ஆண் சிங்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 8, 2022
பார்வையிட்டோர்: 12,446 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிங்காரம் பிள்ளை அண்ணாச்சி –

‘வெறும் வீணப்பயல்’ என்று கைலாசபுரம் வாசிகள் ஒவ்வொருவரது மனக்குறளியும் முணமுணக்கும். ஆனால், வெளிப்படையாக, ‘அவுகளைப்போலே உண்டுமா இந்தப் பூலோகத்திலே? அண்ணாச்சி பெரிய சிங்கமில்லே!’ என்று வாய் சொல் உதிர்க்கும்.

இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை, உள்ளொன்று நினைத்துப் புறமொன்று பேசுவதுதானே பண்பாட்டு உயர்வு என்று மக்களால் மதிக்கப்படுகிறது!

மேலும், சிங்காரம் பிள்ளை என்றால் கைலாசபுரத்தினருக்கு உள்ளத்துக்குள் எப்பவுமே உதைப்புத்தான். அவர் குடித்துவிட்டு நடுத்தெருவில் நாடகம் ஆட ஆரம்பித்து விட்டார் என்றாலோ, ஊராரின் உடலில் உதறல் கண்டுவிடும்.

‘கல்லுளி மங்கன் போன வழி; காடு மேடெல்லாம் தவிடு பொடி’ என்பார்கள். ‘சண்டியரு சிங்காரம் வெறியிலே கிளம்பிவிட்டாரு. என்ன் என்ன நாசம் ஆகப்போகுதோ, யாரு கண்டார்கள்?’ என்று முனகியபடி, நல்லவர்கள் பெரியவர்கள் கதவை அடைத்து விட்டு, வீட்டுக்குள் ஒடுங்கிக் கொள்வார்கள்

சிங்காரம் பிள்ளையின் தோற்றத்திலே கூட அச்சம் எழுப்பும் ஒரு தன்மை கலந்து கிடக்கும். அரிவாள் மாதிரி காட்சி தரும் மிடுக்கான மீசை அந்த அச்சத்தை எழுப்புகிறதா? தீக்கங்குகள் போல் ஜிவு ஜிவு என்று விளங்கும் சிவப்புக் கண்கள் பயம் தருகின்ற்னவா? ஆளின் உயரமும் பருமனும் அத் தன்மை பெற்றனவா? யாரும் பிரித்துச் சொல்ல முடியாது. அவரது மொத்த உருவமும், நடையும், உடையும் பார்க்கும் தினுசும், மீசையின் முறுக்கும், அட்டகாசச் சிரிப்பும் – எல்லாமுமே பயத்தை விதைக்கும் அம்சங்களாக அமைந்திருந்தன என்று தான் சொல்ல வேண்டும்.

சிங்காரம் பிள்ளையின் சுய சரித்திரம் சுவையான புள்ளி விவரங்கள் கொண்டதாகத்தான் இருக்கும். ஆனால் அவர் அவற்றை எல்லாம் தொகுத்து எழுதி வைக்கும் சிரமத்தை எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்கே குஷி ஏற்படுகிற போது ரசமாகச் சில விஷயங்களைச் சொல்லுவார். அவரை அறிந்தவர்கள் அவ்வப்போது பிள்ளை அவர்களின் வீரப் பிரதாபங்கள் பற்றி விரிவாகப் பேசுவார்கள். எப்படியோ சிங்காரம் பிள்ளையின் கீர்த்திக் கொடி படபடக்க வாய்ப்புக்கள் கிட்டி வந்தன.

சிங்காரம் பிள்ளை சில சமயங்களில் தங்கமான மனிதர் போலப் பேசிப் பழகுவார். சின்னப் பையன்களிடம் கூட அன்பாகப் பேசுவார். வழியோடு போகிற பையனைக் கூப்பிட்டு, ‘என்ன தம்பி, எங்கே போகிற? கடைக்கா? என்ன வாங்க! பொடியா? யாருக்கு? பெரியப்பாவுக்கா? உன் பெரியப்பா அடிக்கடி உன்னைக் கடைக்கு அனுப்புகிறாரே, உனக்குக் காசு கீசு தருவாரா?’ என்று பரிவாக விசாரிப்பார். இல்லை என்பதற்கு அடையாளமாகப் பையன் தலையை ஆட்டினால், பிள்ளை ‘ச்ச்இச்’ என்று நாக்கைக் கொட்டுவார்.

‘சின்னப் பையனாக இருக்கிறதே கஷ்டமான காரியம் தான். பெரியவங்க அடிக்கடி வேலை ஏவிக் கிட்டே இருப்பாங்க. சின்னப்பயல் என்றாலே தங்களுக்கு வேலை செய்வதற்காக இருப்பவன் என்பது தான் பெரியவங்க நினைப்பு. சின்னப் பயலாக இருந்து தான் பெரியவனாக வளர வேண்டியிருக்கு. இதுதான் இந்த வாழ்க்கையிலே உள்ள குறைபாடு. ஏன் எல்லோரும் தீடீர்ப் பெரியவனுகளாகவே இந்த உலகத்திலே வந்து குதிக்கப்படாது? இப்படி நான் நினைப்பது வழக்கம். நானும் சின்னப்பயலாக இருந்து பெரியவனாக வளர்ந்தவன் தானே?’ என்று சிங்காரம் பிள்ளை பேசுவார்.

‘என்னையும் அந்தக் காலத்திலே பெரியவங்க பாடாய்ப் படுத்தினாங்க. ஏய் சிங்காரம், முக்கால் துட்டுக்கு அது வாங்கிக்கிட்டு வா ஏ, சிங்காரம் ஒரணாவுக்கு இது வாங்கி வா…இப்படி ஆற்பத்துக்கெல்லாம் இந்தச் சிங்காரம் தான் ஓடனும். நானும் கொஞ்ச நாள் உதவி செஞ்சு பார்த்தேன். அப்புறம் பெரியவங்க – பெரியவங்க என்று எல்லோரும் என் தலையிலே மிளகா அரைக்கப் பாக்கிறாங்கடான்னு நானாகவே உணர்ந்துட்டேன். உடனே என்ன செஞ்சேன்? முடியாது மாட்டேன்னு முரண்டு பிடிச்சேனா? கிடையாது. சாமான்கள் வாங்கி வரச் சொல்லி காசு கொடுத்தால் மிச்சக் காசைத் திரும்பிக் கொடுக்கிறது கிடையாது; சிலசமயம் சாமான் எதுவும் வாங்கிக் கொடுக்காமலே, காசு எங்கோ விழுந்து தொலைந்து போச்சு என்று சாதிப்பது. இப்படி சண்டித்தனங்கள் செய்தேன்…

‘கணபதியா பிள்ளை, கணபதியா பிள்ளைன்னு ஒருத்தர், சுத்த சைவம். அவருக்கு அடிக்கடி மூக்குப் பொடி வாங்கிக் கொடுக்க வேண்டிய வேலை – இனாம் சர்வீஸ்தான்…என் தலையிலே விழுந்தது. கொஞ்ச நாள் ஒழுங்காக வாங்கிக் கொடுத்து வந்தேன். எனக்கே அலுத்துப் போச்சு. ஒருநாள் ஒரு வேலை செய்தேன்…பொடி மட்டையை கணபதியா பிள்ளை ஆசையோடு வாங்கினார். தம்பி சிங்காரம் கெட்டிக்காரன்; நிறையப் பொடி வாங்கி வந்திருக்கான். மட்டை பருமனாக இருப்பதைப் பார்த்தாலே தெரியுதே என்று பாராட்டினார். உற்சாகமாக மட்டைக்குள் விரல்களைத் திணித்தவர் திடுக்கிட்ட மாதிரித் தோணிச்சு. வேகமாக விரல்களை வெளியே இழுத்தார். சதசதன்னு ரத்தமும் சதையுமாக… அதை அப்படியே உதறி எறிந்தார்…அட படுபாவிப் பயலே, குருவிக் குஞ்சையா கொன்னு போட்டே? அதையா பொடியோடு சேர்த்து வச்சுக் கொண்டு வந்தேன்னு அலறினார். அப்போ அவர் மூஞ்சி போன போக்கு வேடிக்கையான காட்சியாக இருந்தது.

அப்புறம் அவர் ஏன் என்னிடம் பொடி வாங்கும் வேலையைத் தரப்போகிறார்?

இதை உவகையோடு சொல்லிவிட்டு, குலுங்கக் குலுங்கச் சிரிப்பார் சிங்காரம் பிள்ளை. இதுபோல் எத்தனையோ ரசமான அனுபவங்களைச் சிருஷ்டித்து, வாழ்ந்து, மகிழ்ந்தவர் அவர்.

பல கலகங்களை முன்னின்று நடத்தியவர் பிள்ளை. அநேக கலகங்களை அடக்கிய பெருமையும் அவருக்கு உண்டு. அந்த ஊர் ரெளடிகளில் ‘முடி சூடா மன்னர்’ அவர். அவரது ஆற்றலையும், செல்வாக்கையும், அடாவடித்தனத்தையும், முரட்டுத் துணிச்சலையும் அறிந்து, அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள் ரெளடிகள் அனைவரும். அவ்வப்போது அவருக்கு பயந்து, மரியாதை செலுத்தவும் அவர்கள் தவறுவதில்லை. ‘அண்ணாச்சி’, ‘நம்ம அண்ணாச்சியா பிள்ளை’ என்றுதான் அவர்கள் அவரைக் குறிப்பிடுவது வழக்கம்.

அன்று சிங்காரம் பிள்ளை அண்ணாச்சி ஜாலியாகக் கிளம்பினார், வீர தீரச் செயல்கள் புரிய வேண்டும் என்ற துறு துறுப்போடு புறப்படுகிற காவிய காலத்து ஹீரோ போல!

வழியில் ஒரு பஸ் குறுக்கிட்டது. பிள்ளை மிடுக்காகக் கையைத் தூக்கிக் கீழே போட்டார். காரோட்டி பஸ்ஸின் வேகத்தைக் குறைத்தபோதே – கார் நிற்பதற்கு முந்தியே – சிங்காரம் பிள்ளை ஒரு ஜம்ப் கொடுத்து, பஸ்ஸினுள் பாய்ந்து, ஜம்மென்று உட்கார்ந்தார் ஒரு ஸீட்டிலே அவருக்கு நாற்பது வயசுக்கு அதிகமாகவே இருக்கும். ஆயினும் அவர் உடலோ, தோற்றமோ, செயல்களோ வயசின் மிகுதியைக் காட்டுவதில்லை. துள்ளலும், துடிப்பும் மிகுந்த காளையாகத்தான் திகழ்ந்தார் அவர்.

பஸ் வேகம் பெற்றது. ‘ஸார் டிக்கட்!’ என்று மரியாதையோடு கண்டக்டர், பிள்ளையை அணுகினார். சிங்காரம் பிள்ளையின் அலட்சியமான பார்வை அந்த ஆளை எடை போடுவது போல் மேலும் கீழும் ஓடியது. ‘எங்கே போகணும் டிக்கட்…’

‘தம்பி இந்த லைனுக்குப் புதுசு போலிருக்கு!’ பிள்ளையின் குரலில் எக்காளம் கரகரத்தது.

‘அதைப்பத்தி உங்களுக்கு என்ன? டிக்கட்டுக்குக் காசை எடுங்களேன்.’ அலுப்பும் பொறுமையின்மையும் கண்டக்டரைச் சிடுசிடுக்கச் செய்தன.

‘சிங்காரம் பிள்ளைகிட்டே டிக்கட் கேக்கிறதுன்னு சொன்னா, அந்த ஆளுக்கு இந்த ஊரு வளமுறை தெரியாதுன்னுதானே அர்த்தம்? ஹாங்?’. கடைசி ஒலிக்குறிப்பு அதட்டல் போலவும் உறுமல் போலவும் தொனித்தது.

டிரைவர் திரும்பிப் பார்த்து, அண்ணாச்சிக்கு ஒரு சிரிப்பைக் காணிக்கை செலுத்தி விட்டு, ‘சீனு! அவுக நம்ம ஆளப்பா. அவுகளுக்கு எந்த பஸ்ஸிலும் டிக்கட் இல்லாமல் போகும் உரிமை உண்டு’ என்று அறிவித்தார்.

‘பஸ் என்ன! பஸ் முதலாளியின் பிளஷரையே நிப்பாட்டி, ஐயாவாள் இன்ன இடத்துக்குப் போகணும்; நேரே அங்கே ஒட்டுன்னு சொன்னால், அப்படியே ஓடுமா, சும்மாவா? சிங்காரம் பிள்ளைன்னு சொன்னாலே… எஹஹஹ்!’

அது பிள்ளையின் ‘காப்பி ரைட்’ சிரிப்பு. அச்சிரிப்பில் எவ்வளவோ அர்த்தங்கள் பொதிந்து கிடக்கும். பிறர் காப்பி அடிக்க நினைத்து, ஆசைப்பட்டு, முயன்றாலும், காப்பி அடிக்க முடியாத ஒற்றைத் தனி ரகச் சிரிப்பு அது.

ஒழுங்கு முறைப்படி பஸ் நிற்க வேண்டாத – நிற்கக் கூடாத – ஒரு இடத்தில், ‘ட்ரைவர் ஹோல் டான்! இவர் இங்கே டெளன் ஆகிறாரு!’ என்று கத்தினார் பிள்ளை.

சிங்காரம் பிள்ளைக்கு திடீர் திடீரென்று ஒரு ஆசை தலை தூக்கும், தனக்கும் ‘இங்லீசு’ தெரியும் என்று காட்டிக் கொள்ள வேண்டும் எனும் ஆசைதான்.

ஆகவே ஆங்கிலப் பதங்களைத் தாராளமாகத் தமது பேச்சிலே கலந்து அள்ளித் தூவுவார் அவர்.

பஸ் நிற்பதற்குள்ளேயே கீழே குதித்தார் பிள்ளை, டிரைவருக்கு ஒரு ஸலாம் அடித்தார். ‘தம்பியா, பிள்ளேய்! ஐயா கண்டக்டர் தம்பி! எப்புவுமே புது ஆளாக இருந்திராதேயும் வேய்’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும் ஆவர் ஏதாவது சொல்லியிருப்பார். அதற்குள் பஸ் வேகம் பெற்று ஓடி விட்டது…

ஒரு கடையை நோக்கிச் சென்றார் சிங்காரம் பிள்ளை. ‘தாகமாயிருக்குது, ஐஸ் போட்டுக் கலர் கொடு’ எள்று உத்தரவிட்டார்…வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பையன் அவ்விதமே தந்தான். ஒரு பாக்கெட் சிகிரெட் என்றார் பிள்ளை. அதுவும் உடனே கிடைத்தது.

‘முதலாளி உங்களிடம் ஞாபகப்படுத்தும்படி சொன்னாங்க. பாக்கி அதிகமாக ஏறி விட்டதாம். சீக்கிரமே பார்த்து…’

பிள்ளையின் சிரிப்பு பையனின் பேச்சுக்கு பிரேக் போட்டது. ‘முதலாளிக்கே இதை சிங்காரம் பின்ளை கிட்டே சொல்ல முடியலியோ? இதை நேரே சொல்ல, அவனுக்குத் துணிச்சல் இல்லையா? அல்லது அவாளே சொன்னா கவுருதை எதுவும் குறைஞ்சு போயிடும்கிற, நெனைப்பா? எஹஹ்! சிங்காரம் பிள்ளைக்கே ஞாபக மூட்டுகிற அளவுக்குப் பெரிய மனுஷன் ஆகிவிட்டானா அவன்? வெறும் பய பிள்ளை!’ தமது ஆத்திரத்தைத் திரட்டிக் காறித் துப்பினார் பிள்ளை.

பையன் பயந்து விட்டான். ‘ஸார் நான் வந்து…’ –

பிள்ளையின் சிரிப்பு உருண்டு புரண்டது. ‘நீ ஒரு தப்பும் செய்யலே. நீ ஏன் பயப்படுறே? உன் முதலாளியிடம் நான் பேசிக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் அவர். பிள்ளை சிகரெட் பின் சிகரெட்டாக ஊதிக் கொண்டு, கைலாசபுரத்தை – ஏன், இந்த உலகம் முழுவதையுமே – விலைக்கு வாங்கியவர் போல் ஒரு பெருமிதத்தோடு, மிடுக்கு கலந்த உல்லாசப் பெருமையோடு, தனிரகத் தோரணை நடை தடந்து முன்னேறினார்.

கைலாசபுரம் மனோரமா தியேட்டர் என்னும் தகரக் கொட்டகையில் அன்று விசேஷமாக ஒரு நாடகம் ஏற்பாடாகியிருந்தது. மிஸ் சந்திரபிம்பம் நடிக்கும் ‘தாரா – ச – சாங்கம்.’ நோட்டிசை வாங்கி, சந்திரபிம்பம் பற்றிய வர்ணிப்பையும் நாடகச் சிறப்பையும் படித்து ரிசித்த பிள்ளைக்கு அவசியம் நாடகம் பார்த்தாக வேண்டும் என்ற அவா உண்டாயிற்று. போனார்.

அவரது தம்பிகளும், வேண்டியவர்களும், தெரிந்தவர்களுமாக நிறையப் பேர் வந்திருந்தார்கள் அங்கே. ஆகவே, கும்பிடுகளும், சலாம்களும், புன்னகைகளும் அவருக்கு நிறையவே கிடைத்தன. .

நாடகத்தில் கலாட்டா தலைகாட்டக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சுந்தரவதனா என்கிற குமாரி ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தாள்.

‘புள்ளே பரவாயில்லே. சிவப்பா இருக்குது. குரங்கு மூஞ்சிக்குப் பேரு சுந்தரவதனாவாம்!’ என்று சிங்காரம் பிள்ளை முணுமுணுத்தார்.

அந்த வட்டாரத்தில் தாரா.ச.சாங்கம் நாடகம் என்றாலே கண்டிப்பாகக் கலாட்டா வரும். ‘சந்திரனுக்கு தாரை எண்ணெய் தேய்க்கும் ஸீன் பிரமாதமாக இருக்கும், காணத் தவறாதீர்கள்!’ என்று தட புடலாக விளம்பரப் படுத்துவார்கள் நாடகக்காரர்கள். கும்பலைக் கவர்ந்திழுக்க ஒரு தந்திரம் அது. நாடகத்தின்போது அந்தக் காட்சியில் மக்களை ஏமாற்ற முற்படுவார்கள். உடனே கலாட்டா வரும்.

அன்றும் அப்படித்தான். சந்திரபிம்பம் ஸ்பெஷல் டிரஸ் அணிந்து நின்று சந்திரன் வேஷக்காரனுக்கு எண்ணெய் தேய்க்க மறுத்து விட்டாள். அந்தக் காட்சியை எதிர்பார்த்துக் காத்துப் பழி கிடந்த ரசிக மகாஜனங்கள் அந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. விளைவு? தகரக் கொட்டகை மீது மலைப் பிஞ்சுகள் சோனா மாரி பொழிந்தன. ஆரவார இடி இடிக்கலாயிற்று.

நாடகக் கண்ட்ராக்டருக்குத் திடீர் யோசனை தோன்றியது. அவர் ‘அண்ணாச்சி! நீங்கதான் காப்பாத்தனும்’ என்று அழுது கொண்டு, சிங்காரம் பிள்ளையைச் சரணடைந்தார். ‘உங்களை விசேஷமாகக் கவனிக்கிறேன்’ என்றும் மந்திரம் முணு முணுத்தார்.

அவ்வளவுதான். பிள்ளை ஒரு குதி குதித்து பெஞ்சு மீது ஏறி நின்றார் விரலை வளைத்து, உதடுகளுக்கிடையில் வைத்து, வீஈஈல்–மெய் சிலிர்க்க வைக்கும் சீட்டி அடித்தார். மீண்டும் அடித்தார். ‘டேய் பையன்களா? யாருடாது கொட்டாயிலே கல் எறியிறது? யாருலே அது? காலித்தனத்தை ஸ்டாப் பண்ணுங்க. அட் ஒன்ஸ் ஸ்டாப்! நிறுத்துங்க ஒன்–டூ–த்ரீ!’ என்று கூவீனார். கூவிக் கொண்டே இருந்தார்.

கூச்சலும் குழப்பமும் படிப்படியாகக் குறைந்து தேய்ந்து ஒய்ந்தது. ‘நவ், ஆர்மோனியஸ்ட், கோ ஆன் ஸாங்!’ என்று தமது இங்கிலீசு ஞானத்தை ஒலிபரப்பினார் பிள்ளை.

குமாரி சுந்தரவதனா அவர் பக்கம் முகம் திருப்பி, பளிச்சென முல்லைச் சிரிப்புச் சிரித்தாள். ரசிக மகா ஜனங்களுக்கு ஒரு கும்பிடு போட்டாள். பாட்டுப் பாடினாள்.

சிங்காரம் பிள்ளைக்கு உச்சந்தலையிலே ஐஸ் கட்டி வைத்தது போலிருந்தது. ‘இவரு யாரு? ஆம்பிளைச் சிங்கமில்லே, ஹே, சும்மாவா!’ என்று அவர் மனக் குறளி கொக்கரித்தது.

நாடகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நாடகத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர் சிங்காரம் பிள்ளை அண்ணாச்சியை விசேஷமாகக் கவனிக்கக் தவறினாரில்லை. ‘பூப்போட்ட கிளாஸி’லே போட்டுப் போட்டுக் கொடுத்தார் புட்டிச் சரக்கை. பிள்ளை கை நீட்டி வாங்கி வாங்கி வயிற்றுக்குள் ஊற்றிக்கொண்டே இருந்தார். தடபுடலான சாப்பாடு வேறு கிடைத்தது. பைக்குள் ‘ஏதோ ஸ்ம்திங்’ திணிக்கப்பட்டது.

பிள்ளை மிகுந்த உற்சாகத்தோடு வெற்றிப் பூரிப்போடு வீடு நோக்கி நடந்தார். அவர் வீடு சேரும்பொது இரவு இரவு இரண்டு மணிக்கு அதிகமாகவே இருக்கும்.

உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்த ஊர் அமைதியைப் போர்த்தியிருந்தது. அமைதியை இழந்துவிட்டவனின் மனம் போல் ஊசு காற்று அலை மோதித் தவித்தது. அது குளிரையும் சுமந்து திரிந்தது.

சிங்காரம் பிள்ளை, வீட்டு வாசல்படிமீது நின்று சற்றே தயங்கினர். தலையைச் சொறிந்தார். யோசித்தபடி நின்றார். பிறகு துணிந்து தட்டினார். கதவைத் தட்டிக்கொண்டே நின்றார்.

உள்ளிருந்து அரவம் எதுவும் எழவேயில்லை.

‘தங்கம். ஏ தங்கம்!’ அழைப்பு–தட்டுதல்… தட்டுதல்–அழைப்பு!

சில நிமிஷங்கள் தான் ஆகியிருக்கும். ஆனால் அரை மணி நேரம் ஓடியிருக்கும் என்று தோன்றியது பிள்ளைக்கு.

‘படுத்தால், செத்த சவம் தான்…சனியன்…ஒரு பொம்பிளே இப்படியா தூங்குவா – கூப்பிடுறதும் கதவைத் தட்டுறதும் காதிலே உறைக்காமே?’ அவர் வாய் உரக்கவே முணமுணத்தது.

‘ஒரு ஆம்பிளை வீட்டுக்கு வருகிற லெட்சணம் இது தாளுக்கும்? ஒரு நாள் போலே ஒரு நாள் – தினசரி இதே எழவாகி விட்டால், வீட்டிலே இருக்கிறவ பிணமாகத்தான் மாறுவாள்!’ உக்கிரமான பேச்சு பாய்ந்து புரள, மடார் என்று கதவு திறக்கப்பட்டது.

‘ஆண் பிள்ளைச் சிங்கம்’ இஹிஹி என்று இளித்ததே தவிர, தனது டிரேட் மார்க் உறுமலைச் சிதறவில்லை!

‘வீட்டிலே ஒருத்தி காத்துக் கிடப்பாளே, அவளும் மனுஷிதானே என்ற எண்ணம் உங்களுக்கு என்றைக்காவது ஏற்பட்டிருக்குதா? தினம் ராக்காடு வெட்டி மாதிரி, நடுச்சாமத்திலே வந்து தெருக்காரங்க தூக்கம் கெடும்படியா கதவைப் போட்டு உடைக்கிறது! வேளா வேளைக்கு வீடு திரும்ப முடியாமல் அப்படி வெட்டி முறிக்கிற வேலை என்னதான் இருக்குதோ?…’

தங்கத்தின் உள்ளம் கொல்லுலையில் கொதிக்கின்ற இரும்பு போலும்! சந்தர்ப்பம் அதன்மீது சிதறும் தண்ணீர் போலும்! அதனால் தான் சுர்சுர்ரெனச் சுடுசொற்கள் சுரீரிட்டன போலும்!

சிங்காரம் பிள்ளை கோபம் கொள்ள வில்லை. எரிந்து விழவில்லை. ஏசவில்லை. ஊருக்கெல்லாம் ‘சண்டியர்’ ஆன அவர் வீட்டுக்குள் அசட்டுச் சிறு பையன் மாதிரி அவள் வாயையே பார்த்துக் கொண்டு நின்றார்.

இவ்வளவுக்கும், அவர் எதிரே நின்று இடியாய் உறுமிக் கொண்டிருந்த தங்கம் ஒரு தங்கச் சிலையும் அல்ல. கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகின்ற கிளியுமல்ல. அழகில் மயிலும் இல்லை. நடமாடும் எலும்புக் கூடாக – எலும்புருக்கி நோயால் வாடுகிற ‘ஸ்கெலிடன்’ ஆகக் காட்சி தந்தாள். அவள் பேச்சிலோ அகங்காரமும், அவரை அலட்சியமாக எடுத்தெறிந்து பேசும் மனோபாவமும் ஒலி செய்தன.

‘நீயும் ஒரு மனுஷனாட்டம் உலாவிக்கிட்டு இருக்கியே ஊரிலே!’ என்று சீறினாள் அவள். சிங்காரம் பிள்ளையோ சீற்றம் கொள்ளத் தெரியாத சிறு முயல் போல் உதடுகளை இழுத்துச்சுளித்தார். ‘சரிதாம்பிளா, வாயை அதிகமா மேயவிடாதே!’என்று அவர் மனம் பேசியது. நாக்கு அசைய மறுத்தது. அவர் அசட்டுச் சிரிப்புடன் அவளைப் பார்த்தபடி நின்றார். காரணம், அவள் அவர் மனைவியே!

– 1961

– ஆண் சிங்கம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *