(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
பெருமையை அழிக்கக் கூடிய பிச்சை எடுத்தலுக்கு அஞ்சுதல்
அருளாட்சிபெற்ற ஸ்ரீ சிவஞான தேசிகர் அவர்கள் 10-வது தலைவராகத் தருமபுர ஆதீனத் திற்கு வந்தார்கள். ஒருநாள் இவர்கள் திருவுலா வரும்போது பிரமராக்கதன் ஒருவன் இவர்கள் திரு வடிகளில் வீழ்ந்து, ‘நல்லோரை நலிந்து பிடித்து அவர்களிடம் வேண்டியதைப் பிச்சைகேட்டு வாங்கி வாழும் இவ்வாழ்க்கையை விலக்கி அருள வேண்டும் என்று வேண்டினான். அப்போது சுவாமிகள் இவ் வுலகைப் படைத்தவன் உலகத்தோரை யாசகம் செய்து வாழப்படைத்தானாகில் அவன் அழியட்டும் என்று தாம் செய்து வரும் அநுட்டானங்களில் ஒரு கால அநுட்டானத்தை அவனுக்குத்தத்தம் செய்தார் கள். அவனும் அவ்வுரு நீங்கித் தேவஉரு அடைந்து எல்லோருக்கும் கொடுத்துவாழும் வாழ்வைப் பெற் றான். இன்றும் இது நடைபெறுவது எவரும் அறிவர். வள்ளுவரும் இவ்விதக் கருத்தையே இயற்றி உள்ளார்.
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். (79)
உலகு இயற்றியான் = இவ்வுலகத்தைப் படைத்தவன் (இவ்வுலகில் வாழ்வாங்கு முயன்று உயிர் வாழ்தலை அல்லாமல்)
இரந்தும் = யாசித்தும்
உயிர் வாழ்தல் வேண்டின் = உயிர் வாழ்தலை விரும்பிப் படைத்தானாயின்
பரந்து = அக்கொடியோன் தானும் அவர் போல் எங்கும் திரிந்து
கெடுக = அழிவானாக.
கருத்து: இவ்வுலகைப்படைத்தவன் யாசகம் செய்யப் படைத்தானாகில், அவனும் அவர் போல் அலைந்து அழிவான்.
கேள்வி: ”உலகியற்றியான் அழிக” என்று சொல்லக் காரணம் என்ன?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.