(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பக்தர் ஒருவர் , பலரிடம் பொருள் ஈட்டி , ஒரு கோவிலைக் கட்டலாம் என்று எண்ணினார். தம்முடைய கருத்தைப் பல செல்வர்களிடம் கூறி, அவர்களால் இயன்றதைக் கொடுக்கும்படிக் கூறி னார். அப்படி அவர்கள் கொடுத்ததைச் சேர்த்து வந்தார்.
அந்த ஊரில் ஒரு கஞ்ச மகாப்பிரபு இருந் தார். அவரிடமும் போகலாம் என்று அந்தத் தோண்டர் முடிவு செய்து கொண்டார். ஒரு நாள் தம் முடிவின்படி அந்தக் கஞ்சன் வீட்டிற்கும் போனார். அவரைப் பார்த்துக் கஞ்சன், “எங்கே வந்தாய்?” என்று கேட்டான். “நான் பலரு டைய நிதி உதவியால் ஒரு கோவில் கட்டலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
அந்தக் கஞ்சன், “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான், தங்களிடமும் நிதி உதவி பெறலாம் என்ற எண்ணத்தில் வந்தேன்” என்று அந்தத் தொண்டர் கூறினார். அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு தராத அந்தக் கஞ்சன். “இங்கே என்ன பிள்ளையில்லாச் சொத்தா கொட்டிக் கிடக்கிறது? நான் ஒரு தம்படியும் தர மாட்டேன்” என்று முகத்திலடித் தாற்போல் சொன்னான்.
தொண்டர் அதை கேட்டுத் திரும்பிப் போக வில்லை . “ஐயா, ஒடு சமாசாரம், தயவு செய்து பொறுமையாகக் கேளுங்கள் நாளைக்கு ஒரு சபையைக் கூட்டப் போகிறேன் அதற்கு நீங்களும் வாருங்கள். பணம் கொடுத்தவர்களுடைய பெயர்களை எல்லாம் சொல்லுவேன். நீங்கள் ஓர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அதைச் சபையோரிடம் காட்டி நீங்கள் தந்ததாகச் சொல்லிப் பாராட்டுவேன்” என்றார்.
அதற்கு அந்தக் கஞ்சன் இடையில் குறிக்கிட்டு, “நான் ஆயிரம் ரூபாய் தரப் போவதில்லை உனக்கு வேறு வேலை இல்லையா? உடனே ஓடிப்போ” என்றான்.
அந்தத் தொண்டர் அவன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து “ஐயா, நான் ஒன்று சொல்கிறேன் பொறுமையாகக் கேளுங்கள். நீங்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாயை மறுநாளே உங்களிடம் திருப்பித்தந்து விடுகிறேன். அந்த ஆயிரம் ரூபாயைச் சபையோர் முன் காட்டினால் பலர் நிதியுதவி செய்ய முன் வருவார்கள்” என்றார்.
அந்த லோபி சிறிது யோசித்தான். “நீ திருப்பித் தருவாய் என்பது என்ன நிச்சயம்?” என்றான். “என் தலைமேல் ஆணையாகவும், நான் கட்டும் கோயிலுள்ள சாமியின் மேல் ஆணையாகவும் கூறுகிறேன் நிச்சயமாக உங்கள் பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன். தாங்களும் தயவு செய்து நாளை நடக்கும் கூட்டத்திற்கு வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அந்தக் கஞ்சன் சிறிது நேரம் தயங்கினாலும் அப்பால் சிறிது தெளிவு பெற்று ஆயிரம் ருபாயைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான்.
அந்தத் தொண்டர் அதை வாங்கிக் கொண்டு மறு முறை அவருக்கு நன்றி கூறிவிட்டு, தவறாமல் கூட்டத்திற்கு வரும்படிக் கூறி விடை பெற்றுக் கொண்டார்.
மறு நாள் கூட்டம் நடந்தது. அந்தத் தொண்டர் பணம் கொடுத்தவர்களின் பெயர்களை எல்லாம் சொன்ன போதும், அந்தக் கஞ்சனின் பெயரும் அதில் வந்தது. அதைக் கேட்டு எல்லோரும் ஆச்சரியம் அடைந்தார்கள். பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியைச் செய்தார்கள். கூட்டத்திற்கு லோபியும் வந்திருந்தான்.
அடுத்த நாள், தொண்டர் ஆயிரம் ரூபாயுடன் லோபியின் வீட்டை அடைந்தார். “ஐயா, நீங்கள் பெரிய உபகாரம் செய்தீர்கள். என்னை நம்பி ஆயிரம் குபாய் கொடுத்தீர்கள். நான் என்னுடைய வார்த்தை தவறாமல் இதைத் திருப்பிக் கொடுக்க வந்திருக்கிறேன்” என்றான்.
லோபி, மறு மொழி ஒன்றும் கூறாமல் உள்ளே சென்று, மற்றொர் ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு வந்து தொண்டரிடம் கொடுத்தார். தொண்டருக்கு ஒரே பிரமிப்பாய் இருந்தது. “என்ன இது” என்றார். “நேற்று நீ அந்தக் கூட்டத்தில் நான் பணம் கொடுத்ததைச் சொன்ன பொழுது எல்லோரும் என்னையே பார்த்தார்கள். கூட்டம் முடிந்த பிறகு எல்லோரும் என்னிடம் வந்து என் கைகளைக் குலுக்கிப் பாராட்டினார்கள். அப்பொழுது எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. என்னுடைய திருமணத்தின் பொழுது கூட நான் இத்துணை மகிழ்ச்சி அடைந்தது இல்லை. ‘கொடுப்பதனால் இன்பம் உண்டாகும்’ என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். அதற்காக மற்றோர் ஆயிரம் ரூபாயைக் கொடுத்தேன்” என்றான். தொண்டர் அதைப் பெற்றுக் கொண்டு, அவனிடம் விடை பெற்றுச் சென்றார்.
“ஈத்துவக்கும் இன்பம் அறியா கொல் தம் உடைமை
வைத்து இழக்கும் வண்கணவர்”
– திருக்குறள்
– கிழவியின் தந்திரம் (சிறுகதைத் தொகுப்பு),முதற் பதிப்பு: ஜூலை 1988, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.