ஒரு நாட்டின் தலைநகரத்தில் அறிவு நிரம்பிய வணிகன் ஒருவன் இருந்தான். அங்கே யாருக்கு எந்தச் சிக்கல் ஏற்பட்டாலும், அவனிடம் அறிவுரை கேட்டு வருவார்கள். அவன் என்ன சொல்கிறானோ அதன்படியே நடப்பார்கள். இதனால் நள்ளிரவு நேரத்திலேயே அவன் வீடு திரும்ப வேண்டியிருந்தது.
பொறுத்துப் பொறுத்துப் பொறுமை இழந்தாள் அவன் மனைவி. வழக்கம் போல் நள்ளிரவில் திரும்பிய கணவனைக் கோபத்துடன் வரவேற்றாள்.
“”நமக்குத் திருமணம் ஆகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? வீட்டில் மனைவி இருக்கிறாள் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? என்னிடம் ஒரு நாளாவது ஓய்வாக அமர்ந்து பேசியது உண்டா?” என்று கேட்டாள்.
“”நான் என்ன செய்வேன்? வணிகத்தை மட்டுமா நான் கவனிக்கிறேன். நகர மக்கள் பலர் என்னிடம் அறிவுரை கேட்டு வருகின்றனர். நான் அவர்கள் சிக்கலை விசாரித்து நல்வழி காட்ட வேண்டியுள்ளது. இதனால் நான் வீடு திரும்ப நள்ளிரவு ஆகிறது. நீ ஏவியதைச் செய்ய நம் வீட்டில் வேலைக் காரர்கள் இல்லையா? உனக்கு என்ன குறை வைத்தேன். ஏன் முணுமுணுக்கிறாய்?” என்று கேட்டான் அவன்.
“”நீங்களுக்கு மற்ற வணிகர்களைப் போல நேரத்திற்கு வீட்டுக்கு வந்தால் என்ன. மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதால் நமக்கு என்ன பயன்?” என்று கேட்டாள் அவள்.
“”உனக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது…” என்றான்.
அந்த நகரத்தில் புத்தாண்டுத் திருவிழா வந்தது. கடைக்கு அன்று பலர் வந்தபடி இருந்தனர். நள்ளிரவு வந்தது. வீடு திரும்ப நினைத்தான் வணிகன்.
“”ஐயா! இன்று நீங்கள் நடந்து செல்ல வேண்டாம். குதிரையில் செல்லுங்கள்; அதுதான் பாதுகாப்பாக இருக்கும்!” என்றான் ஒரு வேலைக்காரன்.
குதிரையில் அமர்ந்த வணிகன், வீடு நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான். ஒரு தெருவில் அவன் திரும்பும்போது எதிரே குடிகாரன் ஒருவன் வழியை மறைத்துக் கொண்டு நின்றான். இருட்டில் திருடன்தான் நிற்கிறான், தப்பிக்க வேண்டும் என்று நினைத்த வணிகன், குதிரையை வேகமாக விரட்டினான். குதிரை அந்தக் குடிகாரனை மிதித்துக் கொண்டு ஓடியது. அடிபட்ட அவனின் அலறல் பெரிதாகக் கேட்டது.
தெருவில் எங்கும் ஆள் நடமாட்டமே இல்லை. சிறிது தூரம் சென்ற வணிகனுக்கு மனம் கேட்கவில்லை. குதிரையில் மிதிப்பட்ட அவன், என்ன ஆனான் என்பதை அரிய விரும்பினான்.
திரும்பி வந்து குதிரையில் மிதிபட்டுப் கிடந்தவனைப் பார்த்தான் வணிகன். அவனுக்கு மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது. அங்கே இறந்து கிடந்தது இளவரசன்.
“ஐயோ! திருடன் என்று நினைத்து இளவரசனைக் கொன்று விட்டேனே! இதை அரசன் அறிந்தால் என்னையும் என் குடும்பத்தையும் அழித்துவிடுவானே! எல்லாரையும் ஆபத்தில் இருந்து காப்பாற்றும் நானே ஆபத்தில் சிக்கிக் கொண்டேனே. இப்போது என்ன செய்வது?’ என்று சிந்தித்தான்.
இறந்து கிடந்த இளவரசனைத் தன் தோளில் தூக்கிக் கொண்டான் வணிகன். குடிகாரனான இளவரசன் நாள்தோறும் மது குடிக்கும் கடையை நோக்கி நடந்தான். அவன் நினைத்ததுபோலவே அந்தக் கடை மூடியிருந்தது. இளவரசனின் உடலை அந்தக் கடையின் கதவில் சார்த்தி வைத்தான்.
“எப்படியோ ஆபத்தில் இருந்து தப்பிவிட்டோம்!’ என்று மகிழ்ந்தான் அவன். வீட்டிற்கு வந்து படுக்கையில் படுத்தான்.
சிறிது நேரம் சென்றது. யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தான் வணிகன். அங்கே மதுக்கடைக்காரன் நடுங்கியபடி நின்றிருந்தான்.
“”வணிகரே! பேராபத்தில் சிக்கியுள்ளேன். நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்!” என்று அழுதான்.
“”என்ன நடந்தது? சொல்லுங்கள்…” என்று கேட்டான் வணிகன்.
“”சின்ன இளவரசர் நன்கு குடித்து இருக்கிறார். மது மயக்கத்தில் என் கடைக் கதவில் சாய்ந்து இருக்கிறார். இதை அறியாமல் நான் கதவைத் திறந்தேன். கீழே விழுந்த இளவரசர் தலை உடைந்து அங்கேயே இறந்து விட்டார். இது அரசருக்குத் தெரிந்தால் என்னைக் கொன்று விடுவார். நீஙகள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். இதிலிருந்து என்னைக் காப்பாற்றினால் நான் இதுவரை சேர்த்து வைத்திருக்கும் தொகை முழுவதையும் உங்களுக்குத் தருகிறேன்!” என்று அழுதான்.
“”கவலைப்படாதே! வழி கண்டுபிடிப்போம்…” என்றான் வணிகன்.
“”சின்ன இளவரசனுக்கும் அமைச்சருக்கும் எப்போதும் ஆகாது. இளவரசனின் உடலைத் தூக்கிச் சென்று அமைச்சரின் வீட்டுக் கதவில் சார்த்தி வைப்போம். நம்மீது யாரும் சந்தேகப்பட மாட்டார்கள்!” என்றான்.
பிறகு இருவரும் இளவரசனின் உடலை அமைச்சரின் வீட்டிற்குத் தூக்கி வந்தனர். உள்ளே விருந்து நடந்து கொண்டிருந்தது. பிணத்தைக் கதவருகே சார்த்தி வைத்துவிட்டு இருவரும் புறப்பட்டனர்.
“”ஐயா! என்னைக் காப்பாற்றினீர்கள். இந்த உதவியை என்றும் மறக்கமாட்டேன்!” என்ற மதுக்கடைக்காரன், தன் இடுப்பில் இருந்த பணப் பையை எடுத்தான்.
“”இதில் ஆயிரம் பணம் உள்ளது. என் அன்புப் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்…” என்று தந்துவிட்டுச் சென்றான் அவன்.
தன் வீட்டை அடைந்த வணிகன் தூங்கத் தொடங்கினான். மீண்டும் கதவு தட்டப்பட்டது. “”வணிகரே! எழுந்திருங்கள். பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளேன். நீங்கள்தான் என்னை காப்பாற்ற வேண்டும்!” என்ற குரல் கேட்டது.
எரிச்சலுடன் எழுந்து கதவைத் திறந்தான் வணிகன். அங்கே அமைச்சர் நின்றிருந்தான். வணிகனின் கையில் பொற்காசுப் பையைத் திணித்தான் அவன்.
“”இதில் ஐநூறு பொற்காசுகள் உள்ளன. பெற்றுக் கொள்ளுங்கள். என் வீட்டில் இன்று விருந்து நடந்தது. விருந்து முடிந்து வீட்டுக்கதவைத் திறந்தேன். குடிகாரரான இளவரசன் அங்கு நின்று கொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை. கதவு அவன்மேல் பட்டுக் கீழே விழுந்து இறந்துவிட்டான். முன்னரே இளவரசனுக்கு எனக்கும் ஆகாது. இதை அரசர் அறிந்தால் என்னையும் என் குடும்பத்தினரையும் கொன்று விடுவார். நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்…” என்று கெஞ்சினான்.
“”அமைச்சரே! அஞ்ச வேண்டாம். நீங்கள் தப்பிக்க நல்ல வழி கண்டு பிடிக்கிறேன்!” என்றான் வணிகன்.
அமைச்சருடன் சென்ற அவன் இளவரசனின் உடலைப் பார்த்தான்.
“”அமைச்சரே! இந்த உடலை நாம் அரண்மனைக்குத் தூக்கிச் செல்லவேண்டும்…” என்றான். இருவரும் அந்த உடலைத் தூக்கி கொண்டு அரண்மனையை அடைந்தனர். அப்போது அரண்மனையில் கோலாகலமாக விருந்து நடந்துக் கொண்டிருந்தது. இருவரும் கதவருகே இளவரசனின் உடலைச் சாய்த்து வைத்தனர்.
“”அமைச்சரே! இனி அஞ்ச வேண்டாம். நீங்கள் செல்லலாம்!” என்றான் வணிகன். வணிகனுக்கு நன்றி கூறிவிட்டு அமைச்சர் புறப்பட்டார். மகிழ்ச்சியுடன் தன் வீட்டை அடைந்த வணிகன் தூங்கத் தொடங்கினான். சிறிது நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட்டது.
“”அரசரின் கட்டளை, கதவைத் திற!” என்ற குரல் கேட்டது.
உண்மை வெளிப்பட்டு விட்டதோ என்ற நடுக்கத்துடன் கதவைத் திறந்தான் வணிகன். அங்கிருந்த வீரர்கள், “”அரசர் உங்களை உடனே அழைத்து வரச் சொன்னார்!” என்றனர்.
அவர்களுடன் அரண்மனையை அடைந்தான் வணிகன். அங்கே அரசனும் அரசியும் அழுதபடி இருந்தனர். அவர்கள் எதிரில் இளவரசரின் உடல் இருந்தது.
வணிகனைப் பார்த்த அரசன், “”என் நாட்டிலேயே சிறந்த அறிவுடையவர் நீர்தான். குடிகாரனும், தீயவனுமான சின்ன மகனால் என் பெயர் மிகவும் கெட்டு விட்டது. இன்று இரவு விருந்து நடந்தபோது பலரும் அவனைப் பற்றிக் குறை கூறினர். கோபத்துடன் அரண்மனைக் கதவைத் திறந்தேன். நன்கு குடித்துவிட்டுத் தள்ளாடியபடி நின்றிருந்த இளவரசன், கதவுபட்டு கீழே விழுந்து இறந்து விட்டான்.
“”நானே என் மகனைக் கொன்ற செய்தி பரவுமானால் மக்கள் என்னை இழிவாகப் பேசுவார்கள். என் புகழ் மங்கும். இளவரசன் இயற்கையாக இறந்தது போல இருக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்யலாம். உங்கள் அறிவுரை என்ன சொல்லுங்கள்!” என்று கேட்டான்.
“”அரசே! முரசடிப்பவனை இந்த நள்ளிரவு நேரத்தில் அழையுங்கள். இளவரசரைப் பாம்பு கடித்துவிட்டது, உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சி செய்கின்றனர் என்று நகரமெங்கும் செய்தி அறிவிக்கச் சொல்லுங்கள். காலையில் மீண்டும் முரசடிப்பவனை அனுப்பி இளவரசர் இறந்துவிட்டார் என்ற சோகச் செய்தியைத் தெரியப்படுத்தச் சொல்லுங்கள்…” என்று வழிமுறைகளைச் சொன்னான் வணிகன்.
விலை உயர்ந்த முத்து மாலையை வணிகனுக்குப் பரிசாகத் தந்தான் அரசன்.
நடந்ததை எல்லாம் அறிந்தாள் வணிகனின் மனைவி. ஒரே நாள் இரவில் தன் கணவன் ஈட்டிய பொருள்களைப் பார்த்தாள். அதன் பிறகு அவனைக் குறை சொல்வதை விட்டுவிட்டாள்.
– ஆகஸ்ட் 20,2010