கதிரவன் எட்டம் வகுப்பு படிக்கும் மாணவன். மிகவும் அறிவாளி. பள்ளியில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் பரிசைத் தட்டிச் சென்று விடுவான். குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகியவற்றின்போது மேடையில் அவனது திறமை நன்கு வெளிப்படும்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் தலைமையாசிரியர், “சுதந்திர தின விழாவிற்கு அனைத்து மாணவர்களும் கட்டாயம் வரவேண்டும். தவறினால் கடும் தண்டனை கிடைக்கும்’ என்று அறிவித்தார்.
மறுநாள் – சுதந்திர தின விழா. அனைத்து மாணவர்களும் வந்துவிட்டனர். ஆனால் அனைத்து விழாக்களுக்கும் தவறாது வரும் கதிரவன் அன்று வரவில்லை. இது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
மறுநாள், கதிரவனைத் தலைமையாசிரியர் அழைத்து கோபத்துடன், “நான் அவ்வளவு சொல்லியும் நீ ஏன் வரவில்லை? சுதந்திர தினக் கொண்டாட்டம், நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் அல்லவா, நாம் பழைய சரித்திரங்களை மறக்கலாமா? மறவாதிருந்தால்தானே நாமும் நமது நாட்டிற்காகப் பாடுபட முடியும்! நீ வராததற்கு உண்மையான காரணத்தைச் சொல்லாவிடில் கடும் தண்டனை தருவேன்!’ என்றார்.
கதிரவன் அமைதியாக, “ஐயா, நீங்கள் கூறிய காரணத்திற்காகத்தான் நான் வரவில்லை!’ என்று கூறினான்.
தலைமையாசிரியர் “விளக்கமாகக் கூறு!’ என்றார்.
கதிரவன் தொடர்ந்தான் – “ஐயா, நீங்கள் செய்தித்தாளில் படித்திருப்பீர்கள். நேற்று எழும்பூர் இரயில் நிலையத்தில் 156 ஆண்டுகள் பழைமையான நீராவி எஞ்சினைப் பொதுமக்களுக்காக கிண்டி வரை ஓட்டிக் காண்பிக்கப் போகிறார்கள் என்று! அதைக் காணத்தான் சென்றேன். வெறுமனே வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல. 156 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இரயில் எஞ்சினையும் இப்போது இருக்கும் இரயில் எஞ்சினையும் ஒப்பிட்டுப் பார்த்து நமது நாடு எந்த அளவு முன்னேறியிருக்கிறது? அந்த அளவு வருங்காலத்தில் முன்னேற நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை நமது பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதைக் காணச் சென்றேன். அந்த எஞ்சினைப் பல கோணங்களில் எனது தந்தையார் புகைப்படம் எடுத்துள்ளார். அதை நமது மாணவர்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். இந்த நிகழ்ச்சி சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்டதால் என்னால் பள்ளிக்கு வர இயலவில்லை! நான் செய்தது தவறா?’
இதைக் கேட்ட தலைமையாசிரியர் மனம் நெகிழ்ந்து, “இல்லை, கதிரவா, நீ செய்தது சிறப்பான செயல்தான். வெறும் கொடி மட்டும் ஏற்றிவிட்டுப் பழைய பெருமைகளைப் பேசுவதில் பயனில்லை என்று உணர்ந்து கொண்டேன். இனி நமது பள்ளியில் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் கொடியேற்றிய பின், ஒவ்வொரு துறையிலும் நமது நாடு எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை மாணவர்களுக்கு விளக்க, படக்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப் போகிறேன்’ என்றார்.
தனது செயல் நல்லதொரு திட்டத்திற்கு மூலகாரணமாகியதை எண்ணி கதிரவன் பெருமை அடைந்தான்.
– வி.பி.ஸ்ரீநிவாசன் (அக்டோபர் 2011)