ஃபில்டர்காபியும், பைந்தமிழ்தேனீயும்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 4,312 
 
 

“என்னடா சொல்ற! நாக்கில் எப்படிடா தேனீ கடிக்கும்?” என்றேன்.

“நிஜமாத்தான் சொல்றியா?” எனக்கு நம்புவதற்கு கடினமாக இருந்தது.

“இதை பாரு!” என்றான், நாக்கை வெளியே நீட்டி. நாக்கின் நுனியிலிருந்து சென்டிமீட்டர் தூரத்தில், உள்ளே வெண்மையான, பழுப்பு நிறத்தில் சீழ் பிடித்த கொப்புளம் பட்டாணி அளவில் இருந்தது. அதை சுற்றிலும் இளஞ்சிவப்பு நிறத்தில், வரைந்தது போல் எல்லையிட்டிருந்தது.

“எல்லாம் ஃபில்டர் காபியினால் வந்த வினை!” என்றான்.

‘பில்டர் காபிக்கும், தேனீக்கும் என்ன சம்பந்தமாயிருக்கும்?’

மேலே தொடர காத்திருந்தேன்.

“நான் எப்பவும் காபி குடிப்பேனே, அந்த கடை தெரியும் தானே!”

“ஆமாம்” என்றேன்.

நகரத்திலிருந்து கரூர், கோவைக்கு செல்லும் மையச்சாலைக்கு, சென்று சேரும் குறுக்குச்சாலையில், அமைந்திருந்தது அவன் குறிப்பிட்ட கடை. சாலையின் வலது புறத்தில், ஒரு பெட்ரோல் பங்கின் சுற்றுச்சுவரினை ஒட்டி திரும்பும், தெருவின் முனையில் போடப்பட்ட ஒரு மரமேஜையில் தான் அந்த காபி கடை அமைந்திருந்தது. கடை என குறிப்பிடப்படுவது அந்த மரமேஜை மட்டுமே. அதோடு துணையாக பிளாஸ்டிக் சேர் ஒன்று.

வயதான ஒரு பெரியவரும், அவருடைய மனைவியும் அங்கே காபி விற்கிறார்கள். அடுப்பு என்று எதுவும் கிடையாது. பால் மற்றும் காபி டிகாக்ஷன் எல்லாம் ப்ளாஸ்க்கிலிருந்து தான் கலந்து, ஊற்றி தரப்படும். முதன்முறை நான் காபி குடிக்க சென்ற போது, காபி சூடாக இருக்குமா? என்று சந்தேகமாக இருந்தது. ஆனால், சூடு நன்றாக இருந்தது. நிறைய ப்ளாஸ்க்குகள், சர்க்கரைக் கிண்ணம் மற்றும் பேப்பர் கப்புகள். இவ்வளவு தான் அவன் குறிப்பிட்ட கடை.

காலை ஆறு மணியிலிருந்து, எட்டரை மணி வரையும், மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரையும் செயல்படும். காபி மிகவும் சுவையாக இருக்கும். எனவே தினசரி வாடிக்கையாளர்கள் அதிகம். காலை நடைக்கு செல்பவர்கள் களைப்பு நீங்க அந்த கடையே பிரதானம். அலுவலகம் முடிந்து வருபவர்கள் கூட்டம் மாலை நேரத்தை ஆக்ரமித்து விடும்.

இரு வேளைகளிலும் வரும் வாடிக்கையாளர்களை காபியின் சுவை பிடித்து வைத்திருந்தது. நம் நண்பனும் அதில் ஒருவன். கால் பங்கிற்கும் குறைவாக பாலும், மீதி பங்கு முழுக்க டிகாக்ஷனும் என்று வித்தியாசமான ஒரு சுவைக்கு பழகியிருந்தான், அதுவும் சுத்தமாக சர்க்கரை இல்லாமல். இல்லை, நீங்கள் நினைக்கும் நோயெல்லாம் கிடையாது.

காபியின் உண்மையான சுவையை அறிய வேண்டுமென்றால், குறைவான பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் தான் குடிக்க வேண்டும் என்பது அன்னாரின் கூற்று. எனக்கு நினைக்கும் போதே கசக்கும்.

“போன வாரம், திங்கள் கிழமை சாயங்காலம், மியூசிக் கிளாஸ் முடிச்சிட்டு வந்தேன். கிளாஸ்ல மாஸ்டர் வேற ரொம்ப திட்டினாரு, ப்ளுட் வாசிக்கலாம் நீ லாயக்கு இல்லை. நாக்கு குவிய மாட்டேங்குது உனக்கு. பேசாம ஏதாவது கிடார், மடார்னு போய்ச் சேர்ந்து கம்பிய பிடிச்சு ஆட்டுனு, ஒரே டென்ஷனாக்கிட்டார் மனுஷன். அந்த கடுப்போடவே, ஒரு காப்பிய போட்டு ரிலாக்ஸ் ஆகலாம்னு போனேன். என்னனு தெரியலை நேத்து கடை போடலை” என்றான்.

“அந்த காபி இல்லைன்னா உனக்கு கையுங்காலும் ஒடாதே! என்றேன்.

“அப்படியே வீட்டுக்கு போயிருந்தா எனக்கு இந்த வேதனை வந்திருக்காது. எவ்வளோ நினைச்சாலும் நம்ம வாயை கட்டுப்படுத்த முடியலை. வேற கடையில போய் காபி குடிக்கவும் மனசு சமாதானமாகலை. சரி, அப்படியே எதிர்ப்பக்கம் இருந்த தள்ளுவண்டி கடையில் ஜூஸ் குடிக்கலாமேன்னு போனேன்”.

அதே சாலையின் இடது புறத்தில், தள்ளு வண்டியில் வைக்கப்பட்ட கடை அது. பழுப்பு வெண்ணிறமும், பசுமையும், மஞ்சளாய் அழகாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட முலாம்பழங்கள், சாத்துக்குடி பழங்கள். இரண்டு மிக்ஸிக்கள், கண்ணாடி டம்ளர்கள், கையால் சுற்றி, சாத்துக்குடியை பிழிய உதவும் இயந்திரம், சின்னதாய் ஒரு யமஹா ஜெனரேட்டர் மற்றும் பல வண்ணத்துணியால் ஆன பெரிய குடை ஒன்று விரிக்கப்பட்டு, உள்ளே ஒரு ஹிந்தி வாலா இருப்பான்.

“முலாம்பழம் ஜூஸ் வாங்கி குடிச்சேன், இல்லை குடிக்க வாய் வச்சு முதல் வாய் உறிஞ்சேன் பாரு…, சுர்ருனு நாக்குல நெருப்பு வச்சு சுட்ட மாதிரி வலி ஏறுச்சு, அப்படியே பயங்கர வலி, மண்டை முழுக்க விஷம் ஏறுகிற மாதிரி., டம்ளரை கீழ வீசி அப்படியே தலையை பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்துட்டேன் ரோட்லயே…! தாங்க முடியாத வலி,” என்று ஒரு நொடி நிறுத்தினான். அவன் உடம்பு சிலிர்த்தது.

“வலி தாங்காம நான் கடைக்காரனை கத்த ஆரம்பிச்சேன். என்னை சுற்றி கூட்டம் கூடிருச்சு. என்னாச்சு, என்னாச்சுன்னு? நான் வலில கடைக்காரனை திட்ட, தேனீ இருந்ததுக்கு நான் என்னா அண்ணா பண்ணுவேனு அவன் கதறினான்.”

“கொஞ்ச நேரத்துல கண்ணெல்லாம் இருட்டுற மாதிரி ஆகிருச்சு. அரை மணி நேரம் கழிச்சு தான் கொஞ்சம் வலி குறைஞ்சது. கண்ணு தெளிவாச்சு. ஏன்டா டேய்! ஊத்துறப்போ பார்த்து ஊத்தக்கூடாதாடானு அவனை திட்டிவிட்டு கிளம்பினேன்.”

“வீட்டுக்கு போனபிறகு, வலி கொஞ்சம் குறைஞ்சாலும் பயமா இருந்தது. அதனால் ஆஸ்பத்திரிக்கு போய், ஊசி போடவும் தான் மனசு சரியாச்சு.! என் நிலைமையை பார்த்தியா!” என்று, பெருமூச்சு விட்டு நிறுத்தினான்.

ஜூஸ் பிழியும் இடம், கரும்பு சாறு பிழியும் இடங்களில் இயற்கையான இனிப்பு சுவை வாசம் இருப்பதால், தேனீக்கள் சுற்றும். வாசனை பிடித்து வந்து மொய்க்கும். எல்லா இனிப்பு சுவைக்கும் தேனீக்கள் வருவதில்லை. எல்லாம் வேதிப்பொருள் கலப்பு. கடையில் வாங்கும் சர்க்கரையை திறந்து வைத்தாலும் எறும்புகள் மொய்ப்பதில்லை தற்போதெல்லாம்.

ஜூஸ் எடுக்க, அரைக்க பயன்படும் மிக்ஸிக்கள் தற்போது பைப் வைத்து மிக்ஸியிலிருந்து திறந்து, நேராக கண்ணாடி டம்ளரில் பிடித்து கொடுப்பது போல வந்து விட்டன. திறந்தவுடன், வேகமாக நுரையுடன் பழத்தின் சாறானாது கொட்டும். குழாயின் வாய்ப்பகுதியை மொய்த்துக் கொண்டிருந்த, தேனீக்களில் ஒன்று, குழாயை வேகமாக திறக்கவும் அந்த விசையில், நுரையோடு கலந்து டம்ளரில் விழுந்து, அவன் வாய்க்குள் சென்று பார்க்க ஆசைப்பட்டுள்ளது போல.

“இப்போ பரவாயில்லை தானே, வலி எப்படி இருக்கு! குறைஞ்சிருச்சா?” என்றேன்.

“ம்ம்…! என்றவன், “நாக்கில் கடிச்சதால எதும் ஆகுமா?” என்று தன்னிச்சையாக நாக்கை நீட்டி, கொட்டுபட்ட இடத்தை, கண்களால் தேடினான். அப்போது கண்கள் இரண்டும் கீழ் நோக்கி பார்க்கையில் மாறு கண் போல தோன்ற, பார்த்ததும் சிரிப்பு வந்தது.

சிரிப்பை அடக்கிக்கொண்டேன். “உன் நாக்குல கடிச்சதால, அந்த தேனீ இப்போ பைந்தமிழ் தேனீயாக மாறிடுச்சு” என்றேன்.

“என்ன சொல்ற? என்று நிமிர்ந்தான், மாறு கண்கள் நேராகி, என்னை நோக்கி முறைத்தது.

“ச்சும்மா…! என்றேன்.

‘ஆமாம்! அவன் தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். அடுத்து எனக்கு தோன்றிய கேள்வியை கேட்க வந்து, அவன் முறைப்பை பார்த்ததும் கேட்காமலே விட்டுவிட்டேன்.

‘ஆமா, உன் வாய்க்குள்ளே போன அந்த தேனீ என்னாச்சு…?’

தற்போது புல்லாங்குழல், நன்றாக இசைக்க வருகிறதாகவும், மாஸ்டர் சந்தோஷமாக கற்றுக் கொடுப்பதாகவும் அடுத்த சந்திப்பில் கூறினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *