“அம்மா தெய்வம்டி! எங்க அம்மா தெய்வம்டி!” அப்புசாமி உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினார்.
“ஸோ வாட்?” என்றாள் சீதாப்பாட்டி சர்வ அலட்சியத்துடன்.
“நீயெல்லாம் ஒரு பொம்பிளையா?” என்று அடுத்த கணையை ஏவினார் அப்புசாமி.
சீதாப்பாட்டி, “ஐ திங்க் ஸோ..” என்றாள்.
மகாபாரத டி.வி. யுத்தக் காட்சியில் கோணாமாணா அம்புகளை முக்கிய நபர்கள் ஒருத்தர் மேல் ஒருத்தர் விட்டுக் கொள்வார்களே. அந்த மாதிரி சீதாப்பாட்டிக்கும் அப்புசாமிக்கும் ஒரு சொற்போர் நடந்து கொண்டிருந்தது.
“சீதே! நான் பொல்லாதவன்! தாலி கட்டிய உன் புருஷன்! ஞாபகமிருக்கட்டும்” என்று கர்ஜித்தவாறு அப்புசாமி பாம்பு போல் நெளிநெளியான ஓர் அம்பை ஏவினார்.
சீதாப்பாட்டி, புல்லாங்குழல் சைஸில் ஒரு சின்ன எதிர் அம்பு விட்டாள். “மேலே பேசினால் உங்கள் பாக்கெட் மணி கட்!”
அப்புசாமியின் நாகாஸ்திரத்தை சீதாப்பாட்டியின் புல்லாங்குழல் அஸ்திரம் ஒரு பயங்கர ‘கார்கில் துரத்து’ துரத்தவும், அது விழுந்தடித்துக் கொண்டு வாபஸாகி தன் எல்லைக் கோட்டுக்கு அப்பால் ஓடி மறைந்தது.
அப்புசாமி திகைத்துத் திணறி, சடாலென்று அருகிலிருந்த கதாயுதத்தைத் தூக்கி எறிந்தார். “சீதேய்! உன்னாலே நாளைக்குச் சமைக்க முடியுமா, முடியாதா? கடோசி வாட்டியாக் கேட்கிறேன்…”
“நோ சான்ஸ்?” சீதாப்பாட்டி உறுதியான குரலில் ஒரு முள்ளுச் சக்கரத்தை வீசினாள்.
அப்புசாமியின் கதாயுதத்தை அது அறுத்ததா. எத்தனை துண்டாகச் சீவியது என்பதையெல்லாம் கூடப் பார்க்க நேரமில்லாமல் சீதாப்பாட்டி கழகத்துக்குக் கிளம்பி விட்டாள் என்பதை ‘படீர்’ என்ற கார்க் கதவின் ஓசை அவர் காதுக்குத் தெரிவித்தது.
அப்புசாமி டகாரென்று அருகிலிருந்த டேப்ரிகார்டரை அழுத்தினார்.
‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாட்டை அது இருநூறாவது தடவையாகப் பாடியது.
கடந்த ஒரு வாரமாக அப்புசாமி, ‘அம்மா வா…ரம்’ கொண்டாடிக் கொண்டிருந்தார்.
ஒரு கல்யாண வீட்டுக்குப் போயிருந்தபோது தாம்பூலப் பையில் தேங்காய்க்குப் பதில் இந்த ‘அம்மா பாட்டு’ காஸெட்டைப் போட்டுத் தந்திருந்தார்கள்.
அந்த உருக்கமான ஓசிப் பாட்டை ஓயாமல் வைத்துக் கேட்டதன் விளைவாக அப்புசாமிக்குத் தனது எப்போதோ இறந்துபோன அம்மா ஞாபகம் வந்துவிட்டது. மனசுக்குள் புலம்பினார் :
‘சே! அம்மான்னா அம்மா..’
அவர் மனச்சாட்சி உறுத்தியது. மண்ணின் அடி ஆழத்தில் காக்கா போட்ட புளியங்கொட்டை ஏதோ ஒரு காலகட்டத்தில் தடாலென்று முளைவிட்டு மேலே எழும்புவது போல அப்புசாமிக்குத் தன் தாயாரின் நினைவு வந்துவிட்டது.
‘டேய் அப்பு! ஒன்பதும் சில்லறை மாதம் கருவிலே வளர்த்த உன் தாயார் இறந்துபோய் ஐம்பதும் சில்லறை வருஷமாகிறது. ஒரு நாளாவது அவளை நினைத்ததுண்டாடா நீ?’ ஜேசுதாஸ் டேப்பிலிருந்து கேட்டார் : “பேசும் தெய்வம்… பெற்ற தாய்போல ஆ… ஆ… ஆ…”
அப்புசாமி டேப்பை நிறுத்தினார். “ஆம்.. நான் குற்றம் புரிந்தவன்தான்.. ஹய்யோ.. அம்மாவை நான் நினைத்ததில்லாய்… இருந்தவரை அன்பாய் அவளுடன் பேசியதில்லாய்…”
ரத்தக் கண்ணீர் அப்புசாமியின் கண்ணில் திரண்டது.
அம்மா இருந்தவரை அவளை எதிரி மாதிரி, ராட்சஸி மாதிரி, வில்லி மாதிரிதான் நினைத்துக் கொண்டிருந்தார். அவள் சூடாகச் செய்து தந்த கல் தோசையைச் சின்னச் சின்ன ‘பிட்’டுகளாக்கி கிழிசல் டிராயரின் கிழியாத பாக்கெட் பகுதியில் திணித்துக் கொண்டு மூணாம் கிளாஸ¤க்கு மூக்கொழுகப் போன நாட்கள் நினைவுக்கு வந்தன.
‘என்னைப் பெத்த அம்மாவே..’ புலம்பினார்.
என் மூக்கை எத்தனை தரம் சிந்தி விட்டிருப்பே…
என் மூக்கைக் கண்டு நானே பயந்துகொண்டிருந்த பால பருவத்தில்… ‘அம்மா, அம்மா! அது வந்துட்டுது’ என்று அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் மூக்கைத் தூக்கிக் கொண்டு உன்னிடம் ஓடி வருகையிலே.. என் மூக்கில் அது வழிந்தால் உன் கண்ணில் உதிரம் கொட்டுதடி.. நீ உடனே அதை உனது காரம். மணம் மிக்க புடவைத் தலைப்பால் கறந்ந்ந்த்த்த்து சிந்தி அதனை அடியோடு துடைப்பாயே என் அன்புத் தெய்வமே… குலுங்கக் குலுங்க அழுதார்.
அம்மா இருந்தவரை அவள் அப்புசாமியின் விசிறியாக இருந்தாள். இரவு தூங்குகிறபோது அவரது அலைந்த கால்களை இதமாகப் பிடித்து விடுவாள். தூங்குவது போலக் கண்ணை மூடிக்கொண்டு அந்த இதத்தைச் சுகமாக அனுபவித்த நாட்கள் நினைவுக்கு வந்தன. புழுக்கமான நேரங்களில் இரவெல்லாம் அவளுடைய கையிலுள்ள விசிறி அவருக்கு விசிறும்.
ஆனால் பகலில் விசிறியின் நீண்ட காம்புப் பகுதிக்குத்தான் வேலை. அவர் குறும்பு செய்யும்போதெல்லாம் அந்த விசிறிக் காம்பால் வெளுத்துக் கட்டிவிடுவாள்.
அப்புசாமி கேவினார்… ‘என் அம்மாடி… என்னைக் குளிப்பாட்டிவிட்ட என் குலதெய்வமே… நீ அப்படியெல்லாம் அடிச்சு வளர்க்கலையின்னா.. நான் இப்போ ஒரு சந்தன வீரப்பனாகவோ, விபூதி வீரப்பனாகவோதான் மாறியிருப்பேன். வீரப்பன் மாதிரி டிமிக்கி கொடுக்க முடியாமல் கர்நாடகப் போலீஸ்கிட்டயோ, தமிழக போலீஸ்கிட்டயோ மாட்டிக் கொண்டிருப்பேன்…’
சில பழம்பெரும் அறிஞர்களுக்குத் தடாலென்று அரசு ஒரு விழா வைத்துப் பொன்னாடை போர்த்துகையில் கொஞ்சம் கணிசமான சில்லறையும் தரும்.
அந்த மாதிரி அப்புசாமி திடீரென்று தனது தாயாரின் நினைவைக் கொண்டாட நினைத்தார். அம்மாக் கடன்காரி இருந்திருந்தால் அவளையே ஒரு யோசனை கேட்டிருக்கலாம்… ‘போனவள் புண்ணியவதி’.
‘சீதேக் கிழவி மாதிரியான ஒரு மருமகளிடம் தாயார் மாட்டிக் கொண்டு சாகாமல் தப்பிததாளே…’ என்று நினைத்துக் கொண்டார்.
அருமை நண்பன் ரசகுண்டுவிடம் யோசனை கேட்டார். அவள் அதிர்ச்சியுடன், “என்ன தாத்தா, நீங்க வருஷா வருஷம் அம்மாவுக்கு திவசம் கொடுக்கறதில்லையா… மாளயம் கீளயம் தர்றதில்லையா?”
“திவசமா… மாளயமா? அந்தப் பெசாசுக்கு அதெல்லாம் தெரியாதுடா…”
“உங்க அம்மாவையா பிசாசு என்கிறீங்க? ஏற்கனவே நீங்க லாட்டிரி கேஸ். செத்துப்போன அம்மாவைப் பிசாசுன்னீங்கன்னா வாய்பூராப் புண்ணு வரும்” எச்சரித்தான்.
“அடேய் ரசம்! நான் பிசாசுன்னு என் பொண்டாட்டி கிழவியைச் சொன்னேண்டா.. ஒரு வீட்டிலே பொம்மனாட்டிதானேடா இந்தத் திவசம், திதி இதெல்லாத்தையும் ஞாபகம் வெச்சிட்டுச் சொல்லணும்…”
“நல்லாயிருக்கே கதை… உங்க அம்மா செத்த தேதி, வருஷம் ஒங்களுக்குத் தெரியாது. ஆனால் அம்மா செத்து எத்தனையோ வருஷம் கழிச்சு மருமகளா வந்தவங்களுக்குத் தெரியணுமோ.. இதைத்தான் தாத்தா ஆணாதிக்கம் ஆணாதிக்கம்னு அலர்றாங்க… இந்த நாட்டிலே ஆணாதிக்கம் ஒழிய வேண்டுமானால்.. பெண்களுக்கு உரிய மரியாதை, மதிப்பு, அன்பு, தெம்பு, பாராட்டு, சீராட்டு, தகுதி, மிகுதி, தரவேண்டுமானால்…”
“டேய், டேய்…” அப்புசாமி தன் சிஷ்யனுக்கு பிரேக் போட்டார்.
‘நான் எங்க அம்மாவுக்கு என்னவாவது பண்ணணும்டா..’ அதுக்கு வழி சொல்லுன்னா பிரசங்கம் பண்றியே…’ அப்புசாமி கேட்டார்.
“ஊர்ல. ஏகப்பட்ட கடன் வெச்சிகிட்டிருக்கீங்க. கடனோடு கடனா நீத்தார் கடனும் வெச்சிக்குங்க தாத்தா…”
“என்னடா கடன் கிடன்னு மானத்தை வாங்கறே… நான் உன்கிட்டே கடன் கிடன் கேட்க வரலை…” என்றார் அப்புசாமி.
“நீத்தார் கடன்னா என்ன? திவசம்.. திதி! வள்ளுவர் கூடச் சொல்லியிருக்கார்… இல்லறத்தானுடைய கடமையிலே ஒண்ணு தன் முன்னோருக்கு நீத்தார் கடன் கொடுக்கணும்னு…”
“அடடே! எனக்கு அந்தக் குறள் தெரியாதே. பஸ்ஸிலேயெல்லாம் எழுதி வெச்சிருக்காங்களோ?” என்றார்.
“ஆயிரத்து முன்னூத்து முப்பத்து பஸ் இருந்தால் அத்தனை குறளையும் எழுதியிருப்பாங்க. சரி, சரி, வழி கேட்டீங்க… சொல்லிட்டேன். போய் தாயாருக்கு திவசம் பண்ற வழியைப் பாருங்க…”
அப்புசாமி குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டார் : “ஏண்டா? எங்க வீட்டுப் பிசாசு சம்மதிக்குமா?”
“ஏன் தாத்தா படாடோபமாப் பண்றீங்க. ரெண்டே ரெண்டு சாஸ்திரி மாமாக்களை வரவழையுங்க. வீட்டிலே பாட்டியை சமைக்கச் சொல்லி உங்க தாயாரை நினைத்துக் கொண்டு அவர்களுக்கு வயிறாரச் சோறைப் போட்டு, கையிலே பத்தோ இருபதோ கொடுத்து அனுப்பி வையுங்க.. சிரார்த்தம்னா என்னா… சிரத்தையோடு செய்யற காரியம். அம்மாவை அன்னிக்கு ஒரு நாளாவது சிரத்தையா நினையுங்க…”
“அடேய்! எப்படா நீ இவ்வளவு பெரீய அறிவாளியானே?”
“ஆன்மீகப் பத்திரிகைங்கதான் புற்றீசல் மாதிரி கிளம்பி கடைக்குக் கடை அமர்க்களப்படுதே. சுண்டல் வாங்கினேன். அந்தக் காகிதத்திலே இருந்ததைத்தான் சொன்னேன்.”
“ஏண்டா, தெவசத்துக்கு சுண்டல் பண்ணலாமோ?” அப்புசாமி நாவில் நீர் சுரந்தது.
“தாத்தா, ரொம்ப பிடுங்காதீங்க… எப்படித்தான் உங்க அம்மா உங்களைப் பொறுத்துக்கொண்டு காலம் தள்ளினாளோ… உங்கம்மா மண்டையைப் போட்ட தேதி தெரியாட்டால் பரவாயில்லே.. நாளைக்கே அவளுக்காக திதியைப் பண்ணிடுங்க…”
சீதாப்பாட்டியின் முன் தன் வேண்டுகோளை அப்புசாமி வைத்தார்.
“எனக்கு ஆர்டினரி சமையல்தான் தெரியும். இந்த திவசம், திதி மாதிரி செரிமனி சமையலெல்லாம் தெரியாது. யு ஹாவ் டு மேக் யுவர் ஒன் அரேஞ்ஜ்மென்ட்.. அதுவுமில்லாம இதெல்லாம் நம்பிக்கை இருக்கறவங்க செய்யணும். ஸாரி… எனக்கு இந்த செரிமனிகளில அவ்வளவு நம்பிக்கை இல்லை. பேசாம ஒரு புவர் ·பீடிங் பண்ணிடுங்க. இல்லாட்டி முதியோர் இல்லம் எதற்காவது அந்தக் காசைக் கொடுத்துடுங்கோ. ரேட் வெச்சிருக்காங்க… இத்தனை பேர் சாப்பாட்டுக்கு இவ்வளவு, டிபன்னா இவ்வளவுன்னு…”
அப்புசாமி பல்லை நறநறத்தார்.
“அடியே சீதேய்! பூனை கண்ணை மூடிட்டா பூலோகம் இருண்டு போயிடாது. நீ ஒருத்தி ஓட்டுப் போடலைன்னா தேர்தல் நின்னுடாது. புரிஞ்சுக்கோடி… என்னைப் பெத்த அம்மாவுக்கு நான் பண்ணிக் காட்டறேண்டி திதி…”
அடுத்த கட்டமாக அப்புசாமி அவசரமாக ஒரு சமையல்கார மாமியை போர்க்கால அடிப்படையில் தேட முனைந்தார்.
சில்லறையாக இங்கும் அங்கும் அலையாமல், கோயம்பேடு ஹோல்ஸேல் மார்க்கெட்டுக்குப் போய் காய் வாங்குவது போல சமையல்கார மாமிகள் கொத்தாக வசிக்கும் இடம் இந்த பூலோகத்தில் எந்த இடம் என்று விசாரித்து அறிந்து கொண்டார்.
அடைஞ்சான் முதலித் தெருவில் ‘செல்லம்மா ஸ்டோர்ஸ்’ என்ற அடுக்கு மாடிக் காலனியில் சுமார் ஐம்பது சமையல் மாமிகள் வசிப்பதாக அறிந்து இரவு ஒன்பதே கால் மணிக்கு அதைக் கண்டு பிடித்தார். ‘கொலம்பஸ்… கொலம்பஸ்…’ என்று பாட வேண்டும் போலிருந்தது.
விதவிதமான ஒண்டுக் குடித்தனங்கள்.
சில வீடுகளில் கலர் டி.வி.யில் சமையல் மாமிகள் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சில மாமிகள் கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர்.
சில மாமிகள் கணவன்மாரைக் காய்ச்சிக் கொண்டிருந்தனர்.
சிலர் மொட்டை மாடியில் படுக்கையில் முடங்கியபடி மொண மொணவென்று படுத்த நிலையிலேயே அரட்டை.
சில மாமிகள் அடுத்த நாள் சமையலுக்குச் செல்ல வேண்டிய வீடுகளுடன் ‘எப்படியும் வந்துடறேன், காரை அனுப்பிடுங்கோ’ என்று பேசிக் கொண்டிருந்தனர்.
ஒரு மாமி ஜலதோஷ மிகுதியால் ஹாச் ஹாச் ஹாச்சென்று தும்மிக் கொண்டிருந்தாள். அவள் ஒருத்திதான் வருவாள் போலிருந்தது-
மற்ற பேர் எல்லாரும் ‘அடஅட! நாளைக்குத் திவசம்னா இன்னிக்கு வந்து சொல்றீங்களே…’ என்று இச்சுக் கொட்டினர்.
அப்புசாமிக்கு அந்த ஹாச்சூ மாமிதான் அகப்பட்டாள்.
“உங்களுக்கு எவ்வளவு தரணும்?” என்று ஹாச்சூவிடம் அப்புசாமி கேட்டார்.
“எனக்கு.. ஹஹ.. ஹாச்சூ… ஒரு பத்தாயிரம் குடுத்திடுங்கோ… அப்புறம் வடையிலே ஐநூறு, அதிரசத்திலே ஆயிரம்…”
அப்புசாமி அதிர்ந்து போனார். அந்த அம்மாளின் கணவர அப்புசாமியை நோக்கி, ‘இடத்தை சீக்கிரம் காலி செய்யும்படி’ ஜாடை காட்டினார். தலையைத் தொட்டுக் காட்டினார். அதாவது அந்த அம்மாளுக்கு ஜலதோஷத்துடன் குணதோஷமும் உண்டு.
‘நண்பன் ரசகுண்டுலே துணை’ என்று மறுபடியும் ராத்திரி பதினோரு மணிக்குக் கதவைத் தட்டி சமையலுக்கு ஆள் கிடைக்காத சமைக்க மறுப்பதையும் சொல்லிப் புலம்பினார்.
அவன் சிரித்தான். “உங்களுக்கு நான் ·பர்ஸ்ட் கிளாஸ் சமையல் மாமி சொல்றேன்…”
“எங்கேடா எங்கே? உங்க கீதாப் பாட்டி ஊரிலிருந்து வந்தாச்சா?”
“ஓ! வந்தாச்சே…” என்று குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.
“ஏண்டா சிரிக்கிறே!”
அப்புசாமி ‘விஷ்ஷ்!’ என்று விசில் அடித்தார். “அம்மா என்றழைக்காத உயிரில்லையே…”
ராத்திரி பன்னிரண்டு மணிக்குத் தனது தேன் குரலில் பாட்டியின் காதுக்குள் பாடினார் : “சீதேய்! சமையல்கார மாமி கிடைச்சாச்சு. நீ சீக்கிரமா வீட்டை விட்டுக் கிளம்பி எங்காவது தொலை… உன்னைக் கண்டால் அந்த மாமிக்குச் சமைக்க வராதாம். காத்தாலே நாலு மணிக்கெல்லாம் ரசகுண்டு ஆட்டோவிலே கொண்டு வந்து இறக்கிவிட்டுடுவான்.”
சீதாப்பாட்டி விலுக்கென்று எழுந்திருந்து உட்கார்ந்தாள் : ஹ¥ இஸ் கமிங்? தட் ரெச்சட் கீதா? ரசகுண்டுவோட பாட்டி கீதாப்பாட்டியா?”
“ஆமாண்டி.. என் தெய்வம் அவளை வரவழைத்திருக்கிறது. இதிலிருந்தே தெரிஞ்சுக்கோ என் அம்மா தெய்வம்னு.. அம்மா என்றழைக்காத உயிரில்லையே…”
“ப்ளீஸ், போம் நிறுத்துங்கோ!” சீதாப்பாட்டி அலறினாள் : “தட் ரெச்சட் லேடி இங்கே வரக்கூடாது. இப்பவே ஆட்டோ வெச்சுக்கொண்டு ரசகுண்டன் வீட்டுக்குப் போய் நிறத்துங்கக அந்த லேடியை.. ஐ வோன்ட் அலவ் தட் ஓல்ட், வெனுமஸ் ஸ்டுப்பிட் ஸ்டா·ப்….”
அப்புசாமி சூடாகக் கேட்டார் : “உங்க பாட்டியா வந்து சமைப்பாள்?”
“மைஸெல்·ப்” என்றாள் சீதாப்பாட்டி அமைதியாக : “நான் சமைக்கிறேன் என் மாமியாருக்கு. கண்டவங்கள் வந்து ஏன் சமைக்கணும்?”
அப்புசாமி மனசுக்குள், “அடே ரசம்! நன்றியோ நன்றிடா உனக்கு. அருமையான ஐடியா சொன்னேடா!” என்று நினைத்துக்கொண்டு பாட்டியிடம் ஆட்டோவுக்காக நூறு ரூபாயும், இல்லாத கீதாப்பாட்டிக்கு நஷ்ட ஈடாக நூறும் வாங்கிக்கொண்டு ஜாலியாகக் கிளம்பினார்.