நரியின் தந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 848 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னொரு காலத்தில் ஆபிரிக்கக் கண்டத்தின் மத்தியிலே சகாரப் என்றொரு அடர்ந்த காடு இருந்தது.

அக்காட்டினிலே நீண்ட காலம் தொடக்கம் பலவகையான மிருகங்களும் பறவைகளும் ஒற்றுமையுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தன.

ஒருநாள் அயல்காட்டிலுள்ள சிங்கம் ஒன்று நுழைந்து அக்காட்டில் குடியேறிக் கொண்டது.

அதுமட்டுமில்லாமல் அங்கேயிருந்த பென்னம் பெரிய குகை ஒன்றை தனது உறைவிடமாக்கிக் கொண்டு, தானே இந்தக் காட்டின் ராஜா என்ற மமதையில் வாழ்ந்து வந்தது.

காலஞ் செல்லச் செல்ல நாளுக்கு நாள், சிங்கத்தின் அடாவடித்தனங்களும் அதிகரித்தன.

சிங்கமானது கண்ட கண்ட மாதிரி எல்லா மிருகங்களையும் தாக்கியது. இதன் பயனாக, சிறிய மிருகங்கள் முதல், பெரிய மிருகங்கள் வரையும், இளம் மிருகங்கள் தொடக்கம் முதிர்ந்த மிருகங்கள் வரையும் காயப்படுத்தியும், கொன்றும் குவித்தது.

இந்தச் சிங்கத்தின் கொடூரமான நடவடிக்கையினால் காட்டில் வசித்த மிருகங்களிடையே பயம் அதிகரித்து சந்தோசமும் அமைதியும் இல்லாமல் போயிற்று.

எப்படி மீண்டும் சந்தோசத்தையும், அமைதியையும், கொண்டுவர முடியும்? என்று ஒவ்வொரு மிருகங்களும் தங்களுக்குள் தாங்களே அங்கலாத்துக் கொண்டிருந்தன.

ஒருநாள் அந்தச் சிங்கத்தின் அடாவடித்தனங்களை முடிவுக்குக் கொண்டுவர, சகல மிருகங்களும் ஒன்றுகூடிக் கலந்து ஆலோசித்தன.

இந்த ஆலோசனையின்படி ஒரு வெண்புறாவை சிங்கத்திடம் சமாதானத்தூது அனுப்பினார்கள்.

அதன் பின்பு எல்லா மிருகங்களும் சிங்கத்திடம் சென்று தங்கள் குறைகளைக் கூறி மன்றாடி நின்றன.

ஆனால் சிங்கமோ அவை ஒன்றிற்கும் தலைசாய்க்கவில்லை. எனவே மிருகங்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்தவையாக “சிங்கராசா அவர்களே, நீங்கள் எங்களைக் குழந்தைகள் என்றும், பெண்களென்றும் பாராமல் கொலை செய்வது தர்மமாகாது.

எனவே நாங்கள் வயது முதிந்தவர்களாக தினசரி ஒவ்வொருவராக வருகிறோம், நீங்கள் இரையாக்கிக் கொள்ளுங்கள். இதுவே நீதியும் கூட என்றன.

இதைக்கேட்ட சிங்கத்திற்கு கோபம் கோபமாக வந்தது. உடனே மிருகங்களைப் பார்த்து. “ஏய் அற்பப் பயல்களே, எனக்குப் புத்திசொல்லும் அளவிற்கு வந்துவிட்டீர்களா? நான் யார் தெரியுமா? இந்தக்காட்டின் அரசன். யார் சொல்லையும் நான் கேட்கப் போவதில்லை.

நான் நினைத்ததையே செய்வேன். எல்லோரும் இங்கிருந்து ஓடிவிடுங்கள்” என்று கர்ச்சித்தது.

பயத்தினால் நடுநடுங்கியபடி எல்லா மிருகங்களும் சோகத்துடன் வெளியேறின.

நாட்கள் நகர சிங்கம் இரண்டு குருளைகளை ஈன்றது. அதன் பின்பு மேலும் சிங்கத்தின் அடாவடித்தனம் அதிகரித்தது. அனைத்து விலங்குகளையும் கொடூரமான முறையில் கொலை செய்து, அதன் குருளைகளுக்கு இரையாக்கியது.

இச்செய்கையினால் மேலும் கலக்கமடைந்த மிருகங்கள் ஒன்றுகூடி ஆராய்ந்தன. இதன் பயனாக எல்லா மிருகங்களும் “மிருகங்களிலே புத்தி கூடியவர், நரி அண்ணன்தான், எனவே இந்தப் பிரச்சினைக்கும் நரி அண்ணனே தீர்வு காணட்டும். நாங்கள் நரி அண்ணனின் கையிலேயே இப்பொறுப்பைக் கொடுக்கிறோம்” என்றன.

அதற்கு நரியோ, சில நிமிடம் சிந்தித்துக் கொண்டு “ஆம், நானே இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன்டி” என்றது.

மறுநாள் காலை நரி சிங்கத்தின் குகைக்குப் போனது. அங்கே சிங்கம் இருக்கவில்லை. குருளைகள் இரண்டும் மட்டுமே இருந்தன.

உடனே நரி இரண்டு குருளைகளையும் பார்த்து “எங்கே உங்கள் அம்மா?” என்றது.

அதற்கு அவைகளோ “அம்மா இரைதேடச் சென்று விட்டாள்” என்றன.

“நரி வந்து போகிறேன் – உங்கள் அம்மாவைக் கண்டால் அடிப்பேன் என்று உங்கள் அம்மா வந்தால் கூறுங்கள்” என்று கூறிக்கொண்டு நரி சென்றது.

சிங்கம் குகைக்கு வந்ததும் சிங்கக் குருளைகள் நரி கூறிச் சென்றதை அப்படியே கூறின.

இப்படியாக ஒவ்வொரு நாளும் சிங்கம் இரைதேடச் சென்றபின் சிங்கத்தின் குகைக்குச் சென்று நரி அப்படியே ஒவ்வொரு நாளும் கூறிவந்தது.

இரைதேடி வந்தபின் ஒவ்வொரு நாளும், நரி கூறிச் சென்றதை அப்படியே கூறி வந்தன சிங்கக் குருளைகள்.

இதைக்கேட்ட சிங்கத்திற்குக் கோபம் வந்தது. ஒருநாள் இரை தேடி வருகிறேன் என்று குருளைகளிடம் கூறிவிட்டு வெளியே வந்து, குகையின் அருகேயுள்ள பெரிய கற்பாறை ஒன்றின் பின்னால் மறைந்து கொண்டது.

வழக்கம் போலவே சிங்கத்தின் குகைக்கு வந்த நரி, குருளைகளைப் பார்த்து, “எங்கே உங்கள் அம்மா? நரிவந்து போகிறேன், நான் உங்கள் அம்மாவுக்கு, அடிப்பேன் என்று கூறுங்கள்” என்று கூறிக்கொண்டு வெளியே வந்தது.

வெளியே வந்ததுதான் தாமதம்….குகையருகில் ஒளித்திருந்து நரி சொன்னதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சிங்கம் “ஆ….. ஆ…….” என்று கர்ச்சித்தவாறு “ஏய் அற்ப நரிப்பயலே…..” என்று கூறி நரியின் மேலே பாய்ந்தது.

தன்னை நோக்கிச் சிங்கம் பாய்வதைக் கண்ட நரி துள்ளிப் பாய்ந்து ஓட்டமெடுத்தது. நரி ஓடுவதைக் கண்ட சிங்கம் பின்னால் துரத்திக் கொண்டு ஓடியது.

காடுகளையும், மலைகளையும் தாண்டி ஓடி இறுதியில் ஒரு மரத்தினடியில் இருந்த பொந்தின் வழியே நரி புகுந்து கொண்டு ஓடியது.

நரி பொந்தினுள் நுழைவதைக் கண்ட சிங்கமும் பொந்தினுள் நுழைந்தது.

ஆனால் சிங்கத்தின் தலை வசமாக பொந்தினுள் அகப்பட்டுக்கொண்டது. அதனால் அது மூச்செடுத்துக் கொள்ள முடியாமல் ஓலம் வைத்து அலறியது. அவஸ்தைப்பட்டது.

அப்பொழுது பொந்தின் மறுவழியால் வெளியே வந்த நரி அவஸ்தைப்படும் சிங்கத்தைக் கண்டது.

உடனே சிங்கத்தை நெருங்கி, ஒரு தடியை எடுத்து அதன் உடலில் அடித்தது.

சிங்கம் ஆ…என்னைக் கொல்லாதே! என்று அலறியது.

சிங்கத்தின் வார்த்தையைக் கேட்ட நரி “ஆ…ஆ….” என்று சிரித்துக்கொண்டு “நான் உன்னைக் கொல்ல மாட்டேன். உன்னைக் கொன்றால் உனது குருளைகள் இரண்டும் அநாதைகளாகிவிடும்” என்று கூறிக்கொண்டு ஓடிச்சென்று சற்றுத் தொலைவிலுள்ள பற்றைக்குப் பின்னால் அமர்ந்திருந்தவாறு அருகே கிடந்த பத்திரிகைத் துண்டைப் படித்துக் கொண்டிருந்தது.

ஒருவாறு தலையை வெளியே எடுத்துக்கொண்ட சிங்கம் ஆத்திரமிகுதியால் அந்நரியைத் தேடி ஓடியது.

போகும் வழியில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்த நரியைக் கண்டது.

நரியைக் கண்ட சிங்கம் “நரியாரே….. இவ்வழியால் ஒரு நரி – சென்றதைக் கண்டாயா?” என்றது.

அதற்கு நரி, “நான் அப்படியொரு நரியைக் காணவில்லை” என்றது.

கோபம் கொண்ட சிங்கம் “அப்படியாயின் பத்திரிகையில் என்ன படித்துக் கொண்டிருக்கிறாய்” என்று அதட்டலுடன் கேட்டது.

“தன்னைப்போல் பிறரை நேசிக்கத்தெரியாத சிங்கத்திற்கு பாடம் புகட்டிய நரி, தன்னைப்போல் பிறரை நேசித்ததால் சிங்கத்தை கொல்லாமல் விட்டு தப்பி ஓடியது” என்று பெரிய எழுத்தில் இருக்கிறது. அதுதான் படிக்கிறேன்” என்று கூறியது நரி.

இதைக்கேட்ட சிங்கம் சில நிமிடங்கள் மௌனமாக சிந்தித்தபடி வந்த வழியே திரும்பி நடந்து சென்றது.

அதன் பின்பு சிங்கம் எந்தவிதமான கொடூரமும் செய்யாமல் மற்ற விலங்குகளுடன் அன்பு வைத்து நடந்து வந்தது.

அக்காட்டில் மீண்டும் அமைதியும், சமாதானமும் நிலவ சகல மிருகங்களும் சந்தோசத்துடன் வாழ்ந்து வந்தன.

– நரியின் தந்திரம், முதற் பதிப்பு: அக்டோபர் 2000, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *