பறவைகள் பலவிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2023
பார்வையிட்டோர்: 1,198 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(தமிழ்நிலா காகம், தேன்மொழி – கிளி, அன்பரசன் வாத்து, இளவழகன் -மயில் போல வேடமணிந்து நிற்கிறார் கள். அறிவண்ணன் வருகிறார்)

அறிவண்ணன் : என்ன? எல்லோரும் இன்று திடீரெனப் பறவைகள் ஆகிவிட்டீர்கள்?

தமிழ்நிலா : நாங்கள் ஒரு சிறுவர் நாடகம் போடப் போகிறோம்.

(நால்வரும் நாலு பறவை மாதிரி அசைகிறார்கள், சத்தமிடுகிறார்கள்).

தேன்மொழி: இன்று நாங்கள் செய்யப்போகிற வெள்ளுடுப்பு ஒத்திகையை நீங்கள் பார்த்து அபிப்பிராயம் அபிப்பிராயம் சொல்ல வேண்டும்.

அறிவண்ணன் : மெத்த மகிழ்ச்சி! யார் இந்த நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியது.

அன்பரசன் : இளவழகன்தான் நாடக ஆசிரியர். நெறியாளர். பிரதான நடிகர் எல்லாம்.

இளவழகன்: (சிறிது தயங்கி வெட்கப்பட்டு) ஏதோ சும்மா ஒன்று செய்து பார்ப்போம் என்று..

அறிவண்ணன்: அது நல்ல முயற்சி. ஓய்வு நேரத்தில் நல்ல பயனுள்ள வேலை செய்கிறீர்கள். பார்க்கச் சந்தோசமாக இருக்கிறது. ஒப்பனை எல்லாம் முடிந்ததா?

தமிழ்நிலா: இன்னும் கொஞ்ச வேலை இருக்கிறது.

தேன்மொழி: அதுவரை நாங்கள் இந்தப் பறவைகளைப் பற்றியே அண்ணாவிடமிருந்து ஏதும் பிடுங்கலாம்.

அறிவண்ணன் : பறவைகளுக்கு எத்தனை கால்?

அன்பரசன்: இதென்ன? பால்குடிப்பிள்ளையைக் கேட்கும் கேள்வி! இரண்டு கால் தானே?

இளவழகன்: இல்லை நாலு கால்.

அறிவண்ணன்: பார்த்தீர்களா? உங்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு வந்துவிட்டது. பறவைகள் பறத்தலுக்காகச் சிறப்படைந்த ஊர்வன. அவற்றின் முன்னங் கால்களே இறக்கைகளாக மாறியுள்ளன. ஆகவே அவற்றுக்கு நாலு கால் என்று இளவழகன் சொன்னது அர்த்தமுள்ள பதில்தான்.

(தமிழ்நிலா, தேன்மொழி காதில் ஏதோ இரகசியம் சொல்கிறாள்.)

அறிண்ணன்: என்னவாம் தமிழ்நிலா?

தேன்மொழி : கிளிக்குப் பல்லு இல்லையாம். நடிக்கும் போது பல்லைக் காட்டிச் சிரிக்காமல் நடிக்கட்டாம்.

(இருவரும் சிரிக்கிறார்கள்,ஏனையோரும் சிரிக்கிறார்கள்)

அறிவண்ணன் : பறவைகளுக்குப் பொதுவாகப் பல் இல்லை என்பது உண்மைதான். ஆதியிற் சில பறவைகளுக்குப் பல் இருந்திருக்கிறது. அவற்றில் முக்கிய மானது ஆக்கியொப்ரெறிக்ஸ் (Archae- opteryx) இந்தப் பறவை இப்போது இல்லை.

தமிழ்நிலா: பறக்காத பறவைகளும் இருக்கின்றனவா அண்ணா?

அறிவண்ணன்: இருக்கின்றனவே. ஆபிரிக்காவின் தீக்கோழி, தென் அமெரிக்காவின் எழு (Emu), அவுஸ்த்திரேலியாவின் கசோவரி, நியூசிலாந்தின் கிவி (Kiwi) ஆகியவை பறப்பதில்லை. இவை ஓடும் பறவைகள்.

தேன்மொழி: அப்படியானால் எங்கள் நாட்டுப் பறவைகள் எல்லாம் பறக்கும் இல்லையா!

அறிவண்ணன்: ஆம்! நீங்கள் நன்றாகப் பறந்து பறந்து நடிக்கலாம்.

அன்பரசன் : பறவைகளில் பெரியது எது?

அறிவண்ணன் : மடகாஸ்கரில் வாழ்ந்த மோவாஸ் (Moas) எனப்படும் யானைப் பறவை தான் மிகப்பெரியது. சில நூற்றாண்டு களுக்கு முன் இது அழிந்துவிட்டது. இதன் முட்டை ஓடுகள் சில இன்றும் குழந்தைகளின் குளிக்கும் தொட்டிக ளாகப் பயன்படுகின்றனவாம்.

இளவழகன்: பெங்குவினும் பறப்பதில்லைதானே?

அறிவண்ணன் : அந்தாட்டிக்கில் நீர் வாழ்வுக்குச் சிறத்தலடைந்த பறவை பென்குவின். அதன் முன்னங்கால்கள் துடுப்புக்களாக மாறி நீந்த உதவுகின்றன.

தமிழ்நிலா : பறவைகள் எவ்வளவு தூரம் பறக்கும்? அறிவண்ணன் : குடிபெயர்தலின் போது அவை நீண்ட தூரம் பறக்கின்றன. ஆட்டிக்ரேண் என்ற பறவை பாதகமான காலநிலையில் ஆட்டிக் வட்டத்திலிருந்து ஐரோப்பா, ஆபிரிக்காவின் கரையோரம் வழியே சுமார் 25000 மைல்களைக் கடந்து தென் அத்திலாந்திக் பிரதேசங்களுக்குக் குடிபெயருகின்றது.

இளவழகன்: பறவைகளில் ஆண் அழகானது. மனிதரிலும் அப்படித்தான். அதுதான் என்னை ஆண் மயிலாக நடிக்க விட்டிருக்கிறார்கள்.

தேன்மொழி : யார் விட்டது? தானே எடுத்துக் கொண்டது.

அறிவண்ணன் : என்னைப் பொறுத்தவரை பிரபஞ்சத்தில் எல்லாமே அழகுதான். அழகும், அழகின்மையும் பார்ப்பவர் கண்களைப் பொறுத்தது.

அன்பரசன்: கண் எல்லோருக்கும் ஒரே மாதிரித் தானே தொழிற்படும்?

அறிவண்ணன்: சரி அவரவர் மனவிசாலத்துக்கு ஏற்ப அறிவு விருத்திக்கு ஏற்ப அழகு வேறுபடும்.

தமிழ்நிலா : அண்ணா திடீரென ஞானியாகிவிட்டார். அறிவண்ணன் : இறைவனின் படைப்பில் எல்லாமே அழகானவை என்பதை நம்ப மறுப்பவன் கடவுளே இல்லையென்பவன் நாத்திகன்

இளவழகன்: பறவைகள் வானத்தில் எந்தவிதக் கவலையுமின்றிப் பறந்து திரிவதைப் போல நாங்களும் கொஞ்ச நேரம் சந்தோஷமாய் இந்த நாடகத்தை நடிப்போம்.

அறிவண்ணன் : பறவைகளுக்குச் சுயநலம் இல்லை. ஆதிக்க வெறி இல்லை. பேராசை இல்லை. நயவஞ்சகம் இல்லை. மற்றவனை நசுக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லை. ஆகையால் மகிழ்வாகப் பாடித் திரிகின்றன. சரி நீங்கள் நடிக்கத் தொடங்கலாம். நான் இங்கிருந்து பார்த்து விமர்சனம் கூறுவேன்.

(நாடகம் ஆரம்பமாகிறது. அறிவண்ணன் கதிரையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.)

– விஞ்ஞானக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 2000, கலை இலக்கியக் களம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா.

Print Friendly, PDF & Email
கோகிலா மகேந்திரன் (நவம்பர் 17, 1950 ,தெல்லிப்பளை, விழிசிட்டி, இலங்கை) ஈழத்து எழுத்தாளர். கலைத் திறானாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம்.. என பன்முகப் பரிணாமம் கொண்ட பல விடயங்களை எழுதியுள்ள பன்முகக் கலைஞர். இவரின் எழுத்துக்கள் இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகைகளில் எல்லாம் இடம் பிடித்திருக்கின்றன. இவரின் தந்தை செல்லையா சிவசுப்பிரமணியம் சமய எழுத்துக்காக சாகித்திய விருது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *