அழகாய் இருக்கிறேன்..பொறாமையாய் இருக்கிறது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 12,480 
 

குழந்தைகளை ஸ்கூல்ல இருந்து அழைச்சுட்டு வீட்டுக்குள்ள நுழையும்போதே என் முகத்துல அப்படி ஒரு சந்தோஷம். என் எதிர்பார்ப்பை வீணாக்காம, ‘‘என்ன இவ்வளவு சந்தோஷம்?’’னு என் கணவர் கேட்கவும் கேட்டுட்டார்.

‘‘இன்னிக்கு ஸ்கூல்ல என் ஃப்ரெண்ட் லட்சுமிய ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன். என்னைப் பார்த்த உடனே என்ன சொன்னா தெரியுமா? நான் குஷ்பு மாதிரி இருக்கேனாம்!’’னேன். அதுக்கு அவர் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிச்சார் பாருங்க.. பொசுபொசுனு கோவம் வந்துடுச்சு எனக்கு. ‘‘என்ன.. என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு?’’னு கேட்டேன்.

AlagaiIrukirein

‘‘அவ உன் முக அழகையோ, கலரையோ சொல்லி இருக்க மாட்டா. நீ கொஞ்சம் குண்டுங்கிறதைத்தான் நாசூக்கா சொல்லியிருக்கா..’’னு சொல்லி கடுப்பேத்தினார். ‘ரொம்ப புத்திசாலி’னு அவளுக்கு பாராட்டுப் பத்திரம் வேற. உடனே நான், ‘‘உங்களுக்குப் பொறாமை, கருவாப் பையன் மாதிரி நீங்க இருக்கிறதால என்னைப் பார்த்துப் பொறாமை’’னு குதிச்சிட்டு, அவரோட ரெண்டாவது டோஸ் காப்பிய கட் பண்ணினேன்.

கண்ணாடி முன்னாடி நின்னு, முன்ன பின்ன திரும்பிப் பார்க்கிறேன்.. பாழாய்ப்போன கண்ணாடி நேத்து வரைக்கும் என்னை கொஞ்சம் நல்லாக் காட்டிச்சு. அதுக்கும்கூட பொறாமையோ என்னவோ.. ரொம்பவே குண்டா காட்டுச்சு. சரி,போகட்டும்னு விட்டுட்டேன்.

‘குஷ்பு’ மேட்டரை அதோட விட்டிருந்தா பரவாயில்ல. மொத்தக் குடும்பத்துக்கே அதைப் பரப்பி, ‘குபீர்’ சிரிப்பு நாடகம் மாதிரி வீட்டை ஆக்கிட்டார் அந்த மனுஷன். குட்டிப் பசங்க எல்லாம் என்னை ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க. எனக்குக் கோவம் பொத்துக்கிச்சு.

‘‘பாருங்க.. இன்னும் ஒரே மாசத்துல நான் சிம்ரனாகி காட்டுறேன்’’னு சொன்னதும், மறுபடியும் இடிச்சிரிப்பு. ‘க.மு.சிம்ரன் மாதிரியா.. இல்ல, க.பி.சிம்ரன் மாதிரியா’னு கேள்வி வேற. (க.மு.சிம்ரன்னா கல்யாணத்து முன்னாடி இருந்த சிம்ரன், க.பி&ன்னா கல்யாணத்துக்கு பின்னாடி உள்ள சிம்ரனாம்!) ‘‘சிரிங்க, சிரிங்க.. இன்னும் ஒரே மாசத்துல உங்க வாயாலேயே என்னை அழகுனு சொல்ல வைக்கலே, என் பேரை மாத்திக்கறேன்’’னு விஸ்வாமித்திர சபதம் பூண்டேன்.

சபதம் போட்டா மட்டும் ஆச்சா, உடனே செயல்ல இறங்கினேன். மறுநாளே அப்பாயின்ட்மென்ட் வாங்கி ஒரு டயட்டீஷியனை பார்க்கப் போனேன். அவங்களை பார்த்ததும் ஷாக்! அந்தம்மா என்னைவிட குண்டு! என்னென்ன எப்பப்போ சாப்பிடணும்னு மளிகைக் கடை லிஸ்ட் மாதிரி ஒரு பேப்பர்ல எழுதிக் குடுத்தாங்க. பத்தாக்குறைக்கு, ‘‘நானே ஃபுட் சப்ளை பண்றேன். நீங்க ஆர்டர் கொடுத்தா வீட்டுக்கே வந்து டெலிவரி பண்ணு வோம்’’னாங்க. எனக்கும் நப்பாசை. அதை சாப்பிட்டு கஷ்டப்படாம உடம்பைக் குறைக்கலாமேனு. ‘‘சரி, எவ்வளவு செலவாகும்’’னு கேட்டா, எங்க வீட்டுக்கு ஒரு மாசத்துக்கு ஆகுற மொத்தச் செலவையும் என் ஒருத்தி சாப்பாட்டுக்குச் சொன்னாங்க. வெலவெலத்துப் போய், ‘‘மேடம், முதல்ல அந்த சாப்பாட்டை நீங்க சாப்பிட்டு உடம்பைக் குறைங்க’’னு சொல்லிட்டு, அவங்க குரைக்கிறதுக்கு முன்னாடி எஸ்கேப் ஆனேன்.

அப்புறம் என் கையே எனக்கு உதவினு கைவைத்திய கைங்கர்யத்தை ஆரம்பிச்சேன். தினம்தினம் காலைல வெந்நீர்+தேன், மத்தியானம் கொள்ளு ரசம், ராத்திரி சோம்புப் பொடி, கடுக்காய்ப் பொடினு சாப்பிட்டதுல முகத்தில பரு மற்றும் சில பக்கவிளைவுகள் வந்தது தான் மிச்சம். இப்படியே ஒரு வாரம் ஓடிப்போச்சு.

‘‘பேரை மாத்திக்கறேன்’’னு சொன்னதால அவரும் வாண்டுகளும் சேர்ந்து மாரியம்மா, முனீஸ்வரினு பேர் செலக்ஷன்ல இறங்கிட்டாங்க. அப்புறம்தான் அவர் என்மேல இரக்கப்பட்டு, ‘‘ஏம்மா கண்டதையும் சாப்பிட்டு கஷ்டப்படுற, தினமும் ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்கு நடந்து போய்ட்டு வா. உடம்புக்கும் நல்லது, மனசுக்கும் நல்லது’’னார். அவ்வளவு தூரம் யார் நடக்க? அதோட, கஷ்டமில்லாம அழகாகறதுலதானே கிக்கே இருக்கு! அன்னிக்கு டி.வி&யில எனக்காகவே ஒரு விளம்பரம் வந்தது. உடல் பருமனை 5&ல் இருந்து 6 இன்ச் வரை குறைக்குறதா சவால் விட்டு உறுதி கூறின பெல்ட் ஒண்ணை அதுல காட்டினாங்க. வாங்கினாதான் ஆச்சுனு அவரைப் பிடிச்சு உலுக்கினேன். விலையைப் பார்த்துட்டு அவர் பதுங்கினார். நான் சாம, தான, பேத முறைகளைக் கையாண்டு பெல்ட்டை வீட்டுக்கு வரவழைச்சேன்.

ஆனா, அந்த கிரகம் பிடிச்சவங்க காட்டின மாதிரி உடனே ஒரு இன்ச் குறையும்னு நாள் பூரா போட்டும் பிரயோஜனமே இல்ல. இறுக்கமா போட்டு வரிவரியா சொரி எடுத்ததுதான் மிச்சம். சரி, இனிமே உணவுக் கட்டுப் பாடுதானு வெறும் பயறு, பழம்னு சாப்பிட்டேன். சும்மா நாள்லகூட பசிக்காத வயிறு, அப்போதான் கப கபனு எரிஞ்சுது. பத்தாததுக்கு அப்பாவும் பிள்ளைகளும் நேத்திக்கடன் போட்ட மாதிரி தினமும் சில்லி பரோட்டா, ஐஸ்கிரீம், பீட்ஸானு எனக்கு பிடிச்சதை எல்லாம், என் முன்னாடி உக்காந்து மொக்குறாங்க.. அவவளவுதான். நானும் அவங்களோட ரேஸ்ல கலந்துக்கிட்டேன். ரெண்டாவது வாரமும் ஓடிப்போச்சு.

என் தோழி ஒருத்தி வீட்டுக்கு தற்செயலா போனேன். அவள் புதுசா வாங்கியிருக்குற ட்ரெட்மில்லை காட்டி (நடக்கும் மிஷின்) அதன் அருமை, பெருமையை எல்லாம் சொன்னா. போதாதா? வீட்டுக்கு வந்து அவர் கிட்ட அடம்பிடிக்க ஆரம்பிச்சுட்டேன். அதோட விலையைக் கேட்டு அவருக்கு லேசா வேர்த்துடுச்சு. ‘சரி பார்க்கலாம்’னு சொல்லி, என்னை தூங்கச் சொன்னவர், அப்புறம் ரெண்டு வாரம் தூங்கவேயில்ல.

அப்போ ஒரு நாள், வீட்டுக்கு எங்க அண்ணன் வந்தான். பேச்சோட பேச்சா இவர், ‘‘என்ன இருந்தாலும் மச்சான், பெண்கள் கல்யாணத்தப்போ குச்சி மாதிரி வத்தலும் தொத்தலுமா அசிங்கமா இருக்காங்க. ஆனா, ரெண்டு குழந்தை பிறந்தப்புறம்தான் பூசினாப்போல நல்லா ஆயிடறாங்க. பாருங்க.. உங்க தங்கச்சி கொத்தவரங்காய் மாதிரி இருந்தா. தேவாங்கு மாதிரி கண்ணும், துருவல் மாதிரி பல்லும் மட்டும்தான் தெரிஞ்சது (சந்தடிசாக்கிலே எப்படி வாருறார் பாருங்க). ஆனா, இப்போ பாருங்க.. அளவா சதை போட்ட பின்னாடிதான் பார்க்கவே அழகா இருக்கா’’னு சொன்னதும், வசிஷ்டர் வாயாலே பிரம்மரிஷி பட்டம் கிடைச்ச மாதிரி ஆயிடுச்சு எனக்கு. சபதத்துலே ஜெயிச்ச சந்தோஷத்தைக் கொண்டாட பிரியாணி வைச்சு அசத்திட் டேன். அவரும் ட்ரெட்மில்லுக்கான மெகா பட்ஜெட் தப்பிச்ச சந்தோஷத்தைக் கொண்டாடிட்டார்.

ஆனாலும், இப்பல்லாம் அழகுக்காக.. இல்லைங்க என் குடும்ப நலனுக்காக பிரார்த்தனை பண்ண தினமும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு நடக்கறேன்.. ‘நடக்காத.. இளைச்சுடப் போறே’ங்கறார் அவர்.

– மார்ச் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *