

“சேர்ந்து விட்டதாகச் சந்திரசேகருக்கு சொல்ல வேண்டாமா?”

“கட்சியில் யார் இருக்கிறார்கள், யார் சேர்ந்தார்கள் என்று கூடத் தெரிந்துகொள்ள வில்லையா அந்தச் சந்திரசேகர், தலைவராம். தலைவர்?… இதுகூடத் தெரியவில்லை, ரொம்ப முட்டாள் தனமான தலைமை”

“அப்படியாரும் கட்சியை விட்டு வெளியேற வேண்டியது தானே”

“எந்தக் கட்சியிலிருந்து?’

“ஜனதாவிலிருந்து தான்”

“அந்தக் கட்சியில் தான் இருந்தால் தானே வெளியேறுவதற்கு?”

“அந்தக் கட்சியில் தான் நீங்கள் இருப்பதாகச் சொல்லி முட்டாள் தனமான தலைமை என்று கூடக் குற்றம் சாட்டினீர்களே?”

“எப்போது குற்றம் சாட்டினேனோ அப்போது அந்தக் கட்சியில் நான் இல்லை என்று தானே அர்த்தம்?”

“அப்படியானால் நீங்கள் இப்போது ஜனதா கட்சியில் இல்லை…”

“இல்லை.”

“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்! எது இல்லை… நீங்கள் ஜனதா கட்சியில் இல்லையா? அல்லது நீங்கள் ஜனதா கட்சியில் இல்யென்று நான் சொன்னது இல்லையா?”

“ஆமாம்.”

“எது -ஆமாம்? நீங்கள் ஜனதா கட்சியில் இல்லை என்பது ஆமாமா? அல்லது நீங்கள் ஜனதா கட்சியில் இல்லை என்று நான் சொன்னது இல்லை யென்பது ஆமாமா?”

“ரொம்பக் குழப்புகிறாய்.”

“உங்களிடம் பேச ஆரம்பிப்பதற்கு முன்பாகத் தெளிவாகத்தான் இருந்தேன், இப்போது எது இல்லை, எது ஆமாம் என்பது கூட எனக்குப் புரியவில்லை.”

“என்னைப் போல் தெளிவாக இருக்கக் கற்றுக்கொள், இல்லை என்பதும் ஆமாம் என்பதும் ஒன்றேதான்!…”

“அது எப்படி?”

“சொல்கிறேன். நான் ஜெகஜீவன்ராம் இல்லையா?”

“ஆமாம்.”

“பார்த்தாயா? இல்லை என்பது ஆமாம் ஆகிவிட்டது!”

“இல்லையே!”

“கரெக்ட்! இப்போது ஆமாம் என்பது இல்லை ஆகிவிட்டது!”

“கரெக்ட்.. இப்போது எனக்கு எல்லாமே தெளிவாகப் புரிகிறது”

“இது தான் அரசியல்!”

“நான் இது தான் அத்வைத சித்தாந்தம் என்று நியாத்தேன். நீங்கள் ஒரே சமயத்தில் ஞானியாகவும், யோகியாகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறீர்கள். உங்களிட மிருந்து கற்றுக்கொண்ட இந்த ‘இல்லைதான் ஆமாம்’ ‘ஆமாம் தான் இல்லை ‘ என்ற பேருண்மையை நான் மறக்கவே மாட்டேன்”.

“சரி, பேட்டியை முடித்துக்கொள். நான் அவசரமாகச் செல்ல வேண்டும்,”

“எங்கே ஸார்?”

“சந்திரசேகரைப் பார்க்க.”

“ஐயைய்யோ! நீங்கள் ஜனதாவிலா இருக்கிறீர்கள்?”

“ஆமாம்!”

“ஆஹா! அப்படியாரும் இல்லை! அதாவது. ஆமாம்!….” என்று நேராகக் கீழ்ப்பாக்கத்தை நோக்கி ஓடினேன்!

(6-3-80ல் எழுதியது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *