நான் ஒருமுறை பெங்களுர் சென்றிருந்தபோது, 95 வயதைத் தாண்டிய ‘சர். விசுவேசுவர ஐயா’ அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஒரு கன்னட நண்பரின் துணையோடு பார்க்கச் சென்றிருந்தேன். அவரிடம், என்னைப் “பொதுத் தொண்டு செய்பவர்” என்று நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
பழுத்த பழமாகச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்த சர். விசுவேசுவர ஐயா அவர்கள், “பொதுத் தொண்டா? பொதுத் தொண்டா” என்று இரண்டுமுறை சொல்லி, “அது மிகவும் கடினமாயிற்றே? இவரால் அது எப்படிச் செய்யமுடிகிறது? என்று வியப்புடனே கேட்டார்.
அப்போது அவர் கேள்வியின் கருத்து எனக்கொன்றும் விளங்கவில்லை சர். வி. ஐயா அவர்கள் உடனே விளக்கத் தொடங்கினார் :
நான் அரசாங்க வேலையாக மேட்டூருக்குச் சென்றிருந்த சமயம் திரும்பி வந்துகொண்டிருந்தேன். வழியில் ஐந்து மைல் தூரத்தில் நண்பர் வீட்டுத் திருமணம். அதற்கும் செல்லவேண்டியிருந்தது. டிரைவர் அந்தப் பாதையில் வண்டியைத் திருப்பினார். எனக்கு உடல் எல்லாம் நடுங்கிவிட்டது. ஏனெனில், நான் சென்றது அரசாங்க வண்டி. அதை எப்படி என் சொந்த, வேலைக்குப் பயன்படுத்தலாம்?
“ஆகவே டிரைவரைக் கோபித்து, வண்டியைத் திருப்பி 20 மைல் தூரம் உள்ளே என் இருப்பிடத்திற்கு வந்து, பின்பு என் சொந்தக் காரை எடுத்துக்கொண்டு திருமணத்திற்கு சென்று வந்தேன். அதுதான் என் மனத்திற்கு நிம்மதியைத் தந்தது” என்று கூறினார். இன்னொன்று.
“நான் வேலை பார்க்கும் காலத்தில் எனது மேசையில் 2 பேனாக்கள் இருக்கும் அரசாங்க வேலைகளுக்கு தனிப் பேனாவும், என் சொந்த வேலைகளுக்கும், உறவினர் நண்பர்களுக்கு வரையும் கடிதங்களுக்கும் என் சொந்தப் பேனாவும் பயன்படுத்துவேன்’ என்று கூறி— என் பக்கம் திரும்பி, தாங்கள் வந்த செய்தி என்ன?” என்று கேட்டார்.
“நான் வந்த வேலை முடிந்துவிட்டது. பொதுத் தொண்டு செய்வது எப்படி?—என்ற பாடத்தை, இன்று முதல் முதலாகத் தங்களிடம் கற்றுக் கொண்டேன்” என்று கூறி, மகிழ்ச்சியோடு விடை பெற்றுக் கொண்டேன். இது என் பொதுவாழ்க்கைக்கு மிகவும் பயன்பட்டது.
இதனைப் படிக்கிற உங்களுக்கும் இது பயன் பட்டால் நான் பெரிதும் மகிழ்வேன்.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை