சுந்தாப்பாட்டி கோபித்துக் கொண்டாள்; “ராத்திரி இவ்வளவு நாழி கழிச்சு வந்தால் சேணியத் தெருவழியா வராதேடா ராஜா. மேலத் தெருவழியா வா” என்றாள்.
“ஏன் பாட்டி?” என்றேன்.
“ஏன்னு கேட்டால், என்னன்னு சொல்றது. ராத்திரி, அஸ்தமிச்சப்புறம் அந்தப் பக்கமா, தனியா வரப்படாது!” என்றாள் சுந்தாப்பாட்டி.
“நான் தனியா வரல்லையே, பாட்டி! அவாத்துச் சர்மாவும் கூட வந்தான்.”
“அவன் ஒரு சமத்து! நீ ஒரு சமத்து” என்றாள் பாட்டி. பிறகு சொன்னாள்: “யார்கூட வந்தால்தான் என்ன? பயந்துகொண்டு விட்டால் அப்புறம் அம்மான்னு ஆகுமா அப்பான்னு ஆகுமா?”
சட்டையைக் கழட்டிவிட்டு கால் அலம்பிக் கொண்டே நான் சொன்னேன்: “நான் திரும்பறச்சே கும்பகோணத்திலே ஹோட்டலெல்லாம் சாத்திவிட்டான் இன்னும் சாப்பிடவில்லை. இலையைப் போடு பாட்டி” என்று.
“மணி பத்தாகப் போறதே!” என்றாள் பாட்டி. பிறகு தூங்கிக் கொண்டிருந்த என் மனைவியை எழுப்பி “ராஜி இலையைப் போடு , நான் அடுப்பை மூட்டி குடமிளகாய் வறுத்துப் போடறேன்” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் போனாள் சுந்தாப்பாட்டி.
“நன்னாருக்கு . தினம் இந்த அர்த்தராத்திரி நாடகம் ” என்று தூக்கக் கலக்கத்தில் அலுப்புடன் முணுமுணுத்துக் கொண்டே இலையைப் போட்டாள் ராஜி. நான் சாப்பிட வந்து உட்கார்ந்தேன்.
சமையலறையிலிருந்து சுந்தாப்பாட்டி உரக்க “அங்கே கூடத்துப் பிறையிலே விபூதியிருக்கு எடுத்து இட்டுககோடா ராஜா என்றாள்.
சாதாரணமாக சுந்தாப்பாட்டி சொல்லுவதை நான் தட்டுவது கிடையாது. எழுந்துபோய் விபூதியை எடுத்து ஒருபொட்டு புருவத்தின் மத்தியில் வைத்துக்கொண்டு தான் சாப்பிடத் தொடங்கினேன்.
“விபூதி இட்டுண்டயோ?” என்று கேட்டுக்கொண்டே சுந்தாப்பாட்டி குடமிளகாயைக் கொண்டு வந்து இலையில் போட்டாள்.
சாப்பிட்டுக்கொண்டே நான் கேட்டேன். “ஏன் பாட்டி உனக்குக்கூட பேய் பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா என்ன? சகலமும் தெரிந்தவள் நீ. உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இராது என்று நினைத்தேன் நான்”
எனக்குக் கதை கேட்க ஆசைதான். ஆனால் அந்த இரவு நேரத்தில் சுந்தாப்பாட்டியா பிசாசுக் கதை சொல்ல ஒப்புக் கொண்டு விடுவாள்?
“அதெல்லாம் இருக்கு இல்லை என்கிற நம்பிக்கை எதுக்கடா? பேயிருக்கோ, பிசாசு இருக்குமோ எனக்கு என்ன தெரியும்? ஆனால் அதனால் ஏற்படுகிற பயம் மட்டும் உலகத்தில் இருந்து கொண்டுதானே இருக்கிறது?” என்றாள் சுந்தாப்பாட்டி.
அவள் சொல்வது உண்மைதான். அந்தப் பீதி என்னவோ மறுக்கமுடியாத உண்மைதான். மற்றப்படி பலசாலிகள் தைரியஸ்தர்கள் கூட அந்தப் பீதிக்கும் பலியாகி இருப்பது எனக்கே தெரிகிறதே!
சேணியத் தெருத்தாண்டி அக்கிரஹாரத்துக்கு வருகிற வழியிலே சில வருஷங்களுக்கு முன் ஒரு மரத்தில் ஒருவன் தூக்கிட்டுக் கொண்டு பிணமாகத் தொங்கினானாம். அந்தக் கதையை அன்று கும்பகோணத்திலிருந்து திரும்பும்போது சாமாதான் சொன்னான். பயம் என்று அதிகமாக ஒன்றும் தோன்றாவிட்டாலும் இருவரும் வேறு விஷயங்களைப் பேசிக்கொண்டு அந்த மரத்தண்டை வரும்போது நிமிர்ந்துகூடப் பார்க்காமல்தான் நடந்தோம். அதை நினைத்துக்கொண்டுதான் இப்போது சுந்தாப்பாட்டி சொன்னாள் போலும்.
மேட்டுத் தெருவிலே சென்றவாரம் கூட ஒரு கேஸ் காட்டேரி அடித்துவிட்டது என்று சொன்னார்கள். வஸ்தாது மாதிரி இருப்பான் முத்தையன் என்று ஒரு ஆசாமி திடீரென்று அவன் ஒருநாள் வாயாலும் மூக்காலும் ரத்தத்தைக் கக்கிக்கொண்டு நடுச்சாலையிலே கிடந்தான். அவனைக் காட்டேரி அடித்துவிட்டது என்று சொல்லிக் கொண்டார்கள்.
“என்னவெல்லாமோ கதை சொல்கிறார்களே பாட்டி அதெல்லாம் நிஜம்தானா?” என்று கேட்டேன்.
சுந்தாப்பாட்டி சிறிது தயங்கினாள்: “இப்போ என்னத்துக்கடா அந்தப் பேச்செல்லாம்? ராத்திரி நாழியாச்சு சாப்பிட்டுவிட்டுப் போய்ப் படுத்துக்கோ” என்றாள்.
“ராத்திரியானா என்ன? நான் அப்படி ஒண்ணும் பயப்படமாட்டேன். சொல்லு பாட்டி” என்றேன்.
“சூரப்புலிதான். தெரியுமே!” என்றாள் சுந்தாப்பாட்டி. மேலும் சொன்னாள்: “நீ பயப்படமாட்டே, சரி, சிறிசு அவள் பயப்படுவா…” என்றாள்.
“ராஜியா பயப்படுவாள்! பிறத்தியாரை அவள் பயமுறுத்தாமல் இருந்தாப் போதாதா” என்றேன் நான்.
“என்னத்தையடா சொல்றது! பாட்டி கதை என்பாய் நீ? எனக்கு ஆயிரம் தெரியும். தெரிஞ்சதை எல்லாம் சொல்லிக்கிறதா” என்றாள் சுந்தாப்பாட்டி.
“நடக்காது என்று நாம் நம்புவதை எல்லாம் நடக்க வைக்க முடியும் என்றுதான் உலகத்திலே சொல்லிக் கொள்கிறார்கள். நம்ம ஊரில் மட்டுமில்லை மேல் நாடுகளிலும்கூட…”
“நடப்பது நடக்காதது இருக்கட்டும் நான் ஒரு கதை சொல்றேன். கேளு. நிஜமாக நடந்தது. எனக்கே தெரியும் நேரில் கண்ணால் பார்த்தேன். ஆனால் நீ கேட்டமாதிரிக் கதையில்லை என்றாள் ” சுந்தாப்பாட்டி.
“சொல்லு பாட்டி” என்றேன். சாப்பிட்டுக் கையலம்பி விட்டு வந்து கூடத்தில் ஊஞ்சலில் பாட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். ராஜி தூணில் சாய்ந்துகொண்டு நின்றாள்.
சுந்தாப்பாட்டி சொன்னாள்:
அறுபது எழுபது வருஷங்களுக்கு முன்னால் – அதாவது நான் கலியாணம் செய்துகொண்டு சாத்தனூரில் புக்ககம் புகுந்த காலத்தில் – நடந்த கதை இது.
அப்போது தெருவிலே பாழ் மனைகளே கிடையாது; பத்து பன்னிரண்டு வீடுகள் அதிகமாகக் கூட இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் பெரிய குடும்பமாக ஒன்று இருக்கும். குடும்பத்தில் முக்யமானவர்கள் எல்லோரும் பிழைப்பு நாடி வெளியூர் போகமாட்டார்கள். அந்த நாட்களில் ஊரிலேயேதான் சகலருக்கும் வேலை, பிழைப்பு, ஊதியம் எல்லாம். தெருவிலே வேதகோஷம் நிறைந்திருந்த காலம் அது. காலையிலும் மாலையிலும் கோயிலுக்குப் போவோரும் வருவோருமாக இருக்கும் ஊரிலே அந்த நாளில் தெய்வ சாந்நித்தியம் நிறைந்திருந்த மாதிரிதான் இருந்தது.
தெருவில் அந்நியப் பேர் வந்து குடியேறிவிடத் தெருவார் விடமாட்டார்கள். அதாவது அந்நியப் பேர் என்றால் ஜாதி குலம் மாறுவதை மட்டும் சொல்லவில்லை நான். வீட்டுக்கு வீடு சுற்றிச் சுற்றி வந்து ஏதாவது உறவு சொல்லிக் கொண்டாடுவார்கள். தெருவிலே கல்யாணம் கருமாந்திரம் எதுவானாலும் கலகலவென்று கூட்டமாக இருக்கும். வீட்டிற்குள் போலவே தெருவிலும் குடும்பம். உறவு என்கிற நெருக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெருவார் நினைத்திருந்த காலம் அது.
உறவு போக்குவரத்து சௌஜன்யம் எல்லாம் எவ்வளவுதான் இருந்தாலும் எப்பொழுதாவது ஒரு சமயம் ஒரு தெருவிலே இரு குடும்பத்தாருக்குள் சண்டை வந்துவிடும். கால் காசு பெறாத காரணம்தான் என்றாலும் விஷயம் பெரிதாக வளர்ந்து விரோதம் முற்றிவிடும். பேச்சுவார்த்தை பூரணமாக அற்று விடும்; நல்லது கெட்டது என்றால் கூட பரஸ்பரம் கூட உதவி செய்து கொள்வது நின்றுவிடும். சம்பந்தம் விட்டுப் போய்விட்டது என்றால், வெட்டுப் பழி குத்துப்பழிதான். எவ்வளவு நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் ஒருவரை ஒருவர் திரும்பிக் கூடப் பார்த்துக் கொள்ளமாட்டார்கள்.
இப்படிப்பட்ட விரோதம் ராஜு சாஸ்திரிகளுக்கும் கிட்டாவையருக்கும். அவர்களுடைய விரோதத்திற்குக் காரணம் எல்லாம் என் காலத்துக்கு முந்தி; அதனால் அதைப் பற்றி எனக்குச் சரிவர தெரியாது.
ராஜு சாஸ்திரிகள் நல்ல சொத்துள்ளவர்; முரட்டுப் பணக்காரர். ஆகவே தெருவிலே அவருக்கு நல்ல செல்வாக்கு. எல்லாக் காரியங்களையும் அவர்தான் முன்நின்று நடத்துவார். அதிகமாக அடாபிடி செய்யமாட்டார். கூடிய வரையில் எல்லோருக்கும் நல்லவராக இருக்கத்தான் முயலுவார்.
கிட்டாவையர் அவருடைய இரண்டுவிட்ட தம்பி- அதாவது ராஜு சாஸ்திரிகளின் தாத்தாவும். கிட்டாவையருடைய தாத்தாவும்
அண்ணன் தம்பிகள் கிட்டாவையர் அவ்வளவாகச் சொத்தில்லாதவர். பணக்காரரல்லவே தவிர, போதுமானது இருந்தது. நியம நிஷ்டைகள் தவறாதவர். வீட்டிலே பூஜைகளெல்லாம் அமர்க்களப்படும். வாலிபத்தில் பல ஊர்களில் சுற்றித் திரிந்தவர். மலையாளப் பக்கத்தில் யாரோ ஒரு சாமியாருடன் கூடிக் கொண்டு மந்திரம் தந்திரம் ரஸவாதம் எல்லாம் படித்தவர் என்று சொல்லிக் கொள்வார்கள். பில்லி சூனியம், ஏவலாதிகளிலெல்லாம் கெட்டிக்காரர் என்று ஜனங்கள் ரகசியத்தில் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அவருடைய கலைக்கு அப்படி ஒன்றும் சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்திலே இடம் கிடைத்ததில்லை.
நான் சாத்தனூர் வந்த வருஷமோ அதற்கு அடுத்த வருஷமோ ராஜு சாஸ்திரிகள் வீட்டில் ஒரு கல்யாணம் வந்தது. அவருடைய இரண்டாவது பெண் தர்மிக்குக் கல்யாணம் என்று ஞாபகம். நல்ல இடத்தில் பெண்கொடுக்க ஏற்பாடாகியிருந்தது. கல்யாணம் நாலு நாள் விமரிசையாக நடக்க ஏற்பாடாகி விட்டது.
தெருவிலே ராஜு சாஸ்திரிகளுக்கும் கிட்டாவையருக்கும் சமரசம் செய்து வைக்க, இந்தக் கல்யாணத்தை முன்னிட்டுப் பல முயற்சிகள் நடைபெற்றன. சமரஸத்துக்குக் காரணமாக முன்னின்று சிரமப்பட்டவர்களிலே உங்க தாத்தாவும் ஒருவர்.
கிட்டாவையர் ஆட்சேபிக்கவில்லை “அண்ணாவிடம் எனக்கென்ன விரோதம்? கூப்பிட்டால் நான் வந்துவிடுகிறேன். தர்மு கல்யாணம்னா என் பெண்ணின் கல்யாணமில்லையா?” என்று
முதலிலேயே சொல்லிவிட்டார் கிட்டாவையர்.
ராஜு சாஸ்திரிகள்தான் அசைந்து கொடுக்கவில்லை. அது பணத்திமிரோ; அல்லது சுபாவமாகிவிட்ட ஒரு அலட்சியமோ அல்லது அசட்டு மனைவியின் துர்போதனையால் ஏற்பட்ட ஒரு அர்த்தமற்ற பிடிவாதமோ? காரணம் எதுவானால் என்ன? கிட்டாவையரைக் கல்யாணத்திற்கு ராஜு சாஸ்திரிகள் கூப்பிடவில்லை. கிட்டாவையரின் குடும்பத்தாரையும் யாரும் போய் அழைக்கவில்லை.
கல்யாண தினத்தன்று தெருவும் ஊரும் திரண்டு வந்திருந்தது. தெருவில் இரண்டு மூன்று வீடுகளை அடைத்துப் பந்தல் போட்டிருந்தார்கள். ஆண், பெண் அடங்கலும் ஆயிரம் பேருக்கு மேல் முகூர்த்த தாம்பூலம் வாங்கிக்கொள்ள ராஜு சாஸ்திரிகள் வீட்டுக் கூடத்திலும் திண்ணையிலும் கூடியிருந்தார்கள். தெருவும் ஊர் பூராவுமே அங்குதான் இருந்தது கிட்டாவையரையும் அவர் குடும்பத்தையும் தவிர.
பத்துப் பன்னிரண்டு நாழிகைக்கு மேல் முகூர்த்தம் அது. முகூர்த்தம் நடந்த சமயத்தில் கிட்டாவையர் கல்யாண வீட்டிற்கு எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் தன் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டார். கையில் ஒரு விசிறியுடன் தூணில் சாய்ந்து கொண்டிருந்தார். ஓலைப்பெட்டியிலிருந்த தாம்பூலத்தை எடுத்துத் தரித்துக் கொண்டு கல்யாண வீட்டிற்கு யார் யார் வந்திருக்கிறார்கள், வருகிறார்கள், போகிறார்கள் என்று கவனித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரிடம் ஒன்றிரண்டு பேர் கல்யாண வீட்டிற்குப் போவதற்கு முன் நின்று பேசிவிட்டுக் கூடப்போனார்கள். ஒரு சிலர் உள்ளே போய்விட்டு வந்து அவருடன் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.
கெட்டிமேளம் கொட்டியது. பெண்ணின் கழுத்தில் தாலியேறிவிட்டது. மற்ற காரியங்கள் நடந்து கொண்டிருக்கையில் சபைக்கு சந்தனம், சர்க்கரை, வெற்றிலை பாக்கு வழங்கப்பட்டது. பாதிக்குமேல் வழங்கியிருப்பார்கள்; மறுபாதிக்கு வெற்றிலை பாக்குத் தட்டில் அடுக்கி வைத்திருந்தார்கள்.
திடீரென்று சபை அல்லோலகல்லோலப்பட்டது. சபையில் இருந்தவர்களில் பலர் திடுதிடுவென்று வெளியே ஓடிவரத் தலைப்பட்டார்கள். ஒருசிலர் கூச்சலிட்டார்கள். ஒருசிலர் என்ன என்ன என்றார்கள் இப்படியாகக் கல்யாண வீட்டிலே ஏகப்பட்ட அமர்க்களம்.
எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த கிட்டாவையர் விசிறியைக் கீழே வைத்துவிட்டு ஓலைப் பெட்டியிலிருந்து வெற்றிலை எடுத்துச் சுண்ணாம்பு தடவிப் போட்டுக் கொண்டார். மறுபடியும் ஒரு தடவை கூட இருந்த இரண்டொரு கல்யாண விருந்தாளிகளுடன் ஏதோ சாவதானமாய்ப் பேசிக்கொண்டிருந்தார்.
கல்யாண வீட்டில் அமர்க்களத்திற்கெல்லாம் இதுதான் காரணம். சபா தாம்பூலத்தில் வழங்கிய வெற்றிலையில் வைத்திருந்த பாக்கெல்லாம் திடீரென்று தேளாக மாறிவிட்டது. கையில் தாம்பூலத்தை வாங்கியவர்கள். “ஐயோ தேள்” என்று கீழே போட்டார்கள். ஏற்கெனவே கையில் தாம்பூலத்தை வாங்கி வைத்துக் கொண்டிருந்தவர்கள் கையில் ஏதோ நகருவதை உணர்ந்து பார்த்துத் “தேள்! தேள் !” என்று பதறினார்கள். கல்யாண வீடெங்கும் பார்த்த இடம் எல்லாம் தேளாக நிறைந்துவிட்டது.
ஒரு பத்து நிமிஷம் அமர்க்களம் சொல்லி மாளாது. அங்கிருந்து எல்லோரும் ஏக காலத்தில் வெளியேற முயற்சித்தார்கள்.
இதெல்லாம் எப்படி முடிந்திருக்குமோ சொல்ல முடியாது. ஆனால் மணக் கோலத்துடன் தர்மியே வெளியே வந்து எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த கிட்டாவையருக்கு நமஸ்காரம் பண்ணி “என் கல்யாணத்திலே இப்படி எல்லாம் நீ நடக்க விடலாமா சித்தப்பா?” என்று கேட்டாள்.
தர்மி எவ்வளவோ துடுக்கான பெண் அவளுக்குத் தோன்றிய சமயோசித புத்தி அவள் தகப்பனாருக்கு அது வரையில் தோன்றவில்லை. அப்போது அவளுக்கு வயசு பத்திருக்கும், அல்லது பதினொன்றிருக்கும். இத்தனைக்கும் காரணம் தன் சித்தப்பாதான் என்று அவள் ஒரு நொடியில் புரிந்து கொண்டுவிட்டாள்.
கிட்டாவையர் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே “என்னடி தர்மி? என்ன இப்ப நடந்துடுத்து?” என்றார்.
பிறகு “உன்னைக் கைப்பிடிச்சவன் எங்கேடி? அவனையும் நான் பார்க்கணுமே” என்றார்.
யாரோ போய் மணமகனையும் அழைத்து வந்தார்கள். அவனும் கிட்டாவையருக்கு நமஸ்காரம் பண்ணினான். இருவரையும் ஆசீர்வதித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பி விட்டார் கிட்டாவையார்.
ராஜு சாஸ்திரிகளின் வீடு பூராவும் நிறைந்து. நெளிந்த தேள்களெல்லாம் எங்கேயோ மாயமாக மறைந்து விட்டன. கல்யாணம் சுபமே நிறைவேறியது.
பிறகு ராஜு சாஸ்திரிகளே நேரில் போய்க் கிட்டாவையரையும் அவர் பொண்டாட்டி குழந்தை குட்டிகளையும் அழைத்தார். ஆனால் கிட்டாவையர் “வரேன் போ அண்ணா” என்று சொன்னாரே தவிர கல்யாணத்திற்குப் போகவில்லை. அதற்குப் பிறகும் ராஜு சாஸ்திரிகளிடம் அவர் உறவாடவில்லை.
சுந்தாப்பாட்டி கதையை முடித்துவிட்டுச் சொன்னாள்: “அதில் விசேஷம் என்னவென்றால் அத்தனை தேளுமாகச் சேர்ந்து எல்லோரையும் கொட்டவில்லை அது விசேஷம்தானே!”
“ஏன் பாட்டி? பிசாசுக் கதை சொல்றேன்னு ஏதோ வேடிக்கைக் கதை சொல்லிவிட்டாயே?” என்றேன் நான்.
“உனக்கு இப்ப நான் சொல்றச்சே வேடிக்கையாக இருக்கு. அந்தக் கல்யாணத்திலே போய் முகூர்த்த தாம்பூலம் கையில் வாங்கிண்டு பாக்குன்னு பார்க்கறச்சே கையில் தேள் நெளியறதைப் பார்த்திருந்தால் தெரியும்?” என்றாள் சுந்தாப்பாட்டி.
“நீ பார்த்தயோ?”
“நான் பார்த்தேன். உன் தாத்தாவும் பார்த்தார்…” என்றாள் பாட்டி.
“வெறும் மனப்பிராந்திதான்” என்றேன் நான்.
“உனக்கும் எனக்கும் புரியாத விஷயம் உலகிலே எத்தனையோ இருக்குடா, ராஜா.” என்றாள் பாட்டி.
“புரிஞ்சுக்க முயல வேண்டாமா?”
“புரிஞ்சுக்க முடியாது” என்றாள் சுந்தாப்பாட்டி தீர்மானமாக.
இத்தனை நேரமும் மௌனமாக நின்ற ராஜி பதட்டமாக “ஐயோ தேளு” என்றாள்.
“பயந்தாங்கொள்ளி!” என்று கேலி செய்துகொண்டே அவள் பக்கம் திரும்பிப் பார்த்தேன் நான்.
கைவிளக்கின் ஒளி வட்டத்தின் ஓரத்திலே ஒரு பெரிய தேள் உண்மையிலேயே தெரிந்தது. அதை அடிக்க எழுந்தேன்.
“அடிக்காதே?” என்றாள் சுந்தாப்பாட்டி. “அது என் கதைக்கு சாக்ஷி சொல்ல வந்தது. கொட்டாது தானாகப் போய்விடும்” என்றாள்.
எனக்குப் புரியத்தானில்லை!
– 1943