குறிப்பறிதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,546 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

பிறர் எண்ணத்தை அவர் கூறுமுன்னமே குறிப்பினாலறிதல்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சியகிள்ளி வளவ னின், உறையூர் சபையில் தானும், புலவர் கோவூர் கிழாரும் மற்றைய மந்திரிகளும் சூழ இருந்தான். அச்சமயம் எதிரில் நின்ற மதம் கொண்ட யானையின் காலில் இட்டு அழிக்கும்படியாக மலையமான் மக்கள் கொண்டுவரப்பட்டனர். அக்குழந்தைகள் வரும் போது அழுது கொண்டே வந்தவை, யானையைக் கண்டு முகம் மலர்ந்து சிரிக்கலாயின. இதை அவையில் உள்ள அனைவரும் கண்டனர். உடனே புலவர் வளவனை நோக்கி ‘அரசே! வாடி அழுத முகத்துடன் வந்த இக்குழந்தைகள் உம்மைக் கண்டு சிரிப்பதைப் பார்த்தீரா! இவ்விதம், தண்டனை அடைந்த எதிரியை அழிக்க ஆரம்பித்தால் அவன் சிரிப்பானா? இக் குழந்தையின் முகமலர்ச்சியே இக்குழந்தைகள் உமக்கு எதிரியில்லை என்பதை விளக்கவில்லையா?’ என்றார். ஆம், புலவீர்! “இக்குழந்தைகள் என் பகையில்லை. என் நண்பர்கள். இவற்றை யானை காலில் இடாதீர்கள்” என்று உத்தரவளித்தான். குழந்தைகள் இன்பமாக வாழலாயின. சபையில் உள்ள ஏனையோரும், “முகமே ஒருவர் மீதுள்ள வெறுப்பையும் விருப்பத்தையும் அறிந்து முற்பட்டு நின்று காட்டும் கருவியாகும். ஆதலால் முகத்தைப் போல ‘அறிவு மிக்கது வேறு எதுவும் இல்லை. இக்குழந்தைகளின் முகமலர்ச்சியே அரசனை அன்பு உள்ளவனாக்கி இவர்களைக் காத்தது” என்று புகழ்ந்தார்கள். இக்கருத்தை இக்குறளும் அறிவிக்கிறது.

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ ; உவப்பினும்
காயினும் தான்முந் துறும் (53)

உவப்பினும் = (உயிரானது ஒருவனை) விரும்பினாலும்

காயினும் = வெறுத்தாலும்

தான் = தான் தெரிந்து

முந்துறும் = அவ்விரண்டிலும் கெஞ்சுக்கு முன்பே தெரிவிக்கும். ஆதலால்

முகம் போல = முகத்தைப்போல

முதுக்குறைந்தது = அறிவுமிக்கது

உண்டோ = வேறு உளதோ? இல்லை.

கருத்து: உயிர் விரும்பினாலும், வெறுத்தாலும் அவற்றை முகம் வெளிப்படுத்துதலால் முகத்தைப்போல் அறிவு மிக்கது இல்லை.

கேள்வி: ஒருவனது முகம் எவற்றை அறிவிக்கும்?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *