(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
தருமத்தில் வழுவாமல் எல்லார்க்கும் சமமாக நிற்றல்
ஒரு செல்வன் தன் தந்தைக்கு ஓட்டிலே கஞ்சி வார்த்துவந்தான். அவன் மகன் அதைப்பார்த்து அந்த ஓட்டை எடுத்து மறைத்து வைத்தான். பின்பு கஞ்சி ஊற்றப்போனபோது ஓட்டைக் காணாமையால் அந்தச்செல்வன், “ஓடு எங்கே” என்று தன் பிதாவைக் கேட்டு வைதான். அப்பொழுது மகன், “அப்பா என் பாட்டனை வையாதே; நானே அந்த ஓட்டை எடுத்து மறைத்துவைத்தேன்; ஏன் என்றால், நான் வயதுவந்து குடும்பம் பார்ப்பவன் ஆனபின், உனக்கு வேறே ஓடு சம்பாதிக்கமாட்டேன்; இந்தக்கஞ்சியே ஊற்றுவேன்; இதைக் கண்ட உலகத்தவரும் நான் கெடுதியான இழிந்த வழியில் நடக்கவில்லை; நடுவு நிலையோடு கூடிய தர்ம வழியில் நடக்கிறேன் என்று என்னைப் புகழ்வார்கள்” என்றான். இதைக் கேட்டு செல்வன் தான் தர்மவழியில் தவறி நடந்ததற்கு வெட்கப்பட்டு அன்று முதல் தன் தந்தைக்கு நல்ல உணவளித்து மிகவும் உயர்வாக வைத்துக் காப்பாற்றினான். பிதாவுக்குக் கஞ்சி ஓட்டிலே ஊற்றிய செல்வனுக்கு இவன் மகன் மிகுந்த செல்வமுடையவனாய் இருந்து அவ்விதமே கஞ்சி ஊற்றினால் அச்செயலை உலகத் தவர் கெடுதியாக நினையார் என்று வள்ளுவரும் கூறினார்.
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
நடுவு ஆக = நடு நிலைமையாக இருந்து
நன்றிக்கண் = தர்ம வழியில்
தங்கியான் = நிலைபெற்றவனது
தாழ்வு = எளிமையை
உலகம் = உலகத்தார்
கெடு ஆக = இழிவு ஆக
வையாது = நினைக்க மாட்டார்கள். (அவ்விழிவை உயர்வு என்று எண்ணுவார்கள்).
கருத்து: தர்மவழியில் நிலைபெற்றவனது தாழ்வை இழிவாக உயர்ந்தோர் எண்ணமாட்டார்கள்.
கேள்வி: எவர் அடையும் இழிவை உலகோர் இழி வாக எண்ணார்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.