மரத்தடிச் சாமியார்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,026 
 

மாடசாமி, அவனது பெற்றோருக்கு ஒரே பிள்ளை.

மாடசாமியின் பெற்றோர் ஏழ்மை நிலையில் வாழ்ந்த போதிலும் அவனை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர். பெரியவனாகிய பிறகும் அவனை வேலைக்குப் போகச் சொன்னதில்லை; அவனாகவும் போனதில்லை.

மரத்தடிச் சாமியார்அன்றாடம் சமைக்கும் உணவில் தங்கள் பிள்ளைக்கு வயிறு முட்ட கொடுத்துவிட்டு, மீதப்படும் உணவையே அவர்கள் உண்பார்கள். அதனால் அவனது உடம்பு வளர்ந்ததே தவிர அறிவு வளரவில்லை.

நாட்கள் ஓடின.

மாடசாமியின் பெற்றோர் இறந்துவிட்டனர். உழைக்காத சோம்பேறியான அவன் வேலைக்குப் போகாததால் வருமானம் இல்லை. பெற்றோர் கட்டி வைத்திருந்த சிறிய வீடான கீற்றுக் கொட்டகையும் பராமரிப்பு இல்லாமல் இடிந்துபோய்விட்டது.

அவனது நிலையைத் தெரிந்து கொண்ட ஒருவர், ஒரு சில நூறு ரூபாய்களை அவனிடம் கொடுத்துவிட்டு அவன் குடியிருந்த இடத்தை தனதாக்கிக் கொண்டார்.

வாங்கிய பணத்துடன் வெளியேறிய மாடசாமி, கடையில் சாப்பிட ஆரம்பித்தான். சில நாட்களில் அந்தப் பணமும் தீர்ந்துபோய்விட்டது.

கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான் மாடசாமி.

பசியுடன் நடந்து களைத்த அவன், ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான்.

அது, அவ்வூர் மக்கள், காளியம்மன் கோயிலாக வழிபடும் இடம். மரத்தின் விழுதுகளில் மாலைகள் தொங்கின. மரத்தின் எதிரில் இரு பக்கங்களிலும் சூலாயுதங்கள் ஊன்றப்பட்டு இருந்தன.

பசியின் களைப்பினால் கண்களை மூடி அந்த மரத்தில் சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தான் மாடசாமி.

அவ்வழியாக வந்த ஒருவர் மாடசாமியைப் பார்த்துக் கொண்டே சென்றார். ஊருக்குள் சென்ற அவர், “”காளியம்மன் கோயில் மரத்தடியில் ஒரு சாமியார் உட்கார்ந்திருக்கிறார்…” என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி வைத்தார்.

மாடசாமி கண்விழித்த போது, எதிரில் பக்தியுடன் கைகூப்பியபடி சிலர் நின்று கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் பெண்களே அதிகமாக இருந்தனர்.

“”சாமி… இதை ஏற்றுக்கொள்ளணும்…” என்று சொல்லி ஒரு தட்டில் தேங்காய், பழத்துடன் பணத்தையும் வைத்து மாடசாமியை வணங்கினார் நடுத்தர வயதுப் பெண் ஒருவர்.

பசியுடன் இருந்த மாடசாமி, அந்தப் பழங்களைப் பார்த்ததும், காய்ந்த மாடு கம்பில் விழுந்தது போல எடுத்து லபக் லபக்கென்று விழுங்கத் தொடங்கினான்.

பக்கத்தில் நின்றிருந்த மற்றொரு பெண், “”சாமி… நான் கொண்டு வந்த பழத்தையும் சாப்பிடுங்க…” என்று சொல்லிக் கொண்டே தட்டை நீட்டினாள்.

வயிறு முட்ட பழங்களைத் தின்ற மாடசாமிக்குத் தாகம் எடுத்தது.

இடது கையில் நான்கு விரல்களை மடக்கி, கட்டை விரலை மட்டும் வாயின் பக்கம் நீட்டி சைகை காண்பித்தான் மாடசாமி.

“”அடடே… சாமி குடிக்க பால் கேட்குது… கொண்டு வாடா…” என்றார் கூட்டத்திலிருந்த மற்றொரு மனிதர்.

ஒரு செம்பு நிறையப் பசும்பால் வந்தது.

செம்பை வாங்கிப் பாலைக் குடித்தான். உண்ட களைப்பினால் தலை சுற்றியது. அப்படியே தரையில் படுத்து உறங்கிவிட்டான்.

மாலையில் கண்விழித்த மாடசாமிக்கு வியப்பு தாளவில்லை. சுற்றிலும் பழம், தேங்காய், பணம்! அதுவரையிலும் மழுங்கிப் போயிருந்த மாடசாமியின் அறிவு சட்டென்று கூர்மையாகிவிட்டது.

மறுநாள் காலையில் வந்து பார்த்த மக்களுக்கு, காவி வேட்டி, கழுத்தில் மணிமாலைகள், நெற்றியில் திருநீறும் குங்குமமுமாகத் தோற்றமளித்தான் மாடசாமி.

சாமியாராகிவிட்ட மாடசாமியைப் பற்றிப் பெருமையுடன் மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

அவனை நாடிவரும் ஒவ்வொருவரும் தங்கள் குறைகளைச் சொல்ல, வாயில் வந்ததைச் சொல்லுவான் மாடசாமி. காக்கை உட்காரவும் பனம் பழம் விழவும் என்பது போல அவன் சொன்னது தற்செயலாக சிலருக்கு நடந்துவிடும்போது, அவனிடம் மிகப் பெரிய சக்தி இருப்பதாக மக்கள் நம்ப ஆரம்பித்தனர். அவன் சொல்வது நடக்காத போது, தங்களின் விதி என்று கூறிக் கொண்டனர்.

மந்திரத் தாயத்து கொடுப்பது, தகடு எடுப்பது என்று தொழிலை விரிவுபடுத்த ஆரம்பித்தான் மாடசாமி.

பக்கத்து ஊரில் பாலு என்ற பெயருடைய சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் புத்திசாலி. எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.

பாலுவின் உடல்நலம் குன்றியது. காய்ச்சல், பசி இல்லாமை என்று அவதிப்பட ஆரம்பித்தான். உள்ளூர் கிராம மருத்துவரிடம் மருந்து வாங்கிக் கொடுத்தும் ஒரு பயனுமில்லை. அவனது உடல் மெலிந்து கொண்டே போனது.

அவனது பெற்றோர் வருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்த சிலர், “”இது பிசாசின் வேலை… பக்கத்து ஊரிலுள்ள சாமியாரிடம் அழைத்துப் போனால், எல்லாம் சரியாகிவிடும்…” என்று கூறினர்.

பாலுவின் பெற்றோர், சாமியாரிடம் போக, அவனை அழைத்தபோது, “”நகரத்திலுள்ள நல்ல மருத்துவரிடம் வைத்தியம் பார்த்தால் எனது வியாதியை அறிந்து, தக்க மருந்து கொடுப்பார். சாமியாரிடம் போவது நல்லதல்ல…” என்றான் பாலு.

ஆனால், பாலுவின் பெற்றோர் கேட்கவில்லை. அந்தச் சாமியார் கடவுளின் அவதாரம் என்று சொல்கிறார்கள்… அவரிடம் போனால்தான் உடல்நிலை சரியாகும் என்று சொல்லி, பிடிவாதமாக பாலுவை அழைத்துக் கொண்டு, மாடசாமியின் கீற்றுக் கொட்டகைக்கு வந்தனர்.

பாலுவைப் பார்த்த சாமியார், “”ச்சச்சோ… காலம் கடந்து கொண்டு வந்திருக்கீங்க. இனிமேல் பிழைக்க வைப்பது கடினமாச்சே…” என்றார்.

அதைக் கேட்ட பாலுவின் பெற்றோர் அழத் தொடங்கிவிட்டனர்.

“”சாமி! எங்களுக்கு ஒரே பிள்ளை. எப்படியாவது இவனைக் காப்பாற்றுங்கள்…” என்று அழுதாள் பாலுவின் அம்மா.

“”உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. முடியுமா என்று கேட்டுச் சொல்கிறேன்…” என்றபடியே கண்களை மூடினார் சாமியார்.

கொட்டகைக்குப் பின்னால் இருந்த மச்சு வீட்டைப் பார்த்த பாலு, “”அது யாருடைய வீடு?” என்று கேட்டான்.

“”சாமியாரின் வீடுதான்…” என்றார் அப்பா.

பாலு, சாமியாரின் தோற்றத்தைப் பார்த்தான். சாமியாரின் வீடு மற்றும் இதர வசதிகளைப் பார்த்தான். அவனது மனத்தில் சந்தேகம் எழுந்தது.

மூடிய கண்களைத் திறந்த சாமியார், “”உங்கள் குடும்பத்தை அழிப்பதற்காக எதிரி வைத்த தகடு, உங்கள் வீட்டின் நடுவில் மூன்று அடி ஆழத்தில் இருக்கிறது. அதை உடனே எடுக்காவிட்டால் பையன் பிழைக்க மாட்டான்…” என்றார்.

“”அதற்கு என்ன செய்ய வேண்டும்?” கேட்டனர் பாலுவின் பெற்றோர்.

“”சொர்ண பூசை செய்ய வேண்டும். பூசையில் வைக்க பத்து பவுன் தங்கம் வேண்டும்…” என்றார் சாமியார்.

பாலுவின் பெற்றோர், சாமியார் கேட்டதைக் கொடுக்க ஒப்புக் கொண்டனர்.

அன்று வெள்ளிக்கிழமை. சாமியார் வந்துவிட்டார்.

வீட்டின் நடுவே அமர்ந்து, தான் கொண்டு வந்திருந்த பொருள்களை வைத்துப் பூசையைத் தொடங்குவதற்கு முன், “”பத்து பவுன் வையுங்கள்…” என்றார் சாமியார்.

பாலுவின் அம்மா தனது நகைகளையெல்லாம் கழற்றி, பத்து பவுன் சேர்த்து தட்டில் வைத்தார்.

சாமியார் தகடு எடுப்பதைப் பார்க்க, பக்கத்து வீடுகளில் இருந்தவர்களும் அங்கே கூடினர்.

சாமியார், பூசையைத் தொடங்கினார். மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார். இதற்கிடையே மறக்காமல் தட்டிலிருந்த நகைகளை எடுத்துத் தனது மடியில் வைத்துக் கொண்டார்.

“”இந்த இடத்தில் வெட்டுங்கள்…” என்று ஓர் இடத்தைக் காண்பித்தார்.

மண்வெட்டியுடன் தயாராக இருந்த பாலுவின் அப்பா, சாமியார் சுட்டிக்காட்டிய இடத்தை வெட்டத் தொடங்கினார்…

மூன்று அடி ஆழம் வெட்டியதும் –

“”தகடு இருக்கிறதா, பாருங்கள்…” என்றார் சாமியார்.

மண்ணைக் கிளறிப் பார்த்துவிட்டு, “”இல்லை…” என்றார் அப்பா.

“”ஒரு கூடையில் சிறிது மணலும் ஒரு செம்புத் தண்ணீரும் கொண்டு வாருங்கள்” என்றார் சாமியார்.

அவர் சொன்னபடி வைக்கப்பட்டது.

சாமியார் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே, தன் இரு கைகளாலும் மணலைக் கிளறினார்.

பாலு, துரிதமாகச் செயல்படத் தொடங்கினான். அப்பாவை மேலே ஏறச் சொல்லிவிட்டு, குழிக்குள் இறங்கினான். அவனது கையில் ஒரு துணி முடிச்சு இருந்தது. அதை மறைத்து வைத்திருந்தான்.

சற்று நேரத்தில்-

கிளறிய மணலை குழிக்குள் கொட்டிய சாமியார், பாலுவைப் பார்த்து, “”நான் தகட்டை எடுக்கப் போகிறேன். நீ மேலே ஏறி வா…” என்றார்.

பாலு மேலே வந்துவிட்டான்.

சாமியார், செம்பில் இருந்த நீரை குழிக்குள் ஊற்றினார். பிறகு கைகளால் மண்ணைத் துழாவத் தொடங்கினார்.

நேரம் கடந்து கொண்டிருந்தது…

சாமியாரின் முகத்தில் கலக்கம். அங்குலம் அங்குலமாக மண்ணைக் கிளறிப் பார்த்தார். பதட்டத்தில் முகம் வியர்த்தது. கைகள் நடுங்கின.

“”சாமி, மேலே வாங்க, தகட்டை நான் காட்டுகிறேன்” என்றான் பாலு.

“”என்ன சொல்கிறாய்?” மேலே ஏறினார் சாமியார்.

“”நீங்கள் திட்டமிட்டுக் கொண்டு வந்திருந்த அந்தத் துருப்பிடித்த தகட்டை மடியிலிருந்து எடுத்து, மணலுக்குள் நுழைத்ததை நான் பார்த்துவிட்டேன். நீங்கள் நீரை ஊற்றி குழிக்குள் கிளறியது நான் கொட்டிய மணலைத்தான். நீங்கள் கொட்டிய காய்ந்த மணல் – நான் உள்ளே விரித்திருந்த இந்தத் துணியில் இருக்கிறது…” என்று சொல்லிக்கொண்டே மணலைக் கொட்டினான், பாலு.

தகடு வெளிப்பட்டது.

நடுக்கத்துடன் எழுந்தார் சாமியார்.

அங்கே கூடியிருந்தோர், “”அடடே, திருட்டுச் சாமி! இப்படித்தான் எல்லோரையும் ஏமாற்றிப் பணம் பறிச்சியா?” என்று சொல்லி சாமியாரை அடிக்கத் தொடங்கினர்.

“”ஏமாறுபவர் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர் இருக்கத்தான் செய்வர்…” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார், காவல் துணை ஆய்வாளர்.

அங்கு நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து, “”பாலு, எனக்கு முன்னமே தகவல் கொடுத்திருந்தான்…” என்றவர், “”சிலரின் கண்மூடித்தனமான நம்பிக்கையினால்தான் இவனைப் போன்ற போலிச் சாமியார்கள் பெருகுகிறார்கள்…” என்று சொல்லிக் கொண்டே, அவனிடம் இருந்த நகைகளை வாங்கினார்.

பிறகு, பாலுவின் அப்பாவைப் பார்த்து, “”நான் சொல்லி அனுப்பும்போது வந்து உங்கள் நகைகளை வாங்கிக் கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு சாமியாரை இழுத்துப் போனார்.

பாலுவை, பக்கத்து நகரத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் சோதனை செய்து பார்த்து, சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.

பாலுவின் உடல் நோய் நீங்கி, ஆரோக்கியமான சிறுவனாகி விட்டான்.

மாடசாமி, சிறைக்குள் சோற்றுக்காக தட்டை நீட்டிக் கொண்டிருந்தான்!

– புலேந்திரன் (நவம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *