மைதானத்தில் ஒரு நரிக்குட்டி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 11, 2023
பார்வையிட்டோர்: 6,312 
 
 

பள்ளி நேரம் முடிந்ததும் அம்முவும் அவள் தோழிகளும் மைதானத்தில் கால்பந்து ஆடுவார்கள். அன்றைக்கும் அப்படித்தான் ஆடிக்கொண்டிருந்தார்கள். பந்து மைதானத்துக்கு வெளியே சென்றுவிட்டது. அங்கே ஒரு புதர் இருந்தது. அதற்குள் பந்து விழுந்து கிடந்தது. அதை எடுக்க அம்மு உள்ளே சென்றாள். அங்கே ஒரு நரிக்குட்டி ‘கீச்… கீச்…’ என்று கத்தியபடி தனியாக இருந்தது.

பந்தைத் தூக்கி மைதானத்துக்குள் வீசிவிட்டு அதன் அருகில் சென்றாள் அம்மு. ‘‘ஏய் யார் நீ? இங்கே என்ன பண்றே?” என்று அந்த நரிக்குட்டியிடம் கேட்டாள்.

நரிக்குட்டியோ, ‘கீச்…கீச்…’ என்று அழுதது. அம்முவுக்கு பாவமாக இருந்தது. அதைத் தூக்கிக்கொண்டு, ‘‘அழாதே… உன் அம்மா விட்டுட்டுப் போய்டுச்சா? நான் உன்னைப் பாத்துக்கறேன்” என்று ஆறுதல் சொல்லிக்கொண்டே மைதானத்துக்குள் வந்தாள்.

நரிக்குட்டியைப் பார்த்ததும் அவளுடைய தோழிகள் சூழ்ந்துகொண்டனர். சிலருக்கு அதைப் பார்க்கவே பயமாக இருந்தது. அது பசியால் அழுதுகொண்டே இருந்தது. அம்மு ஓடிப்போய் தன்னுடைய உணவுப் பையில் இருந்த ரொட்டியை எடுத்துவந்து, நரிக்குட்டிக்கு ஊட்டினாள். அது கொஞ்சமாகத் தின்றது.

அம்மு நரிக்குட்டியைக் கொஞ்சுவது தோழிகளுக்குப் பிடிக்கவே இல்லை. அந்தக் குட்டியை எடுத்த இடத்திலேயே போட்டுவிடச் சொன்னார்கள்.

அம்மு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. “இந்தக் குட்டி பாவம். அதோட அம்மா எங்கயோ போய்டுச்சு. இப்படியே விட்டுட்டுப் போனா ரொம்ப கஷ்டப்படும். எங்கே சாப்பிடும்? அதனால, இதை நானே வளர்க்கப்போறேன். இதுக்கு பேர்கூட வச்சிட்டேன். இனிமே இந்த நரிக்குட்டியின் பேரு, சுமி” என்றாள்.

அம்முவின் தோழிகள் அவளைத் திட்டினார்கள். ‘‘நாளைக்கு உங்க அப்பா வந்தா அவர்கிட்ட சொல்லிடுவோம்” என்று மிரட்டினார்கள்.

அந்தக் கோள்மூட்டிகளின் மிரட்டலுக்கு அம்மு பயப்படவே இல்லை. ‘‘நீங்க யார்கிட்ட சொன்னாலும் பரவாயில்லை’’ என்றபடி நரிக்குட்டியோடு வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள்.

என்னதான் தோழிகளிடம் சவால் விட்டுவிட்டாலும் அம்மு பயந்துகொண்டேதான் வீட்டுக்குள் வந்தாள். உணவுப் பையில்தான் சுமி இருந்தது. அது சின்னதாக, ‘கீச்… கீச்…’ எனக் கத்திக்கொண்டிருந்தது.

ஹால் சோபாவில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த அம்மா நிமிர்ந்து பார்ப்பதற்குள் தன்னுடைய அறைக்குப் போய்விட்டாள் அம்மு. பையில் இருந்த ஆரஞ்சு நிற நரிக்குட்டி ‘சுமி’யை வெளியே எடுத்தாள். அது, அவளுடைய கைகளைக் கட்டிக்கொண்டது.

“சுமி, நான் வரும் வரைக்கும் நீ அமைதியா இருக்கணும். உனக்கு நான் பால் கொண்டுவரேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

அம்மாவுக்குத் தெரியாமல் சமையல் அறைக்குப் போய் ஒரு சின்ன பாத்திரத்தில் பால் கொண்டுவந்து சுமிக்குக் கொடுத்தாள். அது முகமெல்லாம் பால் ஆகும்படி பாத்திரத்தில் வாய் வைத்துக் குடித்தது. ‘பாவம், சுமிக்கு எவ்ளோ பசி!’ என்று அம்மு நினைத்துக்கொண்டாள்.

தன்னுடைய போர்வையைச் சுற்றி ஒரு குட்டி பெட் தயார்செய்தாள். சுமி போர்த்திக்கொள்ள தன்னுடைய டர்க்கி டவலைக் கொடுத்தாள்.

அம்மாவைவிட அப்பாவை நினைத்துதான் அம்முவுக்கு அச்சமாக இருந்தது. அம்மாகூட, ‘பாவம் வளர்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லிவிடுவார். ஆனால், அப்பா விடமாட்டார். ஒரு நரியை வளர்க்க நிச்சயம் அனுமதிக்க மாட்டார் என்று பயமாக இருந்தது.

இரவில் சுமி நன்றாகத் தூங்கியது. அப்பா அறைக்கு வந்து அம்முவைக் கொஞ்சும்போதும் கவனிக்கவில்லை. சுமியும் சத்தம் போடவில்லை. அம்முவுக்குதான் ‘திக் திக்’ என இருந்தது. ‘இதை யாருக்கும் தெரியாமல் வளர்க்க வேண்டும். தினமும் ஸ்கூலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் ஒரு கூண்டு வாங்க வேண்டும்’ என்று திட்டம் போட்டாள்.

‘நாளைக்கு அப்பா பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது தோழிகள் அவரிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டால் என்ன செய்வது’ என நினைக்கும்போது தூக்கமே வரவில்லை. யோசனையுடன் புரண்டு புரண்டு படுத்து, பிறகு தூங்கிவிட்டாள்.

காலையில் எழுந்ததும் சுமியைக் காணவில்லை. பதற்றத்துடன் அங்கும் இங்கும் பார்வையை வீச, கட்டிலுக்கு அடியில் படுத்திருந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் தன்னுடைய பாலில் கொஞ்சத்தை சுமிக்கு கொடுத்தாள். மதிய உணவுப்பையில் சுமியை வைத்துக்கொண்டு அப்பாவோடு பள்ளிக்குக் கிளம்பினாள்.

பள்ளியில் அம்முவின் தோழிகள் அப்பாவை சூழ்ந்துகொண்டனர். அவரிடம் நரிக்குட்டி விஷயத்தைச் சொன்னார்கள். அம்முவுக்கு உதறல் எடுத்தது. அப்பா நன்றாக திட்டப்போகிறார் என்று பயந்தாள். தோழிகள் மீது கோபமாக வந்தது.

அம்மு, “அப்பா, ஸாரிப்பா… பாவம்ப்பா சுமி. அதுக்கு அம்மாவே இல்ல. அது என்ன செய்யும்?” என்றாள்.

அப்பா கோபமே படவில்லை. சிரித்துக்கொண்டே, ‘‘அம்மு, நீ செஞ்சது சரியான விஷயம்தான். ஆனால், அதை வீட்டில் வளர்க்க முடியாது. காட்டு விலங்குகளுக்கு காடுதான் வீடு. காட்டில்தான் பாதுகாப்பாக, சுதந்திரமாக இருக்கும். அதை ஒருநாளும் வீட்டில் அடைத்துவைக்கக் கூடாது. இந்த நரிக்குட்டியைக் காட்டுக்குள் விட்டுவிட்டால், அதுவாகவே தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்ந்துவிடும். அதையும் நாமே செய்யக் கூடாது. முறையாக வனத்துறையிடம்தான் ஒப்படைக்கணும். அவங்க எப்போ எப்படி காட்டில் சேர்க்கணும்னு தெரிஞ்சு செய்வாங்க’’ என்றார்.

பைக்குள் இருந்த சுமியை ஏக்கமாகப் பார்த்தவாறு இருந்த அம்முவின் தலையை அன்புடன் கோதிய அப்பா, “என்ன… சுமியைக் கொண்டுபோய் ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ்கிட்ட கொடுத்துடலாமா?” என்றார்.

அம்முவுக்கு சுமியைப் பிரிய மனமே இல்லைதான் என்றாலும் ஒப்புக்கொண்டாள். சுமிக்கு அதுதான் நல்லது என்று அவளுக்குப் புரிந்தது.

சுமியோடு அப்பாவும் அம்முவும் வனத்துறை அதிகாரியின் அலுவலகம் நோக்கிக் கிளம்பினர். தோழிகளும் மகிழ்ச்சியாக டாட்டா காட்டி அனுப்பிவைத்தனர்.

– பெப்ரவரி 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *