தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,129 
 

வன காண்ட்ராக்டர் ராஜசேகரன் மழைக்காலம் முடிந்ததும் காட்டுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். இம்முறை அவரது பதின்மூன்று வயது மகன் கார்த்திக்கும் பத்து வயதான செல்வியும் அடம் பிடிக்கலாயினர்.

“”அப்பா, அப்பா… இதுவரை நாங்க காட்டைப் பார்த்ததேயில்லை. ஆறு ஓடுவதைப் பார்த்ததில்லை. மலையை நேரில் பார்த்ததில்லை. கதையிலேதான்ப்பா படிச்சிருக்கோம். காட்டு விலங்குகளோட பேர்கள் மட்டும்தான் தெரியும். எல்லாவற்றையும் நேரில் பார்க்கணும்ப்பா… அப்பா, ப்ளீஸ்ப்பா…”

புது விருந்தாளி“”இல்லே கண்ணுங்களா… அங்க நிறைய குளிர் இருக்கும். சீக்கிரமே மலேரியா ஜுரம் வந்துடும். காட்டு விலங்குகளால தொல்லைகள் ஏற்படலாம். சாப்பிடக்கூட நல்ல உணவு கிடைக்காது. இங்கே நீங்க அம்மாகூட நிம்மதியா இருங்க… நான் மட்டும் போயிட்டு வர்றேன்…”

“”அம்மாவையும் கூட்டிட்டுப் போலாம்பா…” என்றான் கார்த்திக்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக்கின் அம்மா, “”ஆமாங்க, பசங்க சரியாத்தான் சொல்றாங்க… நானும் வர்றேன். எனக்கும் ஒரு மாற்றம் இருக்குமில்லையா?” என்றார்.

மனைவி இவ்வாறு சொன்னதும் ராஜசேகரன் யோசிக்க ஆரம்பித்தார்.

“”ஆனா… எனக்குத்தான் நெறைய அலைச்சல் ஆயிடும்” என்றார் ராஜசேகரன்.

“”அலைச்சல் உங்களுக்கா..? அலைச்சல் எனக்குத்தான். நீங்க காட்டுக்குள் போயிடுவீங்க. நான் உங்களுக்காக சமைச்சு வைப்பேன். உங்களுக்கு வசதியாத்தான் இருக்கும். எனக்கும் இங்க வீட்டுக்குள்ளேயே இருந்து போர் அடிக்குதுங்க. நீங்க காட்டுக்குப் போயிட்டா மனசெல்லாம் உங்களைப் பத்தியே நினைச்சிட்டிருக்கும்ங்க…” என்றார் கார்த்திக்கின் அம்மா.

மனைவியின் பேச்சைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த ராஜசேகரன் சிறிது நேரம் கழித்து சொன்னார் – “”சரி, போறதுக்காக எல்லாம் ரெடி பண்ணுங்க. இந்த முறை உங்ககூட இருந்து பார்த்திடலாம்”

பிள்ளைகள் இருவரின் குதூகலத்துக்கு சொல்லவா வேண்டும்? இந்த முறை ராஜசேகரன் காட்டுக்குச் சென்றபோது அவரது குடும்பமே கூடச் சென்றது.

ஊர் எல்லை வரை ரயிலில் சென்றவர்கள், காட்டுக்குள் போவதற்கு ஒரு டிரக்கில் பயணித்தனர்.

காட்டைப் பார்த்த கார்த்திக், செல்வி இருவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

காட்டின் எல்லையிலும் காட்டுக்குள்ளும் நிறையப் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். குளிர் காய்வதற்காக ஆங்காங்கே நெருப்பு மூட்டியிருந்தனர். மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. வெட்டப்பட்ட மரங்கள் மாட்டு வண்டிகளிலும் டிரக்குகளிலும் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

ராஜசேகரன் தங்கியிருப்பதற்காக ஒரு சிறிய அறை மட்டுமே காட்டுக்குள் இருந்தது. அதிலேதான் அவரது குடும்பம் தங்க வேண்டியிருந்தது. அதனால் ஏற்பட்ட இடப் பற்றாக்குறையால், மற்ற பணியாளர்களைப் போல அவரும் அந்த அறைக்குச் சற்றுத் தொலைவில் ஒரு குடிசையைப் போட்டு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ராஜசகேரன் பணியாளர்களைக் கண்காணிக்கச் சென்றுவிட்டார். பிள்ளைகள் இருவரும் எங்கெல்லாம் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனரோ அங்கெல்லாம் சென்று விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களது அம்மா அறைக்கு முன் வேலி போடப்பட்டிருந்த காலியிடத்தில் நின்றவாறு பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அதிக தூரம் செல்லக்கூடாது என்றும் ஆள நடமாட்டமில்லாத இடத்துக்குப் போக வேண்டாம் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

ஒருநாள், கார்த்திக்கும் செல்வியும் காட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். நாலாபுறமும் பணியாளர்கள் பணியிலிருந்தனர். எத்தகைய அச்சமும் இன்றி இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

காட்டின் பெரிய விலங்குகளான கரடி, யானை போன்றவை மனிதர்களை விட்டு விலகியே இருக்கும். காட்டை வெட்ட வெட்ட அவைகள் இன்னும் காட்டுக்குள் சென்றுவிடுகின்றன. அவை வெளியில் வருவது மிகவும் அபூர்வமாகவே இருக்கும்.

கார்த்திக்கும் செல்வியும் மாலைவரை காட்டிலேயே திரிந்து கொண்டிருந்தனர். மாலை மங்கிய வேளை, இருவரும் தங்கள் இருப்பிடம் செல்லத் திரும்பினர். சிறிது தூரம்தான் நடந்திருப்பார்கள். பலத்த காற்று வீச ஆரம்பித்தது.

உடனே இருவரும் விரைவாக நடக்கத் தொடங்கினர். காற்றின் வேகம் கூடிக்கொண்டே சென்றதால் இருவரும் ஓட ஆரம்பித்தனர். செல்வி கொஞ்சம் பின்தங்கியதால் கார்த்திக் செல்வியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினான். இருவரும் தங்கியிருக்கும் அறையின் பக்கமாக ஓடுவதைப் பணியாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது தூரம்தான் ஓடியிருப்பார்கள். தூரல் ஆரம்பித்துவிட்டது. குளிர் காற்றும் வீச ஆரம்பித்தது. அவர்கள் இருவரும் வேலியைத் தாண்டி வந்த பிறகுதான் கவலையுடன் காத்திருந்த அம்மாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.

இருவரையும் அழைத்துச் சென்று அறைக்குள் இருந்த கணப்பின் அருகே அமரச் செய்தார் அம்மா. தேநீர் கூட அருந்தாமல் காத்துக் கொண்டிருந்த அம்மா தேநீருக்காக அடுப்பில் தண்ணீரை வைத்தார். ராஜசேகரன் வந்ததும் எல்லோரும் சேர்ந்து தேநீர் அருந்த வேண்டியதுதான். காற்றினால் ஆடிக் கொண்டிருந்த கதவை இழுத்து மூடினார் அம்மா.

ஒரு மணி நேரம் கழிந்தது. மழையும் காற்றும் ஓய்ந்துவிட்டன. ராஜசேகரன் இன்னும் வரக் காணோம்.

சிறிது நேரத்தில் கதவைத் தள்ளும் சப்தம் கேட்டது. ராஜசேகரனை எதிர்பார்த்துக் காத்திருந்த எல்லோரும் ஒருமித்த குரலில் கூறினர்…. “”வந்துட்டாரு…”

கார்த்திக் ஓடிச் சென்று தாழ்ப்பாளை நீக்கினான். கதவைத் திறந்து எட்டிப் பார்த்தவன் ‘வீல்’ என்று அலறியடித்து உள்ளே ஓடிவந்தான்.

“”அம்மா, கரடி!” என்றவனின் குரலைக் கேட்டு இருவரும் திகைத்தனர். ஆனால் கரடியாரோ வீட்டுக்கு வந்த விருந்தாளி போல கணப்பின் அருகே வந்து அமைதியாக உட்கார்ந்துவிட்டார். எத்தகைய தீங்கையும் யாருக்கும் விளைவிக்காமல் அமர்ந்திருந்தது. குரல் கூட எழுப்பவில்லை. திடுக்கிட்டுப் போயிருந்த அம்மா, பிள்ளைகள் கம்பளிப் போர்வையில் மறைந்து கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

அப்போது அவர்களைப் பார்த்துத் திரும்பிய கரடி எதையோ கேட்பது போல தனது கையை நீட்டியது. அம்மா நடுங்கும் கரங்களோடு தனது பிள்ளைகளுக்காக வைத்திருந்த பிஸ்கட்டை எடுத்து நீட்டினார். அதை மெதுவாக வாங்கிய கரடி, புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டு மெதுவாக அதைச் சாப்பிட ஆரம்பித்தது. பிஸ்கட் சாப்பிட்ட பிறகு, டீ வைத்திருந்த கெட்டிலைப் பார்த்து கையை நீட்ட ஆரம்பித்தது.

இப்போது எல்லோருக்குமே கொஞ்சம் பயம் குறைந்திருந்தது.

தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அம்மா, ஒரு பெரிய “மக்’கில் டீயை ஊற்றி அதில் ஒரு பிஸ்கட்டையும் போட்டு கரடியாரிடம் நீட்டினார். கரடி அவசர அவசரமாக அதைக் குடித்தது.

பிள்ளைகளுக்கும் டீயைக் கொடுத்த அம்மா, கம்பளிக்குள் இருந்தபடியே குடிக்கச் சொன்னார்.

தேநீர் மிகவும் சூடாக இருந்ததால், செல்வி, “அம்மா…’ என்று கத்தியபடியே போர்வைக்குள்ளிருந்து வெளியே வந்தாள். கொஞ்சம் டீ அவள்மீது கொட்டி விட்டது. வெளியே வந்த செல்வியின் அருகில் வந்து அமர்ந்தது கரடி. தனது ‘மக்’கை செல்வியிடம் நீட்ட ஆரம்பித்தது.

இதைக் கண்ட செல்விக்கு சிரிப்பாகவும் பயமாகவும் இருந்தது. இருந்தாலும் தனது கோப்பையிலிருந்த தேநீரை கரடியின் கோப்பையில் ஊற்றினாள். பிறகு மெதுவாக கரடியைத் தொட்டுப் பார்த்தாள்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த கார்த்திக்கும் போர்வைக்குள்ளிருந்து வெளிப்பட்டு, தனது தேநீரையும் கரடியின் கோப்பையில் ஊற்றினான். பிறகு மெதுவாக கரடியின் முதுகைத் தடவிப் பார்த்தான். இப்படியே இருவரும் மீண்டும் மீண்டும் கரடியைத் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தனர். அவர்களின் பயம் அறவே நீங்கிப் போயிற்று. ஆனால் அம்மா மட்டும் இன்னும் சற்று அச்சத்துடன்தான் இருந்தார்.

அதே சமயத்தில் ராஜசேகரனும் அறைக்குள்ளே நுழைந்தார். கரடியைப் பார்த்துத் திடுக்கிட்டாலும், கார்த்திக்கும் செல்வியும் கரடியினருகில் இருப்பதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

சற்று நேரத்தில் கரடி எழுந்து வெளியே சென்றுவிட்டது.

“”ஆண்டவா, உனக்கு கோடானுகோடி நன்றிகள்!” என்றவாறே அம்மா சட்டென்று எழுந்து கதவைத் தாளிட்டார்.

பிறகு, ராஜசேகரனைப் பார்த்து, ”அந்தக் கரடி எங்களைத் தாக்கியிருந்தா என்னவாகியிருக்கும்?” என்றார் அம்மா.

“”இறைவனின் சித்தப்படிதான் எல்லாம் நடக்கும்…” என்றார் ராஜசேகர்.

“”என் மூச்சே நின்னுடும் போல இருந்ததுங்க..”

“”உண்மை என்னன்னா, நாம விலங்குகளுக்குத் தொல்லை தரலைன்னா, அதுகளும் நமக்கு எந்தத் தீங்கும் செய்யாது. நம்மகூட சீக்கிரமாகவே நட்பாயிடும்.. ஆனாலும் நாம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். அறிவில்லாத ஜீவன்கள், எப்ப, எதுவேணும்னாலும் செய்யும். கவனமாகப் பார்த்துத்தான் கதவைத் திறக்கணும். அந்தக் கரடி இங்கே தாக்குற எண்ணத்தோட வரலை… குளிருக்கும் மழைக்கும் பாதுகாப்புத் தேடி வந்திருக்குதுன்னு நினைக்கிறேன். நீங்க அதுக்கு செஞ்ச உபச்சாரத்துல, விலங்காக இருந்தாலும் நன்றி மறவாமல் அமைதியாக இருந்தது…” என்று விளக்கினார் ராஜசேகரன்.

பிறகு அனைவரும் சேர்ந்து உணவு சாப்பிட்டனர். பின்னர் தூங்கச் சென்றுவிட்டனர்.

மறுநாள் காட்டின் அழகு மனதைக் கொள்ளை கொள்ளும் வகையிலிருந்தது. மழை நீர் மரம், செடி கொடிகளில் பட்டு அவை புத்தழகுடன் காணப்பட்டன. ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக் கிடந்தது. தூசு போன இடமே தெரியவில்லை. சுத்தமான, ரம்மியமான சூழல்.

கார்த்திக்கும் செல்வியும் காட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டனர்.

“”நாம போய், அந்தக் கரடியைத் தேடலாம்…” என்று அவர்களுக்குள் பேசியபடியே நடந்தனர்.

சிறு குழந்தைகளின் பேச்சே இப்படித்தான். அந்தக் கரடி அங்கேயேவா சுற்றிக் கொண்டிருக்கும்? அது எங்கே போனதோ!

அந்தக் கரடியைத் தேடியபடியே இருவரும் வெகுதூரம் வந்து விட்டனர். பணியாளர்கள் இருந்த இடத்தைவிட்டு வேறு இடத்துக்கு வந்துவிட்டனர்.

அங்கும் மரங்கள் அடர்த்தியாக இருந்தன. பறவைகளின் முட்டைகள் ஆங்காங்கே காணப்பட்டன. அவற்றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டே வந்தனர்.

முட்டை பொறுக்கும் ஆவலில், பின்னால் வந்த ஆசாமியை அவர்கள் கவனிக்கவேயில்லை. அந்த ஆசாமியின் கையில் பெரிய கோணிப் பை இருந்தது.

அந்த ஆள், சட்டென்று முன்னால் வந்து கார்த்திக்கைப் பிடித்து அமுக்கி, வாயில் ஒரு துணியை அடைத்தான். பிறகு கோணிப் பையை அவன் மேல் போட்டு மூடினான். செல்வியின் அருகில் வந்தான்-

அப்போது திடீரென்று கரடி ஒன்று வந்து, அந்த மனிதனைப் பின்னாலிருந்து பிடித்துக் கொண்டது. பிடித்ததோடு மட்டுமன்றி தனது பற்களால் அவனைக் கடிக்க ஆரம்பித்தது.

உடனே அவன் வலியால் கத்த ஆரம்பித்தான். கோணிப்பை கீழே விழுந்தது. செல்வி பயத்தில் அலறினாள். அண்ணனின் அருகில் சென்று அவனை விடுவித்தாள். அவனது வாயிலிருந்த துணியையும் வெளியில் எடுத்தாள். பிறகு இருவரும் சேர்ந்து சத்தம் போட ஆரம்பித்தனர்.

அப்போதுதான் அவர்கள் அந்தக் கரடியை நன்றாகப் பார்த்தனர். முந்தின நாள் அவர்கள் வீட்டுக்கு வந்த அதே கரடி. ஆம். அவர்கள் வீட்டுக்கு வந்த விருந்தாளிக் கரடிதான் அது!

இருவரின் சத்தத்தையும் கேட்டுப் பணியாளர்கள் ஓடி வந்தனர்.

இதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதெல்லாம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.

பிள்ளைகளே, சரி… இப்போ சொல்லுங்க… கதை எப்படி இருந்தது?

– உம்மு மைமூனா (அக்டோபர் 2012)

Print Friendly, PDF & Email

1 thought on “புது விருந்தாளி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)