கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,208 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

மனம் பொறிவழிகளிற் செல்லாதபடி தடுத்துத் தமக்கு நேர்ந்த துன்பங்களைப் பொறுத்துப் பிறர்க்குரிய நன்மைகளைச் செய்தல்

சமண சமயத்திலிருந்து சைவ சமயத்தை அடைந்து வயிற்றுவலி நீங்கி வீரட்டானத்துறையும் அம்மானுக்கு அடிமை ஆனார் நாவுக்கரசர். இவ்விதம் அடிமை பூண்டு இவர் தவம் செய்தார். அச் சமயம், சமணர்கள் நீற்றறையிலிட்டார்கள்; சாகாததுகண்டு நஞ்சுகலந்த சோற்றை உண்ணச்செய்தார்கள்; மேலும் உயிரோடு இருக்கக் குழியில் புதைத்து யானையைவிட்டு மிதிக்கச்செய்தார்கள்; பின் கல்லோடுகட்டிக் கடலிலும் போட்டார்கள். இவ்விதம் தவம்செய்யும் இவருக்கு மேலும் மேலும் துன்பம் வந்து வருத்தியதால் இவர் உண்மை ஞான ஒளியை அடைந்தார். இவ்வொளிக்குப் பயந்து துன்பம் செய்த மகேந்திரபல்லவனும் சைவனாகி இவர் பாதத்தை வணங்கி வழிபட்டு வாழலானான். வள்ளுவரும் “புடத்தில் வைத்துச் சுடச்சுடப் பிரகாசிக்கும் பொன்னைப்போல துன்பம் மேலும் மேலும் வந்து வருத்த தவம் செய்பவர்க்கு ஞான ஒளி வீசும்” என்று கூறியுள்ளார்.

சுடச்சுடரும் பொன் போல் ஒளிவிடும்; துன்பம்
சுடச்சுட நோக்கிற் பவர்க்கு.

சுடச் சுடரும் = (புடத்தில் வைத்து) – சுடச் சுடப் பிரகாசிக்கும்
பொன் போல் = பொன்னைப் போல
நோக்கிற்பவர்க்கு = தவம் செய்ய வல்லவர்க்கு
துன்பம் = அதனால் ஏற்படும் துன்பம்
சுடச் சுட = வருத்த, வருத்த
ஒளிவிடும் = அறிவுஒளி மிகுந்து விளங்கும்.

கருத்து : துன்பம் மிக, மிக வருத்தினால் தவம் செய் வோர்க்கு அறிவுமிகும்.

கேள்வி: “சுடச்சுடரும் பொன் போல்” என்ற உவமை விளக்கும் நீதி என்ன?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *