ஒரு பாம்பு வயல்வெளியில் ஊர்ந்து சென்றபொழுது, தூரத்தில் பெருத்த எலி ஒன்றைக் கண்டது.
பாம்பு தன்னை சாப்பிட வருவதைக் கண்டுவிட்ட எலியால் உடனடியாகத் தப்பிக்க இயலவில்லை. அதற்குக் காரணம் வாய்க்கால் நீரில் தவறி விழுந்து, அதன் உடம்பெல்லாம் நனைந்துவிட்டது.
எப்படியாவது தப்பித்தாக வேண்டும் என்றெண்ணிய எலிக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது.
அருகில் வந்துவிட்ட பாம்பைப் பார்த்து, அஞ்சாமல் தைரியமாகப் பேசியது:
“”பாம்பண்ணே… என்னைச் சாகடிச்சிடாதீங்க… இப்ப என்னை விட்டுவிட்டால் ஆயுள் முழுக்க உங்களுக்கு உதவி செய்வேன்” என்றது.
ஒருகணம் திகைத்து நின்ற பாம்பு, “”என்ன உதவி செய்வாய்?” என்று கேட்டது.
“”எனக்கு ஏராளமான எலி நண்பர்கள் இருக்கிறார்கள். அருகில் ஒரு குளம் உள்ளது. அதில் நிறைய தவளைகள் வாழ்கின்றன. அன்பாகப் பேசுவது போல நடித்து, உங்கள் புற்றுக்கு அவர்களை அழைத்து வந்துவிடுகிறேன்… எங்கேயும் அலைந்து திரியாமல் இருந்த இடத்திலேயே உங்களுக்கு உணவு கிடைக்கும்படி செய்துவிடுகிறேன்… என்னை மட்டும் விட்டுவிடுங்கள்” என்றது.
எலியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டது பாம்பு.
“”துரோகி எலியே, ஒரு உயிரை விழுங்கினால்தான் எங்கள் இனம் உயிர்வாழ முடியும் என்பது இறைவன் வகுத்தது. இது என்றும் மாறாது. ஆனால், உனக்கு அப்படியல்ல என்றாலும், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உன் இனத்தாரையும் மற்ற இனங்களையும் அழிக்க நினைக்கிறாயே… இது மாபெரும் துரோகம்! எனக்கு நன்மை செய்வதாக நினைத்து மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய முயல்வது மன்னிக்க முடியாத குற்றம்! உன்னைவிட்டு வைப்பது நல்லதல்ல” என்று கூறியபடியே அந்த எலியைப் பிடித்து விழுங்கியது பாம்பு.
-எஸ்.செüமியா,
10-ஆம் வகுப்பு, தேவனாங்குறிச்சி.
ஜூலை 2012