செத்துப்போனவனின் ஃபேஸ்புக்…!

7
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 47,617 
 
 

feeling sad என்ற ஸ்மைலியுடன் “Last night Alex passed away in an accident !” என்று செந்தில் போட்டிருந்த ஸ்டேட்டஸ் பூபதியை தூக்கிவாரிப்போட்டது. அலெக்ஸின் ஃபேஸ்புக்கில் அந்த ஸ்டேட்டஸை Tag செய்திருந்தான் செந்தில்.

RIP
omg
How did it happen?

இப்படி கமெண்ட்டுகள் குவிந்திருந்தன. ஸ்டேட்ஸை பார்த்தும் பாக்காமலும் சில பக்கிகள் லைக்குகளையும் வழங்கியிருந்தன. செந்திலுக்கு உடனே ஃபோன் செய்தான் பூபதி. எங்கேஜ்டாக இருந்தது.

“மனிதன் பிறக்கப்போற தேதி சில மாதத்துக்கு முன்னாடியே தெரிஞ்சிருது, ஆனா இறக்கிற தேதிய யாராலையும் சொல்ல முடியறதில்ல! இந்த சின்ன வயசில அலெக்ஸுக்கு இப்படியாகியிருக்கக் கூடாது!” பூபதி தன் மனதிற்குள் இப்படி புலம்பிக்கொண்டிருந்தான்.

அலெக்ஸை ஒரு ஃபேஸ்புக் பிராணியென்றே சொல்லலாம்!

அலெக்ஸ் சாதாரணமாக போடும் “குட் மார்னிங்” ஸ்டேட்டஸ்களுக்கு கூட லைக்குகள் அள்ளும். ஆனால், பூபதியின் ஃபோட்டோவோ ஸ்டேட்டஸோ எதுவாக இருந்தாலும் லைக்குகள் இரண்டிலக்கங்களை தொடுவதே பெரிய விஷயம்.

“எப்படிடா ஒனக்கு மட்டும் லைக்கு நெறயா கெடைக்குது?” என்று கேட்கும்போதெல்லாம் “நீ பஞ்சத்துக்கு ஆண்டி நான் பரம்பர ஆண்டி” என்று சொலவடையைச் சொல்லிவிட்டு, “நாங்கள்லாம் இந்த இடத்தப் பிடிக்குறதுக்கு எத்தனை வருஷம் பாடுபட்டிருப்போம்?! என்னமோ அவசரத்துக்கு அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிட்டு உடனே லைக்கும் ஷேரும் பிச்சிக்கிணும்னு நெனச்சா என்ன பண்றது?” என்று ஃபேஸ்புக் சித்தர் போல பேசி சீன் போடுவான் அலெக்ஸ்.

“மச்சி…! முதல்ல தெரிஞ்சவன், தெரியாதவன், தல ஃபேனு, தளபதி ஃபேனு… இப்படி எல்லாத்துக்கும் பாரபட்சம் பாக்காம ஃப்ரென்ட் ரெக்வெஸ்ட் குடு மச்சி! நீ ஃப்ரென்ட்ஸ் ஆட் பண்ண பண்ணத்தான் லைக் கெடைக்கும். அப்புறம் உன்னோட ஃப்ரென்ட் எவ்வளவு மொக்கையா ஸ்டேட்டஸ் போட்டாலும் ஒரு லைக்க ஃபோட்டு விடு. அப்பதான் செஞ்சோற்றுக் கடன்தீர்க்க அவன் ஒனக்கு லைக் போடுவான். இதெல்லாம் ஒரு ஃபேஸ்புக் அரசியல்டா!” என்று அவ்வப்போது அவன் வழங்கும் டிப்ஸ்களுக்கும் பஞ்சமிருக்காது.

“ய்யீ..”. என்று பல்லைக் காட்டியபடியோ உதடுகளைக் குவித்தபடியோ அலங்கோலமாக எடுக்கப்பட்ட செல்ஃபியை அப்லோடு செய்துவிட்டு, ‘எத்தனை லைக்குகள் வந்திருக்கு’ என்று பார்த்துக்கொண்டே இருப்பது பூபதிக்கு எப்போதும் கேனத்தனமாக தோன்றும். அதனால்தான் சமீபகாலம் வரை அவன் ஃபேஸ்புக் அக்கவுன்ட் உருவாக்கவே இல்லை.

தனது கல்லூரி நண்பர் நண்பிகள் பலரும் ஃபேஸ்புக்கில் வலம் வருகிறார்கள் என்று தெரிந்தபின் அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள ஃபேஸ்புக் நல்ல ஊடகமாக இருக்கும் என பின் நாட்களில் ஆமோதித்தவனாய் அவனும் ஒரு கணக்கை துவங்கி வைத்தான்.

சற்று நேரத்தில் அலெக்ஸிவின் ஈமச் சடங்கு புகைப்படங்களை செந்தில் அப்லோடு செய்ய லைக்குகள் மளமளவென விழுந்தன. என்னதான் கிறிஸ்துவ வீடாக இருந்தாலும் இப்படியா கோர்ட் சூட் போட்டுக்கொண்டு சாவுவீட்டில் போஸ் கொடுப்பது. அந்த ஃபோட்டோ பூபதிக்கு நெருடலாக இருந்தது.

அன்றிரவு பூபதி தூக்கம் வராமல் வாழ்வின் நிலையாமை குறித்து இன்னும் தீவிரமாய் சிந்தித்தவனாய் அங்குமிங்கும் பால்கனியில் நடந்துகொண்டிருந்தான். தனது லேப்டாப்பை விரித்து ஃபேஸ்புக் பார்த்தபோது சரியாக மணி 12. அலெக்ஸின் பழைய போட்டோக்களையும் ஸ்டேட்டஸ்களையும் அவனது டைம் லைனிற்கு சென்று பார்த்துக்கொண்டிருந்தான்.

திடீரென்று அலெக்ஸின் டைம் லைனில் புது ஸ்டேட்டஸ் ஒன்று அப்லோடு ஆகியது. ஆம்! அது அலெக்ஸின் அக்கவுன்ட் வழியாகத்தான் அப்லோடு செய்யப்பட்டிருந்தது. “தகுதமுதளி” என்ற ஒரு வார்த்தை மட்டுமே ஸ்டேட்டஸாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் பூபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. செத்துப்போன அலெக்ஸின் ஃபேஸ்புக்கை யார் இயக்குவது?! அந்த ஸ்டேட்டஸ் மஞ்சுவின் ஃபேஸ்புக்குடன் Tag செய்யப்பட்டிருந்தது.

மஞ்சுவும் அலேக்ஸும் ஃபேஸ்புக் வழியாக நண்பர்களாகி பின் காதலரானார்கள். பின் கருத்துவேறுபாட்டினால் பிரிந்துவிட்டார்கள். அதன்பிறகு, மஞ்சு திடீரென்று ஒரு வருடத்திற்கு முன், ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டாள்.

“இந்த பேய் பங்களாவிலெல்லாம் தானாக காற்றாடி சுற்றுவதாகவும் தண்ணீர் குழாய் திறந்துகொள்வதாகவும் லைட் ஆன் ஆவதாகவும் சொல்கிறார்களே… அதுபோல செத்துப்போனவர்களின் ஃபேஸ்புக்கிலும் இப்படி நடக்குதோ?!” பூபதியின் மனம் ஒரு கணம் சிந்தித்தபோது அடுத்த கணமே “ச்சே.. ச்சே…! என்னவொரு பிற்போக்கான சிந்தனை!” என தன்னைத் தானே கண்டித்துக்கொண்டான்.

ஒருவேளை அவனது வீட்டில் யாருக்காவது அவனது பாஸ்வேர்டு தெரிந்திருந்து, அவர்கள் போட்டிருக்கலாம்! ஆனால் இதற்கு என்ன அர்த்தம்?! அதை யோசித்துக்கொண்டே பூபதி தன்னையும் அறியாமல் தூங்கிவிட்டான்.

மறுநாள் செந்திலுக்கு ஃபோன் செய்து அலெக்ஸின் மரணம் குறித்து துக்கம் விசாரித்து விட்டு, அப்படியே ஸ்டேட்டஸ் குறித்து கேட்க நினைத்தான். ஆனால், மரண வீட்டில் உள்ளவர்களிடம் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் பத்தி கேட்பது பூபதிக்கு சரியாகப்படவில்லை. பின் வழக்கம்போல அலுவலகம் சென்று வேலைகளில் மூழ்கினான்.

அன்றிரவு 12 மணிக்கு ஃபேஸ்புக்கை ஓப்பன் செய்து காத்திருந்தான். அலெக்ஸின் ஃபேஸ்புக் ஆஃப் லைனில்தான் இருந்தது. “ஏன் இந்த சாதாரண விஷயத்திற்கு இவ்வளவு அலட்டிக்கொள்கிறோம்” பூபதியின் மனம் கேட்டது.

தூக்கம் கண்களை மையமிட்டிருந்தது. தூக்கக் கலக்கத்தில் கண்களை கசக்கியபடி எதேட்சையாகப் பார்க்கையில் “1 நோட்டிஃபிகேஷன்” என்றிருந்தது. ஆம்…! அது அலெக்ஸ் அக்கவுன்ட்டிலிருந்து அப்லோடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மணி சரியாக 12.18.

சரி… அந்த ஸ்டேட்டஸ்ல என்ன போட்டிருக்கு… பார்த்தான். ஒன்றும் புரியவில்லை!

“மிர்சா ஸ்ர்வட” என்றிருந்த அந்த வார்த்தை எந்த மொழி என்றுகூட புரியவில்லை பூபதிக்கு.

மறுநாள் செந்திலுக்கு ஃபோன் செய்தான்.

“டேய் அவங்க வீட்ல எல்லாரும் இப்போ சோகத்துல இருப்பாங்கடா. இப்போ போய்கிட்டு ஃபேஸ்புக் யார் ஓப்பன் பண்ணாங்கன்னு விசாரிக்க முடியுமா? ஃப்ரீயா விடு மச்சி! அப்புறம் விசாரிச்சக்கலாம்! என்று கூலாக சொல்லி போனை துண்டித்தான் செந்தில்.

ஆனால், பூபதிக்கு அந்த ஸ்டேட்டஸ் எதையோ சொல்ல வருவதாகவே தோன்றியது.

அந்த இரண்டு வார்த்தைகளையும் எழுதிப்பார்த்தான்.

“தகுதமுதளி” இதை பின்னால் இருந்து எழுதிப்பார்த்தான் “ளிதமுதகுத” என்று வந்தது. இப்போது இன்னும் தலை சுற்றியது.

சின்ன வயதில் கீதா அக்கா ஒரு விதமாகப் பேசிக் காட்டுவாள். அது நியாபகத்துக்கு வந்தது. “என்ன பண்ற?” என்பதை “எட்லென்ன பட்லண்ற?” என்பாள். “ட்ல” என்ற எழுத்துக்களை இடையில் போட்டு பேசுவாள்.

இப்போது இந்த வார்த்தையைப் பார்த்தான் பூபதி. இடையில் பொதுவாக அமைந்திருந்த ‘த’வை நீக்கிவிட்டு எழுதிப்பார்த்தான் “குமுளி” என்றானது. குமுளிக்கு அலெக்ஸ் அடிக்கடி பள்ளி நண்பர்களைப் பார்க்க செல்வது வழக்கம். அங்கே சார்மி டவர்ஸில் ரூம் போட்டு பிற நண்பகளையும் வரவழைத்து, வருடம் ஒரு முறை கெட்டுகெதர் பார்ட்டியை கொண்டாடுவார்கள்.

“மிர்சா ஸ்ர்வட” என்ற வார்த்தையை பின்னாலிருந்து எழுதிப் பார்த்ததும் அது “சார்மி டவர்ஸ்” என்றானது. அந்த வாத்தையை அதிக சிரத்தை இல்லாமலேயே பூபதி கண்டுபிடித்துவிட்டான்.

அலெக்ஸின் ஆன்மா ஃபேஸ்புக் வழியாக பேசுகிறதோ என்ற சந்தேகம் இப்போது வலுப்பெற்றது பூபதிக்கு. இல்ல… யாராவது கம்ப்யூட்டர் பெருச்சாளிகள் இப்படி அவன் அக்கவுன்ட்ட யூஸ் பண்ணி விளையாடுறாங்களா? பூபதிக்கு குழப்பமாக இருந்தது.

“அலெக்ஸுக்கு ஆக்ஸிடென்ட் ஆனது குமுளியிலா?” இதை செந்திலிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால் கொஞ்சம் தெளிவு கிடைக்கும் என்று தோன்றியது பூபதிக்கு. மறுநாள் காலையில் ஆஃபீஸுக்கு லீவ் சொல்லிவிட்டு நேராக செந்திலைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தான். காலிங் பெல் அழுத்தப்பட்டிருந்தது. கிளம்பும் பரபரப்பில் “கம் இன்…” என்றவாறே அவசரமாக திறந்து பார்த்த பூபதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கே அலெக்ஸ் செந்திலுடன் “ஹாய்…!” என்று ஸ்டைலாக சொன்னபடி நின்றுகொண்டிருந்தான்.

குத்துக்கல்லைப் போல் அலெக்ஸ் வாசலில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த பூபதிக்கு கேட்பதற்கு கேள்விகள் எதுவும் வரவில்லை?! “சாகாத இவனுக்காகவா நைட்டு ஃபுல்லா உக்காந்து டிடெக்டிவ் வேல பாத்தோம்!” என்று கண்கள் சிவந்தான் பூபதி.

“மச்சி… நான் செத்துட்டேன்னு ஸ்டேட்டஸ் போட்டா எவ்வளவு லைக் வருதுன்னு பாத்தோம். செந்தில் இதுக்கு முதல்ல ஒத்துக்கல, நான்தான் அவன கம்ப்பல் பண்ணி ஒத்துக்க வெச்சேன். இந்த மூனு நாளு செம த்ரில் மச்சி! மொத்தம் 450 பேர் லைக் பண்ணிருக்காங்க, 358 பேர் கமெண்ட் பண்ணியிருக்காங்க, 180 ஷேர்ஸ் வேற…” அலெக்ஸ் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தான்.

“டேய் ஒனக்கு அறிவிருக்கா… லூசாடா நீ?! நாளைக்கு நீ உண்மையிலேயே செத்தா ஒருபய கண்டுக்க மாட்டான்” என்று கத்தி விட்டு, பூபதி ரூமை விட்டு வெளியேறினான்.

சிலருக்கு நகை-பணத்தின்மீது, சிலருக்கு பேர்-புகழ் மீது, சிலருக்கோ லைக்-ஷேர்களின் மீது மோகம் என்ற நிலையையும் கடந்து பித்துப்பிடித்து திரிகிறார்கள்! காரை அலுவலகத்திற்கு முடுக்கியபடியே மனதிற்குள் குறைபட்டுக்கொண்டான் பூபதி.

அப்போது செந்திலிடமிருந்து ஃபோன் வந்தது. “நீ சொல்ற எந்த எக்ஸ்பெலெய்னேஷனும் எனக்குத் தேவையில்ல… கொஞ்சம் ஃபோன கட் பண்றயா?” பூபதி செந்திலின் குரலைக் கேட்டவுடன் பொறிந்து தள்ளினான்.

செந்தில் பேச வார்த்தையின்றி காற்றை மட்டும் வெளித்தள்ளினான்.

சில விநாடிகள் தொடர்ந்த மௌனத்தை அடுத்து, “சரி… செத்துப்போயிட்டதா சொன்னது சரி, அந்த ஃபோட்டோஸ் எப்படி?” பூபதி செந்திலிடம் கேட்டான்.

“அது அலெக்ஸோட தாத்தா இறுதி சடங்கப்போ எடுக்கப்பட்ட ஃபோட்டோஸ்…! ஃபோட்டோஸ் அப்லோடு பண்ணினாதான இன்னும் கொஞ்சம் ஸ்டேட்டஸ் லைவ்லியா இருக்கும்!” செந்தில் சொல்லிவிட்டு அசட்டுச் சிரிப்பை அலைபேசியில் செலுத்தினான்.

“ம்… இதுக்கு ரூம்போட்டு ப்ளேன் பண்ணியிருப்பீங்க போல…?! சரி… அந்த ஸ்டேட்டஸ் எதுக்கு? அதுல வார்த்தை விளையாட்டு வேற… அதுவும் நைட்டு 12 மணிக்கு செத்துப்போனவனோட ஃபேஸ்புக் வழியா?!” கடுப்புடன் கேட்டான் பூபதி.

அது ச்சும்மா நான்தான் ஒரு த்ரில்க்காக “குட் நைட்” மெஸ்ஸேஜ் போடச் சொன்னேன்!

“என்னது குட்நைட் மெஸ்ஸேஜ்ஜா…?” பூபதி கேட்டுக்கொண்டிருக்கும்போது சிக்கனல் வீக்கானதால் ஃபோன் கட்டானது.

செந்திலின் பதில் பூபதியை குழப்பத்தில் ஆழ்த்தியது. மீண்டும் செந்திலுக்கு ஃபோன் செய்தான், சிக்னல் இல்லை.

“சரி எப்படியும் போய்த் தொலையுங்கள் எனக்கு ஏம்பொழப்ப பாக்கணும்! அப்பதான் சோறு!” என்று தனக்குத்தானே பேசியவாறே காரை பார்க் செய்துவிட்டு ஆபீஸுக்குள் நுழைந்தான் பூபதி.

செந்திலிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.
“signal problem… குமுளி சார்மி டவர்ஸ் ரீச் ஆனதும் கால் பண்றோம்!”

இப்போது எதற்கு குமுளிக்கு செல்கிறார்கள்…? பூபதி சிந்தித்துக்கொண்டிருக்கையில் இன்னொரு சிந்தனையும் வந்தது. இப்போது ஏதாவது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் வந்துள்ளதா… ஃபேஸ்புக்கிற்குள் நுழைந்தான் பூபதி.

“தினமலர் ஜூலை 22 2012, பக்கம் 4” என்ற அந்த ஸ்டேட்டஸ் நேற்றிரவு 12.30 மணிவாக்கில் மஞ்சுவின் ஃபேஸ்புக் வழியாக அலெக்ஸின் அக்கவுன்ட்டுடன் Tag ஆகியிருந்தது.

இப்போது பூபதி எதுவும் யோசிக்காமல் அருகிலிருந்த சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்திற்கு விரைந்தான். அந்த நாளுக்குரிய தினமலரைத் தேடினான்.

அதில் ஒரு விபத்துச் செய்தி இடம்பெற்றிருந்தது. ஒரு பிரபல ஹோட்டலில் லிஃப்ட் ரோப் அறுந்து இரண்டு இளைஞர்கள் பலியாகி இருந்ததாக வெளிவந்திருந்த செய்தி அது!

அதைப் படித்ததும் செந்திலுக்கும் அலெக்ஸுக்கும் மாறி மாறி ஃபோன் செய்தான் பூபதி. நாட் ரீச்சபிளில் இருந்தது.

ஹோட்டல் ரீச்சானதும் செந்தில் ஃபோன் செய்வதாகச் சொல்லியிருந்தான். ஆனால், அவன் லிப்ட்டில் ஏறுவதற்கு முன் ஃபோன் செய்தால்தான் ஏதாவது செய்ய முடியும். ஒருவேளை லிஃப்டில் ஏறிய பிறகு ஃபோன் செய்தால், அவர்கள் கீழே விழும்போது கத்துவதை மட்டுமே கேட்க நேரும்! பூபதிக்கு பதற்றம் எகிறியது.

பூபதியின் அலைபேசி அலறியது. செந்தில் காலிங்…

பார்த்த நொடிப்பொழுதில் ஆன் செய்ததான் பூபதி. “லிஃப்ட்ல இருந்து வெளிய வந்துருங்க!” படபடத்தான்.

“வாட்… என்ன லிஃப்ட்…?!” செந்தில் சிரித்துக்கொண்டே கேட்டான்.

“இப்போ எங்க இருக்க?”

“சார்மி டவர்ஸ்…!”

“அங்க லிஃப்ட் யூஸ் பண்ண வேண்டாம்! அங்க ஹோட்டல் மேனேஜர்ட்ட சொல்லி லிஃப்ட் ரோப் சரியா இருக்கான்னு செக் பண்ண சொல்லு!”

“எதுக்குடா?”

“சீக்கிரம் சொல்டா…!” கத்தினான் பூபதி.

“சார்…! லிஃப்ட் ரோப் நல்லாதான் சார் இருக்கும், பக்கா மெய்ன்ட்டனென்ஸ் சார்!” ஹோட்டல் மேனேஜர் செந்திலிடம் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே பெரிய இடிச் சத்தம்போலக் கேட்டது. லிஃப்ட் கீழே விழுந்து நொறுங்கிய சத்தம் அது.

செந்திலும் அலெக்ஸும் சென்னைக்கு விரைந்தனர்.

மறுநாள் சென்னை நுங்கம்பாக்கம் சைபர் கிரைம் அலுவலகத்தில் இன்ஸ்பெக்ட்டர் விஸ்வாவைப் பார்ப்பதற்காக செந்தில்-அலெக்ஸ்-பூபதி மூவரும் காத்திருந்தனர்.

உள்ளே வரச்சொன்னார் விஸ்வா.

பூபதி நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தான். சலனமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்த விஸ்வா,

“ஒருத்தன் லக்ஷ்மி சிமென்ட்ஸ் ஓனர் பேங்க் அக்கவுன்ட்ட ஹேக் செஞ்சு 10 கோடி அவனோட அக்கவுட்டுக்கு ட்ரான்ஸாக்ஷன் பண்ணிருக்கான். காலைலயிருந்து செம்ம டென்ஷன்ல இருக்கேன். நீங்க வந்து பேய்யி பிசாசுனு கத சொல்லிகிட்டிருக்கீங்க. தயவு செஞ்சு எந்திருச்சு போங்க, நாளைக்கு வாங்க… ஃப்ரீயா இருந்தா பாப்போம்!” ஸ்ட்ரிக்ட்டாக முகத்தை வைத்தபடி சொல்லிவிட்டு கணினிக்குள் தலையை நுழைத்துக்கொண்டார்.

“அதில்ல சார்… இன்னிக்கு என்ன மெஸ்ஸேஜ் வரும்மோன்னு பயமா இருக்கு. இது உயிர் பயம்! உணர்ந்தாதான் தெரியும்” அலேக்ஸ் தளுதளுத்த குரலில் சொன்னான்.

“யோவ்… அந்த மெஸ்ஸேஜ்னால உங்களுக்கு நல்லதுதானய்யா நடந்திருக்கு… அதான் நாளைக்கு வாங்கன்னு சொன்னேன்ல…” விஸ்வா அதட்டலாகக் கூறினார்.

சற்று நேரம் அந்த அறையில் மௌனம் நிலவியது. மூவரும் வெளியேறிக்கொண்டிருக்கும்போது, விஸ்வா அவர்களை நிற்த்தினார்.

“இப்ப என்ன அந்த பேய ஓட்டணுமா?! ஒரு நிமிஷம் இருங்க!” என்று சொல்லி உட்காரச் சொன்னார் விஸ்வா.

மஞ்சு-அலெக்ஸ்-பூபதி மூன்றுபேரின் fb ஐடியையும் கேட்டார். மென்பொருளில் எதையோ தட்டச்சு செய்து எண்ட்டர் பட்டனை தட்டினார்.

“சரி நீங்க போகலாம்! பேய விரட்டியாச்சு!” விஸ்வா சொன்னதும் மூவரும் புரியாமல் விழித்தனர்.

“உங்க fb அக்கவுன்ட்ஸ் எல்லாத்தையும் எரேஸ் பண்ணியாச்சு. உங்களுக்குத் தேவைனா புதுசா அக்கவுன்ட் கிரியேட் பண்ணிக்கோங்க.” என்று கூலாகச் சொன்னார் விஸ்வா.

“என்னது… என்னோட ஃபேஸ்புக் அக்கவுன்ட் எரேஸ் ஆயிருச்சா??! இதுக்கு நான் செத்திருக்கலாமே?!” அலெக்ஸ் பரிதாபமாக புலம்பியது காதில் விழ, “கெட் அவுட்…!” எனக் கத்திக்கொண்டிருந்தார் விஸ்வா.

Print Friendly, PDF & Email

7 thoughts on “செத்துப்போனவனின் ஃபேஸ்புக்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *