கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்  
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 16,237 
 

முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் புத்த மதத் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் பல தற்காப்புக் கலைகளில் சிறந்து விளங்கினார். அந்நாட்களில் மனதை ஒருமுகப்படுத்த புத்த மதத் துறவிகள் தற்காப்புக் கலைகளைப் பயன்படுத்தி வந்தனர்.

மன்னரின் படையில் சேர்வதற்குத் தற்காப்புக் கலைகளை அறிந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனால் பல இளைஞர்களும் அத்துறவியிடம் தற்காப்புக் கலைகளைப் பயின்றுவந்தனர். இப்படிஇருக்கையில் ஒருநாள் “ஹைக்கோ’ என்ற பெயருடைய ஒருவன் தான் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொள்ள விரும்புவதாகத் துறவியிடம் கூறி அவரை வணங்கி நின்றான். அவன் மிகவும் நோஞ்சானாக இருந்தான். அவனது இடது கை மிகவும் சிறியதாக, முழு வளர்ச்சி இல்லாமல் மெலிந்து காணப்பட்டது.

பலவீனமே பலம்

இதைக் கண்டு அங்கு பயிற்சி செய்து கொண்டிருந்த பிற இளைஞர்கள் உரக்க சிரித்து, ஏளனம் செய்தனர். அவர்களை அத்துறவி கண்டித்தார். ஹைக்கோவின் நிலை கண்டு மனமிரங்கிய துறவி, அவனுக்குத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தருவதாக ஒப்புக்கொண்டார்.
துறவி இருக்கும் வரை அவனிடம் யாரும் எதுவும் பேசமாட்டார்கள். ஆனால் அவர் அங்கிருந்து சென்றபிறகு பிற இளைஞர்கள் அவனை மிரட்டி வேலை வாங்குவர். “உனக்கு ஏனிந்த வீண் வேலை? நீயெல்லாம் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறாய்?’ என்று கேட்டு அவனை அவமானப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

ஹைக்கோ அனைத்தையும் பொறுத்துக் கொண்டான். பிறர் உழைப்பதைக் காட்டிலும் இருமடங்கு உழைத்தான். துறவியும் அவனுக்குப் பரிவுடனும் பொறுமையுடனும் கற்றுத் தந்தார். நாட்கள் பல சென்றன.

திடீரென்று ஒருநாள் குதிரையில் வந்த சிலர் இவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். அவர்கள் கொள்ளையர்கள் என்பதைப் புரிந்து கொண்டார் துறவி. அந்நாட்களில் கொள்ளையர்கள் திடீரென்று சில இடங்களுக்குச் சென்று பொருட்களைக் கொள்ளையடிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் அத்தோடு நில்லாமல் தாம் கொள்ளையடிக்கும் இடத்தில் இருக்கும் மனிதர்களை அடிமையாக்கித் தம்முடன் அழைத்துச் சென்று விடுவர்.

கொள்ளையர்களின் தலைவன் போல் இருந்த ஒருவன் அனைவரையும் சரணடையுமாறும், அங்குள்ள பொருட்கள் யாவும் தனக்கே சொந்தம் என்றும் கூறினான்.

இதை கவனித்துக் கொண்டிருந்த துறவி, “”உன்னால் முடிந்தால் என் சீடர்களை வீழ்த்திவிட்டு இங்குள்ள பொருட்களை நீ கவர்ந்து செல்லலாம்!” என்றார்.

துறவியிடம் இதுவரைப் பாடம் பயின்றுவந்த இளைஞர்கள் தங்கள் திறமையைக் காட்ட இதுவே தக்க தருணம் என நினைத்தனர்.
கொள்ளையர்களின் தலைவன் தன் கூட்டத்தில் இருந்த வீரர்களுள் சற்று உயரமாகவும் திடகாத்திரமாகவும் இருந்த வீரன் ஒருவனை அழைத்தான். பின் கொள்ளையர்களின் தலைவன், துறவியின் சீடர்களிடம், “”இவன் பெயர் யாங் லீ. நீங்கள் இவன் ஒருவனை வீழ்த்திவிட்டால் நாங்கள் அனைவரும் இங்கிருந்து சென்றுவிடுகிறோம். அப்படி வீழ்த்தத் தவறினால் இந்த இடமும் இங்குள்ள பொருட்கள் யாவும் எனக்கே சொந்தம். உங்கள் குரு உட்பட நீங்கள் யாவரும் எங்களுக்கு அடிமைகளாகப் பணிபுரிய வேண்டும். சம்மதமா?” என்றான்.

இதைக் கேட்ட துறவியின் சீடர்கள் கொதித்து எழுந்தனர். துறவி முதலில் ஒரு சீடனை சண்டையிட அனுப்பினார். சண்டை மிகக் கடுமையாக நடைபெற்றது. ஆனால் யாங் லீ துறவியின் சீடனை வீழ்த்தினான். அடுத்து ஒரு சீடன் வந்தான். அவனையும் யாங் லீ மிக எளிதாக வீழ்த்தினான். இப்படியாக ஒன்பது சீடர்களை துறவி அனுப்ப, அவர்கள் அனைவரையும் வீழ்த்திவிட்டு அசராமல் மலை போல் நின்றான் யாங் லீ.

இப்பொழுது கொள்ளையர்கள் பரிகாசம் செய்து சிரித்தனர். “”உன் சீடர்களின் லட்சணம் தெரிந்துவிட்டது அல்லவா? இன்னும் யாராவது சீடர்கள் இருக்கிறார்களா? அல்லது நீயே சண்டைக்கு வருகிறாயா?” என்று துறவியைப் பார்த்துக் கேட்டான், கொள்ளையர் தலைவன்.
இவையனைத்தையும் சற்றும் பதட்டமில்லாமல் கவனித்துக் கொண்டிருந்த துறவி அடுத்ததாக ஹைக்கோவை சண்டையிடுமாறு கட்டளையிட்டார். ஹைக்கோவும் ஆர்வத்துடன் முன்வந்தான்.
இப்பொழுது துறவியின் பக்கம் இருந்த ஒன்றிரண்டு சீடர்களும், “”நம் குருநாதருக்கு என்ன நேர்ந்தது? அவனை வீழ்த்தப் போயும் போயும் இந்த நோஞ்சான் பயலை அனுப்புகிறாரே! அவன் ஒரே அடியில் இவனைக் கொன்றுவிடுவான். நாம் இருப்பது அவர் கண்ணுக்குத் தெரியவில்லையா?” என்று பதட்டத்துடன் பேசிக் கொண்டனர்.
ஹைக்கோவைக் கண்ட கொள்ளையர்கள் கைகொட்டிச் சிரித்தனர். சண்டை ஆரம்பமானது. யாங் லீ, ஹைக்கோவைப் பிடித்து இழுக்கும் முன்னரே, ஒற்றைக் கையைத் தரையில் ஊன்றி பல்டி அடிக்க ஆரம்பித்தான் ஹைக்கோ. எப்படி முயன்றும் யாங் லீயால் ஹைக்கோவைப் பிடிக்கமுடியவில்லை. அந்தக் காட்சி, கொசுவைப் பிடிக்க யானை போராடுவது போல் இருந்தது. இப்படியே பலமணி நேரம் தன் மேல் ஓர் அடி கூட விழாமல் ஹைக்கோ பார்த்துக் கொண்டான்.
இதனால் யாங் லீ வெகு விரைவில் சோர்ந்துவிட்டான். இப்பொழுது கொள்ளையர்கள் முகத்தில் கலவரம் தோன்ற ஆரம்பித்தது. இத்தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ஹைக்கோ மின்னல் போல் பாய்ந்து யாங் லீயைத் தாக்கினான். இத்தாக்குதலால் நிலைகுலைந்த யாங் லீ பேச்சுமூச்சற்றுக் கீழே விழுந்தான். இப்பொழுது துறவியின் எஞ்சியிருந்த சீடர்கள் பலத்த கரவொலி எழுப்பித் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். யாங் லீயால் தாக்கப்பட்டு மயக்கமடைந்த வீரர்களும் நினைவு திரும்பி ஒருவாறு மீண்டு எழுந்தனர்.

இதைக் கண்ட கொள்ளையர்கள் தம் தோல்வியை ஒப்புக்கொண்டு, துறவி முன் மண்டியிட்டு, “”நீரே உண்மையான குரு!” என்று கூறி வணங்கிப் பின் அங்கிருந்து சென்றனர்.

இப்பொழுது சீடர்களுள் ஒருவன், “”நீங்கள் முதலிலேயே ஹைக்கோவை அனுப்பி இருக்கலாம் அல்லவா…?” என்றான்.
அதற்குத் துறவி, “”அவன் சண்டை இடும் முறையைக் கூர்ந்து கவனிக்க எனக்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது. அவன் ஒவ்வொரு முறை உங்களைத் தாக்கும் பொழுதும் உங்கள் இடது கையைப் பற்றி இழுத்துத் தாக்கும் நுட்பத்தைப் பயன்படுத்தினான். ஆனால் ஹைக்கோவின் இடது கை முழு வளர்ச்சி இல்லாமல் இருந்ததால் அவனால் பற்றி இழுக்க முடியவில்லை! உங்களால் இரு கைகளையும் தரையில் ஊன்றினால் மட்டுமே எம்பிக் குதிக்க முடியும். ஆனால் ஹைக்கோவால் தன் ஒரு கையைத் தரையில் ஊன்றிக் குதிக்க முடிந்ததால், அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் யாங் லீ வீழ்ந்தான்!” என்றார்.

இதுவரை ஹைக்கோவின் இயலாமையை ஏளனம் செய்துவந்த இளைஞர்கள் வெட்கித்தலைகுனிந்தனர். ஹைக்கோவிடம் மன்னிப்புக் கேட்டனர்.

தம் குருநாதர் முன் மண்டியிட்டுத் தலை வணங்கி அனைவரும் ஒரே குரலில் கூறினர், “”நீரே உண்மையான குரு!”

ஆம்! இயலாமை என்றும் பலவீனம் என்று நாம் நினைப்பவை ஒருநாள் பலமாக மாறும்!

– ந.லெட்சுமி (ஜனவரி 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *