காசிக்குப் போறேன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 12,790 
 
 

ஒருவர் காசியாத்திரை செல்ல நினைத்தார். அந்தக் காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாத காலம். காசிக்குப் போய் திரும்பி வரவே ஆறு மாதங்களுக்கு மேலாகலாம். வனப்பகுதி வழியாக செல்லும்போது, சிங்கம், புலி அடித்துச் செத்துப் போய் திரும்பாமலும் போகலாம். அதனால், காசி யாத்திரை புறப்பட்டவர், காசிக்குச் செல்லும் முன்பே தனது சொத்தை தன் மூன்று மகன்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டார். தனக்கு என்று எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. திரும்பி வருவோம் என்பதும் உறுதியில்லை.

ஒருவேளை அப்படியே திரும்பி வந்தாலும், ஏதாவது ஒரு மகன், ஒரு வாய் கஞ்சி ஊற்ற மாட்டானா என்ற நம்பிக்கை தான். காசி யாத்திரை சென்றவர் அதிர்ஷ்டக்காரர் என்று தான் சொல்ல வேண்டும். ஆறு மாதத்திற்கு முன்பே பத்திரமாகத் திரும்பி வந்து விட்டார். தனது ஒவ்வொரு மகன்களும் எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

Kaasikku

மூத்த மகன் வீட்டுக்குச் சென்றார்.

“”மகனே! சவுக்கியமா? உன் மனைவி, குழந்தை குட்டிகள் நலமா? வாழ்க்கை எப்படி ஓடுகிறது? நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்?” என்று நேரடியாகக் கேட்காமல் சுற்றி வளைத்துக் கேட்டார்.

“”நீங்கள் கொடுத்த பணத்தைப் பார்த்ததும் என் மனைவி, தனக்கு நகைகள், பட்டுப்புடவை வேண்டும் என்றாள். அந்தப் பணத்திற்கு எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டேன். தினக்கூலி வேலைக்கு சென்று தான் காலம் ஓடுகிறது. அதனால், நீங்கள் பணம் கொடுத்தும் எனக்கு எந்தப் பயனும் இல்லையப்பா!” என்று சலித்துக் கொண்டான் அவன்.

இன்னொரு மகன் எப்படியிருக்கிறான் என்று பார்க்க அவன் வீடு சென்றார். “”மகனே! உன் வாழ்க்கை எப்படியிருக்கிறது. நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்?” என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.

“”பத்திரமாக அப்படியே இருக்கிறது அப்பா. அதிலிருந்து ஒரு பைசாகூட எடுக்கவில்லை. அப்படியே அந்தப் பணத்தை நெற்குதிருக்கு அடியில் ஒரு குழி தோண்டிப் புதைத்து பத்திரமாக வைத்துள்ளேன். எடுத்துக் காண்பிக்கட்டுமா தந்தையே?” என்றான்.

அவனை விட இவன் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். மூன்றாவது மகனிடம் சென்றார்.

“”என்னப்பா… நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்? சவுகரியமாக இருக்கிறாயா? காசிக்குப் போனாலும் உங்கள் நினைப்பு தான். எப்படி இருக்கிறீர்களோ, என்ன செய்கிறீர்களோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.”

“”காசிக்குப் போயும் கர்மம் தொலையவில்லை என்பது இதுதான் போலும். அதற்கு நீங்கள் காசிக்கே போயிருக்க வேண்டாம். இங்கிருந்து கொண்டே நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று பார்த்துக் கொண்டிருந்திருக்கலாமே!

“”பணத்தைப் பற்றி கேட்டீர்கள் அல்லவா? அதை மூலதனமாக வைத்து ஒரு சிறிய பெட்டிக் கடை ஆரம்பித்தேன். நம் ஊரில் கடையே இல்லையா? என் கடை ஊருக்கே பெரிதும் உபயோகமாக இருக்கிறது. எனக்கும் நல்ல லாபம்.

“”இவ்வளவுக்கும், குறைந்த லாபம் வைத்துத்தான் விற்கிறேன். அப்படியும் நிறைய விற்பதால் லாபம் அதிகரித்துவிட்டது. கடையிலுள்ள சரக்கு, கையிலுள்ள ரொக்கம் எல்லாம் ஆயிரத்திற்கும் மேல் இருக்கிறது. இந்த ஆறு மாத காலமாக, கடை வியாபாரத்தில் வந்த லாபத்தில்தான் குடும்பமே நடந்தது!” என்று கூறினான்.

“”அப்பா! என் வீட்டிலேயே இருங்கள். நீங்கள் கடையில் அமர்ந்து கல்லாவை பார்த்துக் கொண்டால் போதும்… நான், சரக்குகள் எடுத்து வருவது போன்ற வெளி வேலைகளைச் செய்வேன். இன்னொரு கடையும் மலிவான விலைக்கு வருகிறது அப்பா… அதையும் வாங்கிப் போடப் போறேன்,” என்றான் மகன்.

அதிசயத்துப் போனார் தகப்பனார். ஒன்றை பத்தாக்கும் புத்திசாலித்தனம் வேண்டும். அதைச் சின்ன மகன் நன்கு தெரிந்து வைத்துள்ளான் என்பதை நினைத்து மகிழ்ந்தார். மூன்று பேருக்கும் ஒரே மாதிரியாகத்தான் பணம் கொடுத்தார். இருந்தும் மூவரும் அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்ட முறையில்தான் எவ்வளவு வேறுபாடு பார்த்தீர்களா குட்டீஸ்… மூளையை யூஸ் பண்ணுங்க.

– ஜூலை 02,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *