ஸ்கூல் ஒர்க், ஹோம் ஒர்க் முடிக்கவே கஷ்டமா இருக்கு. இவங்கள்லாம் பாருங்களேன்… சின்ன வயசிலேயே ராஜா ஆகி, எவ்வளவு பெரிய காரியங்களை எல்லாம் சாதிச்சிருக்காங்க..!
மொகலாயப் பேரசர்களில் முதன்மையானவர் பாபர். பாபரின் தந்தை பர்கானா என்னும் குட்டி நாட்டின் மன்னர். அவர் ஒரு நாள் உயரமான இடத்தில் நின்றுகொண்டு இருக்கும்போது பாறை சரிந்து, விழுந்து உயிர் துறந்தார். பாபர், 11 வயதிலேயே பாட்டியின் உதவியுடன் அரியணை ஏறினார். தாய்மாமன்களும் சித்தப்பாக்களும் மாறி மாறிப் படை எடுத்ததால் தன் ராஜ்யத்தை இழந்தார்.
பிறகு, வீரர்கள் சிலருடன் காடு, மலைகளில் அலைந்தார். சிறுவனாக இருந்தாலும் நம்பிக்கையோடு படை திரட்டினார். அப்போது பாபரின் மாமாவான காபூல் மன்னர் இறந்துவிடவே நாட்டில் குழப்பம் நிலவியது. அதைப் பயன் படுத்திக்கொண்டு காபூலைக் கைப்பற்றினார் பாபர்.
பிறகு கஜினி, பதக்ஷான், காந்தாரம் முதலிய நாடுகளையும் கைப்பற்றினார். அடுத்து, ஹிந்துஸ்தானம் மீது படையெடுத்தார்.
காலையில் ஆரம்பித்து, பிற்பகலுக்குள் முடிந்துவிட்ட பானிப்பட் போரில் வென்று ‘பேரரசர்’ என்ற பட்டத்தைப் பெற்றார் பாபர்.
பாபரின் மகனான ஹுமாயுன், 12 வயதிலேயே பதக்ஷானின் கவர்னராக இருந்தான். தந்தையுடன் இணைந்து ஆட்சி செலுத்தினான்.
அடுத்து சோழ நாட்டு சுட்டி ராஜா… சோழ மன்னர் இளஞ்சேட்சென்னி, மக்கள் நலம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக சாதாரண வேளாண் குடும்பப் பெண்ணை மணம் புரிந்தார். சிறிது காலத்தில் மன்னரின் உடல்நிலை மோசமாகி இறந்துபோனார். அப்போது அரசி கருவுற்று இருந்தார். இந்த விஷயம் எதிரிகளுக்குத் தெரிய வேண்டாம் என்று கருவூரில் உள்ள அவளது சகோதரர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு நம் கதாநாயகனான கரிகால் சோழன் பிறந்தான். பிறக்கும் முன்பே அரசனாகி விட்டான். எளிமையாக வளர்ந்தான்.
காவிரிப்பூம்பட்டினத்தில் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், ‘‘மன்னர் மகன் கருவூரில் வளர்ந்து வருகிறான். தக்க பருவம் வந்ததும் முடிசூட்டி அரசாட்சியை அவனிடம் தருவோம்’’ என்று பேசிக் கொண்டிருந்ததை சேனாதிபதி ஒட்டுக்கேட்டான். நாட்டைக் கைப்பற்றிக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் இருந்த சேனாதிபதி, இளவரசரைக் கொல்ல சதி செய்தான்.
கரும்புத் தோட்டத்திற்குச் சென்ற சோழனை மூன்று பேர் கோணியில் போட்டுக் கட்டி, ஒரு குடிசையில் அடைத்து தீ மூட்டினார்கள். எரியும் குடிசையில் இருந்து உடலில் தீப்பற்றியும் கூட, வீரத்தோடு நெருப்பை மிதித்துக்கொண்டு வெளியே வந்தான் கரிகாலன்.
தீக்காயம் பட்ட காலுக்கு சிகிச்சையளித்த வைத்தியர், ‘கால் கருகிவிட்டாலும் வலுவிழக்கவில்லை. அதனால் குதிரையேறவும், போர்ப் பயிற்சி செய்யவும் முடியும்’ என்றார்.
இந்நிலையில் இளவரசர் இறந்துவிட்டார் என்று நினைத்தார்கள் அமைச்சர்கள். நாட்டுக்கு ஓர் அரசன் வேண்டும் என்று முடிவு செய்தனர். பட்டத்து யானையிடம் மாலையைக் கொடுத்து அனுப்பினார்கள். அது யார் கழுத்தில் அந்த மாலையைப் போடுகிறதோ அவரே அரசர்! பட்டத்து யானையும் கருவூருக்கு வந்து ஒரு வீட்டின் வாசலில் நின்றது. சத்தம் கேட்டு வெளியே வந்த கரிகாலனின் கழுத்தில் மாலையைப் போட்டது யானை!
விவரம் அறியாத குறுநில மன்னர்கள், சேர, பாண்டியர்களுடன் இணைந்து வெண்ணியில் கரிகாலன் மேல் போர் தொடுத்தார்கள். சின்னச்சிறு கரிகாலனே வென்றான். யாரையும் படையெடுக்க இடம் கொடாமல் நாமே திக்விஜயம் செய்வோம் என இமயமலைச் சாரல்வரை வென்று இமயத்தின் சிகரத்தில் தன் புலிச் சின்னத்தை பொறித்தான். காவிரியில் அவன் கட்டிய கல்லணை இன்றும் அவன் பெயரை நினைவுபடுத்துகிறது.
அக்பர் அரியணை ஏறியபோது அவருக்கு வயது 12. மாமன்னர் ஹுமாயூன் இறந்ததால் மகன் அக்பர் மன்னர் ஆனார். சிறு வயதிலேயே போர்க் கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆட்சித் திறமையும் மிகுந்து இருந்தது. அக்காலத்தில் ஜிஸியா என்னும் வரி முஸ்லிம் அல்லாத மக்கள்மீது விதிக்கப்பட்டிருந்தது. அந்த வரியை நீக்கினார். அனைத்து மத மக்களையும் சமமாக நடத்தினார்.
தாத்தா பாபரைப் போலவே இவரும் சிறுவயதில் துன்பப்பட்டார். சித்தப்பாக்களின் சூழ்ச்சியால் சிறு வயதில் தந்தையை பிரிந்து இருந்தார். பிற்பாடு பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார்!
சத்ரபதி சிவாஜி சிறுவயதிலேயே பூனாவையும் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆட்சி புரிந்தார். அம்மா ஜீஜாபாய் சிவாஜியை வீரம் மிக்கவராக வளர்த்தார். மொகலாய ஆட்சிக் காலத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக வெகுண்டு எழுந்தவர் சிவாஜி. இவர் பவானி தேவியின் பக்தர். பவானியின் அருளால் கிடைத்த வாளுடனேயே எப்போதும் காட்சியளிப்பார்.
ராஜ புத்திரர்களின் வம்சத்தில் தோன்றியவர் தேஜ்சிங். இவரது தந்தை பெயர் ஸ்வரூப்சிங். எல்லோரும் இவரை தேசிங்கு என்றைழைக்க அதுவே நிலைத்ததுவிட்டது.
சிறுவயதிலேயே குதிரையேற்றத்தில் வல்லவனாக திகழ்ந்தான் தேசிங்கு. அனைத்து நீதி நூல்களையும் படித்தான். போர்க்கலையோடு கிராமக் கலைகளையும் வளர்த்தான்.
மூன்று மலைகளின் மீது செஞ்சிக் கோட்டையையும் பலப்படுத்தினான்.
அப்போது தில்லியில் இருந்து ஷா ஆலம் சக்ரவர்த்தி தூது அனுப்பினார். அதில் வீர விளயாட்டுகளில் கலந்து கொள்ள அழைப்பு இருந்தது. அதற்கு ஸ்வரூப் சிங் சென்றார். தேசிங்கு ஆட்சியை கவனித்து கொண்டான்.
தில்லி சென்ற பிறகுதான் ஷாவின் சூழ்ச்சி தெரிந்தது. பஞ்சகல்யாணி குதிரையை அடக்கினால் பதினாறு பாரம் பொன் பரிசு அடக்காவிட்டால் 16 ஆண்டுகள் சிறைவாசம் என்பதே போட்டி. ஸ்வரூப் சிங் குதிரைமீது ஏறுகிற சமயத்தில் குதிரை அவரை உதைத்து வீழ்த்திவிட்டது. சிறைப்பட்டார் ஸ்வரூப் சிங்.
இதை அறிந்த தேசிங்கு தில்லிக்கு விரைந்தான். யாராலும் அடக்க முடியாத குதிரையை அடக்கி, தந்தையை மீட்டான். அவனது வீரத்தை மெச்சி பஞ்சகல்யாணி குதிரையை அவனுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டார் ஷா ஆலம்!
– ஜனவரி 2006