ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்.அவனுக்கு பக்கத்து ஊரில் பெண்ணெடுத்து திருமணம் செய்து வைத்தனர்.
வியாபார விஷயமாக அவன் வெளியூர் சென்று விட்டதால் திருமணம் முடிந்து பலநாள் ஆகியும் அவனால் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போக இயலவில்லை.
பின்னர் ஒருமுறை அவன் வியாபாரம் செய்ய சென்ற ஊரிலிருந்து மிக பக்கமாக அவனுடைய மாமியார் வீடு இருந்ததால் மனைவி இல்லாமல் தான் மட்டும் தனியாக அங்கு போயிருந்தான்.
வெகுநாள் கழித்து விருந்துக்கு வந்த மருமகனை மாமியாரும் நன்கு உபசரித்தாள்.வேளைக்கு ஒரு பலகாரம் செய்து அசத்தினாள்.
http://2.bp.blogspot.com/_tmCeQu3ms5…91a5313dc1.jpg
அதில் மருமகனுக்கு மாமியார் செய்து கொடுத்த கொழுக்கட்டையே மிகவும் பிடித்தமானதாக இருந்தது.மேலும் மேலும் வேண்டுமென்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவன் இதுவரை தன் மனைவி அதைச் செய்து தந்ததில்லை என்று அதன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
விருந்துக்குப் பிறகு கிளம்பியவன் மறந்து விடக்கூடாது என அந்த பலகாரத்தின் பெயரையே மனனம் செய்து உச்சரித்தபடியே நடந்தான்.
வழியில் குறுக்காக ஒரு வாய்க்கால் இருந்தது.அதைத் தாண்டிச் செல்லும் நோக்கில் குதித்தவன் சட்டென்று ‘அத்திரி பாச்சா’ என்றான்.
மிகப் பிரயத்தனப் பட்டு கடினமான ஒரு வேலையைச் செய்பவர்கள் இப்படி ஏதாவது வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.அது போல இவன் வாய்க்காலைத் தாண்டும் போது ‘அத்திரி பாச்சா’எனக் கூற பிறகு கொழுக்கட்டைப் பேரை மறந்து அத்திரி பாச்சா எனக் கூறிக் கொண்டே வீட்டுக்குச் சென்றான்.
மனைவியிடம் மாமியார் செய்து தந்த பலகாரத்தின் சுவையை சிலாகித்துக் கூறியவன் எனக்கு அதே போல அத்திரி பாச்சா செய்து கொடு என்றான்.
மனைவி குழம்பிப் போனாள்.இதென்ன புதுப் பேராக உள்ளது.இப்படியொரு பலகாரம் எனக்குத் தெரியாதே என்றாள்.
கணவன் திரும்பத் திரும்ப அந்தப் பேரைச் சொல்ல மனைவி தெரியாது என்றே கூற கோபமான அவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைய கன்னம் வீங்கிப் போனது.
இதைப் பார்த்த அவன் அம்மா அடப்பாவி இப்படி அடித்து கன்னம் கொழுக்கட்டை போல் வீங்கி விட்டதே என
அவன் சந்தோஷத்தில் குதித்தபடி அதேதான்….அந்தப் பேர்தான் கொழுக்கட்டை …கொழுக்கட்டை என்று குதித்தான்.
இவ்வளவு நேரமும் கணவன் கொழுக்கட்டை என்பதைத்தான் பேரை மறந்து அத்திரி பாச்சா என்றான் என்பதை புரிந்து கொண்டவள் அவனுக்கு நிறையச் செய்து கொடுத்தாள்…
குட்டீஸ் உங்களுக்கும் [அத்திரி பாச்சா] கொழுக்கட்டை பிடிக்கும் தானே?