உயிர்களைக் காப்போம்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 9, 2013
பார்வையிட்டோர்: 10,262 
 
 

அம்மா.. அம்மா… ரொம்பப் பசிக்குதுமா’ என்றவாறே அம்மாவின் அருகே சென்றது செல்லக் குழந்தை.

“கொஞ்ச நேரம் பொறுமையா இருடா செல்லம். அப்பா இப்ப வந்திடுவாரு. கண்டிப்பா நமக்கு நல்லா சாப்பாடு கொண்டு வருவாரு’ என்பதை மட்டுமே அந்தத் தாயால் கூற முடிந்ததே தவிர, உண்மையிலேயே கணவர் எப்போது வருவார் என்பது தனக்கே தெரியாதவளாய் அவள் இருந்தாள்.

உயிர்களைக் காப்போம்நேற்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் மனக்கண் முன் தோன்றி மறைந்தது.

கணவன், மனைவி மற்றும் குழந்தை முவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.

ஒருநாள் கணவன் எறும்பு எப்போதும் போல தனக்கும் தனது குடும்பத்திற்கும் உணவு கொண்டுவர வெளியே போய்வருகிறேன் என்று தன் மனைவியிடம் கூறிவிட்டுப் பாழடைந்து, சிதிலமடைந்து கிடந்த அந்தப் பழங்கால வீட்டின் மாடிப்படிகளின் ஒரு படி இடுக்கில் இருந்த எறும்பு வலையிலிருந்து வெளிப்பட்டது கணவன் எறும்பு.
அன்று அந்த வீட்டில் விசேஷம் போலும். சொந்த பந்தம் என்று ஏகப்பட்ட பேர்கள் வந்திருந்தனர். அந்த கூட்டத்தினரைப் பார்த்த நிமிடமே எறும்பு வெளியே செல்லும் திட்டத்தைக் கைவிட்டது. ஏனெனில் கூட்டத்தில் சிக்கி இறந்தேவிடுவோம் என்ற உள்ளுணர்வு.

போதாக்குறைக்கு அவ்வீட்டினர் படிகளை துடைக்கவும் செய்தனர். ஏதோ விஷம் தோய்த்த துணிகொண்டு படிகளைத் துடைப்பதாக எண்ணியது. ஏனெனில், அப்படிகளில் சில பூச்சிகளும், வண்டுகளும் அந்தத் துணியின் நீர்த்துளி பட்டு சுருண்டு விழுந்தன. இதைக்கண்ட எறும்பு வலையில் ஓடிச்சென்று புகுந்துகொண்டது.

எனவே அன்றைய தினம் பசியுடனும் பயத்துடனுமே கழிந்தது. இதைத் தாய் எறும்பு எண்ணியபொழுது அதற்கு பகீரென்றது.

எனவே இன்று காலையிலேயே கணவன் எறும்பு உணவைத்தேடி கிளம்பிவிட்டது. அச்சமயம் குட்டி எறும்பு நித்திரையில் ஆழ்ந்திருந்தது. அவ்வீட்டின் வெளியே வந்த கணவன் எறும்பு உணவைத் தேடி அலைந்தது. எந்த உணவும் சிக்கவில்லை… அதனால் அந்த நூறடி சாலையைக் கடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

காலைப்பொழுது என்பதால் ஒருசில வண்டிகள் சென்றுகொண்டிருந்தன. இதோ ஒருவழியாக அந்த நூறடி சாலையை எறும்பு கடந்தேவிட்டது.

இவ்வளவு சிரமப்பட்டுக் கடந்து வந்தும், கவலையும் குறையவில்லை… உணவும் கிடைக்கவில்லை…. எங்கு தேடியும் உணவு கிடைக்கவில்லை.
இதனால் உடல் சோர்வாலும் மனச்சோர்வாலும் மயக்கம் வருவதுபோல் ஆனது எறும்புக்கு. தன் குழந்தை மற்றும் மனைவியின் நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிய பொழுதே எறும்பின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்தது.

அந்த எறும்பு நின்றிருந்த இடத்திற்கருகாமையில் ஓர் உணவகம் இருப்பதைக் கண்ட எறும்புக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. அங்கு எப்படியும் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றது. அதன் நம்பிக்கை வீண்போகவில்லை.

அங்கே சில சோற்றுப்பருக்கைகளும், சிறுசிறு மாமிசத்துண்டுகளும் கிடப்பதைக் கண்டது எறும்பு. ஒரு சிறு மாமிசத்துண்டை கடித்து இழுத்துச் சென்றது.

ஆனாலும் அம்மாமிசத்துண்டு அதன் சக்திக்கும் மிஞ்சியதாய் இருந்தது. இருந்தாலும் அதைக் கடித்து இழுத்துக்கொண்டே சென்றது.
பசியின் கொடுமையாலும், தன் வீட்டின் நிலையாலும் தன்னால் இழுக்க முடியாத அளவுடைய கறியை இழுத்துக்கொண்டு, அந்த நூறடி சாலையைக் கடந்துகொண்டிருந்தது.

நேரம் ஆகியிருந்ததால் அந்த சாலையைக் கடப்பது மிகவும் சிரமாக இருந்தது.

ஏனெனில், அவ்வளவு வாகனங்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தன.

எப்படியோ ஒருவழியாக லாகவமாக மாமிசத் துண்டுடன் அந்த நீண்ட சாலையைக் கடந்துகொண்டிருந்தது.

இதோ, சாலையைக் கடந்தேவிட்டோம் என்று நினைத்து ஆனந்தமடைந்தது.

அந்த ஆனந்தம் சிறிது நேரமும் நீடிக்கவில்லை. ஏனெனில் அச்சமயம் பலநூறு ஜந்துக்களின் அபயக் குரல். இச்சத்தத்தை கேட்டு பீதியடைந்த எறும்பு அச்சிறு உணவை வேகமாக இழுத்துச் சென்றது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு மனிதனின் கால், உணவுடன் சென்ற எறும்பை மிதித்தது. எறும்போ உயிர்வலியால் துடி
துடிக்க ஆரம்பித்தது. கண்கள் இருண்டன.. சிரமப்பட்டு தன்னை மிதித்த மனிதனை நோக்கியது.

அந்த மனிதன் மற்றும் பிற மனிதர்களின் கைகளில் சில வாசகங்கள் அடங்கிய பேனர்கள். அவற்றில் “உயிர்வதை தடுப்போம்… உயிர்களைக் காப்போம்’ என்ற வாசகங்கள்.

எறும்பு வலியாலும் தன் குடும்பத்தை நினைத்தும் மேலும் மேற்கண்ட வாசகங்களைக் கண்டும் கண்ணீரைக் கடலாய் சிந்தியது.
அந்த மரணத்தறுவாயிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
வலியால் அல்ல, அந்த வாசகங்களால்….

– ராம்தாஸ் (நவம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *