முட்டாளின் அதிர்ஷ்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 3,325 
 

“ஏன்டி செல்லம்மா! சோத்துல உப்பு போடாத போடாதன்னு எத்தனை தடவடி சொல்றது உனக்கு, நீ கேக்கவே மாட்டியாடி…” என்று முதல் சோற்றுப் பருக்கையை எடுத்து வாயில் வைத்த உடனே ராமசாமி தன் மனைவி செல்லம்மாவை வசை பாடினான்.

பச்சை மிளகாயை வறுத்து கொண்டிருந்த செல்லம்மாவோ “ஹ்ம்ம், இருபது வருஷமா உப்பு வியாபாரம் செஞ்சு செஞ்சு இந்த மனுஷனுக்கு எத சாப்டாலும் உப்பு, எத பார்த்தாலும் உப்பு … என்று முணுமுணுத்தாள்.

“அங்க என்னடி பொலம்பிட்டு இருக்க? கேட்டதுக்கு பதில் சொல்லுடி…” என்றான் ராமசாமி.

கிண்ணத்தில் வறுத்த மிளகாயை எடுத்து வந்து ராமசாமி முன் வைத்துவிட்டு,

“யோவ் அதெல்லாம் உப்பு சரியாதான்யா இருக்கு, பேசாம வாய மூடிட்டு துண்ணுயா. என்னைக்காச்சும் என் சமையல குத்தம் சொல்லாம துண்ணுருக்கியா…”

“ஏன்டி, நீ வாய்க்கு ருசியா சமைச்சா நானு எதுக்குடி உன்னைய குத்தம் சொல்ல போறேன்”.

“ஆமா…இந்த ஊட்டுக்காரனுங்க என்னைக்குத்தான்யா பொண்டாட்டி சமையல பாராட்டி இருக்கீங்க? மருவாதியா வாய மூடிட்டு துண்ணுட்டு வியாபாரத்துக்கு கெளம்புயா!” என்றாள் செல்லம்மா.

ராமசாமியும் செல்லம்மாவை வசை பாடிக்கொண்டே தட்டில் இருந்த சாதத்தை பருக்கை விடாமல் வயிற்றுக்குள் தள்ளிவிட்டு வியாபாரத்திற்கு புறப்பட தயாராகினான்.

“எய்யா இந்தாரு, இன்னைக்கு எப்புடியாச்சும் மூட உப்பயும் வித்துட்டு வந்துருயா ! ஊட்டுல அரிசி, பருப்பு, எண்ண எல்லாமே தீந்துபோச்சுயா…”

“யோவ் மனுஷா, சொன்னது காதுல உழுதாயா?”

“அடி போடி இவளே! நான் என்ன சீல வியாபாரமா பன்னிட்டு இருக்கேன் ? ஒன்னு வாங்குனா இன்னொன்னு எலவசம்னு வித்துட்டு வாரதுக்கு… மதியத்துக்கு சோறு கட்டுனுயாடி ?”

“அதெல்லாம் கட்டியாச்சுயா, இந்தா!” என்று வெள்ளை நிறம் மஞ்சள் நிறமாக மாறி இருந்த ஒரு பையில், தூக்குச் சட்டியில் சோறும், ஆங்காங்கே பச்சை பிடித்திருந்த இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டிலில் தண்ணீரும் நிரப்பி ராமசாமியின் கையில் சோத்து பையை நீட்டினாள் செல்லம்மா.

பையை ராமசாமி தன் கையில் வாங்கிக்கொண்டு, “உனக்கு ஒரு விஷயம் தெரியுமாடி?”

“என்னய்ய…”

“கல்யாணத்துக்கு ஜாதகம் பார்க்க போனப்ப ஜோசியக்காரன் சொன்னான்…இந்த ஜாதகத்துல இருக்குற பொண்ண மட்டும் நீ கல்யாணம் பண்ணு, உனக்கு அதிர்ஷ்டம் வானத்துல இருந்து கொட்டோ கொட்டுன்னு கொட்டும்ன்னு. நானு உன்னய கல்யாணம் பண்ணி பதினெட்டு வருசமாச்சு. இன்னும் எனக்கு அதிர்ஷ்டம் கொட்டல…ஹ்ம்ம் தலையில இருந்த மயிறு கொட்டுனதுதான் மிச்சம்” என்று செல்லம்மாவிடம் புலம்பினான் ராமசாமி. அப்போது சரியாக பக்கத்து வெங்கட் மாமா வீட்டு டிவியில் “அல்லும் பகலும் சிலர் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்” என்ற பாடல் ஒலித்தது.

அதை கேட்ட செல்லம்மாவுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை.

ராமசாமி, என்னடி சிரிக்கிற? புரட்சி தலைவர் பாட்டு அல்லும் பகலும் கல்லா இருக்குற சோம்பேறிகளுக்குடி… எனக்கு இல்ல என்று சொல்லி உப்பு மூடையை சைக்கிளின் பின் கேரியரில் தூக்கி வைத்து, நீண்ட சணல் கயிறு ஒன்றை வைத்து உப்பு மூடையை இறுகக் கட்டினான் ராமசாமி.

“என்னடா..ராமசாமி! தொழிலுக்கு கிளம்பிட்டியா?” என்றார் பக்கத்து வீட்டு வெங்கட் மாமா..

“ஆமா மாமா! கெளம்பியாச்சு என்று சொல்லி சைக்கிளில் ஏறி பெடலை அழுத்த செய்தான் ராமசாமி, உப்பே… உப்பே…” என்ற வியாபார கூச்சலுடன்.

ராமசாமி வழக்கமாக அவன் வீட்டிலிருந்து கிழக்கே, மூன்று கிமீ தொலைவில் இருக்கும் டவுனுக்குதான் வியாபாரத்திற்கு செல்வான். அங்குதான் ராமசாமிக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். ஆனால் இன்று மேற்கில் சுமார் ஆறு கிமீ தொலைவில் இருக்கும் டவுனுக்கு புறப்பட்டான். செல்லம்மா சொன்ன மாதிரி மூடை உப்பை எப்படியாவது இன்று விற்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தான் ராமசாமி.

ராமசாமி மேற்கில் இருக்கும் டவுனை தேர்வு செய்ய காரணம், அங்குதான் அதிகமான தெருக்கள் உண்டு. ஆனால் வாடிக்கையாளர்கள் என்று சொல்வதற்கு யாரும் இல்லை. கிழக்கில் இருக்கும் டவுனில் வாடிக்கையாளர்கள் உண்டு, ஆனால் அரை மூட்டை உப்பு மட்டுமே வியாபாரம் ஆகும். அதனால் ராமசாமி சைக்கிளை மேற்கு நோக்கி செலுத்தினான்.

உப்பே.. உப்பே … என்று கூவியவாறே, சில நிமிட பயணத்திற்கு பின்பு மேற்கு டவுனில் உள்ள முதல் தெருவிற்குள் நுழைந்தான் ராமசாமி.

அங்கிருந்த ஒரு வீட்டு வாசலின் முன்னே சென்று ராமசாமி உப்பே உப்பே என்று கூவ, அதே வாசலில் உட்கார்ந்து கீரையை ஆய்ந்து கொண்டிருந்த, முப்பது வயதிற்கும் குறைவாக இருந்த பெண் ஒருத்தி, “இந்த வீட்ல உப்பு போட்டு சாப்புட்ற அளவுக்கு யாருக்கும் சூடு சொரணை இல்ல”. அதனால வேற எங்கயாச்சும் போய் நீ கூவுப்பா என்று அவள் சொல்ல, ராமசாமியோ அந்த பெண்ணையே உற்று உற்று பார்த்தான்.

“அதான் சொல்லிட்டேன்ல….போப்பா. ஏன் இன்னும் இங்கயே நிக்குற” என்றாள் பைத்தியக்காரி.

அட சாமி ! சரியான லூசா இருக்கும் போல இந்த பிள்ளை என்று ராமசாமி மனதில் எண்ணியவாறே அடுத்த தெருவிற்குள் நுழைந்தான். இருபுறமும் தலையை திருப்பிக் கொண்டு உப்பே உப்பே என்று கத்திகொண்டே செல்ல, பச்சை நிறத்தில் பெயிண்ட் அடித்திருந்த ஒரு பிளாட்டின் இரண்டாவது மாடியில் இருந்து வயதான மூதாட்டி ஒருத்தி, “ஏனப்பா உப்பே ! கொஞ்சம் நில்லுப்பா” இந்தா வாரேன் ! என்றாள் கை அசைத்தபடி. மூதாட்டி இறங்கி வரவே பல நிமிடங்கள் காத்திருந்தான் ராமசாமி.

கையில் பழுப்பு நிற ஜாடியுடன் ஒரு வழியாக படிக்கட்டுகளை கடந்து ராமசாமியின் அருகில் வந்தாள் மூதாட்டி.

“உப்புகாரே படி எம்பூட்டுயா ?”

“படி இருபது ரூபாமா !”

“என்னது இருபது ரூபாயா ? போன வாரம் பதினஞ்சு ரூபானு விக்க வந்துச்சு ஒரு தம்பி… நீ என்னப்பா இருபது ரூபா சொல்ற?”

“இதுக்குதான் வாடிக்கையா வாங்குறவன் கிட்ட வாங்கணும். புதுசா வாரவன்கிட்ட வாங்கக்கூடாது”.

“எம்மா உப்பு வாங்குறியா இல்லயா?” என்றான் ராமசாமி சற்று குரல் ஏத்தமாக.

“சரி குடு குடு…” என்று ஒரு படி உப்பை வாங்கிவிட்டு, இரண்டு பத்து ரூபாய் நோட்டை ராமசாமியின் உள்ளங்கையில் திணித்து விட்டு வெடுக்கென்று திரும்பினாள் மூதாட்டி.

நாம் யாரும் ஆடம்பர பொருட்களின் விலை ஏறினால் அதை பெரிதாக கண்டுகொள்வதும் இல்லை, ஏன் என்று கேள்வி கேட்பதும் இல்லை. வாயை மூடிக்கொண்டு மறுக்காமலும், மறக்காமலும் அதை வாங்குகிறோம். ஆனால் அத்தியாவசியப் பொருட்களை மட்டும்………..?

அன்று ராமசாமியின் முதல் போனியான ஜாடி மூதாட்டி கொடுத்த இரண்டு பத்து ரூபாய் நோட்டை சட்டையின் உள் பையில் திணித்து, மீண்டும் உப்பே… உப்பே.. என்று கூவினான்.தெரு தெருவாய் கூவிய ராமசாமிக்கு ஒரு சில படி உப்பு மட்டுமே வியாபாரம் ஆனாது.

நேரம் பகல் ஒன்றை கடந்தது. அடிக்கும் வெயிலில் உப்பு கரையவில்லை. ராமசாமியின் உடலில் இருந்த நீர் சிறிது சிறிதாக கரைத்து. அவனின் வயிறோ உணவைத் தேடி கீச்சிட்டது. வெயிலில் இருந்து சற்று ஒதுங்குவதற்கும், உணவு உட்கொள்வதற்கும் ராமசாமி வாகான இடம் ஒன்றை தேடினான். அப்போது சிமெண்டால் பூசப்படாத, செங்கற்களால் மட்டுமே கட்டி இருந்த, முழுமை அடையாத கட்டிடம் ஒன்று ராமசாமியின் கண்களில் தென்பட்டது.

ராமசாமியின் சைக்கிள் அந்த செங்கல் கட்டிடத்தை நோக்கி விரைந்தது. கட்டிட சுவற்றில் இருந்து தரையில் விழும் நிழலில் ராமசாமி சைக்கிளை நிறுத்தி விட்டு, கட்டிடத்தின் சிமெண்ட் பூசப்படாத படிக்கட்டில் மெல்ல அமர்ந்தான். கட்டிடத்தின் ஈரப்பதம், வீசும் அனல் காற்றில் இருந்து ராமசாமியை சற்று குளுமை அடையசெய்தது. செல்லம்மா கட்டி கொடுத்த சோத்து சட்டியை எடுத்து, கீச்சிட்ட வயிற்றுக்கு இரை போட ஆரம்பித்தான் ராமசாமி. சிறிது நேரத்தில் வயிற்றுக்கு இரையும் முடிந்தது.

சற்றும் ஒய்வு ஏதும் எடுக்காமல், உணவு தின்ற கையோடு மீண்டும் சைக்கிளை ஒட்டிக்கொண்டு வியாபாரத்திற்கு புறப்பட்டான் ராமசாமி உப்பே … உப்பே… என்று கூவிக்கொண்டே.

என்னதான் அவன் உதட்டில் எச்சில் காய உப்பே.. உப்பே… என்று கூவினாலும் அன்று அவனுக்கு விதித்தது என்னவோ கால் மூட்டை வியாபாரம் மட்டுமே. கிழக்கில் இருக்கும் டவுனுக்கு சென்றிருந்தால் கூட ஏதோ அரை மூட்டையாவது வியாபாரம் ஆகி இருக்கும். ஆனால் மேற்கு டவுனுக்கு சென்றதால் இன்று அதுவும் இல்லாமல் ஆகிவிட்டது. ராமசாமிக்கோ செல்லம்மா மீது கடுமையான கோபம். அவள் மீது கோபம் கொண்டு என்ன செய்வது. அவள் முழு முட்டையையும் விற்று வர சொன்னாலே தவிர மேற்கே சென்று விற்று வாயா என்று ராமசாமியிடம் சொல்லவில்லையே…

பொழுதும் சாய்ந்துவிட்டது. வானம் லேசாக இருட்ட தொடங்கியது. இன்றைக்கு கடவுள் நமக்கு விதித்தது அவ்வளவுதான் என்று நினைத்து ராமசாமி தன் சைக்கிளை வீட்டை நோக்கி செலுத்தினான். அவன் செல்லும் வழியில் லேசாக மழை துளிகள் ராமசாமியின் மூக்கை முத்தமிட்டது. ஒரு நிமிடம் ராமசாமி வானை அண்ணாந்து பார்த்தான். கருமேகங்கள் வானை மறைய செய்திருந்தன.மழை வந்துவிடுமோ என்னும் அச்சத்தில் தன் சைக்கிளை வேக வேகமாக செலுத்த தொடங்கினான்.

அந்த தருணம், வானில் கழுகு ஒன்று தன் கூரிய நகங்களை கொண்டு பாம்பு ஒன்றை உயிருடன் கவ்விக்கொண்டு ராமசாமியை கடக்க, சரியாக அதே சமயம் பாம்பின் வாயில் இருந்த விலை மதிப்பற்ற மாணிக்க கல் ஒன்று சரியாக ராமசாமியின் உப்பு மூட்டையில் விழுந்தது. பாவம் ! ராமசாமியோ அதை கவனிக்கவில்லை. கருமேகங்கள் தன்னை சூழ்ந்த காரணத்தினால் ராமசாமியோ உப்பு மூட்டையை பாதுகாக்க, ஒதுங்க இடம் தேடி வேக வேகமாக சைக்கிளை ஓட்டச்செய்தான். ஆனால் அவன் ஒதுங்க இடம் தேடுவதற்குள் அடைமழை பிடிக்க ராமசாமியையும், உப்பு மூட்டையையும் முழுமையாக நனையச்செய்தது.

ஐயோ கடவுளே ! இன்னைக்கு என் பொழப்பு இப்படி நாசமா போச்சே.. என்று ராமசாமி புலம்ப, உப்பு மூட்டையும் சிறுக சிறுக கரைந்தது. உப்பு மூட்டை மழையில் கரைய, அதில் இருந்த மாணிக்க கல்லோ முட்டையின் கீழ் பகுதியின் நுனியில் சென்று நன்றாக சிக்கிக்கொண்டது.

சிறிது நேரம் கடக்க, ராமசாமி காலியான கோணி மூட்டையுடன் வீட்டை வந்தடைந்தான். வீட்டு வாசலில், தகர அட்டையில் வழிந்த மழை நீரைப் பிடித்துக் கொண்டிருந்த செல்லம்மா, ராமசாமி வருவதைக் கண்டவுடன்…..

“ஏய்யா! மூட்ட உப்பையும் வித்துட்டியா?” என்றாள் சிரித்துக்கொண்டே.

கோபம் அடைந்த ராமசாமியோ, அடியே உன்னைய என்னைக்கு கட்டிட்டு வந்தனோ அன்னைக்கே என் பொழப்பு நாசமா போச்சுடி….. என்று கத்திவிட்டு ராமசாமி கோணி மூட்டையை வீட்டினுள்ளே தூக்கி எறிந்தான். அந்த ஒரு நிமிடம் ராமசாமியின் வாழ்வில் ஒளி வீச தொடங்கியது. கோணியின் கீழ் நுனியில் சிக்கி இருந்த மாணிக்க கல்லோ, கோணிச் சாக்கில் இருந்து தத்தி குதித்து, வீட்டின் உள்ளே ஏற்றி வைத்திருந்த எண்ணெய் விளக்கின் அருகில் சென்று வாகாக அமர, தீப ஒளியில் மாணிக்க கல்லோ வீடெங்கும் பிரகாசமாக பிரதிபலித்தது.

ராமசாமிக்கும், செல்லம்மாவுக்கும் ஆச்சர்யம். இருவரும் ஆச்சர்யத்தில் வாயை பிளந்தவாறே வீட்டினுள்ளே தாவி குதித்து ஓடினர்.

“ஏய் சீக்கிரம் கதவ சாத்துடி…” என்றான் ராமசாமி.

ராமசாமி மெல்ல தன் இரு விரல்களை கொண்டு பட்டும் படாமல், தொட்டும் தொடாமல், அந்த மாணிக்க கல்லை எடுத்து உற்று பார்த்தான்.

பிரமிப்பு!

அதிசயம்!

ஆச்சர்யம்! இருவருக்கும்.

“யோவ்.. என்னய்யா இது, இது எப்புடியா இங்க வந்துச்சு ?” என்றாள் செல்லம்மா.

“எனக்கு தெரியலடி..இது எப்புடி வந்துச்சுன்னு. இத பார்த்தா ஏதோ பெரிய விலை போகுற கல்லு மாறியே இருக்குடி…”

“சரி கதவ அட … நம்ம சேட்டாண்ட போயி இது என்னாது, விலை ஏதும் போகுமான்னு கேட்டு வருவோம்டி”.

மாணிக்கக் கல்லை பாதுகாப்பாக எடுத்துக்கொண்டு செல்லம்மாவும், ராமசாமியும் மார்வாடி கடைக்கு விரைந்தனர்.

சட்டை பையில் காகிதத்தால் சுற்றி வைத்திருந்த மாணிக்க கல்லை எடுத்து ராமசாமி மார்வாடியிடம் நீட்டினான்.

“யோவ் சேட்டு! இது என்னான்னு கொஞ்சம் பார்த்து சொல்லுய்யா …”

மார்வாடியும் மாணிக்க கல்லை தன் கையில் வாங்கி, மேசையில் இருந்த லென்ஸ் கண்ணாடி வழியாக உற்று உற்று பார்த்தான்.

மார்வாடிக்கு தெரிந்துவிட்டது அது விலை மதிப்பற்ற மாணிக்க கல் என்று. அந்த கல்லின் விலை சுமார் 50 லட்சம் தேரும் என்று…

மார்வாடிக்கோ பெரும் மகிழ்ச்சி! ஆனால் அதை வெளியில் காட்டாமல் …. ராமசாமியிடம்… “இந்தாப்பா உப்பு மூட்ட, இந்த கல்லு உனக்கு எப்புடி கெடச்சது?”

“யோவ் சேட்டு.. அதெல்லாம் உனக்கு எதுக்கு!”

“இது என்னா கல்லு ? எம்புட்டு வெல போகும் ? அத மட்டும் சொல்லுயா” என்றான் ராமசாமி.

மார்வாடியோ.. “இது ராசி கல்லு ராமசாமி. மிஞ்சிப்போனா ஒரு லட்சம் தேரும்”.

“என்னய்யா சொல்ற சேட்டு? ஒரு லட்சமா!” என்று வாயை பிளந்தாள் செல்லம்மா.

ராமசாமிக்கும், செல்லம்மாவுக்கும் கண்களில் சிரிப்பு பொங்கி வழிந்தது.

“சரியா சேட்டு… இத வச்சிட்டு பணத்த குடு” என்று ராமசாமி கூற, மார்வாடியும் லாக்கரை திறந்து சலவை செய்த ஐந்நூறு ரூபா நோட்டு கட்டு இரண்டினை எடுத்து ராமசாமியிடம் கொடுத்தான்.

செல்லம்மா, ராமசாமியின் கையின் இருந்த நோட்டு கட்டை பிடுங்கி தன் கை விரல்களை கொண்டு லேசாக தடவினாள்.

“ராமசாமி இங்க பாரு.. இந்த விஷயத்த வெளிய கிளியே சொல்லிடாதே. அப்புறம் ப்ரோபலம் ஆயிடும். இந்தாம்மா உனக்கும் சேத்திதான் சொல்றேன்”.

“போலீஸ் கீலீஸ்னு தெரிஞ்சா பெரிய பிரச்சனே…” என்று சொல்லி மார்வாடி அவர்கள் இருவரின் வாயை அடைத்தான்.

“சரி சேட்டு.. யாராண்டையும் சொல்ல மாட்டோம்..”

“அப்ப நாங்க வாரோம் சேட்டு…”

“ம்ம்ம் வாங்கோ வாங்கோ! அடிக்கடி இப்புடி வாங்கோ” என்றான் மார்வாடி சிரித்துக்கொண்டே.

“உப்புக்காரா! ஹா ஹா உன்னால பல லட்சம் எனக்கு லாபம். முட்டாள் ராமசாமி…” என்றான் மனதிற்குள் மார்வாடி.

ராமசாமி, வீட்டிற்கு செல்லும் பாதையில் நடந்துகொண்டே செல்லம்மாவை பார்த்து..”அடியே ஜோசியக்காரன் சொன்னது இந்த பதினெட்டு வருஷத்துல இப்பதாண்டி நெசமாயிருக்கு…அதிர்ஷ்டம் கொட்டிருச்சுடி…”

இருவரும் தங்கள் முகத்தை மாறி மாறி பார்த்து சிரித்துக்கொண்டே, லட்ச ரூபாயை ஆளுக்கு ஒரு கட்டாக கையில் பிடித்தபடியே மகிழ்ச்சியோடு வீடு திரும்பினர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *