சூடன் எப்போதும் கொஞ்சம் டென்ஷன் பேர்வழி. தன்னுடைய ஹெல்த் ரிப்போர்ட் கையுடன் டாக்டர் தன்வந்திரி கிளினிக்கு படபடப்புடன் ஓடுகிறார். அவருடைய குடும்ப மருத்துவர் டாக்டர் தன்வந்திரி. ரொம்ப பொறுமைசாலி. நாம் கேட்பது அபத்தமாயிருந்தாலும் எரிச்சல் படாமல் பதிலளிக்கக் கூடியவர். அவரிடம் பேசினாலே பாதி நோய் பறந்து போய்விடும் என்றொரு நம்பிக்கை. கண்ணுலேயும் வாயிலும் டார்ச் லைட் போட்டுப் பார்த்தே உடம்புக்கு என்னவென்று கண்டுபிடித்து விடும் திறமை உள்ளவர். பலரை போல் அல்லாமல் படுக்க வைத்து ரத்தஅழுத்தம் பார்க்கும் டாக்டர். அதனால் அவர் கிளினிக்கில் கொஞ்சம் கூட்டம் ஜாஸ்தி. முன்கூட்டியே அப்பாயின்ட்மென்ட் எல்லாம் வாங்கமுடியாது. முதலில் வருபவர் முதல் உரிமை என்று கோட்பாடு. ஆறேழு நபர்கள் காத்திருந்தார்கள்.
சூடனுக்கு டாக்டர் மேல் முதல் தடவையாக எரிச்சல் வந்தது. ‘என்ன டாக்டர் இவரு! பேஷண்ட் கூட கதை பேச உக்காந்துட்டார் போலிருக்கே! சட்டேன்று பேசி அனுப்ப வேண்டியது தானே.’.
ஒரு அரைமணி நேரம் கழித்து டாக்டரிடம் செல்ல அனுமதி வந்தது.
‘என்ன சார் இது ரிப்போர்ட். எனக்கு சர்க்கரையாம். இனி என்னத்தை சாப்பிட முடியும்?. இனிமே, ஒயிப் அரிசி சாதம் பாதியா குறைச்சுடுவாளே?.
டாக்டர் அவரிடம் சைகையால் ‘அமைதி, அமைதி’ காண்பித்தவாறு “முதல்லெ எதுக்கும் டென்ஷன் படக்கூடாது. பெரிசா என்ன நடக்கும்?. உசிரு போகும். அவ்வளவு தானே. நாளைக்கு போற உசிரு இன்னிக்கு போவுதுன்னு எடுத்துக்கணும்” .
‘அரிசி இல்லன்னா பரவாயில்லே, கோதுமை சப்பாத்தி சாப்பிடுங்கோ. கோதுமை சாப்பிட்டு பழக்கமில்லாமல் நீங்க கம்மியா சாப்பிடுவீங்க. உங்க வெய்ட்டும் கம்மி ஆகும்”.
‘எனக்கு குளுட்டன் அலர்ஜி. கோதுமை, பார்லி எல்லாம் ஒத்துக்காது. “
‘ராகி சாப்பிடுங்க’
‘தைராய்டு இருக்கே. ராகி சரி வராதுன்னு என் ஒயிப் சொல்றாளே. பால் சேர்க்காத டீ தான் கொடுக்கறா. கேட்டா, அதான் உடம்புக்கு நல்லது. பால் சேர்த்தா பாலிலுள்ள கால்சியம் உடம்பிலே ஓட்டாதுன்னு சொல்றா. சுகர்னு சொல்லி அதிலே சர்க்கரையும் சேர்க்க மாட்டா. கொழுப்பு, கொலெஸ்டெரால் கூட இருக்கு. இனிமே எண்ணெய் இல்லாம தான் தோசை வார்க்க போறா! நல்லெண்ணெய் நல்லதா டாக்டர்? இல்ல காஸ்ட்லி ஆலிவ் ஆயில் யூஸ் பண்ணணுமோ? யூரிக் ஆசிட் கொஞ்சம் இருக்கு. பருப்பும் கட் பண்ணனுமா டாக்டர். அப்போ, என்ன தான் சாப்பிடறது டாக்டர்?
“உங்க மனைவி கூகிள், வாட்ஸாப்-லே படிச்சி டாக்டர் பட்டம் வாங்கிருப்பாங்கப் போலிருக்கே. முதல்லே டென்ஷனை குறைங்க. அதிலேயே பாதி வியாதி போய்டும். அப்புறம் வாட்சப்ல வரத படிக்காம பார்வார்ட் பண்ணாம டிலீட் செய்ங்க. இன்னொரு பாதி வியாதி போயிடும்“.
“ரொம்ப தமாஷ் பண்றீங்க டாக்டர்!. வாட்சப் பார்க்காம வெறிபிடிக்கற மாதிரி இருக்குமே டாக்டர். ராத்திரி பன்னெண்டு மணிக்கு எழுந்தா கூட வாட்ஸப்பில் ஏதாவது யாராவது புதுசா போட்டிருக்கான்னு ஒரு தரம் பார்க்காம இருக்க முடியறதில்லே”.
“உங்களுக்கு BP, சுகர், கொழுப்பு, தைராய்டு அளவுகள் எல்லாம் பார்டர் லெவெல்ல இருக்கு . இது ஒரு எச்சரிக்கை தான். உங்க வெய்ட் ரொம்ப ஜாஸ்தி. ஒரு இருவது கிலோ கம்மி பண்ணனும். நீங்க சாப்பிடறதில ஒரு இருவது பர்சன்ட் கம்மி பண்ணுங்கோ. வெயிட்டை மாத்தினா எல்லாமே மாறிடும். ‘அரை வயிறு ஆயுசு நூறு’ன்னு என் பாட்டி சொல்வாங்க. அத ஃபாலோ பண்றது கொஞ்சம் கஷ்டம் உங்களுக்கு. நீங்க முக்கா வயிறு வைங்க. ‘மூக்கு முட்ட சாப்பிட்டா மூச்சு விட்டு போகும்’ னு சொல்வடை இருக்கு.
“எண்ணையயை கலப்படம் பண்ணி யூஸ் பண்ணா நல்லது”.
“என்ன டாக்டர்? நீங்க இப்படி சொல்றிங்க?”.
“கலப்படம்ன்னா நான் சொல்றது வேற மாதிரி!. ஒரே டைப் எண்ணெ யூஸ் பண்றதக்கு பதிலா பலதரப்பட்ட எண்ணெய்களை யூஸ் பண்ணா நல்லது”.
“குறைந்தபட்சமா தயாரிக்கப்பட்ட உணவுகளை பயன்படுத்துங்கோ. உதாரணத்திற்கு, ரொம்ப பாலிஷ் பண்ணாத அரிசி, செக்கு எண்ணெய், காய்கறிங்க நிறைய சாப்பிடுங்க. பழங்களை ஜூஸ்க்கு பதிலா பழமா சாப்பிடணும். முடிஞ்ச அளவுக்கு நாம இயற்கைக்கு பக்கத்தில இருந்து வாழ பழகணும். உங்க ஒய்ப் நீங்க நடக்கறதை கட் பண்ண மாட்டாங்க இல்லையா. டெய்லி குறைஞ்சது அரை மணி நேரம் வெளியே நடங்க”.
“பசித்து புசி-ன்னு ஒரு பக்கம் சொல்றிங்க. இன்னொரு பக்கம், நேரம் தவறாம சாப்பிடணும்னு சொல்றிங்க. என்ன பண்றது டாக்டர்?”.
“’நோயை கட்ட வாயை கட்டு’ன்னு ஒரு சொல் இருக்கு. கூட மருந்து கால். மதி முக்கால்-ன்னு சொல்வாங்க. அப்புறம் உங்க இஷ்டம். ஞாபகம் வச்சுக்கோங்க.”,
“இவர் இவங்க பாட்டிக்கிட்ட வைத்தியம் ஏதாவது கத்துக்கிட்டிருப்பாரோ?. நல்ல பழமொழி டாக்டரா இருக்காரே!. இவரு சொல்றதெ கேட்டா நாம பாதி உடம்பு ஆயிடுவோம்”ன்னு மனதில் அசை போட்டுக்கொண்டே டாக்டரிடம் பீஸ் கொடுத்துவிட்டு நன்றி கூறி அங்கிருந்து நடையைக் கட்டினார் சூடன்.
– 25-4-2023