கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,213 
 
 

தைப்பூசத் திருவிழா! எல்லாக் கோவில்களில் இருந்தும் காவிரி ஆற்றுக்குச் சுவாமி புறப்பாடு உண்டு. திருச்சி, பூலோகநாதர் சுவாமி கோவிலிலிருந்தும் சுவாமி புறப்பட்டது. நானும் என் தமையனார் ஒருவரும், கொடியைச் சுருட்டி சுவாமி கூடவே தூக்கிக் கொண்டு சென்றோம். அன்று அதற்குக் கூலி அரையணா; இன்றைய மூன்று காசு. ஆற்றுக்குப் போய்த் திரும்பவும் கோயிலுக்குக் கொடியைக் கொண்டு வந்து சேர்த்தோம் அப்போது மாலை மணி ஏழு இருக்கும். எங்களுக்கு இன்னும் காசு தரவில்லை யாதலால் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அந்தச் சமயம், கோவிலில் எரியும் விளக்கு அணையும் நிலையிலிருப்பதைப் பார்த்த என் தமையன், சென்று அதைத் தூண்டிவிட்டார்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த என் தந்தை, அவரை ஓங்கி முதுகில் ஒர் அறை அறைந்தார், அடி பட்ட அண்ணன் விபரம் தெரியாமல் திடுக்கிட்டு விழித்தார்.

பக்கத்திலிருந்த ஒருவர், என் தந்தையிடம்— “பையனை ஏன் அடித்தீர்கள்?” அவன் விளக்கைத் தூண்டியது தவறா?” என்று கேட்டார்.

அதற்குத் தந்தை, “விளக்கைத் தூண்டியது குற்றமில்லை; அதைக் குச்சியால் அல்லவா தூண்ட வேண்டும், பிறகு அதையும் அந்த விளக்கிலேயே வைத்துவிட வேண்டும். இவன் விரலால் தூண்டிவிட்டுக் கையைத் தலையிலே தடவிக்கொண்டானே! அது கோவில் எண்ணெய் அல்லவா? ‘சிவன் சொத்து குல நாசம்’ என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” என்றார்.

எங்களுக்கு அன்று இந்தச் சம்பவம் ஒரு படிப்பினையாக அமைந்தது.

இன்று? திருக்கோயில் சொத்துக்களையே தம் சொத்தாக நினைத்து வாழ்க்கையை நடத்துகிற அன்பர்களுக்கெல்லாம், இது பயன்படுமானால் நான் பெரிதும் மகிழ்வேன்.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *