உதவாத டெலிபோன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 22, 2022
பார்வையிட்டோர்: 4,183 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த வட்டாரத்திலே கார்த்திகேயர்தான் பெரிய பணக்காரர். அவருடைய மாளிகை மிக மிகப் பெரிதாயிருக்கும். ஏராளமான செலவில் அவர் அதைக் கட்டி வைத்திருந்தார். அதன் உள்ளே எல்லாவிதமான வசதிகளும் இருந்தன. டெலி விஷன், ரேடியோ, டெலிபோன், பனிப்பெட்டி, மெத்தை போட்ட நாற்காலிகள், மின்சார விசிறிகள், அலங்காரப் பொம்மைகள் யாவும் இருந்தன.

அவருடைய மாளிகையில் இவ்வளவெல்லாம் இருந்தும் அவருடைய நெஞ்சிலே கொஞ்சமேனும் ஈரம் இல்லை . ஏழைகள் என்றாலே மனித இனத் தைச் சேர்ந்தவர்களில்லை என்பது அவருடைய நினைப்பு. மறந்தும் அவர் பிறருக்கு உதவ மாட்டார். தம்மைப் பொறுத்தவரையில் நன்றாக உண்பார்; உடுப்பார்; உறங்குவார்.

ஒருநாள் இரவு மணி ஏழு இருக்கும்.

அந்தத் தெருக்கோடி வீட்டிலிருந்து ஒருவர் வேக மாகக் கார்த்திகேயரின் மாளிகையை நோக்கி வந்தார். மாளிகை வாசலுக்கு வந்ததும் ஒரு நிமிஷம் நின்றார். பிறகு, தயங்கித் தயங்கி உள்ளே சென்றார். அப்போது “யாரது?” என்ற குரல் மிகவும் அதிகாரத்துடன் கேட்டது. அது வேறு யாருடையது மல்ல; கார்த்திகேயருடையதுதான்!

“ஐயா! என் குழந்தைக்கு இரண்டு நாளாக ஜுரம். இப்போது உடம்பு அனலாய்க் கொதிக்கிறது. குழந்தை கண் திறக்கவில்லை”. வந்தவர் முழுவதையும் கூறுவதற்குள், “அதற்கென்ன? இங்கே யாசகம் கேட்க வந்து விட்டாயா? போ, போ. வேறு வேலை இல்லை” என்று எரிந்து விழுந்தார் கார்த்திகேயர்.

“யாசகம் கேட்க வரவில்லை. தயவு செய்து என் பேச்சைக் கேளுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் இருக்கிறார். அவரிடம் டெலிபோனில் தகவலைச் சொன்னால் உடனே வந்துவிடுவார். அதனால் கொஞ்சம் டெலிபோன்…”

“சரிதான். டெலிபோனில் பேச வேண்டுமா? அதெல்லாம் முடியாது. இன்று உனக்குக் கொடுத்தால் நாளைக்கு இன்னொருவன் வந்து கேட்பான். அதெல்லாம் கெட்ட பழக்கம். முடியாது. இது என்ன, பொது டெலிபோனா கண்டவனெல்லாம் உபயோகப்படுத்த?”

“அப்படிச் சொல்லக்கூடாது. ஆபத்துச் சமயம். குழந்தை இருக்கிற நிலையிலே, இந்த நேரத்திலே வெளியிலே எடுத்துப் போக யோசனையாயிருக்கிறது. தயவுசெய்து…”

“தயவாவது செய்றதாவது? குயவன் பானை சட்டி செய்கிறானே, அதைப் போலே என்னைத் தயவு செய்யச் சொல்கிறாயா? முடியாது. வீணாகத் தொந்தரவு செய்யாதே. அப்படி அவசரமாயிருந்தால் மூணாவது தெருவிலே இருக்கிறதே பொது டெலி போன், அங்கே போய்ப் பேசு” என்று கூறி வெளியில் அனுப்பிவிட்டார் கார்த்திகேயர்.

பாவம், பக்கத்திலே வேறு டெலிபோன் எதுவும் இல்லாததால், அந்த மனிதர் மூன்றாவது தெரு வுக்கு ஓடினார். அங்குள்ள பொது டெலிபோன் உதவியால் டாக்டரை வரவழைத்துக் குழந்தையைக் காட்டினார். நல்லகாலம், கார்த்திகேயர் தயவு இல்லாமலே குழந்தை பிழைத்துக் கொண்டது!

அன்று நடு இரவு. பின் தெருவிலிருந்து ஒரு சிறுவன் வியர்க்க விறு விறுக்க ஓடோடி வந்தான். கார்த்திகேயரின் மாளிகையை அடைந்தான். “ஐயா, ஐயா” என்று கத்தினான். பலமாகக் கதவைத் தட்டினான். முன் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கார்த்திகேயர் பரபரப்புடன் எழுந்தார். விளக்கைப் போட்டு, கம்பிக் கதவுகளின் இடைவெளி வழியாக அந்தச் சிறு வனைப் பார்த்தார்!

“ஐயா! கொஞ்சம் கதவைத் திறவுங்கள், டெலி போன் செய்ய வேண்டும். அவசரம்” என்று துடித்துடித்துக் கொண்டே கூறினான்.

“உனக்கு அவசரமாக இருந்தால் எனக்கென்னடா? போ, போ. ஊரிலே இருக்கிறவனுக்கெல்லாம் இந்த டெலிபோன்தான் அகப்பட்டதாக்கும்? பேசாமல் மூணாவது தெருவுக்குப் போய் அங்கே இருக்கிற பொது டெலிபோனில் பேசு” என்று உபதேசம் செய்தார் கார்த்திகேயர்.

“ஐயோ, அடுத்த தெருவிலே ஒரு வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. உடனே தீயணைக்கும் படைக்குப் போன் பண்ண வேண்டும். என்னை அனுமதிக்காது போனாலும், நீங்களாவது சீக்கிரம் தகவல் கொடுத்தால் உபகாரமாயிருக்கும். ஐயா, உங்களுக்குக் கோடி புண்ணியம்” என்று கெஞ்சினான் சிறுவன்.

“டேய், வீணாக என்னை இந்த நேரத்தில் தொந்தரவு செய்யாதே. நீ சொன்னபடி செய்வதற்கு நான் என்ன, நீ வைத்த ஆளா? அடுத்த தெருவிலே நெருப்புப் பிடித்தால் எனக்கென்ன? போ, போ. இங்கே நிற்காதே” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் கார்த்திகேயர்.

சிறுவன் சிறிது நேரம் கெஞ்சிப் பார்த்தான். அவர் மனம் இளகவில்லை. சிறுவனுக்கு அதற்கு மேலும் அங்கு நிற்க மனமில்லை. காலதாமதம் ஆகக் கூடாதே என்று மூன்றாவது தெருவுக்கு ஓடினான்.

இதற்குள் தீப்பிடித்த வீட்டிலிருந்து நெருப்பு வேகமாகப் பரவ ஆரம்பித்தது. அந்த வரிசையிலிருந்த நான்கைந்து வீடுகளிலும் நெருப்புப் பற்றிக் கொண்டது. அந்த வீடுகளிலிருந்தவர்களெல்லாம் ‘குய்யோ முறையோ’ என்று கத்திக் கொண்டு, குழந்தைகளையும் முக்கியமான சாமான்களையும் தூக்கிக் கொண்டு வெளியேறினார்கள். நெருப்பணைக்கும் படை வராததனால் அவர்களே கிணற்றிலிருந்தும், குழாயிலிருந்தும் குடம் குடமாகத் தண்ணீரை எடுத்துவந்து நெருப்பை அணைக்க முயன்றார்கள். நிலைமை முற்றிவிட்டதால், சுலபமாக அணைக்க முடியவில்லை.

அதேசமயம், கார்த்திகேயரது வீட்டின் பின்பகுதியிலிருந்து “ஐயோ, தீ!” என்ற அலறல் கேட்டது. கார்த்திகேயர் திடுக்கிட்டு எழுந்தார். பின் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி, மக்கள், வேலைக்காரர்கள் எல்லாரும் ஓடி வருவது கண்டு “என்ன? தீயா!” என்று திகிலுடன் கேட்டார்.

“ஆமாம். பின் தெருவிலே பற்றிக் கொண்டது போலிருக்கிறது. நம் வீட்டு வைக்கோல் போரில் பிடித்து வீட்டுக்குள்ளேயும் வந்துவிட்டது. ஐயோ மாளிகை பற்றி எரிகிறதே!” என்று கூச்சலிட்டார்கள் அவர்கள்.

உடனே கார்த்திகேயருக்கு அந்தச் சிறுவன் சொன்னது நினைவுக்கு வந்தது. டெலிபோனில் நெருப்பணைக்கும் படையினரைக் கூப்பிட நினைத் தார். அதற்குள் இரும்புப் பெட்டி நினைவு வந்து விட்டது. உடனே இரும்புப் பெட்டி இருந்த அறையை நோக்கி ஓடினார். ஆனால், அறைக்குள் நுழையப் போகும் சமயம் ‘சடசட’வென்று நெருப் புப் பொறிகள் கிளம்பும் சத்தம் கேட்டது. ‘குபீர், குபீர்’ என்று பயங்கரமாக நெருப்புச் சுடர்கள் பற்றி எரிவது தெரிந்தது. பின் பகுதியின் ஒரு பாகம் மடேர் என்று இடிந்து விழுந்தது. அறைக்குள் நுழைந்தால் உயிருக்கே ஆபத்து என்று நினைத்து மனைவி மக்களுடன் அவரும் வெளியேறிவிட்டார்.

மூன்றாவது தெருவுக்கு ஓடிய சிறுவன் பொது டெலிபோனில் தகவலை அறிவிக்க முயன்றான். அந்த டெலிபோனில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருந்த தால் அது சரியாக வேலை செய்யவில்லை. இதயம் உள்ள மனிதனுக்கே அவசரத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லையே, அது எப்படிப் புரிந்துகொள்ளும்?

‘சரி, இதையும் நம்பிப் பயனில்லை,’ என்று அந்தச் சிறுவன் எண்ணினான். நேராகக் குடல் தெறிக்க நெருப்பணைக்கும் படை இருக்கும் இடத்தை நோக்கி ஓடினான். தகவல் அறிவித்தான். உடனே அந்தப் படை புறப்பட்டது.

மணியை அடித்துக் கொண்டு வெகு வேகமாக நெருப்பணைக்கும் படையினர் அங்கு வந்தனர். அவர்கள் வந்து சேருவதற்கும், கார்த்திகேயரின் மாளிகை முழுவதும் பற்றி எரிவதற்கும் சரியாக இருந்தது!

– திரும்பி வந்த மான்குட்டி, முதற்பதிப்பு: நவம்பர் 2002, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *