நேரம் மாலை ஆறுமணியை நெருங்கிக் கொண்டிருந்தது.பரந்து விரிந்து கிடந்த சமுத்திரமானது தனது வாயை அகலத் திறந்து சூரியனை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது.தனது அவல நிலையை உணர்ந்த சூரியனார் செந்நிற ஒளிக்கதிர்களை வானெங்கும் பரப்பி “அபாயம் அபாயம்“ என்று உலகத்தோருக்கு அறிவித்துக் கொண்டிருந்தார். சூரியனின் இயலாமையை உணர்ந்த சமுத்திரமோ தன் அலைக்கரங்களை முன்பை விட வேகமாக வீசி ஆர்ப்பரித்தது.செந்நிற வானமும் நீலக்கடலும் நுரை கக்கியவாறு கரையை நோக்கி வேகமாய்த் தவழ்ந்து கொண்டிருந்த அலைகளும் கடற்கரையில் பல வர்ண ஆடைகளுடன் நடை பயின்ற கன்னியரும் சேர்ந்து வர்ணஜாலம் நிகழ்த்திக் கொண்டிருந்த அந்த மாலை வேளையிலே மொட்டை மாடியில் இருந்தவாறு இயற்கையின் அழகையெல்லாம் அள்ளிப் பருகிக்கொண்டிருந்தான் சாம்சன். கூடு திரும்பிக் கொண்டிருந்த பறவைகளின் கீச்சொலிகள் இனிய சங்கீதம் போன்று ஒலித்துக் கொண்டிருந்தன. இவற்றோடு இதமான மந்தமாருதமும் சேர்ந்து அந்த மாலைப் பொழுதை ரம்மியமானதாய் ஆக்கியிருந்தது.பறவைகளின் இனிமையான கீச்சொலிகளுக்கு மத்தியில் நாராசமாய் ஒலித்தது அந்த பீப் ஒலி.அந்த ஒலி வேறேதுமல்ல சாம்சனின் மொபைல் அலேர்ட் டோன் தான்.இயற்கையின் அழகை ரசித்தவாறு ஏதேதோ கனவுகளில் மூழ்கிப் போயிருந்த சாம்சன் அந்த பீப் ஒலியால் சுய நினைவடைந்தவனாய் கைகளை உதறியவாறு கதிரையிலிருந்து எழுந்து மொபைல் இருக்கும் தனது பிரத்தியேக அறையை நோக்கி நடந்தான்.
அறைக்குள் சென்று மொபைலில் தனக்கு வந்திருந்த எஸ்.எம்.எஸ்சை வாசித்ததும் அது வரை அவன் முகத்திலிருந்த சந்தோசம் எங்கோ காணமல் போனது.”Joyce Restaurant, 27 Adam Street. Table No 17,@7.30 P.M” என்று வந்திருந்த அந்த எஸ்.எம்.எஸ்ஸை தொடர்ந்து குறித்த ரெஸ்டாரன்ட்டின் அமைவிடத்தை காட்டும் ஜி.பி.எஸ் சிக்னலும் அவனுக்கு அனுப்பப்பட்டிருந்தது.சாம்சன் மொபைலில் நேரத்தை சரிபார்த்தான்.மொபைல் நேரம் 6.05 PM என்று காட்டியது.ஜி.பி.எஸ் சிக்னலை மீண்டும் ஒருமுறை பார்த்து ரெஸ்டாரன்ட்டின் அமைவிடத்தை தன் மனதுள் அனுமானித்துக் கொண்ட சாம்சன் “நேரம் இருக்கின்றது” என்று தனக்குத் தானே சொல்லியவாறு மொபைலில் தனக்குப் பிடித்த ரஹ்மானின் ஆல்பம் ஒன்றைத் தட்டிவிட்டு ஹெட்செட்டை காதில் மாட்டிக் கொண்டான்.ஆனால் அவன் மனமோ பாடல்களில் லயிக்க மறுத்து நடக்கப்போகும் சந்திப்பைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.சாம்சன் தனது கவனத்தை பாடல்கள் மீது திருப்ப முயன்றான்.அது முடியாமற் போகவே எழுந்து சென்று குளித்து விட்டு சந்திப்புக்குத் தயாரானான்.
ஒட்டு மீசை,ஐ லென்ஸ்,விக்,தோடு,வெள்ளிச் சங்கிலி,கறுப்பு நிற ஜெர்கின் கோட், ரே பான் கண்ணாடி என பத்து நிமிட ஒப்பனையில் அவன் தாயால் கூட அடையாளம் காண முடியாத அளவிற்கு மாறியிருந்தான் சாம்சன்.சந்திப்பு நடக்கும் போது யாராவது சந்தேகப்பட்டு இவர்களை அடையாளம் காணக்கூடும் என்பதால் அதனைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஒப்பனை முறையை உளவுத்துறையினர் அறிமுகப்படுத்தியிருந்தனர். எல்லாவற்றையும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்ட சாம்சன் புறப்பட தயாரான போது அவனது மொபைல் மீண்டும் பீப் ஒலி எழுப்பியது. அதே எண்ணிலிருந்து தான் இந்த எஸ்.எம்.எஸ்சும் வந்திருந்தது.
”Mark Willson-Jones(R 54) ” என்று மாத்திரம் குறிப்பிட்டிருந்த அந்த எஸ்.எம்.எஸ்ஸை படித்து விட்டு ஒரு மெல்லிய புன்சிரிப்பை உதிர்த்த சாம்சன் மொபைலை ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் போட்டு விட்டு வாடகைக் காரொன்றில் ஜோய்ஸ் ரெஸ்டாரன்ட் நோக்கி விரைந்தான்.
ஜோய்ஸ் ரெஸ்டாரன்டை சாம்சன் சென்றடைந்த போது நேரம் 7.15 ஆகியிருந்தது.சென்றவுடனேயே ரெஸ்டாரண்டுக்குள் நுழையாமல் ரெஸ்டாரன்ட்டிற்கு முன்னால் இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து பொருட்கள் வாங்குவது போல சுற்றுப்புறத்தை ஒரு முறை நோட்டம் விட்டான் சாம்சன்.அவனது கூர்மையான பார்வைக்கு அசாதாரணமாக ஏதும் தென்படவில்லை.எனவே சூப்பர் மார்க்கட்டில் இருந்து வெளியேறி ரெஸ்டாரன்ட்டிற்குள் வெகுசாதரணமாக நுழைந்தான்.தன்னை மார்க் வில்சன் என்று ரிசெப்ஷனிஸ்டிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு 17ம் நம்பர் டேபிளை ரிசேர்வ் செய்திருப்பதாக கூறவே ரெஜிஸ்டரை செக் பண்ணி விட்டு பெயரர் ஒருவரை அழைத்து 17ம் நம்பர் டேபிளை காட்டுமாறு கூறினாள் அந்த அழகான ரிசெப்ஷனிஸ்ட்.
17ம் நம்பர் டேபிள் ரெஸ்டாரன்ட்டின் ஒரு மூலையில் சற்று இருளான பகுதியில் இருந்தது.அந்த டேபிளுக்கு அருகிலிருப்பவர்களைத் தவிர மற்றையோரால் அந்த டேபிளில் இருப்பவர்கள் யார்.என்று கண்டுபிடிப்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும் என்று சாம்சனுக்கு தோன்றியது.அவன் சென்று இருக்கையில் அமர்ந்து சில வினாடிகள் தான் கடந்திருக்கும் ஒரு கட்டையான சற்று பருமனான ஒரு நபர் அவனை நோக்கி வந்து “ஹலோ மிஸ்டர்.மார்க்” என்று கையை நீட்டினார்.தான் சந்திக்க வேண்டிய நபர் அவர் தான் என்பதை உடனடியாகவே ஊகித்துக் கொண்ட சாம்சன் “ஹலோ மிஸ்டர் ஜோன்ஸ்” என்றவாறே அவர் கையைப் பற்றி குலுக்கினான்.வந்த மனிதரை உண்மையான முகத்தைக் கற்பனை செய்ய முயன்று தோற்றான். இருக்கையில் அமர்ந்த பிறகு மிக மெல்லிய குரலில் S 79 என்று தனது அடையாள எண்ணைச் சொன்னான் சாம்சன் அதற்கு அந்த மனிதர் R 54 என்று பதிலளிக்கவே புன்சிரிப்பொன்றை முகத்தில் தவழ விட்டவாறே நீண்ட நாள் பழகிய நண்பர்கள் போல் பேசத் தொடங்கினர் இருவரும்.ஓர்டர் செய்த உணவுகளை சுவைத்தவாறே சில இரட்டை அர்த்த ஜோக்குகளை எடுத்து விட்டார் அந்த நபர்.பிறகு பிசினஸ் பேசுவது போல் பேசிக்கொண்டே சில விடயங்களை குறியீடாக சொல்லியும் வைத்தார்.இயல்பாக ஜோக்கடித்துக் கொண்டே முக்கியமான விடயங்களை குறியீடாக குறிப்பிட்டதையும் அவ்வாறு முக்கிய விடயங்களை கூறும் போது தனது கால் விரல்களை அழுத்தி தன் கவனத்தை அவர் மீது திருப்பியதையும் அவதானித்த சாம்சன் முதலில் தோற்றத்தை பார்த்து அவரைக் குறைத்து மதிப்பிட்டதை எண்ணி தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.யாரும் அவதானிக்காத நேரமாய்ப் பார்த்து சிறிய பிளாஸ்டிக் கவர் ஒன்றை கையில் திணித்து விட்டு புறப்பட்டார் அந்த நபர்.
தனது வீட்டுக்கு வந்த பின்னர் ஏறத்தாழ இரண்டு மணி நேரமாய் சாம்சன் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.”இந்த முறை கொலை செய்யத்தான் வேண்டுமா?”. ஏற்கனவே அவனால் கொல்லப்பட்ட நபர்களின் முகங்கள் அடிக்கடி கனவுகளில் வந்து அவன் நிம்மதியைக் குலைத்துக் கொண்டிருந்தன.இத்தனைக்கும் சாம்சனுக்கு கொலை செய்வது புதிய விடயமல்ல.பதினெட்டு வயதில் ஈழப் போராட்டத்தில் இணைந்து முதன் முதலாக துப்பாக்கியைத் தூக்கியதில் இருந்து இன்று வரை அவனுக்கும் துப்பாக்கிக்கும் ஏறத்தாழ பன்னிரண்டு வருட பந்தம்.இலங்கை இராணுவ வீரர் ஒருவரை சுட்டு வீழ்த்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதனை இராணுவத்தால் கொல்லப்பட்ட தன் அண்ணனுக்கும் ஏனையோருக்கும் மனதார சமர்ப்பணம் செய்து குதூகலித்தவன் அவன்.சில வேளைகளில் தன்னால் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களையும் அவர்களின் குடும்பங்களையும் எண்ணி கவலைப்பட்டாலும் இராணுவத்தினர் செய்த அட்டகாசங்கள் அவன் கவலைகளை அர்த்தமற்றதாக்கியிருந்தன, மறக்கடிக்கச் செய்திருந்தன.தந்தையின் மரணத்தின் பின் போராட்டத்தைக் கைவிட்டு இங்கே வந்த போது தனக்கும் துப்பாக்கிக்கும் இடையிலான பந்தம் முடிந்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தான் சாம்சன்.ஆனால் விதி யாரை விட்டது? ஆறு மாதமாக வேலை தேடியும் எதுவும் கிடைக்காத நிலையில் தாய்க்கு இரைப்பைப் புற்றுநோய் வந்திருப்பதாகவும் மூன்று மாதங்களுக்குள் சர்ஜரி செய்யாவிட்டால் அவரைக் காப்பாற்ற முடியாதென்றும் தகவல் கிடைக்கவே இடிந்து போனான். போதாக்குறைக்கு முப்பது வயதைத் தாண்டியிருக்கும் அக்காவுக்கு இவ்வருடத்துக்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும்.சர்ஜரி,கல்யாணம் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஆகக்குறைந்தது இருபத்தைந்து லட்சமாவது வேண்டும்.வேலை எதுவும் இல்லாமல் அகதிக் காசில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவனுக்கு இருபத்தைந்து லட்சம் என்பது கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத தொகை. அப்போது தான் ஒரு பழைய நண்பன் மூலமாக உளவுத்துறையின் தொடர்பு கிடைத்தது. நடுக்கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு மரக்கட்டை கிடைத்தால் எப்படி இறுக பற்றிக் கொள்வானோ அது போல் கிடைத்த வாய்ப்பை இறுகப் பிடித்துக்கொண்டான் சாம்சன்.அதே போல் உளவுத்துறைக்கும் போதைப்பொருள் கடத்துவோரையும் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவோரையும் போட்டுத்தள்ள ஆட்கள் தேவையாக இருந்தது.உளவுத்துறையினர் வைத்த சோதனைகளில் அதிகாரிகள் மெச்சும் அளவிற்கு செயற்பட்ட சாம்சனுக்கு அந்த நண்பனின் உதவியால் உளவுத்துறையில் சேர்ந்து பத்தாம் நாளே முதல் அசைன்மன்ட் கிடைத்தது. அம்மாவினதும் அக்காவினதும் நிலை அவன் மனதை கல்லாக மாற்றியிருக்க நன்கு திட்டமிட்டு முதல் அசைன்மன்ட்டை வெற்றிகரமாக முடித்தான் சாம்சன்.!
”Clean & Perfect” என்று மேலதிகாரிகள் பாராட்டும் அளவுக்கு அவன் முதல் அசைன்மன்ட்டை சிறப்பாக செய்து முடித்திருந்தமையால் அவனுக்கு அடுத்தடுத்து அசைன்மன்ட்கள் தரப்பட்டன.பலநாட் பட்டினிக்கு பிறகு இரையைக் கண்ட புலியை போல வெறியுடன் வேட்டையாடினான் சாம்சன். முதல் மாதத்திலேயே தாயின் சர்ஜரிக்கு தேவையான ஐந்து லட்ச ரூபாயை திரட்டிய சாம்சன் அடுத்த மூன்று மாதத்திலேயே தமக்கையின் திருமணத்திற்கு தேவையான பணத்தை அசைன்மன்ட்களூடாக சம்பாதித்துக் கொண்டான்.
தாயைக் காப்பாற்றி தமக்கைக்கு திருமணம் செய்துவைத்த பின்னரும் ஓயாமல் அடுத்த இரு தங்கைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அதே தீவிரத்துடன் அசைன்மன்ட்களைச் செய்து முடித்தான் சாம்சன். இதனால் சேர்ந்து எட்டு மாதத்திலேயே உளவுத்துறையின் எக்ஸ்பேர்ட் கில்லர்களுள் ஒருவனாக ஆகியிருந்தான்.எக்ஸ்பேர்ட் ஆக பதவி உயர்வு பெற்ற பின் கிடைக்கும் அசைன்மன்ட்களின் எண்ணிக்கை குறைந்தாலும் மாதச்சம்பளம் மற்றும் ஒரு அசைன்மன்ட்டுக்குரிய சம்பளம் என்பன பலமடங்கு அதிகரித்ததால் சாம்சனுக்கு தேவைக்கு அதிகமாகவே பணம் கிடைத்தது.அடுத்த இரு வருடங்களில் தன இரு தங்கைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடித்து வைத்தது மட்டுமன்றி சொந்தமாக வீடொன்றையும் வாங்கிக் கொண்டான் சாம்சன்.
இனி ஒரு கல்யாணத்தைச் செய்து கொண்டு நிம்மதியோடும் சந்தோசத்தோடும் வாழலாம் என்று எண்ணிய சாம்சன் வாழ்வில் மீண்டும் விதி விளையாடியது.கடந்த மூன்று வருடமாக ஒரு கொலை செய்யும் இயந்திரமாகவே (Cold blooded Killing Machine) வாழ்ந்து விட்ட சாம்சனுக்கு ஒருமுறை தன்னால் கொல்லப்பட்டவர்கள் யார்?? என்று அறியும் ஆர்வம் தோன்றியது.அந்த ஆர்வத்தால் தனது நிம்மதி நிரந்தரமாய்ப் பறிபோகும் என்று அவன் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டான்.
தன்னால் கொல்லப்பட்டவர்களைப் பற்றி தகவல்களைத் தேடிய போது தான் அவனால் கொல்லப்பட்டோரில் ஏறத்தாழ அரைவாசிப் பேர் அரசாங்கத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து தீவிரமாக குரல் கொடுத்து வந்தவர்கள் என்று தெரிய வந்தது.”ஈழத்தில் அடக்குமுறையை எதிர்த்து ஆயுதம் ஏந்திய என் கைகள் அடக்குமுறைக்கு ஆதரவளிப்பதா?” என்று அவன் நெஞ்சு கொதித்தது. சிந்திக்கும் ஆற்றலைத் தொலைத்துவிட்டு ஒரு மிருகம் போல் நடந்து கொண்டதை எண்ணி மனம் நொந்தான்.அன்றிலிருந்து அவன் நிம்மதி ஏறத்தாழ தொலைந்து போனது. வசதி வளம்,வீடு,கார் எல்லாம் இருந்தும் நிம்மதி ஒன்று இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகி விடுவதைக் உணர்ந்தான். கடந்த மூன்றரை வருடங்களாய் அசைன்மன்ட் என்றவுடனே இனிப்பைக் கண்ட குழந்தை போல சந்தோசப்பட்ட சாம்சன் சில மாதங்களாக “எனக்கு அசைன்மன்ட் வரக்கூடாது” என்று இறைவனைப் பிராத்திக்கத் தொடங்கியிருந்தான்.
இவ்வளவு நேரமாக தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்த சாம்சன் “அடக்குமுறைக்கு இனி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை.இந்தக் கொலையை செய்யப் போவதில்லை.ஆக மிஞ்சினால் என்ன செய்வார்கள்? போட்டுத் தள்ளுவார்கள். அவ்வளவு தானே. அம்மாவைக் காப்பாற்றிவிட்டேன்.அக்காவுக்கும் தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டேன்.இந்தத் திருப்தியே எனக்குப் போதும்.இந்த நரக வாழ்க்கைக்கு சாவதே மேல்” என்று மனதில் எண்ணியவாறு அந்தக் கவரைத் தூக்கி குப்பைக் கூடைக்குள் எறிந்தான்.பின்னர் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு ராஜாவின் இடைக்காலப் பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று அவனது மொபைல் சிணுங்கியது.எடுத்து “ஹலோ” என்றான்.
“அண்ணா நல்லா இருக்கிறியா?” அவனது கடைசித் தங்கை ராஜியின் குரல் தான் அது. குரல் உடைந்திருந்தது.
“நான் நல்லா இருக்கிறன்.நீயும் சுகம் தானே? என்னம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு?”
மறுமுனையில் ராஜியின் அழுகுரல் கேட்டது.சாம்சன் பதறினான்.
“என்னம்மா ஆச்சு.சொல்லும்மா??”
“அண்ணா,அவருக்கு வேலை போயிட்டுது.சொந்தமா பிசினஸ் தொடங்கணும்.உன்ட அண்ணாட்ட ஐஞ்சு லட்சம் காசு வாங்கித் தா எண்டு கேட்டார்.நான் சமாளிக்கப் பார்த்தன்.அதால இப்ப ஒவ்வரு நாளும் குடிச்சிட்டு வந்து என்னைப் போட்டு அடிக்கிறாரு.உன்னட்ட சொல்லக் கூடாது எண்டு தான் நினைச்சன் .மன்னிச்சிடு அண்ணா அடி தாங்க முடியல”
சாம்சனின் கண்கள் சிவந்தன.”அவர் எங்க?” என்று கேட்ட கேள்வியில் கோபம் தொனித்தது.
“அவர் போய் தூங்கிட்டாரு அண்ணா”
“சரி,நீ எதுக்கும் கவலைப்படாதேம்மா.ஒரு வாரத்தில ஏற்பாடு செய்யுறன்.நாளைக்கு அவர என்னோடு கதைக்கச் சொல்லு” என்று சொல்லி போனைக் கட் பண்ணி விட்டு குப்பைக் கூடைக்குள் அந்தக் கவரை தேடுவதற்காக விரைந்தான் சாம்சன்.
/நேரம் மாலை ஆறுமணியை நெருங்கிக் கொண்டிருந்தது.பரந்து விரிந்து கிடந்த சமுத்திரமானது தனது வாயை அகலத் திறந்து சூரியனை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது.தனது அவல நிலையை உணர்ந்த சூரியனார் செந்நிற ஒளிக்கதிர்களை வானெங்கும் பரப்பி “அபாயம் அபாயம்“ என்று உலகத்தோருக்கு அறிவித்துக் கொண்டிருந்தார். சூரியனின் இயலாமையை உணர்ந்த சமுத்திரமோ தன் அலைக்கரங்களை முன்பை விட வேகமாக வீசி ஆர்ப்பரித்தது.செந்நிற வானமும் நீலக்கடலும் நுரை கக்கியவாறு கரையை நோக்கி வேகமாய்த் தவழ்ந்து கொண்டிருந்த அலைகளும் கடற்கரையில் பல வர்ண ஆடைகளுடன் நடை பயின்ற கன்னியரும் சேர்ந்து வர்ணஜாலம் நிகழ்த்திக் கொண்டிருந்த அந்த மாலை வேளையிலே மொட்டை மாடியில் இருந்தவாறு இயற்கையின் அழகையெல்லாம் அள்ளிப் பருகிக்கொண்டிருந்தான் சாம்சன்./
அருமையான வர்ணனை..அமரர் கல்கியின் வரிகளை போல அழகாக உள்ளது