ஓர் அரசன். அவருக்கு வயதாகிவிட்டது. அதனாலேயே கவலை, பயம் எல்லாம் அதிகமாகிவிட்டது. மரண பயம். இரவிலே தூங்க முடியவில்லை. எத்தனையோ போர்க்களங்களில் எண்ணற்ற வீரர்களை ஓட ஓட விரட்டியவர்தான்! ஆனாலும் இப்போது அந்தத் துணிச்சல் எங்கேயோ போய்விட்டது. செய்வதறியாது யோசித்தார்.
எல்லா அமைச்சர்களையும் கூப்பிட்டார்.
“எனக்கு ஒரு நல்ல ஆலோசனை சொல்லுங்கள்..’ என்று கேட்டார்.
“என்ன ஆலோசனை?’ என்றனர் மந்திரிகள்.
“எனக்கு ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நீங்கள் யாருமே என் பக்கத்தில் இல்லையென்று வைத்துக் கொள்ளுவோம். அந்தச் சமயத்தில் எனக்கு உதவுகிற மாதிரி ஒரு வாசகம் அல்லது பொன்மொழி சொல்லுங்கள். அதை நான் என்னுடைய மோதிரத்துக்கு உள்ளே பதித்து வைத்துக் கொள்வேன்’ என்றார் மன்னர்.
அமைச்சர்கள் அனைவரும் யோசனை செய்தார்கள். ஒருவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை. குழம்பத்தில் இருந்தார்கள். அந்த நேரத்தில் ஒரு பெரியவர் அங்கே வந்தார்.
அவர், “நான் பொருத்தமான வாக்கியம் ஒன்று சொல்கிறேன். ஆனால் அந்த வாக்கியத்தை உடனே படிக்கக் கூடாது! ரகசியமாக அந்த மோதிரத்துக்குள் பதித்து வைத்துக் கொள்ளவேண்டும். எப்பவாவது, ஏதாவது இக்கட்டில் மாட்டிக்கொள்ளும்பபோது மட்டுமே மோதிரத்தைத் திறந்து அந்த வாசகத்தைப் பார்க்க வேண்டும்!’ என்றார்.
எல்லோரும் சரியென்று ஒப்புக் கொண்டனர். மன்னரின் மோதிரத்துக்குள் அந்த வாக்கியத்தையும் பதித்துவிட்டார்கள். அரசரும் அதை விரலில் மாட்டிக் கொண்டார்.
சிறிது காலம் சென்றது. அரசருக்கு ஒரு சோதனை வந்தது! அடுத்த நாட்டு மன்னன் படையெடுத்து வந்தான். அவன் ஏற்கெனவே இவரிடம் போரிட்டுத் தோற்றவன்தான். இருந்தாலும் இந்த முறை ஒரு வெறியுடன் வந்து இவரை வீழ்த்திவிட்டான்.
மன்னர் நாட்டை இழந்தார். எல்லாவற்றையும் இழந்தார். ஒரு குதிரையில் ஏறி தப்பித்துச் சென்றார். எதிரியின் வீரர்கள் துரத்திக் கொண்டு வந்தார்கள். இவர் ஒரு மலையின் உச்சிக்குச் சென்றுவிட்டார்.
அதற்குப் பிறகு போக முடியாது. பயங்கர பள்ளம்… மன்னருக்கோ மரண பயம்! திரும்பவும் முடியாது… பின்னால் எதிரிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
வேறு வழியே இல்லை… அப்போது, சூரிய ஒளி மோதிரத்தில் பட்டு அது மின்னியது! உடனே அவருக்கு ஞாபகம் வந்தது! மோதிரத்தைத் திறந்து படித்தார். அதிலிருந்த வாசகம்:
“”இந்த நிலையும் மாறிவிடும்!”
அதைப் படித்தவுடன் அவருக்கு புதிய தெம்பு ஏற்பட்டது. கூடவே தைரியமும்… பின்னால் வந்த எதிரிகள் திசைதவறி வேறு எங்கோ சென்று விட்டார்கள் என்பதும் தெரிய வந்தது.
எதிரிகள் மட்டும் விரட்டிக் கொண்டு வரவில்லையென்றால் அவ்வளவு அழகான ஓர் இடம் இருப்பதே தனக்குத் தெரியாமல் போயிருக்குமே என்று நினைத்தார் மன்னர்.
இயற்கையின் அழகையும் அதன் விநோதங்களையும் ஒருசேர ரசித்தார்.
பின்னர் நாடு திரும்பினார். ஒளிந்திருந்து படைகளைத் திரட்டினார்.
சிறிது நாட்களிலேயே, எதிரியை நோக்கிப் படையெடுத்துச் சென்றார். யாரிடம் தோற்றாரோ, அவரையே வெற்றி கொண்டு நாடு திரும்பினார்.
நாடு பூராவும் விழாக்கோலம் பூண்டது. எங்கும் ஆடல் பாடல்… கோலாகலம். இதைக் கண்ட மன்னருக்குத் தலைகால் புரியவில்லை. நம்மை இனி யாராலும் ஜெயிக்க முடியாது என்று எண்ணினார். அகம்பாவம் தலை தூக்கியது!
அப்போது திடீரென்று சூரிய ஒளி பட்டு மோதிரம் மீண்டும் மின்னியது! அதைத் திறந்தார். மறுபடியும் படித்தார்..
“இந்த நிலையும் மாறிவிடும்!’ – அவ்வளவுதான். அவர் மனம் அடங்கிப் போனது. அவரிடம் தலைதூக்கிய ஆணவம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போனது!
– ஜி,கௌரி (நவம்பர் 2011)