ஒரு எலியும் தவளையும் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன. எலியின் வளைக்கு அடிக்கடி தவளை வரும். தன்னிடம் உள்ள பண்டங்களைத் தவளைக்கு எலி கொடுக்கும். இதற்கு நன்றிக் கடனாகத் தன் வீட்டுக்கு வரும்படி எலியைத் தவளை அடிக்கடி அழைக்கும். ஆனால் தவளையின் வீடு கால்வாய்க்கு மறுபுறம் இருந்ததால் எலி போக விரும்பவில்லை.
ஒருநாள் தவளை வற்புறுத்தி அழைத்தது. தன் முதுகிலேயே அதைத் தூக்கிக் கொண்டு, கால்வாயைக் கடப்பதாகவும் சொல்லிற்று.
எலியும் இதற்கு சம்மதித்து, எப்படிக் கொண்டு போவாய் என்று கேட்டது. தவளை விளக்கமாகச் சொன்னது.
அதன்படி தவளையின் காலில் ஒரு சிறு கயிறைக் கட்டி, அந்தக் கயிறின் மறுமுனையை எலியின் காலில் கட்டிக் கொண்டு புறப்பட்டன.
தவளையின் முதுகில் எலி உட்கார்ந்தது. இரண்டும் புறப்பட்டன.
பாதிக் கால்வாயைக் கடந்ததும் தவளைக்கு ஒரு வஞ்சக எண்ணம் தோன்றியது.
இந்த எலியைக் கொன்று விட்டால் இது சேர்த்து வைத்திருக்கும் தின்பண்டங்களையெல்லாம் தானே எடுத்துக் கொள்ளலாமே என்று நினைத்தது.
இப்படி நினைத்தவுடன், தவளை தண்ணீருக்குள் கொஞ்சம் கீழ்நோக்கி இறங்கியது.
பயந்து போன எலி, “”நண்பா, என்ன காரியம் செய்கிறாய்? தண்ணீருக்குள் நீ வாழ முடியும். நான் வாழ முடியுமா? இது உனக்குத் தெரியாதா?” என்று கெஞ்ச ஆரம்பித்தது.
தவளை உடனே, “”தெரியும்.. உன்னைத் தண்ணீருக்குள் அழுத்திக் கொல்லப் போகிறேன். அப்போதுதானே நீ சேர்த்து வைத்திருக்கும் தின்பண்டங்களையெல்லாம் நான் அடைய முடியும்!” என்றது.
இப்படிக் கூறிவிட்டு, கொஞ்சமும் இரக்கமில்லாமல் தண்ணீருக்குள் மேலும் செல்ல ஆரம்பித்தது.
“”எனக்கு இப்படித் துரோகம் செய்யலாமா? நீயே அவற்றையெல்லாம் எடுத்துக் கொள். என்னை மட்டும் உயிரோடு விட்டு விடு…” என்று கெஞ்ச ஆரம்பித்தது எலி.
முடியவே முடியாது என்று மறுத்த தவளை மேலும் மேலும் தண்ணீருக்குள் செல்ல ஆரம்பித்தது. தண்ணீரில் தத்தளித்த எலி பலம் கொண்ட மட்டும் கத்திப் பார்த்தது.
தவளை கேட்கவேயில்லை.
இந்தச் சமயத்தில் மேலே பறந்து கொண்டிருந்த பருந்து ஒன்றின் கண்களில் இந்தக் காட்சி பட்டது.
அது அப்படியே வேகமாகப் பறந்து கீழே வந்து, நீரில் மிதக்க ஆரம்பித்த எலியைப் பிடித்துக் கவ்வியது. எலியைத் தூக்கிக் கொண்டு பறக்க ஆரம்பித்தபோது, எலியின் காலில் கட்டப்பட்டிருந்த தவளையும் அதோடு கூடவே சேர்ந்து வந்தது.
பருந்து இரண்டையும் தூக்கிக் கொண்டு போய் ஓரிடத்தில் வைத்துத் தின்றது.
– கோ.பக்கிரிசாமி, திருத்துறைப்பூண்டி. (செப்டம்பர் 2012)