முன்னொரு காலத்தில் அண்ணன் தம்பிகளான சந்திரனும், சூரியனும், காற்றும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் தாயான நட்சத்திரத்திடம் சித்தியான இடியும், மின்னலும் வந்தனர்.
“”நட்சத்திரமே! நாங்கள் இன்று தேவலோகத்தில் விருந்துக்கு போகிறோம். எங்களுடன் உனது பிள்ளைகளான சூரியன், சந்திரன், காற்று ஆகியோரைக் கூட்டி போய் வருறோமே,” என்று கேட்டனர்.
“சரி! கூட்டிப் போங்கள். என் பிள்ளைகள் பத்திரம்!” என்று கூறி அனுப்பினாள். விருந்திற்குப் போனவர்களுக்கு வகை வகையான உணவு பரிமாறப்பட்டது. சூரியனும், காற்றும் தனது தாயாகிய நட்சத்திரத்தை மறந்தே போய் விட்டனர்.
வகை வகையான உணவை வாரி வாரி உண்டனர். பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர். ஆனால், சந்திரனோ ஒரு சின்ன துணியை எடுத்து வந்து அதில் தனக்கு வைத்த உணவில் சிறிது சிறிதாக தனது தாய்க்காக எடுத்துப் போட்டு கட்டி ஒரு கையில் எடுத்துக் கொண்டான்.
இரவு நேரம் நெருங்கவே தனது பிள்ளைகள் வரவில்லையே என்று ஏங்கியபடி தாயாகிய நட்சத்திரம் பிரகாசமாக வெளிச்சம் காட்டியபடி வானத்தில் நின்றாள். ஒரு வழியாக வீட்டிற்கு வந்த தன் பிள்ளைகளை வாரி அணைத்து முத்தமிட்டாள்.
“எங்கெங்கு போனீர்கள்? என்னென்ன சாப்பிட்டீர்கள்?” என்று மூவரிடமும் கேட்டாள்.
சூரியனும், காற்றும், சந்திரனும் எல்லாவற்றையும் கூறினர். உடனே நட்சத்திரம் தனது மூத்த மகனான சூரியனிடம், “”மகனே! நீ எனக்காக என்ன கொண்டு வந்தாய்?” என்று கேட்டாள். அதற்கு சூரியன், “”அம்மா! நான் போகுமிடத்தில் விளையாடிக் கொண்டும், கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டும் இருப்பேனா? இல்லை உன்னை நினைத்து உனக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவேனா? நீ சரியான முட்டாள்!” என்று கூறினான்.
அடுத்ததாகக் காற்றிடம், “”எனக்காக நீ என்ன கொண்டு வந்தாய் மகனே?” என்று கேட்டாள் தாயாகிய நட்சத்திரம்.
“என்னம்மா! இப்படி போகுமிடத்தில் இருந்து உனக்கு ஏதாவது கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்காதே! நாங்கள் விளையாடுவோம், சாப்பிடுவோம். உன்னை நினைத்து உணவை கொண்டு வருவதெல்லாம் நடக்காது. புரிந்ததா?” என்றான் கடுகடுப்புடன்.
மூன்றாவதாக தனது கடைசி மகனான சந்திரனிடம், “”மகனே! நீயாவது எனக்கு எதையாவது சாப்பிடக் கொண்டு வந்தாயா?” என்று கேட்டது.
அதற்கு சந்திரன், “”அம்மா! இந்தா ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து இந்த துணியில் கட்டி வைத்துள்ள உணவை எடுத்துக் கொள். எனக்கு வைத்த உணவில் உனக்குக் கொஞ்சம் நான் கொண்டு வந்தேன் சாப்பிடம்மா,” என்று அன்புடன் கூறினான். அது கேட்ட கேட்ட தாயின் மனது குளிர்ந்தது. “”மகனே! இங்கே வா!” என்று கூறி சந்திரன் கொண்டு வந்த உணவை அள்ளி அள்ளி அவனுக்கே ஊட்டி விட்டது.
“நீ கூறிய வார்த்தைகளால் என் மனது குளிர்ந்தது. வயிறு நிறைந்துவிட்டது,” என்று கூறி மகளை அணைத்துக் கொண்டாள். பின்பு, மூத்த மகனாகிய சூரியனைப் பார்த்து, “”மூட மகனே! தாயை மறந்துவிட்டு மகிழ்ச்சியையும், பொருட்களையும் நீ மட்டும் அனுபவிக்க நினைக்கிறாயே! இது தவறல்லவா? உன் தவறு உனக்குப் புரிய வேண்டுமல்லவா? எனவே, இன்று முதல் நீ எப்போதும் நெருப்பாகவே தகித்துக் கொண்டே இரு.
“”இதனால் உன்னை உலக மக்கள் கொடியவன், வெப்பக்காரன், என்றெல்லாம் ஏசுவர். உன்னைக் கண்டு ஒதுங்குவர். அதே போல காற்றாகிய நீயும் தாயின் மனதை வேதனை செய்ததற்காகத் கோடை காலத்தில் அனல் காற்றாக மாறி விடுவாய். உன்னையும் மக்கள் வெறுத்துப் பழிப்பர்,” என்று சாபமிட்டாள்.
பின்பு சந்திரனிடம், “”மகனே! நீ உன் இன்பமான நேரத்திலும் என்னை மனதில் நினைத்தாயல்லவா? அதனால் என் மனது குளிர்ந்தது. என் குளிர்ந்த மனதின் காரணமாக இனி நீயும் எப்போதும் குளிர்ச்சியாகவே இரு. உன்னை ஊரும், உலகமும், பெரியோரும், சிறியோரும் விரும்பிப் பார்த்து வரவேற்று மகிழ்வர். தாய் மகிழ்ச் சியை நீ நினைத்ததால் நீ என்றும் மகிழ்வோடு இருப்பாய். உன்னை உலக மக்கள் எல்லாரும் மிகவும் விரும்புவர்!” என்று வாழ்த்தியது.
குட்டீஸ்… இந்தக் கதையால் என்ன புரிந்து கொண்டீர்கள்? நம்மைப் பெற்ற தாயாருக்கு நாம் செய்யும் எந்தக் காரியமும் மகிழ்வும் சந்தோஷமும் தர வேண்டும். அவர்கள் நாம் தந்துதான் எதையும் அனுப விக்க வேண்டும் என்பதில்லை என்றாலும் எதையும் நாம் தரும் போது அதனால் அவர்களின் பெற்ற மனம் மகிழ்வடையும். நமக்கு அதனால் நல்ல வாழ்வு அமையும்.