மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,698 
 
 

தஞ்சாவூருக்கு அருகில் மூனூறு என்ற கிராமத்தில் மூன்றாவது தெருவில் இராமநாதன் என்ற இளைஞர் வசித்து வந்தார்.

இராமநாதன் அழகான இளம் வாலிபர், அடிக்கடி தலை முடியை கோதி விட்டதால் முன்பக்க தலை முடி ஏறி பார்க்க அழகாக இருக்கும், அவரது சிறப்பான குணங்கள் என்ன என்றால் யார் என்ன என்று எல்லாம் பார்க்காமல் உடனே ஓடி போய் உதவி செய்வார்.

பள்ளியில் படிக்கும் போது புதிய மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தால் அவர்களுக்கு இவரே கட்டுரைகள், பாடங்கள் எழுதி கொடுத்து, தான் கொடுத்தது வெளியே தெரிய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்வார்.

தெரிந்தோ தெரியாமலோ கோபப்பட்டு பேசினால் உடனே மனம் திருந்தி மன்னிப்பு கேட்பவர், பல்மொழி வல்லுநர், பறவைகள் பேசும் மொழி கூட தெரியும் என்று சொல்வார்கள்.

மேலும அவருக்கு தேரோட்டுவது என்பது மிகவும் பிடிக்கும், அடிக்கடி பாட்டு பாடிக் கொண்டு தேரோட்டி கொண்டு அருகில் இருக்கும் மலை பிரதேச முருகன் கோயில்களுக்கு செல்வார். பக்கத்து ஊரில் தேரோட்டப் பந்தயங்கள் நடந்தா உடனே ஓடி போய் பார்க்க போயிடுவார், அடுத்த நாள் அந்த தேரோட்ட பந்தயங்கள் பற்றி மணிக்கணக்கில் நண்பர்களான இராகவன், ஆனந்த், கைப்புள்ள, கணேஷ், குசும்பன், மோகன்தாஸ், குமரனிடம் பேசுவார்.

இப்படியாக இராமநாதன் தன் வாலிப பருவத்தை கழிக்க, அவரது தந்தையார் தங்கள் கிராமத்தில் அனைத்து வியாதிகளையும் சரி செய்யும் நல்ல மருத்துவர் யாருமில்லை என்பதால் தன் மகன் இராமநாதனை நல்ல மருத்துவராக்கி, மக்களுக்கு சேவை செய்ய விரும்பினார், உடனே தன் மகனை அரிய மூலிகைகள் கொண்ட பனி படர்ந்த வெகு தூர தேசத்திற்கு அனுப்ப விரும்பினார்.

இராமநாதனோ ஊரில் எப்போ பார்த்தாலும் கோயில், சாமி, பஜனை என்றே இருந்தது தான். தினமும் கோயிலுக்கு சென்று பாட்டு பாடுவதும், சொற்பொழிவு கொடுப்பதும் முக்கிய வேலையாக வைத்திருந்தார். ராஜவீதி, சந்து, பொந்து என்று எங்கே நாலு பேர் நின்றாலும் சொற்பொழிவு கொடுக்கும் ஆற்றல் கொண்டவர், இவரது சொற்பொழிவு கேட்க வயதானவர்கள் முதல் இளம் பெண்கள் வரை வருவார்கள்.

ஒரு வழியாக தந்தையின் ஆசைப்படி இராமநாதன் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு பனி படர்ந்த வெகு தூர தேசத்திற்கு பயணம் செய்யத் தொடங்கினார். அம்மாவும் அவருக்கு பிடித்த தயிர் சாதம், ஆவக்காய், வெங்காய சாம்பார், சேப்பக்கிழங்கு, உருளைக்கிழங்கு கறி, வத்தக்குழம்பு, ஜவ்வரிசி வடகம், வெங்காய கோதுமை அடை, வெங்காயப் பச்சடி செய்து, பனி தேசத்தில் பல நாட்கள் கேடாமல் வைத்திருந்து சாப்பிட கொடுத்தார்.

இராமநாதனும் மூட்டை முடிச்சுகளோடு தன்னுடைய தேரில் ஏறி பனி படர்ந்த தேசம் நோக்கி தன் பயணத்தை தொடங்கினார்.

இரவு பகலாக பயணம் செய்து காந்தார நாட்டை அடைந்தார், காந்தார நாட்டைப் பற்றி அவர் சின்னவயதிலேயே தெரிந்து வைத்திருந்தார், எங்கே பார்த்தாலும் பெரிய பெரிய மலைத் தொடர்களும், குகைகளும் கொண்ட நாடு, மக்கள் அனைவரும் எளிமையாக வாழ்ந்தவர்கள், அவர்கள் தயார் செய்யும் கம்பிளி ஆடைகள் உலகத்தரம் வாய்ந்தவை. காந்தார நாட்டில் குறைந்தது ஒருவாரமாவது தங்கியிருந்து மக்களோடு மக்களாக பழகி பின்னரே பட்டுதேசத்தை கடந்து பனிப்படர் தேசம் செல்ல நினைத்தார்.

ஊருக்குள் சென்ற போது ஊரே அமைதியாக இருந்தது, மக்கள் நடமாட்டமே இல்லை, எல்லா இடத்திலும் போட்டது போட்ட இடத்தில் கிடந்தது, இராமநாதனுக்கு ஆச்சரியம், புகழ் பெற்ற நாடாச்சே, என்ன ஆச்சுது, இத்தனை அமைதியாக இருக்கிறது என்று நினைத்து அரண்மனை இருக்கும் பகுதிக்கு சென்றார்.

அங்கே கண்ட காட்சியானது இராமநாதனின் இரத்தத்தை அத்தனை வெயிலிலும் உறையவைத்தது, ஆமாம் அங்கே மக்கள் அனைவரும் கற்சிலைகளாக மாறியிருந்தார்கள். அரண்மனைக்காவலர் முதல் அனைவரும் கற்சிலை போல் காட்சி அளித்தார்கள்.

இராமநாதனும் தன் தேரை விட்டு கிழே இறங்கி அரண்மனைக்குள்ளே சென்றார், அங்கே அரசபையில் அரசன் முதற்கொண்டு அனைவரும் கற்சிலையாக நின்றார்கள்.

என்ன ஆச்சரியம், அங்கே இருந்த அரசரின் தலை மட்டும் அசைந்தது, உடனே இராமநாதன் அரசரிடம் ஓடி போய் நின்றார். “அரசே! இது என்ன கொடுமை, என்னாச்சு உங்களுக்கும், உங்க நாட்டு மக்களுக்கும், சொல்லுங்க”

இளைஞனே! நீ வேற்று நாட்டவராக இருந்தாலும் எங்க நாட்டு மொழி பேசுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி கொடுக்கிறது, உன் மேல் நம்பிக்கையும் வருகிறது. நானும் என் மக்களும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தோம்.சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் அரசவைக்கு ஒரு மந்திரவாதி வந்தான், அவனும் எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு உதவுதாக சொன்னான்.

ஏற்கனவே எங்க நாட்டிற்கும் அருகில் இருக்கும் பட்டுதேசத்திற்கும் அடிக்கடி போர் நிகழ்ந்ததால், மந்திரவாதியின் பேச்சுக்கு நான் சரி என்றேன்.மந்திரவாதியும் புதிய புதிய ஆயுதங்களை எங்களுக்கு கொடுத்து உதவினான், நாங்களும் எங்கள் நாட்டின் பாதுகாப்பை அதிகரித்தோம்.

ஒரு நாள் அரசவைக்கு வந்த மந்திரவாதிக்கு நாங்க அனைவரும் அவன் செய்த உதவிக்கு தக்க சன்மானம் கொடுக்க இருப்பதாக சொன்னோம், அவனோ! பொன்னும் பொருளும் எனக்கு தேவையில்லை, அது எக்கச்சக்கமாக இருக்குது, உன் அழகிய மகளை எனக்கு திருமணம் செய்து வை! என்றான்.”

அதை கேட்டதும் எங்கள் அனைவரின் இதயமே நின்று போனது, காரணம் வயதான, அசிங்கமான, கொடிய முகத்தை கொண்ட மந்திரவாதிக்கா எங்கள் அழகிய இளவரசியை திருமணம் செய்து வைப்பது என்று அதிர்ச்சி அடைந்த நாங்கள், அது மட்டும் முடியாது, வேறு எதை வேண்டுமானும் கேள் என்றோம்.

அவனோ ஆத்திரமடைந்து அப்படி இளவரசியை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் பெரும் ஆபத்தை அனுபவிப்பீர்கள் என்றான், நான் உடனே அவசரப்பட்டு மந்திரவாதியை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டேன், அவ்வளவு தான் மந்திரவாதி தன் மந்திர சக்தியால் எங்களை எல்லாம் கற்சிலைகலாக மாற்றிவிட்டான்.

என் தலை மட்டும் கல்லாக மாற்றவில்லை, காரணம் தினம் தினம் நான் என் நாட்டிற்கும் எனது மக்களுக்கும் நடந்த கொடுமையை நினைத்து வருந்தவும், ஒரு வேளை நான் மனசு மாறி மந்திரவாதியை மருமகனாக்கிக் கொள்ள சம்மதித்தால் அதை அவனுக்கு தெரியப்படுத்தவும் என் தலையை மட்டும் மாற்றாமல் வைத்திருப்பதாக சொன்னான். வாரந்தோறும் என் முன்னால் தோன்றி என் எண்ணம் மாறியதா என்று கேட்பான்.சிறிது நாளில் வெளி தேசத்திற்கு படிக்க சென்று திரும்பி வந்த என் மகன் என் நிலைமையை தெரிந்து கொண்டு, மந்திரவாதியை கொல்லச் சென்றான், அவனையும் பிடித்து சிறையில் அடைத்து விட்டதாக மந்திரவாதி என்னிடம் சொன்னான் என்று கூறி கண்ணீர் விட்டார் அரசர்.

“அரசே! கவலை வேண்டாம், கடவுள் துணையிருக்கிறார், கட்டாயம் அந்த கொடிய மந்திரவாதிக்கு தண்டனை கிடைக்கும், நானே உங்களுக்கு உதவுகிறேன், உங்களையும், உங்கள் நாட்டு மக்களையும் பழைய நிலைக்கு மாற்றுகிறேன்”

“வீர இளைஞனே! நீ மட்டும் சொன்னது போல் செய்தால், நீ என்ன கேட்டாலும் நான் கொடுப்பேன், உன் உதவியை நானும் என் நாட்டு மக்களும் ஒரு நாளும் மறக்க மாட்டார்கள், இது சத்தியம்”

இராமநாதனும் கற்சிலை அரசரிடம் விடை பெற்று, பட்டுதேசத்தை நோக்கி தன் தேரில் விரைந்தார். அங்கே அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது, அது என்ன ??

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *