பூட்டு, சாவி எங்கே?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தி இந்து
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 17,226 
 
 

மரக்காட்டில் முயல் குடும்பம் ஒன்று வசித்துவந்தது. நேகா அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. மிக அழகான நேகாவைப் பார்க்க தினமும் யாராவது விருந்தினர்கள் வந்துகொண்டே இருப்பார்கள்.

ஒருநாள் நரியும் பார்க்க வந்தது. முயல் குடும்பத்தினருக்குப் பயமாக இருந்தது.

“அடடே! இப்படி ஒரு அழகான முயல் குட்டியை நான் பார்த்ததே இல்லை!” என்றது நரி.

இந்தப் பொல்லாத நரியால் நேகாவுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று எல்லோரும் அஞ்சினர். உடனே வளைக்கு ஒரு கதவை ஏற்பாடு செய்தனர்.

“நேகா, நீ எளிதில் எல்லோரையும் நம்பி விடுகிறாய். எதிரி யார், நண்பன் யார் என்றெல்லாம் உனக்குத் தெரியவில்லை. நாங்கள் எல்லோரும் உணவு தேடிச் செல்லும்போது, நீ மட்டும் தனியாக வளையில் இருப்பாய். அதனால் ஒரு கதவு போட்டிருக்கிறோம். பூட்டிக்கொள்” என்றது அம்மா முயல்.

“சரிம்மா, வீட்டைப் பூட்டிக்கொண்டால் பாதுகாப்பாக இருக்க முடியுமா?”

“ஆமாம் நேகா. வெளியே செல்லும்போது, வீட்டைப் பூட்டிச் சென்றால் யாரும் நம் வீட்டுக்குள் நுழைய முடியாது. நாம் எதிரி பயம் இன்றி நிம்மதியாக இருக்கலாம்.”

“ஓ! அப்படியா சரி. நம்ம காட்டுக்கு மனிதர்களால் ஆபத்துன்னு ஒருமுறை சொன்னீங்களே… அப்ப நம்ம காட்டைப் பூட்டி விட்டால் ஆபத்து இல்லைதானே?”

நேகாவின் கேள்வியைக் கேட்டு அம்மாவுக்குச் சிரிப்பு வந்தது. “காட்டைப் பூட்டி வைக்கிறதுக்காக ஒரு பிரம்மாண்டமான பூட்டும் சாவியும் தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால் அது எங்கோ தொலைந்துவிட்டது. அதைத்தான் இப்ப வரை தேடிக்கிட்டு இருக்கோம்” என்று விளையாட்டாகச் சொன்னது அம்மா முயல்.

அம்மா சொன்னதை உண்மை என்று நம்பிய நேகா, யோசிக்க ஆரம்பித்தது. ‘இந்தக் காட்டோட பூட்டையும் சாவியையும் தேடிக் கண்டுபிடிச்சிட்டால் மனிதர்களால் ஆபத்து வராது. அதைத் தேடுவதுதான் இனி என் வேலை’ என்று முடிவெடுத்தது.

இரவு முழுவதும் தூங்காமல் பூட்டும் சாவியும் எங்கே இருக்கும் என்று யோசித்தது.

விடிந்தததும் அம்மா முயலும் அப்பா முயலும் உணவு தேடிக் கிளம்பின.

“நேகா, நாங்க வெளியே போயிட்டு வந்துடறோம். நீ பாதுகாப்பா இங்கேயே விளையாடிட்டு இரு. ரொம்பத் தூரம் போகாதே. ஏதாவது ஆபத்து என்றால் வளைக்குள் வந்து கதவைப் பூட்டிக்கணும்” என்று அம்மா முயல் சொல்லிவிட்டுக் கிளம்பியது.

அம்மா சென்ற சிறிது நேரத்தில் பூட்டு, சாவி நினைவுக்கு வந்துவிட்டது. அம்மா வருவதற்குள், பூட்டு, சாவியைக் கண்டுபிடித்துக் கொண்டுவந்துவிடலாம் என்று நினைத்தது நேகா. தன் வீட்டைப் பூட்டி, சாவியைச் செம்பருத்திச் செடிக்கு அருகே குழி தோண்டிப் புதைத்தது.

தன் தேடலைத் தொடர்ந்தது. வழியில் நேகாவின் நண்பர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

நேகாவைப் பார்த்ததும், “நேகா, வாஞ் சேர்ந்து விளையாடலாம்” என்று அழைத்தன.

“நான் விளையாட வரலை. இந்தக் காட்டோட பூட்டையும் சாவியையும் தேடிப் போறேன்” என்றது நேகா.

“என்னது காட்டோட பூட்டு, சாவியா!” என்று நண்பர்கள் ஆச்சரியத்துடன் கேட்டனர்.

தன் அம்மா சொன்னதை நண்பர்களிடம் சென்னது நேகா.

“காட்டைக் காப்பாற்றுவது எங்களுடைய கடமையும்கூட! அதனால நாங்களும் உன்னோடு சேர்ந்து தேடறோம்” என்றார்கள் நண்பர்கள்..

ஒவ்வோர் இடமாகத் தேடிக்கொண்டே சென்றனர். வழியில் வந்த வயதான ஆமை, “குழந்தைகளா, எதைத் தொலைச்சிட்டு இப்படித் தேடிட்டுப் போறீங்க?” என்று கேட்டது.

“தாத்தா, இந்தக் காட்டோ பூட்டு, சாவியைத் தேடிட்டுப் போறோம்” என்று எல்லாம் சேர்ந்து கத்தின.

“காட்டுக்கு யாராவது பூட்டுப் போட முடியுமா? என்ன சொல்றீங்க?” என்றது ஆமை.

“அம்மா சொன்னாங்க. அதைத்தான் தேடி வந்திருக்கோம்”ன்றது நேகா.

“சரி. அப்ப தேடுங்க. உங்க முயற்சிக்கு என் வாழ்த்துகள். கிடைச்ச உடனே சேதி சொல்லுங்க”ன்று வாழ்த்தி அனுப்பியது ஆமை.

நண்பர்களோடு காடு முழுவதும் மாலைவரை தேடிக் கொண்டே இருந்தது நேகா.

“நேகா, இருட்ட ஆரம்பிச்சிடுச்சி. காலையில் தேடலாம்” என்றார்கள் நண்பர்கள்.

“சரி” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தது நேகா. நாளை காலை நேகா தேடப் புறப்பட்டுவிடும். அதற்குள் அவளிடம் ‘அம்மா சொன்னது சும்மா’ என்று சொல்ல வேண்டும். யார் சொல்லப் போகிறீர்கள்!

நன்றி: தி இந்து 07.02.2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *