புதிர்கதை – ஏன் மணக்கவில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 7,766 
 
 

சிம்மபுரத்து மன்னன் பிறைசூடன் பராக்கிரமசாலி; நியாயம் தவறாதவன். அவன் மனைவி எழில்கொடி. அவர்களுக்குப் பிறந்தது ஒரே பெண் குழந்தை. அவளுக்கு பவழா என்று பெயரிட்டு செல்லமாகவும் ஆண்பிள்ளையைப் போலவும் வளர்த்து வந்தனர்.

பவழா கல்வியோடு அரசகுமாரர்களுக்கான வில், வாட் போர் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றாள். அவள் வளர்ந்து திருமண வயதை அடைந்த போது அவளது பெற்றோர் அவளுக்கு விவாகம் செய்து வைக்க நினைத்தனர்.

அவர்கள் அதுபற்றி மகளிடம் கூறவே, “”நான் விவாகம் செய்து கொள்வதானால் என்னை எந்த அரசகுமாரன் வாட்போரில் தோற்கடிக்கிறானோ அவனைத் தான் மணப்பேன்,” என்றாள்.

அந்த அறிவிப்பைக் கேட்டதும் பல அரசகுமாரர்கள் அவளை மணக்க வந்தனர். அவள் அந்நாட்டு மன்னனின் ஒரே மகளாதலால் அவளை மணந்து கொண்டால் அந்த நாட்டிற்கும் தாம் அரசராகிவிடலாமே என்ற ஆசையில்தான் வந்தனர். மேலும் அவள் பெண்தானே மிக எளிதில் வாட்போரில் அவளைத் தோற்கடித்துவிடலாம் எனவும் நினைத்து விட்டனர்.

வாட்போர் புரிய அவர்கள் களத்தில் இறங்கியபோது தான் பவழாவை வெல்வது எளிதல்ல என்பது அவர்களுக்குத் தெரியவந்தது.

தினமும் ஒரு அரசகுமாரனுடன் வாட்போர் என அவள் ஏற்பாடு செய்திருந்தாள். அவளுடன் வாட்போர் புரிந்த அரசகுமாரர்கள் எல்லாருமே தோற்றுப் போயினர்.

இந்தப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது சந்தனபுரி இளவரசன் சுவரூபன் மாறுவேடம் பூண்டு வேடிக்கை பார்க்கும் மக்களோடு சேர்ந்து பவழாவின் சுற்றும் முறைகளையும் தாக்குதல்களுக்குக் கையாளும் வழி முறைகளையும் கூர்ந்து கவனிக்கலானான்.

சில சமயங்களில் பவழாவின் அபார வாள்வீச்சைக் கண்டு சபாஷ் என்று கத்தினான். அப்போதெல்லாம் பவழா திரும்பிப் பார்த்து அப்படிக் கத்திய ரசிகன் யார் எனவும் பார்த்தாள்.

பவழாவின் வாட்போர் முறைகளை எல்லாம் நன்கு பார்த்த பிறகு அரசகுமாரனாக அவளுடன் போட்டியிட வந்தான். இருவருக்கும் வாட்போர் நடக்க நாளும் குறிப்பிடப்பட்டது.

போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது. அப்போது தன்னை எதிர்ப்பவன் மிகவும் திறமை மிக்கவன் எனத் தெரிந்து கொண்டாள் பவழா.

அவனைத் தோற்கடிக்கத் தான் அதுவரை பயன்படுத்தாத ஒரு முறையை அவள் கையாள நினைத்த போது, வேறொரு முறையைக் கையாண்டு அவளது வாளைத் தட்டிவிட்டான் சுவரூபன். அது அவளது பிடியிலிருந்து நழுவி சற்று துõரத்தில் போய் விழுந்தது. பவழா தோற்றுப் போனாள்.

அப்போது அவள் அவனை கூர்ந்து கவனித்து, “”நீ இதற்கு முன் நான் மற்ற அரசகுமாரர்களோடு வாட்போர் புரிந்த போது மக்களிடையே மாறுவேடத்தில் பார்வையாளனாக அமர்ந்து வேடிக்கை பார்த்தவன்தானே. அப்போது சில சமயங்கள் சபாஷ் என்று கத்தி எனக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்தவனும் நீதானே,” என்றாள்.

“”ஆமாம்!” என்றான். அதைக் கேட்டதும் பவழா அவன் வெற்றி பெற்றதன் காரணம் தெரிந்து விட்டது.

“”நான் உன்னை மணப்பது முறையல்ல. அதற்குக் காரணம் என்ன என்று நீயே யூகித்துக் கொள்,” என்றாள்.

“”நீ கூறுவது சரியே. நான் உன்னை மணப்பதும் முறையல்லதான்,” என்று கூறி அவளை அவன் வணங்கிவிட்டு தன் நாட்டிற்கு திரும்பிச் சென்று விட்டான்.

தன் மகள் கூறியதைக் கேட்டுத் திகைத்துப் போயினர் பெற்றோர்.

உங்களுக்கான கேள்வி? ஏன் பவழா அவனை மணக்கவில்லை? காரணம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

சுவரூபன், பவழா வாட்போர் புரிவதை பார்வையாளன் வேடத்தில் பார்த்திருக்கிறான். அதனால் அவனுக்கும், பவழாவுக்கும் உள்ள உறவு சிஷ்யன், குரு என்பதாகிறது. எனவே திருமணம் செய்து கொள்ளவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *