(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
தமக்குத் தகாத செயலைச் செய்வதற்கு வெட்கப்படுதல்
தருமபுரம் அருட்செங்கோலை நடத்த ஆறாவது தலைவராக வந்த ஸ்ரீ திருஞான சம்பந்த தேசிக சுவாமிகளிடம் ஞானோபதேசம் பெற்றவர் சம்பந்த . சரணாலயர். இவர் மைசூர் அரசனைக்கண்டபொழுது, அவன் சுவாமிகளின் தோற்றப்பொலிவைக் கண்டு, “அண்டங் காக்கைபோல் உளரே” என்றான். சுவாமிகள் புன்னகை பூத்து, ”தாமே அண்டங் காக்கைக்குப் பிறந்தீர்” என்று சொன்னார்கள். அரசன் இதில் உள்ள சொல் நயம் கண்டு மகிழ்ந்து தம்முடன் சிலநாள் விருந்தாக இருக்க வேண்டினான். அவ்விதம் இருக்கும் காலத்தில் அரசன் சுவாமி களைச் சிவிகையில் வைத்து நகர்வலம் செய்விக்க விரும்பினான். அப்போது சுவாமிகள் அரசனிடம் ஊண், உடை, உறக்கம் யாவும் எல்லார்க்கும் பொது, அதை அனுபவிப்பதில் எவ்வித தடையும் இல்லை. குருவாணையின்றி நகர் வலம் வந்தால் பழி பாவங் களுக்கு அஞ்சாமல் செய்த செயலாக அது முடியும். ஆனதால் ‘உடன்படேன்’ என்றார். பின் குருவாணை பெற்று அரசன் நகர்வலம் சுவாமிகளுக்குச் செய்வித்தான். வள்ளுவரும், ”பழி பாவங்களுக்குப் பயந்து நடத்தலே மக்களின் சிறப்பாகும்” என்று கூறியுள்ளார்.
ஊணுடை யெச்சம் உயிர்க்கெல்லாம்; வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. (75)
ஊண் உடை = ஆகா ரமும், ஆடையும்
எச்சம் = இவை ஒழிந்தவைகளும்
உயிர்க்கு எல்லாம் = (மக்கள்) உயிர் யாவற்றிற்கும்
வேறல்ல = பொதுவாம்.
மாந்தர் சிறப்பு = நன் மக்கட்குச் சிறப்பாவது
நாண் உடைமை = (பழி, பாவங்களுக்கு) வெட்கப்படுதலே ஆகும்.
கருத்து: உணவு, உடை யாவர்க்கும் பொது; ஆனாலும், நன்மக்களுக்குச் சிறப்பாவது நர்ண முடைமையாகும்
கேள்வி: மக்களுக்குச் சிறப்பை அளிப்பது எது?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.