கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 2,663 
 
 

அஸ்வினி தன் அம்மா, கண்ணும்- கருத்துமாகச் செய்துக் கொண்டிருந்த முதலுதவியை உற்றுக் கவனித்து உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

அஸ்வினியின் தாய் ஒரு நர்ஸ்.

அர்ப்பணிப்பு மிக்க செவிலித்தாய் என்று எல்லோராலும் அறியப்படுபவர்.

முதலுதவிப் பெட்டியை சிரத்தையோடு அதன் இடத்திலிருந்து எடுத்துச் செல்வது முதல், முதலுதவி முடிக்கும் வரை அனைத்துச் செயல்பாடுகளையும், அணு அணுவாகக் கூர்ந்துக் கவனித்தாள் அஸ்வினி.

வெட்டுக் காயத்தைப் பஞ்சை வைத்து லாகவமாகத் தொட்டுத் துடைத்தார்.

டிஞ்சரில் நனைத்தப் பஞ்சை ஒட்டி, அதன் மேல் சதுரமாய் மடிக்கப்பட்ட ‘காஸ் க்ளாத்’ வைத்துச் சுற்றிக் கட்டுப் போட்டார்.

சுற்றி நின்றவர்களுக்கும் எளிதில் புரியும்படி முதலுதவிச் செய்யும் முறையை விளக்கினார்.

ஒவ்வொரு வீட்டிலும் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சொன்னார்.

‘நானும் அம்மாவைப் போல நர்ஸாகத்தான் சேவைச் செய்ய வேண்டும்…!’

ஆசை எழுந்தது அஸ்வினிக்கு.


அஸ்வினிக்கு அன்றுப் பள்ளி விடுமுறை.

அம்மா ஆஸ்பத்திரிக்குச் சென்றுவிட்டாள். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

அன்றுக் காலை 10 மணி முதல் அந்தப் பகுதிக்கு அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அறிவித்திருந்தார்கள்.

பராமரிப்புப் பணிகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன.

சப் ஸ்டேஷனில் இருக்கும் சர்வர்களில், ஹை ஓல்டேஜ்ஜால் உருகிக் கருகிய பிடிப்பான்களை புதுப்பித்தோ, புதிதாக மாற்றம் செய்துகொண்டோஇருந்தார்கள்.

AE, JE, லைன் மேன் என மின்வாரிய ஊழியர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.


‘மனிதன் பழக்கத்துக்கு அடிமையாவான்’ என்பதுதான் எவ்வளவு அப்பட்டமான உண்மை.

ஜனங்களுக்கு வீட்டிற்குள் இருக்கவேப் பிடிக்கவில்லை.

ஏசி, மின்விசிறி எனப் பழகிவிட்டதால், அவைகள் இல்லாமல், எல்லோரும் வாராண்டாவிற்கும் மொட்டைமாடிக்கும், போர்ட்டிகோவிற்கும், சிட்டவுட்டிற்குமாக அலைப் பாய்ந்தார்கள்.

“ரொம்ப இறுக்கமா இருக்குல்ல… வீட்டுக்குள்ள இருக்கவே முடியல. வேகுது!”

“ஷட் டவுன் பண்ணிப்புட்டு அப்படி என்னதான் பண்ணுவாங்களோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்…!”

“வெள்ளைக்காரன் வெச்ச ட்ரான்ஸ்பார்மர வச்சே இன்னும் ஓட்டுறாங்க… அடிக்கடி பராமரிப்புப் பண்ணித்தானே ஆகணும்…!”

“ஸ்டே வயரை இழுத்து இறுக்கமா ஒரு முறை கட்டிக் கானகிரீட் போட்டாப் பர்மனன்ட்டா நிக்கும். ஒரு மாசத்துக்குள்ள கலகலத்துக்கற மாதிரி தானே கட்டுறாங்க…”

“ஸோஷல் ரெஸ்ப்பான்ஸிப்ளிடி’ன்னா மீசை என்ன விலை ன் னு கேட்கிற காலமாயிருச்சே!”

“பராமரிப்புன்னு ஒரு நாள் நிறுத்தினாத்தான், நிறைய அடிக்கலாம் அதுக்கு தான் இவ்வளவும்..!”

“பராமரிப்பு செய்யறேன்னு நம்ம வீட்டு ஒயர கட் பண்ணி விடாமல் இருக்கணும்…!”

“பராமரிப்புனு சொல்றதெல்லாம் சும்மா ஐ வாஷ்…”

மொட்டை மாடியிலும் வராண்டாவிலும் உட்கார்ந்துக் கொண்டு இப்படி வாய்க்கு வந்தபடிப் பேசினார்கள்.


“ஸேப்டி ரோப் எமனையும் வெல்லும்’ மின்வாரிய ஆபீஸ் சுவத்துல எழுதியிருக்கறது உனக்காகத்தான்.. சேப்டி ரோப் கட்டிக்கிட்டு மரத்துல ஏறு…!”

‘ஜே ஈ’ லயன் மேனுக்கு எச்சரிக்கைச் செய்தார்.

கம்பத்தின் மேல் நின்ற லயன் மேனுக்குக் கீழிருந்துக் கட்டிங் பிளேயர். ஃபியூஸ் எல்லாம் ரோப் மூலம் மேலேச் சென்றன..

கட்டிங் பிளேயரை வைத்து அலுமினியக் கம்பியை நன்குச் சுற்றித் திருகி ஜம்பர் அடித்தார் லயன்மேன்.

“ஃபீடர்ங்களை செக் பண்ணி பாரு.”

“பீங்கான் குப்பியோட டைப் பண்ணி கட்டு.”

‘ஜே. இ ‘கீழிருந்து ஆலோசனைச் சொல்லச் சொல்ல மேலே நின்று லைன் மேன் சரி செய்தார்.

சப்ளை ஒயரெல்லாம் குருவிக்கூடுப் போல இருக்குப் பாரு… சரிப் பண்ணி விடு என்றார் ஜே. இ.

தெருவின் கடைசிக் கம்பம் நோக்கி எல்லா லைன் மேன்களையும் அழைத்துச் சென்றார் ஜே இ.

அருகாமைக் கட்டட வேலைக்கான அஸ்திவாரத்துக்கு நோண்டியபோது கம்பம் லேசாக சாய்ந்திருந்தது.

அலுமினிய ஒயர்களை எல்லாம் அவிழ்த்து விட்டு தாம்புக் கயிறு கட்டி எல்லோருமாகச் சேர்ந்து அதை நிமிர்த்தினார்கள்.

எதிர்வசத்தில் ஸ்டே வயர் போட்டு இறுகக் கட்டினார்கள்.

சின்னக் குட்டியானை லாரியில் கொண்டு வந்த முக்கால் ஜல்லியைப் போட்டுச் சிமெண்ட் கான்கிரீட் தயார் செய்து அதில் கொட்டினார்கள்.


வராண்டாவில் உட்கார்ந்துக் கொண்டு தெருவில் நடக்கும் வேலைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அஸ்வினி அதிர்ச்சியில் உறைந்தாள்.

இப்படி ஒரு நிகழ்வை எதிர்பார்க்கவில்லை அவள்.

சரேலென்று உள்ளே ஓடினாள்.

முதலுதவிப் பெட்டியோடு வெளியே வந்தாள்.

சொறி பிடித்த கையும் அறிவாள் பிடித்த கையும் சும்மா இருக்காது என்பார்கள் அல்லவா…

கையில் இருந்த அறிவாளால் மானாவாரியாகக் கொத்திப் புண்படுத்திக் கொண்டிருந்தக் காண்ட்ராக்ட் லேபர், சிறுமியின் வருகையைப் பார்த்து அங்கிருந்து நகர்ந்தான்.

பசுமையாக வளர்ந்து நிற்கும் அந்தச் சிறியப் புங்கன் மரத்திற்கு அருகே வந்தாள் அஸ்வினி.

வெட்டுவாயைப் பஞ்சால் துடைத்தாள்.

– 07-12-2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *