கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2023
பார்வையிட்டோர்: 1,411 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வானின் கண் இன்னும் விழிக்கவில்லை.

ஆனால் கேமிற் நண்டு விழித்துக் கொண்டது.

வீடு ஒன்று இல்லாமல் எத்தனை நாளைக்கு வாழ்வது?

எதிரிகள் யாரும் வந்தால் ஒளிப்பதற்கு கூட டமில்லை. இன்று இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று முடிவு செய்தது.

பசி வேறு! இரவும் ஒன்றும் சாப்பிடக் கிடைக்கவில்லை. நீரைவிட்டு வெளியேறி வெண் மணற்பரப்பில் வேகமாய் நடந்தது.

எதிரே வந்தது கடல் நத்தை. அதுதன் இயல்புப்படியே மிக மெதுவாயும் நிதானமாயும் உணர்கொம்புகளை அசைத்து அசைத்துப் பார்த்துக் கொண்டே வந்தது. கால்கள் இல்லாத நிலையிலும் பாதத்தை இழுத்து மெதுவாக நகர்ந்தது.

மின்னல் வெட்டியது போல் கேமிற் நண்டின் மூளையில் ஒரு சிந்தனை உதித்தது. சொந்தவீடு கட்ட முடியாவிட்டால் இரவல் வீட்டில் குடிபுக வேண்டிய துதான்

வசதியான ஆள் வளமாக வருகிறார்.

நத்தையார் சற்றும் எதிர்பாராத முறையில் ஒரு நொடியில் அதன்மேல் திடீர் அதிரடித்தாக்குதல் நடத்தியது.

நண்டு. நத்தையின் மென்மையான உடலை ஆசை தீரத் தின்றது.

ஆகா என்ன ருசி? என்ன ருசி?

வயிறு நிறைந்தவுடன் வீடு பற்றிய எண்ணம் வந்தது,

சற்றுச் சிந்தித்துவிட்டு அருகில் அநாதரவாய்க் கிடந்த நத்தையின் ஓட்டினுள் மெதுவாகப் புகுந்து கொண்டது. ஓட்டின் நடுத்தூணைத் தன் உணவுக் குழாயால் சுற்றிக் கொண்டது.

அருமையான வீடு

கல்சியம் காபனேற்றால் கட்டப்பட்ட கண்கவர் வீடு!

அமரர் பிரேமதாஸாவின் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்திற் கூட யாருக்கும் இப்படி ஒரு வீடு கிடைத்திருக்காது!

இனிமேல் வெளியில் செல்லும்போது இந்தவீட்டை முதுகிலே காவிக் கொண்டு செல்லவேண்டும். யாரும் எதிரிகள் வருகிற “அசுகை” தெரிந்தால் இந்த வீட்டினுள்ளே உடலை இழுத்து மறைத்துக் கொள்ளலாம் என்று நிம்மதியாக நினைத்துக் கொண்ட நண்டு அப்படியே நித்திரையாகிப் போனது.

– விஞ்ஞானக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 2000, கலை இலக்கியக் களம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *