ஒரு வணிகன் முக்கிய உணவுப் பொருள்களை அடுத்த ஊர் சந்தைக்குக் கொண்டு போய் நல்ல விலைக்கு விற்று பணத்தை ஒரு பையில் போட்டுப் பூட்டிக் கொண்டு ஊருக்குத் திரும்பினான்.
வழியில் ஒரு கோயிலைக் கண்டான் அங்கே போய் வணங்கிவிட்டுத் திரும்பச் சென்றான். பணப்பையை கோயிலில் மறந்து வைத்து விட்டான்.
கோயிலுக்கு வந்த பள்ளி ஆசிரியர் கடவுளை வணங்கி திரும்பும்போது அந்தத் தோல் பையைப் பார்த்தார். அருகில் எவரும் இல்லாததால், அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். அவருடைய வீடு கோயில் வீதியிலேயே இருந்தது. வீட்டிற்குப் போனதும், “பணப்பையை இழந்தவர் இங்கே விசாரிக்கவும் ” என்று ஒரு அட்டையில் எழுதி, வீட்டு முகப்பில் தொங்க விட்டார்.
வழியில் போய்க்கொண்டிருந்த வணிகனுக்குப் பணப்பை நினைவு வந்தது, பரபரப்போடு கோயிலுக்கு ஓடிவந்து விசாரித்தான். எவருக்கும் தெரியவில்லை. மிகவும் துக்கத்தோடு திரும்பி போய்க் கொண்டிருக்கும்போது, ஒரு வீட்டின் முகப்பில் அறிவிப்பைப் பார்த்தான். உள்ளே போய் விவரத்தைக் கூறி, சாவியைக் காட்டி பையைப் பெற்றுக் கொண்டான்.
உடனே பையைத் திறந்து பாதித் தொகையை அந்த ஆசிரியர் முன் வைத்து “உங்களுடைய நேர்மைக்காக நான் பரிசு அளிக்கிறேன். எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னான் வணிகன்.
”உன் பணம் எனக்கு எதற்கு?” என்று கூறி அதைத் தொட மறுத்துவிட்டார் ஆசிரியர்.
வணிகனும் எவ்வளவோ கூறினான். ஆசிரியர் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
அந்தத் தொகையை அங்கே வைத்துவிட்டு, பையை எடுத்துக் கொண்டு வணிகன் ஓடினான்.
”திருடன், திருடன்” என்று கூறிக்கொண்டே ஆசிரியர் அவனைத் துரத்தினார்.
வழியில் சென்றோர் வணிகனைப் பிடித்து நிறுத்தி, “அவன் என்ன திருடினான்?” என்று கேட்டனர்.
“என்னுடைய நேர்மையையும், இதுவரை நான் காப்பாற்றி வந்த மதிப்பையும் திருடிக் கொண்டான்” என்று கூறி, நடந்ததை விவரமாகக் கூறினார் ஆசிரியர்.
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்