(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வெயிலின் வெம்மையைச் சுமந்து கொண்டு காற்று வந்து பட படக்கிறது கடற்கரையில் அரை நித்திரையில் ஆழ்ந்திருந்த கேமிற் நண்டைக் கடல் அனிமனியின் குரல் தட்டி எழுப்புகிறது.
“அண்ணை, கேமிற் அண்ணை .. எழும்பு .. இரண்டு பேருமாய் உலாவப் போவம்…”
நடக்க முடியாத கடல் அனிமனி ஒரு குத்துக்கரணம் போட்டு கேமிற் நண்டின் வீட்டின் மேல் ஏறிக் குந்திக் கொண்டது
சோம்பல் முறித்துக் கொண்ட நண்டு,
“உனக்கு நடக்கப் பஞ்சி எண்டால் நீ சுகமாய் எனக்கு மேலை ஏறிக் குந்திடுவாய்.. என்ன?”
என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டே மெதுவாக நகரத் தொடங்கியது.
திடீரென சுற்றாடலில் ஏற்பட்ட ஒரு சிறு மாற்றத்தை உணர்ந்து கடல் அனிமனி தன் உடலைச் சுருக்கித் தாக்குதலுக்கு ஆயத்தமானது.
கடல் அனிமனியின் ஆரவாரத்தை உணர்ந்து கேமிற் நண்டும் உடலை வீட்டினுள் மறைத்துக் கொண்டது. சிறிது நேரம் ஓடி மறைந்தது.
ஒன்றையும் காணவில்லை.
வீட்டிற்குள்ளிருந்து மெதுவாகத் தலை நீட்டியது
நண்டு,”என்ன? என்ன பிரச்சினை வெளியிலை?” என்று கேட்டது.
உடலை நிமிர்த்திக் கொண்ட கடல் அனிமனியும் “ஏதோ சிறிய மாற்றம் தெரிஞ்சுது சூழல்லை. அதுதான் உனக்கும் அறிவிச்சன் . நாங்கள் எதுக்கும் ஆயத்தமாய் இருக்க வேணும் எண்டாலும் நீ பயப்பிடாதை. என்ரை தாக்குதல் கருவிகள் எப்பவும் ஆயத்தமா இருக்கு” என்று கூறியதைக் கேட்டு நிம்மதியுடன் சிரித்தது நண்டு.
“எனக்கு எப்பவும் ஒரு பாதுகாப்பாய் நீ இருப்பாய் எண்டுதானே உன்னை நான் முதுகிலை காவிறன். இல்லாட்டி எனக்கென்ன வீசரே?”
“சரி,சரி… நட… நட..” மீண்டும் இருவரும் மிடுக்குடன் பயணத்தைத் தொடர்ந்தனர். சிறிது தூரம் நகர்ந்ததும், “இந்தா இது உனக்கு நல்ல புது இடம் சாப்பாட்டுக்கு ஒரு கை பாரன” என்றது நண்டு
“நாங்கள் இரண்டு பேரும் எப்பவும் ஒற்றுமையாய் இருப்பம். அதால இரண்டு பேருக்கும் நன்மை’
என்று புன்சிரிப்புடன் கூறிக்கொண்டே, புது இடத்தில் உணவு தேடத் தொடங்கியது கடல் அனிமனி.
– விஞ்ஞானக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 2000, கலை இலக்கியக் களம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா.