கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 640 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வானத்தில் மோடம் போட்டிருந்தது என் உள்ளத்தைப் போல! குளிர்ந்த காற்று சிலு சிலுவென்று நாலு மணியிலிருந்து அடித்துக் கொண்டிருந்தது. மழை யைத்தான் காணோம். வெயிலின் சுவடே இல்லை. வீசிய காற்றில் வேப்பம்பூ அழகாக உதிர்ந்து கொண்டிருந்தது.

அறைக்கு வெளியே வராந்தாவில் அசைவற்று கடைசிப் பரீட்சையை உட்கார்ந்திருந்தேன். காலையில் எழுதிவிட்டேன். மனத்தில் உள்ளூர மகிழ்ச்சியிருந்தாலும், துன்பச் சாயலும் கவிந்திருந்தது. அன்போடு பழகிய அத்தனை மாணவ நண்பர்களையும் பிரிய வேண்டும். பல மாணவர்களிடையே பல மாதங்கள் இருந்துவிட்டு ஒரு நாள் பிரிந்து போக நேர்ந்தால் மனத்திலே எப்படி மகிழ்ச்சி இருக்க முடியும்?

முன்பே சில மாணவர்கள் போய்விட்டார்கள். மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு ஹாஸ்டல் அறைகள் முக்கால்வாசி காலியாகிவிட்டன. ஒவ்வோர் அறையிலும் இரண்டு உள்ளங்கள்! பேசும் அறைகள் இப்போது அமைதியை அனுபவிக்கின்றன. ஹாஸ்டலை விட்டுப் பிரிவதில் எனக்குத்தான் மிகுந்த வருத்தம். இத்தனை பேரோடு இருந்துவிட்டு நாளைக்குக் கிராமத்திற்குப் போய் எப்படிப் பொழுதைக் கழிக்கப் போகிறேன்? கழனிக் கரையிலும், ஆற்றுப் படுகையிலும் ஆனந்தமாக நேரத்தைப் போக்கலாமென்றாலும் இப்போது கோடை நாளாயிற்றே?

பரீட்சை முடிந்துவிட்டது ஓராண்டு ஓடிவிட்டது. ஊருக்குப் போய் உறங்க வேண்டும். நெஞ்சு வருந்தியது. பதினெட்டாம் நம்பர் அறை பகபதி வந்து பேசினான்.
“ஊருக்குப் புறப்பட்டு விட்டேன், அண்ணாச்சி. கிராமத்திற்குப் போய் லெட்டர் எழுதுகிறேன். நீங்களும் எழுதுங்கள். போய் வரட்டுமா?” கைகூப்பி வணங்கி விட்டு மறைந்து போனான் பசுபதி. ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள்; பயணம் சொல்லிக் கொண்டார்கள்; புறப் பட்டார்கள். நான் ஒரே நிலையில்தான் உட்கார்ந்திருந்தேன். சுற்றுப்புறத்தை நோக்கும் நாட்டமே இல்லை.

எங்கள் ஹாஸ்டலில் நான் எல்லோருக்கும் அறிமுகமானவன். பேசாத ஆள் ஒருவரும் கிடையாது. அன்பான பேச்சுக்கள்; அழகான இயற்கைச் சூழ்நிலை; கற்பனை வளங்கொழிக்கும் காவிரிக்கரை: பண்புள்ள உள்ளங்களின் தொடர்பு. அனைத்தும் சேர்ந்து விடுதி வாழ்க்கைக்கு வளமூட்டின. எல்லோரிடமும் பழகிய நான் ஏதோ குற்றம் செய்துவிட்டதாக மனச்சாட்சி சுட்டிக் கொண்டேயிருந்தது.

அப்படி நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்? நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் சிரிப்பு வரும். படித்த நரம்போக மற்ற நேரங்களில் வேறு அறைகளுக்குச் சென்று ‘போர்’ அடிக்கும் நான் என் அறையில் மட்டும் எந்தக் கும்மாளமும் அடிப்பதில்லை. காரணம் பிரமாதமாக ஒன்றும் இல்லை. சின்னஞ்சிறு சம்பவங்கள்தானே பண்பின் பிரதிபலிப்பாக அமைகின்றன!

முப்பத்தைந்து பேசும் அறையாக இருந்தது சில மாதங்கள் வரை என் வகுப்பு மாணவர்கள் மதியத்தில் போரடிக்க வந்து விட்டால் இரண்டு மணிக்குத்தான் அமைதி கிடைக்கும். எனக்கு ஓர் அறை நண்பர் கிடைத்தார். அவர் புதுமுக வகுப்பு மாணவர். பெயர் கபிலன். அது அவருடைய புனைபெயர். அந்தப் பெயரில் தான் என் ரூம் மேட்’ ரங்கராஜன் அழைக்கப்பட்டார். அப்படித் தன்னை மற்றவர்கள் அழைக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கவிஞருக்கும் ஆசை. இந்தக் காலத்தில் கவிதைக்குப் பஞ்சமேது? எதுகை, மோனை, சீர், தளை களைப் பற்றியெல்லாம் யாருக்குக் கவலை? ரங்கராஜனும் கவிதை எழுதினார்; காகிதங்களைக் கிழித்தெறிந்தார். அந்தக் கவிஞருக்கு நான் ‘அண்ணாச்சி’. அப்படித்தான் என்னை அழைப்பார். ‘போர்’ அடிப்பதில் தேர்ந்தவர்.

நிம்மதியாகப் படித்துக் கொண்டிருப்பேன். ஆழ்ந்து படிக்கும் போது, “மகரத்துக்கு வகரம் மோனையாக வருமா. அண்ணாச்சி!” என்பார். எப்பொழுது பார்த்தாலும் கவிதையைப் பற்றித்தான் பேச்சு. ஆனாலும் நான் ஆத்திரப்படுவதில்லை. ரங்கராஜன் என்னைவிட இளையவர். ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த அசட்டு ஆத்மாவிடம் எனக்கு அநுதாபம் அதிகம் உண்டு.

அப்பொழுது முதல் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. நேரத்தை வீணாக்காமல் படிப்பில் ஈடுபட்டிருந்தேன். கபிலனின் கவிதைப் பித்து அந்த நேரத்தில் கட்டவிழ்ந்திருந்தது. இரவு பத்து மணியிருக்கும். கவிதை எழுதிக் கொண்டிருந்தார் ரங்கராஜன்.

“என்ன எழுதுகிறாய், ரங்கு?”

“நல்ல உணர்ச்சி வேகம். ஒரு கவிதையில் ஆழ்ந்திருக்கிறேன், அண்ணாச்சி!”

“பரீட்சைக்கு எத்தனை நாள் இருக்கிறது, தெரியுமா?”

“நாளையிலேருந்து ‘ரெகுல’ராப் படிக்க ஆரம்பிச்சுடறேன். அண்ணாச்சி!”

“பரீட்சையிலே இந்தக் கவிதை வந்து துணை செய்யப் போவதில்லை. என் அநுபவத்தில் புதுமுக வகுப்பு கடினந்தான்…”

நான் நிறுத்திக் கொண்டேன். அவ்வப்போது ரங்க ராஜனுக்கு ஏதேனும் சொல்லுவேன். அந்தப் பித்து அனைத்தையும் கேட்டு வைக்கும்.

ஒரு பருவம் ஓடிவிட்டது. சில நாள் விடுமுறைக்குப் பிறகு விடுதியில் பழைய மகிழ்ச்சி திரும்பியது. ரங்கராஜனிடத்தில் எந்த மாற்றமும் இல்லை. பழைய கவிதை மோகந்தான். பரீட்சை மார்க்குகள் கிடைத்தன. எதிர்பார்த்த மதிப்பு எண்கள் எனக்குக் கிடைத்திருந்தன. ரங்கராஜனின் ‘புரோக்ரஸ் ரிப்போர்ட் டைப் பார்த்தேன். எனக்கு ஒரே வியப்பு! இத்தனை மோசமாக என் ‘ரூம் மேட்’ வாங்குவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ‘கன்னா பின்னா’ கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? கலையார்வம் கரை மீறிப்போகும் அளவுக்கு என்ன தேவை ஏற்பட்டுவிட்டது? உருப்படியாக ஒரு கவிதை எழுதி அது ஒரு பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தால் ரங்குவை நான் பாராட்டாமல் இருக்க மாட்டேன். உதவாக்கரை வேலைகளில் பொழுதைக் கழித்துக்கொண்டு போனால் வேறு என்ன விளையப் போகிறது! மாணவன் என்ற நிலையில் இருக்கும்போது படிப்புக்கு முக்கிய இடம். அப்புறந்தானே மற்ற பொழுது போக்குகள்! ரங்கராஜனுக்கு இதை நான் அடிக்கடி சொல்லுவேன். அவரை விட ஒரு சில அனுபவங்கள் எனக்குப் படிப்பில் கிடைத்திருந்ததால்…

ஒரு சனிக்கிழமை விடுமுறை நாள். வகுப்புப் பரீட்சை ஒன்றிற்காகச் சில பாடங்களைப் படித்துக் கொண் டிருந்தேன். காலையில் ஒன்பது மணிக்கு ரங்கராஜனும் மற்ற சிலரும் பேச்சை ஆரம்பித்தார்கள். இருபத்திநான்காம் அறை ஏகாம்பரத்திற்கும் கவிதைப் பித்து உண்டு. எல்லோருமாகச் சேர்ந்து என் அறையின் மறுபக்கம், அதாவது ரங்குவின் இடத்தில் பேச்சை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். பரணர் முதல் பாரதியார் வரை அடிபட்ட பேச்சு தற்காலக் கவிஞர்களையும் சுற்றி வந்தது. முற்றுப்புள்ளி ஏற்படுவதாக எனக்குத் தோன்றவில்லை. ஒருவரி, ஒரு சொல் – ஒன்றுமே நெஞ்சில் பதியவில்லை. புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததுதான் மிச்சம். பொறுத்துப் பார்த்தேன்: முடியவில்லை. நாற்காலியை வெளியே தூக்கி வந்தேன். அறைக்கு வெளியே உட்கார்ந்து சிறிது நேரம் படித்தேன். ஒரு மணிக்குச் சங்கு ஊதிய போதுதான் அவர்கள் பேச்சும் நின்றது.

எனக்கு உள்ளூற ஆத்திரம். இந்தக் கவிதைப் பித்தனை அறை நண்பராகக் கிடைக்கப் பெற்ற நான் என்ன புண்ணியம் செய்தேனோ?

இப்படியே ரங்குவை விட்டு வைத்தால் இரண்டு பேருக்குமே ஆபத்துதான் விளையும். ரங்குவும் படிக்க முடியாது: நானும் நன்றாகப் படிக்க முடியாது. ரங்குவைப் போல் நானும் ‘மார்க’ வாங்க ஆரம்பித்துவிட்டால் வீட்டில் சும்மாவிடு வார்களா? நெஞ்சில் படுமாறு ரங்கராஜனுக்கு ஏதேனும் சொல்லி வைக்க வேண்டும் என்று எண்ணினேன்.

மாலையில் ரங்கு என்னருகே வந்தார்.

“அண்ணாச்சி!”

“என்ன விஷயம்?”

“காலையிலே வெளியே போய்ப் படித்தீர்களே… என்மீது கோபித்துக் கொண்டீர்களா?”

“கோபப்பட்டு ஆகப்போவது என்ன? யாரிடம் போய்ச் சீறி விழப் போகிறேன்.”

“அப்படிச் சொல்லாதீர்கள். என் மேல் தவறு கண்டால் தயங்காமல் சொல்லுங்கள்…”

எனக்கு வெறுப்பாக இருந்தது.

“நான் படிப்பது தெரியும். அப்படியிருந்தும் ஓயாது பேசினால் நான் என்ன செய்ய முடியும்?”

“விடுமுறை நாளாயிற்றே என்றுதான்…”

“சரிதான். விடுமுறை நாள் என்று தள்ளிவிட்டுப் போனால் முடிவு என்னவாகும் தெரியுமா? நாம் வாங்கும் மார்க்குகளைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்…”

“அண்ணாச்சி, சீரியஸாப் பேசுகிறீர்களே!”

“இனி எப்பொழுதுமே அப்படித்தான். நான் என்ன வேலையற்றவனா? வீண் பொழுதுபோக்க எனக்குப் பிடிக்காது. எனக்குப் பொறுப்பு இருக்கிறது…” வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்ட அழுத்தம் பேச்சில் இருந்தது

“அப்படியென்றால் என்னை வேலையற்றவன் என்கிறீர்களா?”

“அதைப்பற்றி நான் ஏன் சொல்ல வேண்டும்? அவரவர்களுக்குத் தானாகவே விளங்கும்…”

ரங்கராஜன் ஒரு நிமிஷம் ‘ஷாக்’ அடித்து நின்றார். ஏமாற்றத்தோடு இடத்திற்குப் போய் விட்டார்.

எனக்கே வருத்தமாக இருந்தது. ஏன் இப்படிப் பேசிவிட்டோம் என்று. என்றாலும் அப்போதைய மனநிலையில் வேறு எப்படி நடந்து கொண்டிருக்க முடியும்?

அந்த ஒரு நிகழ்ச்சி! அப்புறம் நாட்கள் ஓடிவிட்டன. அறையில் அமைதி நிலவ ஆரம்பித்தது. நானாகப் போய் ரங்கராஜனிடம் பேச்சுக் கொடுக்க முற்படவில்லை. என்மீது ரங்குவுக்குச் சற்று அச்சம். அதனால் அதே நிலையில் ஆண்டு ஓடி இப்போது முடிந்து விட்டது.

ரங்குவைப் பார்க்கும்போது அநுதாபம் ஏற்படும். அந்த ஒரு நாள் அந்த மனத்தைப் புண்படுத்திவிட்டேன். அன்றியும் பேச்சுக் கொடுக்காமல் வேறு இருந்துவிட்டேன். அதுதான் நான் செய்த குற்றம். என் வருத்தத்திற்கும் அதுவே காரணம். அடுத்த பரீட்சைகளில் ரங்கராஜனுக்கு நல்ல ‘மார்க்கு’ கிடைத்ததாகப் பக்கத்து நண்பர்கள் சொல்லிக் கொண்டார்கள். அந்த விதத்தில் எனக்கு மகிழ்ச்சிதான். இத்தனை நாள் ரங்குவுடன் பேசாவிட்டாலும் உள்ளன்பு மட்டும் குறையவில்லை. ரங்கு படிக்க வேண்டும்; நானும் படிக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதற்காகத்தான் அன்று அந்தக் ‘கவிஞரிடம் பாய்ந்தேன். நேரம் ஆகிக் கொண்டிருந்தது. இப்போது நினைப்பெல்லாம் ரங்குவின் மீது தான்!

அறையில் பெட்டி படுக்கைகளைச் சரி செய்து கட்டிக் கொண்டிருந்தார் ரங்கு. நான் குழம்பிக் கொண்டிருந்தேன். பிரிவைப் பற்றி! ரங்கராஜன் இன்னும் சற்று நேரத்தில் புறப்பட்டவுடன் அறை மட்டும் நாளை வரை இருக்க வேண்டும். பிரிந்து போகும் ரங்குவிடம் எப்படியாவது பேச வேண்டும்.எப்படி நானாகப் போய்ப் பேசுவேன்? அதுதான் என் சிந்தனை.

மீண்டும் அமைதி: குளிர்ந்த காற்று: இலைகளின் சலசலப்பு : கருத்து ஒரு நிலையில் இல்லை. நான் களைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன்.

அப்போது –

“அண்ணாச்சி…!” ரங்குவின் சன்னமான குரல்! திரும்பிப் பார்த்தேன்.

“என்ன…?”

“ஊருக்குப் புறப்பட்டு விட்டேன்…”

“பரீட்சையெல்லாம் நன்றாக எழுதியாயிற்றா?”

“முடிந்த வரை எழுதியிருக்கிறேன். பாஸாகிவிடும் என்ற நம்பிக்கை…” என் நெஞ்சு மகிழ்ந்தது. இதைத்தானே நான் ரங்குவிடம் எதிர்பார்ப்பது!

‘ஆட்டோகிராப்’ நோட்டுப் புத்தகத்தை என்னிடம் நீட்டினார் ரங்கு.

“நான் என்ன எழுத வேண்டும்?”

“உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் அன்று புத்தி கற்பித்திருக்காவிட்டால் இன்றும் கவிதைப் பித்தனாகவே இருந்திருப்பேன். என் நல்ல காலம், படிப்பில் கவனத்தைத் திருப்பினீர்கள். உங்களை நான் எப்படி மறப்பேன்!”

எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ரங்கராஜன் பேசுவது உண்மையா?

“அடுத்த வருஷம் இங்கேதானே படிக்கப் போகிறீர்கள்?”

“ஆமாம். என்னை மறந்து விடாதீர்கள் அண்ணாச்சி!”

‘ஆட்டோகிராப்’ புத்தகத்தில் நான் எழுதினேன். ரங்குவிடம் கொடுத்தேன்.

“புறப்படுகிறேன். என் ஊருக்கு அவசியம் ஒருமுறை விடுமுறையில் வருகிறீர்களா?”

“பார்க்கிறேன் ரங்கு…”

விடுதி வேலைக்காரப் பையன் பெட்டி படுக்கைகளைத் தூக்கிகொண்டு முன்னே சென்றான். ரங்கு என்னருகே வந்தார்.

“போய் வருகிறேன். அண்ணாச்சி! கலக்கத்தோடு எழுந்த அந்தக் குரல்; கலங்கிய கண்கள்; கரங்கூப்பிய வணக்கம் ரங்குவைப் பார்த்தேன். என் மனம் ஏங்கியது.

“போய் வா. ரங்கு. நிறைய கவிதை எழுது விடுமுறையில்…”

ரங்குவின் கால்கள் நடந்தன. பையன் முன்னே செல்ல. ரங்கு பின் தொடர்ந்து சென்ற அந்தக் காட்சியைக் கவலையோடு பார்த்துக் கொண்டே நின்றேன். பாலத்தில் ரங்கு ஏறிய பின்னும் விரக்தியோடு நின்றிருந்தேன.

கலங்கிய என் கண்களிலிருந்து கண்ணீர் கன்னத்தில் உருண்டது. குளிர்ந்த காற்றோடு வானமும் தூற்றலை விழச் செய்தது. என் நிலையை உணர்ந்தாற்போல்!

– 1960 ‘கண்ணன்’ இதழில் பிரசுரமான சிறுகதை, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *