ஓரு குரங்குக் குட்டி பச்சை வாதுமைக் கொட்டை ஒன்றைப் பறித்துக் கடித்தது. அந்தச் சுவை அதற்குப் பிடிக்கவில்லை.
“”வாதுமைக் கொட்டை நல்ல சுவையுடையது என்றுதானே அம்மா கூறினார்! என்ன சுவை இது? பெரியவர்களே இப்படித்தான். சிறுவர்களை ஏமாற்றுவதே அவர்களுடைய வேலையாகப் போய்விட்டது.” என்று சொல்லிக்கொண்டே அந்தக் கொட்டையைத் தூக்கித் தூர எறிந்தது.
அது விழுந்த இடத்தில் மற்றொரு குரங்கு இருந்தது. அந்தக் குரங்கு அந்தக் கொட்டையை எடுத்தது. ஒரு கல்லின் மேல் அதை வைத்து வேறொரு கல்லைக் கொண்டு அதை உடைத்தது. உள்ளே இருந்த பருப்பை எடுத்துச் சுவைத்துத் தின்றது.
குட்டிக் குரங்கு, “”அது சுவையாகவா இருந்தது? எங்க அம்மா என்னை ஏமாற்றிவிட்டாள்? அதனால்தான் அதைத் தூக்கி எறிந்தேன்” என்றது.
அதற்கு அந்தக் குரங்கு, “”உன் அம்மா சொன்னது சரிதான். வாதுமை நல்ல சுவையுடையதுதான். ஆனால் அதை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துத் தின்ன வேண்டும். சிறிதும் உழைக்காமல் இன்பத்தை அனுபவிக்க முடியாது!”
குரங்குக் குட்டிக்கு அப்போதுதான் புத்தி வந்தது!
– தேனி முருகேசன் (ஆகஸ்ட் 2012)