கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 6,107 
 
 

அத்தியாயம்: ௭ | அத்தியாயம்: ௮ | அத்தியாயம்: ௯

கோடரி மனிதர்கள்

மிகவும் சோகமாகப் பிரிய வேண்டிய சூழல். அதனால் அந்த மூவரிடமும் அமைதியாகக் கை குலுக்கினேன். நாங்கள் மதில் சுவர் தாண்டிக் காலடித் தடத்தை நோக்கிச் சென்ற போது பாவம் நாப்ஸ் கூட மிகவும் மனம் உடைந்திருந்தது. அதன் பின் ஒரு கணம் கூட டைனோசர் கோட்டையைத் திரும்பிப் பார்க்கவில்லை. அதன் பின் பார்க்க வாய்ப்பு கிடைக்கவேயில்லை. அந்தத் தடங்கள் வடமேற்குத் திசையை நோக்கிச் சென்றது. கோட்டையின் வடக்கில் இருக்கும் மணல் கல் பாறைகளின் மேற்கு அடிவாரத்தில் முடிவடைந்தது. அங்கிருந்து பாதை மிகத் தெளிவாக இருந்தது. வளைந்து நெளிந்து வடக்கு நோக்கிப் பயணித்தது. இதுவரை நாங்கள் பார்த்திராத ஒரு நாட்டின் வழியே சென்றது. அது மிகவும் அழகாக அருமையாக இருந்தது. அங்கங்கே எப்போதாவது குறுக்கிடும் மணல் கற்பாறைகள் இருந்தன. பின் அடர்ந்த காடுகள் பார்த்துச் சலித்த நேரத்தில் பூங்காக்கள் உதயமாகி இருந்தன. அதனுள் பெரிய புல் வெளிகள் அதில் ஏகப்பட்ட விலங்குகள் மேய்ந்து கொண்டிருந்தன. சிவப்பு மான்கள், காட்டு ஆடுகள், மறி மான்களின் எண்ணற்ற வகைகள், குறைந்தது மூன்று வகையான குதிரை இனங்கள். குதிரைகள் கிட்டத்தட்ட நாப்ஸ் உயரத்தில் இருந்து 15 கைகள் உயரம் வரை இருந்தன. இவை அனைத்தும் நட்புடன் அங்கே மேய்ந்து கொண்டிருந்தன. நாப்ஸும் நானும் வரும் நேரத்தில் கூட அவை எந்தவித பயமும் கொள்ளவில்லை. எங்களுக்கு வழி விட்டு ஒதுங்கி நாங்கள் கடந்த பின் எங்களைத் திரும்பிப் பார்த்தன. பின் அவைகள் தங்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டன.

அந்த வழி இன்னொரு காட்டுக்குள் சென்றது. எதோ வெள்ளை நிறத்தில் இருந்த ஒரு இடத்தின் விளிம்பில் இருந்தது. அந்தச் சுற்றுப்புறத்தைக் காட்டிலும் மிக வித்தியாசமாக இருந்தது. அதை ஆராய்ச்சி செய்வதைச் சற்று நிறுத்தியவுடன் தெரிந்தது அது ஒரு மஸ்லின் துணி என்று. ஆடையின் விளிம்பைத் தைக்கப் பயன்படுத்தும் ஒரு துணி. அதைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனெனில் லிஸ் இந்தப் பக்கமாகத்தான் கொண்டு செல்லப் பட்டிருக்கிறாள் என்பதற்கான தடயம் கிடைத்து விட்டது. அது நேற்றிரவு அவள் அணிந்திருந்த ஆடையின் ஒரு கிழிந்த துண்டு. அதைச் சுருட்டித் தூக்கி எறிந்து விட்டு முன்பை விட வேகமாகச் செல்ல ஆரம்பித்தேன். ஏனெனில் நான் சரியான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உறுதி. மேலும் அவள் இதுவரை உயிரோடுதான் இருந்திருக்கிறாள்.

அன்று இருபது மைல் தூரம் நடந்து விட்டேன். நெடுந்தூரம் மலை ஏறவும் பழகி விட்டேன். அதனால் களைப்பே என்னைப் பார்த்து பயந்து விட்டது. முகாமிற்குப் பக்கத்தில் நிறைய வேட்டையாடிய அனுபவமும் கை கொடுத்தது. ஒரு டஜன் முறை அன்று எனக்குக் கொடூரமான விலங்குகளால் ஆபத்து ஏற்பட்டது வானிலும் நிலத்திலும். வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல டைனோசர்கள் கம்மியாகிக் கொண்டே வருவது நன்றாகத் தெரிந்தது. இருந்தாலும் ஒன்றிரண்டு அங்கங்கே இருந்தன. அசை போடும் விலங்குகளும் மாமிசங்களை உண்ணும் விலங்குகளின் எண்ணிக்கையும் மிக அதிகரித்தன. ஒவ்வொரு சதுர மைலிலும் கேஸ்பக் தனது திகிலைச் சேமித்து வைத்திருந்தது.

அதன் பின் கொஞ்சம் விட்டு விட்டு மஸ்லின் துணியின் துண்டுகள் அங்கங்கே கிடைத்தன. அவைதான் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தன. இரு பாதைகள் சேரும்போதும் ஒன்று இரண்டாய்ப் பிரியும் போதும் வழியில் மிகுந்த சந்தேகங்களை ஏற்படுத்தின. இரவு கவியும் வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் இதுவரை பார்த்ததிலேயே மிகப் பெரிய மலைகளின் தெற்கு முனையை அடைந்து விட்டேன். அதை நெருங்கும் போது மரப்புகையின் வாசனை என் மூக்கைத் துளைத்தது. என்னவாய் இருக்கும்? என் மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான். மனிதர்கள் பக்கத்தில் இருக்கிறார்கள். யாம் எனும் நியாண்டர்தால் மனிதனை விட மேலிருக்கும் இதுவரை பார்த்திராத இன்னொரு மனித இனமாக இருக்க வேண்டும். யாமாக இல்லாவிட்டால் வேறு யார் கடத்தி இருப்பார்கள் என்று இதுவரை பலமுறை நான் யோசித்திருக்கிறேன்.

மலையின் பக்கவாட்டில் மெதுவாக கவனமாகச் சென்றேன். மலையின் ஒரு பெரும்பகுதியை மிகப் பலம் வாய்ந்த யாரோ ஒருவன் உடைத்துப் பூமியில் போட்டது போல் இருந்த ஒரு பகுதியில் அது சட்டென்று முடிவடைந்தது. இப்போது மிகவும் இருட்டி விட்டது. பாறையின் விளிம்பில் நான் முன்னேறிக் கொண்டிருந்தேன். அப்போது கொஞ்ச தூரத்தில் ஒரு பெரும் நெருப்பு எறிந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றி நிறையப் பேர் இருந்தனர் மனிதர்கள் போன்று. நாப்ஸை அமைதியாக இருக்கச் சைகை செய்தேன். கேஸ்பக்கில் நுழைந்ததில் இருந்து என்னிடம் அது கீழ்ப்படிதலின் மகத்துவதில் மிகப் பெரும் பாடங்களைக் கற்றிருந்தது. அது சற்றுப் பதுங்கியது. ஒரு புதரின் பின்னால் மறைந்து கொண்டு பார்க்கும் போது அங்கு நெருப்பைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவைகள் மனிதர்கள் தான் ஆனாலும் இன்னும் மனிதர்களில்லை. யாமை விடச் சிறிது பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள். நியாண்டர்தால் மனிதர்களுக்கும் க்ரிமால்ட்டி இனத்திற்கும் நடுவில் இருப்பவர்கள். கறுப்பினத்தவர்களின் உடம்பு வாகு இருந்தாலும் தோல் வெள்ளை நிறத்தில் இருந்தது. உடம்பிலும் கைகளிலும் பெரும்பாலும் சின்ன முடி வளர்ந்திருந்தது. அவர்கள் பெரும்பாலும் மனிதக் குரங்கு போலவேதான் இருந்தார்கள் யாமைப் போல் இல்லை. நியாண்டர்தால் மனிதர்களை விடக் கைகள் நீளமாக இருந்தன. மேலும் முதுகு நிமிர்ந்து இருந்தது. நான் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவர்கள் பேச்சில் இருந்து அவர்களுக்கு ஒரு மொழி இருப்பது தெரிந்தது. நெருப்பு பற்றிய புரிதல் இருந்தது. கையில் யாம் வைத்திருந்தது போன்று ஒரு கழி வைத்திருந்தார்கள். அது கிட்டத்தட்ட ஒரு கோடரி போல் இருந்தது. பரிணாமத்தில் மனித இனத்திற்கு வெகு கீழே இருந்தாலும் இதுவரை கேஸ்பக்கில் பார்த்த இடங்களை விட இவர்களே ஒரு படி மேலே இருந்தார்கள்.

ஆனால் என்னை அங்கு அதிகம் கவர்ந்த ஒரு உருவம் என்றால் அந்த மெலிந்த அழகான பெண்தான். ஒரு மெல்லிய மஸ்லின் துணி உடுத்தி இருந்தாள். அவளது முழங்கால்களைக் கூட அது மறைக்கவில்லை. கொஞ்சம் துணி கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவள் லிஸ். உயிரோடு இருக்கிறாள். எந்தவித பாதிப்பும் இல்லாமல். நீண்ட தாடையுடன் பெரிய உதடுகளுடன் கூடிய ஒரு பெரிய முரட்டு உருவம் அவள் தோளுக்கருகில் நின்று கொண்டிருந்தது. ரொம்பச் சத்தமாகப் பேசியது. அப்படிப் பேசும்போது காட்டுத்தனமாக உடம்பு குலுங்கியது. அவன் பேசியது கேட்கும் அளவு நான் அருகில் இருந்தேன். அந்த மொழி யாம் பேசியது போலவே இருந்தது. ஆனால் செறிவுள்ளதாக இருந்தது. நிறைய வார்த்தைகள் எனக்குப் புரியவில்லை. அவன் பேசியதன் நோக்கம் புரிந்தது. இந்தக் காலுவை நான்தான் பார்த்தேன். சிறைப் பிடித்தேன். அதனால் இவள் எனக்குத்தான். வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதன் பிறகுதான் எனக்குப் புரிந்தது. அங்கு நடந்து கொண்டிருப்பது ஒரு எளிமையான திருமணச் சடங்கு என்பது. அங்கு கூடி இருந்தவர்கள் அதில் எந்தவித அக்கறையும் காட்டாமல் மந்தமாய் அவனைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் அங்கிருப்பதிலேயே அவன்தான் மிகுந்த பலசாலியாய் இருந்தான்.

அவன் பேச்சிற்கு மறு பேச்சுச் சொல்ல அங்கு யாருமில்லை. அதனால் இடி போல் முழங்கினான். “நான் திசா. இது எனது அவள். திசாவை விட யாருக்கு அவளைப் பிடிக்கும்.”

“எனக்கு” என்று யாமின் மொழியில் சொன்னேன். அதன் பின் நெருப்பின் வெளிச்சத்தில் அவர்கள் முன் வந்து நின்றேன். லிஸ் ஆனந்தத்தில் சிறிது அழுது கொண்டே என்னை நோக்கி ஓடி வந்தாள். ஆனால் திசா அவளது கையைப் பிடித்து இழுத்தான்.

“யார் நீ?” என்று கத்தினான் திசா. “நான் கொல்வேன். நான் கொல்வேன். நான் கொல்வேன்.”

“இந்த அவள் எனக்குச் சொந்தம்” என்று நான் பதில் சொன்னேன். “அவளைக் கூட்டிச் செல்லத்தான் நான் இங்கு வந்தேன். அவளை அனுப்பாவிட்டால் நான் கொல்வேன்.” என்று சொல்லிவிட்டு எனது துப்பாக்கியை எடுத்து அவனது இதயத்தைக் குறி வைத்தேன். நான் எடுத்து நீட்டிய அந்த வினோதமான கருவியை அவன் அறிந்திருக்க நியாயமில்லை. அவன் எழுப்பிய ஒலி பாதி மனிதனாகவும் மீதி ஒரு காட்டு மிருகத்தின் உறுமல் போலவும் இருந்தது. அவ்வாறு கத்திக் கொண்டே அவன் என் மேல் பாய்ந்தான். அவன் இதயத்தைப் பார்த்து நான் சுட்டேன். அவன் அப்படியே சுருண்டு விழுந்தான். அதைப் பார்த்த அவன் இன மக்கள் பயத்துடன் மலைப் பக்கமாகத் தெறித்து ஓடினார்கள். லிஸ் கைகளை விரித்துக் கொண்டு என்னை நோக்கிப் பாய்ந்து வந்தாள்.

அவளை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டு இருக்கும் வேளையில் எங்களைச் சுற்றிப் பயமுறுத்தும் கூக்குரல்களும் உறுமல்களும் ஊளைகளும் கேட்கத் தொடங்கின. இந்தக் காட்டின் இரவு வாழ்க்கை ஆரம்பித்து விட்டது. கேஸ்பக்கின் இரவுகளைப் பயமுறுத்தும் கொடிய காட்டு விலங்குகள் தங்கள் இரையைத் தேட ஆரம்பித்து விட்டன. லிஸ் பெரிதாக அதிர்ந்து விசும்ப ஆரம்பித்தாள். “கடவுளே” என்று அழுதாள், “இவனுக்காக இதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் வலிமையை எனக்குக் கொடு!” அவள் உடைந்து விடுவாள் போல் தெரிந்தது. அன்று நடந்த பயங்கரங்களை எல்லாம் நினைத்து அழுதவளை என்னால் முடிந்த அளவு நான் தேற்றிக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கே எதிர்காலம் நம்பிக்கைக்கு உரியதாக இல்லை. எங்களுக்கு அருகிலேயே சுற்றிக் கொண்டிருக்கும் அந்த பயங்கர இரவின் வேட்டைக்கார விலங்குகளிடம் இருந்து எவ்வளவு தூரம் தப்பிப் பிழைப்பது.

அந்த மனிதக் கூட்டம் எங்கே என்று நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பிரகாசமான நெருப்பின் ஒளியில் நன்றாகவே தெரிந்தது. அந்த மலையில் இருக்கும் பெரிய ஓட்டைகளின் மீது ஏறி இருந்தனர். “வா. லிஸ். நாம் அவர்களைப் பின் தொடர்வோம். இங்கு ஒரு அரை மணி நேரம் கூட நம்மால் இருக்க முடியாது. நாம் ஒரு குகையைக் கண்டுபிடிக்க வேண்டும்.” பசியால் வாடும் இரவு நேர அந்த மிருகங்களின் மின்னும் பச்சை நிற கண்களை ஏற்கெனவே காண முடிந்தது. எறிந்து கொண்டிருக்கும் நெருப்பில் இருந்து ஒரு குச்சியை உருவி இரவில் தூர எறிந்தேன். அந்த மிருகங்கள் ஒரு சேரக் கத்துவது கேட்டது. கொஞ்ச நேரம்தான் அவை அடங்கி இருந்தன. இருவரும் ஒரு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு மலைப் பாறையை நோக்கிச் சென்றோம். அங்கே அவர்கள் எங்களைக் கோபத்துடன் மிரட்டினார்கள்.

“அவர்கள் நம்மைக் கொன்று விடுவார்கள்” என்றாள் லிஸ். “வேறு எதாவது இடம் தேடுவோம்”

“அங்கு வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் விலங்குகளை விட இவர்கள் நம்மை உறுதியாய்க் கொல்வார்கள் என்று சொல்ல முடியாது.” என்று பதிலளித்தேன். “இந்தக் குகையில் ஒன்றில் நான் தங்குமிடம் கேட்கிறேன். யாரும் அதைத் தடுக்க போவதில்லை” என்று சொல்லிக் கொண்டே மலை அடிவாரத்தை நோக்கி முன்னேறினேன். அங்கிருந்த ஒரு குகை வாசலில் இருந்த ஒரு பெரிய உருவம் கோடரியை உயர்த்திக் காட்டியது. “வா. நான் உன்னைக் கொன்று அவளை எடுத்துக் கொள்கிறேன்.” என்று உறுமியது.

“திசாவுக்கு என்ன ஆனது என்று நீ பார்த்தாய் அல்லவா.” என்று அவன் மொழியிலேயே சொன்னேன். “இந்த இரவு பாதுகாப்பாக இருக்க அமைதியாக எங்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்றால் அது போலத்தான் எல்லோருக்கும் நடக்கும்.”

“வடக்கே போ.” என்று கத்தினான். “காலுக்களுடன் சேர்ந்து வடக்கிற்குச் செல். நாங்கள் உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம். நாங்கள் ஒரு நாள் காலுவாகி விடுவோம். இப்பொழுது அல்ல. நீ எங்கள் இனத்தவன் கிடையாது. போகவில்லை என்றால் கொன்று விடுவேன். அவளுக்கு பயம் என்றால் அவள் வேண்டுமானால் இங்கே இருக்கலாம். நாங்கள் அவளை வைத்துக் கொள்கிறோம். ஆனால் அவன் கிளம்ப வேண்டும்”

“இந்த அவன் கிளம்ப மாட்டான் என்று பதில் அளித்துக் கொண்டே சற்று முன்னேறினேன். கரடு முரடான வழித் தடங்கள் இயற்கையிலேயே உருவாகி இருந்தன. அவை மேலே உள்ள குகைகளுக்கு இட்டுச் சென்றன. யாரும் தடுக்கவில்லை என்றால் ஒரு மனிதன் மேலே செல்லலாம். ஆனால் காப்பாற்ற ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு இந்த அரை மனிதர்களை எதிர்த்து மேலே ஏறுவதென்பது முடியாத காரியம்.

“எனக்கு உன்னைப் பார்த்துப் பயமில்லை” என்று கத்தினான் அவன். “நீ திசாவுக்குப் பக்கத்தில் இருந்தாய். நான் மிக தூரத்தில் இருக்கிறேன். அவனைக் கொன்றது போல் என்னையும் உன்னால் கொல்ல முடியாது. ஓடிப் போய் விடு”

கடைசிப் படியில் நின்று கொண்டு சிறிது மேலே ஏறினேன் லிஸ்ஸையும் என் பக்கத்தில் இழுத்துக் கொண்டு. ஏற்கெனவே பாதுகாப்பாக உணர்ந்தேன். இன்னும் சற்று நேரத்தில் அந்தக் கொடூர விலங்குகளிடம் இருந்து முற்றிலும் விடுதலை கிடைத்து விடும். கோடரியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு எங்களுக்கு மேலிருந்த மனிதன் சற்று எட்டிப் பார்த்தான். அவனது இடம் அவனுக்கு மிக பாதுகாப்பாக இருந்தது என்று அவன் நினைத்தான் போலிருக்கிறது. அதனால் ஒவ்வொரு அடியையும் அவன் நம்பிக்கையோடு எடுத்து வைத்தான். எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும் வேறு வழி தெரியவில்லை. அதனால் திசாவைச் சுட்டது போல் அவனையும் சுட்டேன்.

“பாருங்கள்” என்று அவர்களிடம் கத்தினேன். “நீங்கள் எங்கிருந்தாலும் என்னால் கொல்ல முடியும். பக்கத்தில் இருந்தாலும் தூரத்தில் இருந்தாலும் ஒன்றுதான். நாங்கள் அமைதியாகவே உங்களிடம் வருகிறோம். நீங்கள் எங்களை ஒன்றும் செய்யவில்லை என்றால் நானும் ஒன்றும் செய்ய மாட்டேன். நாங்கள் மேலே இருக்கும் ஒரு குகையை எடுத்துக் கொள்கிறோம். சொல்லுங்கள்”

“சரி. வாருங்கள்.” என்று ஒருவன் சொன்னான். “நீ எங்களைத் துன்புறுத்தவில்லை என்றால் வரலாம். திசாவின் குகை உனக்கு மேலே இருக்கிறது. எடுத்துக் கொள்.”

அந்த உருவம் எங்களுக்கு ஒரு கருங்குகையின் வாயிலைக் காண்பித்தது.

அப்படிக் காட்டும்போதும் எச்சரிக்கையாய்த் தள்ளியே நின்றது. உள்ளே ஊர்ந்து சென்று ஆராய்ந்து கொண்டிருக்கும் போது லிஸ்ஸும் பின்னாடியே வந்தாள். நான் தீக்குச்சி வைத்திருந்தேன். அதில் ஒன்றைப் பொருத்திப் பார்த்தபோது தட்டையான கூரையும் தரையும் உடைய ஒரு சின்ன குகை தெரிந்தது. வெகு காலத்திற்கு முன் கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்திருந்தது. அங்கு குவிந்திருந்த கற்கள் அதற்குச் சாட்சியங்களாய் இருந்தன. மேலோட்டமாகப் பார்த்தாலே நன்கு விளங்கும் அந்த குகை வாழ்வதற்கு ஏற்றார் போல் மாற்றுவதற்கு யாரும் மெனக்கெடவே இல்லை என்று. அதைக் கூட்டிச் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூடத் தோன்றி இருக்கவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு உடைந்த பாறைகளில் பெரிதான கற்களை எடுத்து வாயிலின் முன் வைத்து அடைத்தேன். அப்படிச் செய்தபின் முற்றிலும் இருட்டு பரவியது. அதன் பின் லிஸ்ஸுக்கு ஒரு உலர்ந்த இறைச்சியைக் கொடுத்தேன். குகை வாயிலுக்குள் அமர்ந்து கொண்டு மனித இனம் தோன்றிய முதல் காலத்தில் எங்கள் மூதாதையர்கள் சிலர் உண்பது போல் உண்டு கொண்டிருந்தோம். கீழே வெகு தொலைவில் அந்த இரவின் கொடூர சத்தங்கள் எங்கள் காதுகளைக் கிழித்துக் கொண்டிருந்தன. இன்னும் எரிந்து கொண்டிருந்த அந்தப் பெரு நெருப்பின் ஒளியில் பதுங்கிக் கொண்டிருக்கும் உருவங்களைப் பார்க்க முடிந்தது. கருப்பான பின் புறத்தில் எண்ணற்ற வெளிச்சம் நிறைந்த கண்கள்.

கல்லறை

லிஸ் பெரு மூச்சு விட்டாள். நான் அவளது கழுத்தில் என் கையை சுற்றி என் பக்கத்தில் இழுத்து அணைத்துக் கொண்டேன். அப்படியே அந்த வெப்பமான இரவு முழுவதும் அமர்ந்திருந்தோம். அவள் தன்னைக் கடத்தியது பற்றிப் பயத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள். இருந்தாலும் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததற்காக இருவரும் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டோம். அந்தப் பெரிய முரட்டு மிருகமும் ஆபத்து நிறைந்த வழிகளில் பயணிக்கப் பயந்ததால்தான் எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கிறது. நான் வந்து சேர்ந்த நேரத்தில்தான் அவர்களும் அங்கு வந்து சேர்ந்தார்களாம். ஏனெனில் வரும் வழியில் பல முறை அவன் மரத்தின் மேல் ஏறித் தங்க நேர்ந்ததாம் பசியோடு சுற்றிக் கொண்டிருந்த சிங்கம் மற்றும் பட்டாக்கத்திப் பல் வைத்த புலியிடமும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க. இருமுறை வெகு நேரம் காத்திருக்க வேண்டியதாய்ப் போயிற்று அந்த மிருகங்கள் செல்லும் வரை.

நாப்ஸ் மிகவும் கஷ்டப்பட்டு ஒன்றிரண்டு முறை உயிரைக் காப்பாற்றிக் கொண்டு எப்படியோ எங்களைப் பின் பற்றி வந்து விட்டது. இப்போது எங்களுக்கருகில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் ஒரு சின்ன இறைச்சித் துண்டைச் சாப்பிட்டது மிகவும் மகிழ்ச்சியாக. அதுதான் முதலில் தூங்க ஆரம்பித்தது. நாங்களும் அதன் பின் உறங்கி இருப்போம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் எங்களுக்கும் மிகவும் களைப்பாக இருந்தது. துப்பாக்கியையும் குண்டுகள் பொருத்திய வாரையும் கழற்றி வைத்தேன். இரண்டும் என் அருகிலேதான் இருந்தன. துப்பாக்கியை என் தொடைக்கு அருகில் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டேன். இருந்தாலும் எங்களுக்கு இரவில் எந்தத் தொந்தரவும் இல்லை. நான் எழுந்த போது தூரத்தில் தெரியும் மரங்களில் கதிரவன் கதிர்கள் மின்னியது. லிஸ்ஸின் கழுத்து என் நெஞ்சில் சரிந்திருந்தது. என் கை அவள் கழுத்தை சுற்றியே இருந்தது.

சிறிது நேரத்தில் அவளும் எழுந்து விட்டாள். ஒரு கணம் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவே சிரமப் பட்டாள். என்னைப் பார்த்தாள். என் கை அவள் மேல் இருப்பதைப் பார்த்தாள். அதன் பின் மிகவும் குறைவாக உடுத்தி இருந்த அவளது ஆடைகளைப் பார்த்ததும் சட்டென்று பின் வாங்கினாள். முகத்தை மூடிக் கொண்டு பயங்கரமாக வெட்கப்பட்டாள். அவளைத் திரும்பவும் இழுத்து முத்தமிட்டேன். பின் அவள் என்னை அணைத்துக் கொண்டு சின்ன விசும்பலோடு அழ ஆரம்பித்தாள் எதுவும் செய்ய இயலாத தன் இயலாமையை நினைத்து.

ஒரு மணி நேரம் கழித்துத்தான் அந்த இன மக்கள் எழ ஆரம்பித்தார்கள். நாங்கள் எங்கள் மாளிகையில்-லிஸ் அப்படித்தான் அந்த குகையை அழைத்தாள் – இருந்து அவர்களைப் பார்த்தோம். ஆண்களோ பெண்களோ யாரும் உடைகளோ அணிகலன்களோ அணிந்திருக்கவில்லை. எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான் இருக்கும். அங்கே குழந்தைகளே இல்லை. அது மிகவும் விநோதமாகவும் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருந்தது. கேஸ்பக்கின் இதை விட வளர்ச்சியடையாத மனிதக் கூட்டங்களைப் பார்த்திருக்கிறோம். எல்லா கூட்டத்திலும் முதியவர்களோ குழந்தைகளோ இல்லை என்பது இப்போதுதான் புரிந்தது.

கொஞ்ச நேரத்தில் அவர்கள் எங்களைப் பார்த்துச் சந்தேகப்படுவது குறைந்திருந்தது. அந்த முரட்டுத்தனத்திலும் அவர்கள் எங்களிடம் நட்பாகவே இருந்தனர். எங்கள் ஆடைகளைத் தடவிப் பார்த்தார்கள். அவர்களுக்கு அது ரொம்பவும் பிடித்திருந்தது. எனது கைத்துப்பாக்கி சுழல் துப்பாக்கி மற்றும் இடுப்பு வாரில் இருந்த குண்டுகளை எல்லாம் ஆராய்ந்து பார்த்தார்கள். அவர்களிடம் வெற்றிடக் குடுவையைக் காண்பித்தேன். அதில் இருந்து தண்ணீரை ஊற்றியதும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். நான் ஒரு ஓடையையே அதில் அடக்கி விட்டேன் என்று நினைத்தார்கள். எப்போதும் அதில் இருந்து நீர் வரும் என்று எண்ணி விட்டார்கள்.

அவர்களின் மற்றைய குணாதிசயங்களுக்கு நடுவில் நாங்கள் ஒன்றைக் கவனித்தோம். அவர்கள் எப்போதும் சிரிக்கவோ புன்னகைக்கவோ இல்லை. பிறகு யாம் கூட அப்படியேதான் இருந்தான் என்பதும் நினைவுக்கு வந்தது. யாமை இவர்களுக்குத் தெரியுமா என்று கேட்டேன். அவர்களுக்குத் தெரியாது என்று சொன்னார்கள்.

அதில் இருந்து ஒருவன் சொன்னான். “அங்கிருக்கும் போது ஒருவேளை தெரிந்திருக்கலாம்”. அவன் தன் தலையை தெற்குப் பக்கமாக திருப்பினான்.

“நீ அங்கிருந்துதான் வந்தாயா?” என்று கேட்டேன். அவன் ஆச்சர்யமாக என்னைப் பார்த்தான்.

“நாம் எல்லோருமே அங்கிருந்துதான் வருகிறோம்.” என்றான். “கொஞ்ச காலம் கழித்து நாம் அங்கு போகிறோம்.” என்று சொல்லிவிட்டு வடக்குப் பக்கமாகத் தலையைத் திருப்பினான். “காலுவாகலாம்” என்று முடித்தான்.

பல முறை கேட்டாயிற்று இதுவரை இந்தக் காலுவாகுவது பற்றி. யாம் நிறைய தடவை சொல்லி இருக்கிறான். இது ஒரு மத நம்பிக்கை என்று நானும் லிஸ்ஸும் நினைத்திருந்தோம். அவர்கள் தங்கள் சுயத்தைக் காப்பதற்காகவும் அடுத்த புனிதமான நிலைக்குச் செல்ல வேண்டியும் இப்படி ஒரு நடைமுறை வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. அது ஒரு அற்புதமான சடங்குதான். ஆனால் மொத்தமும் தவறு. இப்பொழுது எனக்குத் தெரிந்து விட்டது. அழகான அற்புதமான பெரிய உண்மையினைக் கண்டுபிடிக்க எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்று தெரியவில்லை. பிரிக்கும் இந்த ஒரு விஷயத்தை. பிரமாண்டமான மலைப் பாறைகளால் சூழப்பட்டு யாருமே நுழைய முடியாதபடி நிலப்பரப்பில் பிரிக்கப்பட்டிருந்தாலும் மற்ற நாடுகளையும் கேஸ்பக்கையும் வேறுபடுத்தக் கூடிய அந்த உண்மையை இப்போதும் என்னால் யூகிக்கத்தான் முடியும். நாகரிக உலகிற்கு நான் திரும்ப முடிந்தால் அந்த மத குருமார்களுக்கும் மற்ற சாதாரண மனிதர்கள் அனைவருக்கும் பரிணாமவாதிகளுக்கும் வெகு காலம் சாப்பிடுவதற்கு நான் நிறைய இறைச்சியைக் கொண்டு வந்து கொடுத்திருப்பேன்.

காலை உணவை முடித்ததும் வேட்டையாடச் சென்றோம். பெண்கள் அனைவரும் ஒரு பெரிய குட்டைக்குச் சென்றனர். அதில் சூடான நீர் இருந்தது. பச்சை நிறத்தில் அழுக்கு படர்ந்திருந்தது. கோடிக்கணக்கில் தலைப்பிரட்டைகளும் இருந்தன. ஒரு அடி ஆழம் வரை சென்று சகதியில் நின்று கொண்டார்கள். அங்கே ஒரு இரண்டு மணி நேரம் வரை நின்று விட்டு மலைக்குத் திரும்பி விட்டனர். நாங்கள் அங்கிருந்த நாட்களில் தினமும் காலையில் இதே போல் நடந்தது. ஏன் அப்படி என்று கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில் எங்கள் அறிவுக்கு எட்டவே இல்லை. அவர்கள் உறுதிப் படுத்திய ஒரே வார்த்தை ‘அட்டா’ என்பது மட்டுமே. லிஸ்ஸையும் அவர்கள் அழைத்தனர். ஆனால் அவள் ஏன் மறுத்தாள் என்று புரியவில்லை அவர்களுக்கு. முதல் நாள் வேட்டைக்குச் செல்லும் போது கைத் துப்பாக்கியையும் நாப்ஸையும் லிஸ்ஸிடம் விட்டுச் சென்றேன். ஆனால் அவள் அதைப் பயன்படுத்தத் தேவை ஏற்படவே இல்லை. அந்தப் பெண்கள் அங்கு சென்றிருக்கும் போது எந்தவித மிருகங்களும் எப்போதும் தொந்தரவு செய்யவில்லை. எந்தக் காட்டு மிருகங்களின் கால் தடங்களும் அந்தக் குளக்கரையில் பதிந்திருக்கவில்லை. அந்தத் தண்ணீரும் குடிப்பதற்கு உகந்ததுமில்லை.

அவர்கள் முழுவதும் ஒருவித சிறிய விலங்குகளை நம்பித்தான் வாழ்க்கை நடத்தினார்கள். பெரிய வட்டவடிவில் நின்று கொண்டு தங்களது கோடரியை எடுத்துக் கொண்டு விரட்டி வேட்டையாடுகிறார்கள். சிறிய குதிரைகளையும் மறிமான்களையும் நிறைய வேட்டையாடுகிறார்கள். பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உண்கிறார்கள். தேவைப்படும் அளவுக்கு மேல் எப்போதும் அவர்கள் எடுத்து வருவதில்லை. ஏன் கஷ்டப் பட வேண்டும். அங்கு வாழ்பவர்கள் உணவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதே இல்லை.

நான்காவது நாள் லிஸ் திரும்பிச் செல்ல வேண்டும் என்று நினைத்தாள். அதனால் மகிழ்ச்சியோடு வேட்டைக்குச் சென்றேன். எனக்கும் கோட்டையைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. ப்ராட்லி மற்றும் அவனது கூட்டாளிகள் தங்கள் தேடுதலில் இருந்து திரும்பி விட்டார்களா என்று அறிய வேண்டும் போல் இருந்தது. நாங்கள் இறந்து விட்டோம் என்று அவர்கள் முடிவெடுத்து இருப்பார்கள் இந்நேரம். அதனால் அந்த எண்ணங்களில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். மேக மூட்டமாய் இருந்தாலும் வெப்பமாக இருந்தது எப்போதும் கேஸ்பக்கில் இருப்பது போல். சில மைல் தொலைவில் புயல் அடிக்கும் கடலில் குளிர் வாட்டும் என்று நினைக்கும் போதே விநோதமாய் இருந்தது. கேப்ரோனாவில் பனி பெய்து கொண்டிருக்கும். ஆனால் இந்த ஈரமான வெப்பம் மிகுந்த சூழ்நிலையைக் கொண்ட பெரும் பள்ளத்தைத் தாண்டி எந்தவிதப் பனியும் வந்து விடாது.

மறிமான்களை வளைக்க வேண்டும் என்றால் வழக்கத்துக்கு மாறாகக் கொஞ்சம் அதிக தூரம் செல்ல வேண்டும். அவைகளை விரட்டுவதற்கு உதவி செய்து கொண்டிருந்த வேளை என் பின்னால் ஒரு இருநூறு அடி தூரத்தில் ஒரு செந்நிற மானைப் பார்த்தேன். அது நீண்ட புல் வெளிகளில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்து எழுந்து வினோதமாக பார்த்தது. நான் எனது துப்பாக்கியை எடுத்துச் சுட்டேன். அது விழுந்தவுடன் ஓடிச் சென்று எனது மெல்லிய கத்தியை எடுத்துக் கொல்லச் சென்றேன். நான் அருகில் வந்தவுடன் அது எழுந்தது இன்னும் ஒரு இருநூறு அடி ஓடி இருக்கும். அதன் பின் இன்னொரு முறை சுட்டேன். திரும்பவும் அதே போல் ஓடியது. இறுதியில் அதன் கழுத்தை அறுத்துக் கொன்றேன். பின் நான் திரும்பி எனது கூட்டாளிகளைத் தேடினேன். அவர்கள் தூக்கிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் அவர்கள் யாருமே இல்லை. எனக்கு வெறுப்பாகி விட்டது. என்னால் தூக்கிச் செல்ல முடிந்தளவு வெட்டி எடுத்துக் கொண்டேன். பின் மலைப் பாறை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன். ஒரு மைல் தூரம் சென்றவுடன் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது. எனக்கு வழி தெரியவில்லை. முற்றாகத் தொலைந்து விட்டேன்.

வானம் இன்னும் முழுவதும் மேக மூட்டமாகத்தான் இருந்தது. வேறெந்தக் குறியீடுகளும் கண்களுக்குப் புலப்படவில்லை அதை வைத்து வீடு செல்வதற்கு. தெற்கு என்று நினைத்துக் கொண்டு ஒரு திசையில் சென்றேன். ஆனால் அது வடக்காகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஒன்று கூட பரிச்சயமானதாகத் தோன்றவில்லை. அந்த அடர்ந்த காட்டில் நான் ஒரு பொருளைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் முதலில் ஒரு நம்பிக்கை வந்தது. பின் பெருத்த ஏமாற்றமும் விரக்தியும் வாட்டியது. அங்கு புதிதாய்த் தோண்டி மூடப்பட்ட ஒரு மணல் மேடு இருந்தது. அதன் மேல் தூவப்பட்ட பூக்கள் எல்லாம் வாடிப் போய் இருந்தன. அதன் ஒரு முனையில் ஒரு தட்டையான மணல் கல் பதிக்கப்பட்டிருந்தது. அது ஒரு கல்லறை. மனிதர்கள் வாழும் ஒரு இடத்தைக் கண்டுபிடித்து விட்டேன் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் அவர்களைக் கண்டுபிடிப்பேன். அவர்கள் மலைப் பாறைகளுக்கு எப்படிச் செல்வது என்று சொல்லலாம். என்னை அவர்களுடைய இடத்திற்கும் கூட்டிச் செல்லலாம். அவர்கள் என்னைப் போலவே இருக்கலாம். அந்த ஒற்றைக் கல்லறையை அடைய நடந்து கொண்டிருக்கும் அந்தச் சில அடிகளில் எனது எண்ணங்கள் பறந்து விரிந்தது. அந்தக் கல்லில் எழுதப்பட்ட வாசகத்தைப் படித்ததும் தூக்கி வாரிப் போட்டது. இதுதான் அதில் எழுதி இருந்தது.

டிரான்னோசாரசால் கொல்லப்பட்ட ஜான் டிப்பெட் இங்கு இருக்கிறான். 10 செப்டம்பர் 1916. RIP

என்னால் நம்பவே முடியவில்லை. டிப்பெட் இந்த இருண்ட கானகத்தில் உறங்குகிறான் என்பதை என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. அவன் இறந்து விட்டான். அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்திருக்கிறான். அவனது இழப்பு மட்டும் என்னை பாதிக்கவில்லை. ப்ராட்லியும் கூட இவ்வளவு தூரம் தனது தேடுதலில் வந்திருக்கிறான். அவனும் கூட காணாமல் போயிருக்கலாம். அவன் காணாமல் போக வேண்டும் என்பது எங்கள் விருப்பமல்ல. ஒருவனது கல்லறை இங்கு இருக்கிறதென்றால் மற்றவர்களது எலும்புகளும் இங்கே அருகிலேயே கிடைக்கக் கூடும்.

– தொடரும்…

தமிழாக்கம்: சு.சோமு, Translation of the book ‘The Land That Time Forgot’ by Edgar Rice Burroughs
வெளியான மாதம்/ஆண்டு: May 2017 in kdp.amazon.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *