அது ஒரு விறகுக் கட்டைதான்!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,811 
 
 

எழை விவசாயி ஒருவன் தனது சிறிய வயலுக்குச் சென்று எருதுகளை ஏரில் பூட்டி உழுது கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே ஓர் ஓநாய் வந்தது. அந்த ஓநாயைப் பார்த்து விவசாயி கேட்டான் –

“ஓநாயே, நீ இங்கே எதற்காக வந்தாய்?’

“உன்னுடைய உழவு மாடுகளைத் தின்பதற்காகத்தான் வந்திருக்கிறேன்’ என்றது அந்த ஓநாய்.

அது ஒரு விறகுக் கட்டைதான்“அப்படியா! நல்லது, நல்லது; ஓநாயே, கொஞ்ச நேரம் பொறுத்திரு. இன்னும் கொஞ்சம் உழவை முடித்துக் கொள்கிறேன். அதற்குப் பிறகு நீ என்னுடைய மாடுகளைத் தின்னலாம்!’ என்றான் விவசாயி.

“அப்படியா, சரி!’ என்று சம்மதித்த ஓநாய் பக்கத்திலிருந்த ஒரு மர வண்டியின் கீழே போய்ப் படுத்துக் கொண்டது.

தொடர்ந்து உழுது கொண்டே இருந்த விவசாயி, மிகவும் வருத்தமுற்றான். தனது மாடுகளை எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியாமல் விழித்தான். அவனுக்கு அழுகையே வந்துவிட்டது! அப்போது அந்தப்பக்கமாக நரி ஒன்று வந்தது.

அழுது கொண்டே உழுது கொண்டிருக்கும் விவசாயியைப் பார்த்து, “என்ன நடந்தது? ஏன் நீ அழுது கொண்டிருக்கிறாய்?’ என்று பரிவுடன் கேட்டது.

வண்டியின் கீழே படுத்துக் கொண்டிருந்த ஓநாயைச் சுட்டிக் காட்டிய விவசாயி, “அதோ, அந்த ஓநாய் இந்த வழியே வந்தது. வந்து எனது மாடுகளைத் தின்னப் போகிறேன் என்று கூறியது. நான் வேலைகளை முடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. எனது மாடுகளை நான் இழக்கப் போகிறேன். அதனால் செய்வதறியாது அழுது கொண்டிருக்கிறேன்’ என்றான்.

“அப்படியா சங்கதி! நான் உனக்கு உதவுகிறேன். நீ எனக்காக ஒரு கோணிப் பை நிறைய கோழிகள் கொடுக்க ஒப்புக் கொண்டால், நான் அந்த ஓநாயை இங்கிருந்து விரட்டி விடுகிறேன்! சம்மதமா?’ என்று கேட்டது அந்த நரி.

“சரி, தருகிறேன், நீ எனது மாடுகளைக் காப்பாற்றிக் கொடுத்தால் நான் உனக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ என்று கூறி, நரியின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டான் அந்த விவசாயி.

தனது கோரிக்கை நிறைவேறிவிடும் என்ற எண்ணத்தில், அந்த நரி, அருகிலிருந்த சிறிய குன்றின் மீது ஏறி நின்று கொண்டது.

பின்னர் பின்வருமாறு ஓங்கிக் குரல் கொடுத்தது:

“ஏ! உழவனே, இந்த நாட்டின் இளவரசன் வேட்டைக்கு வந்து கொண்டிருக்கிறான். இந்தச் சமயத்தில் யாரங்கே மரியாதையில்லாமல் உன்னுடைய வண்டிக்குக் கீழே படுத்துக் கிடப்பது?’

விவசாயிக்கு நரி தந்திரம் புரிந்து போனது. உடனே, “அது வேறொன்றுமில்லை! என் வண்டிக்குக் கீழே ஒரு விறகுக் கட்டைதான் கிடக்கிறது’ என்றான்.

“அது விறகுக் கட்டையா! அது விறகுக்கட்டை என்றால், அது ஏன் வண்டிக்குக் கீழே கிடக்க வேண்டும்? வண்டியின் மேல் அல்லவா இருக்க வேண்டும்!’ என்றது நரி.

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஓநாய், பயந்து போய், உழவனை நோக்கி, “உழவனே, என்னைத் தூக்கி வண்டியின் மேலே போட்டுவிடு’ என்று கெஞ்சியது.

உழவனும் அவ்வாறே செய்தான். பிறகு தனது உழவு வேலையைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தான்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்த நரி, இன்னொரு குன்றின் உச்சிக்குச் சென்று நின்று கொண்டு, முன்பு மாதிரியே பெருங்குரலெடுத்துக் கத்தியது –

“ஏ, உழவனே! வேட்டைக்கு வந்த இளவரசன் இப்போது நம் அருகிலேயே வந்துவிட்டான். அங்கே, உன் வண்டியின் மேலே இருப்பது யார்?’

உழவன் முன்பு சொன்னது போலவே, பதில் சொன்னான்: “அது வேறொன்றுமில்லை… எனது வண்டியின் மேலே ஒரு விறகுக்கட்டைதான் கிடக்கிறது!’

நரி தொடர்ந்து சொன்னது: “என்னது? அது விறகுக் கட்டையா? வண்டியின் மேலே கிடப்பது விறகுக்கட்டை என்றால் அது ஏன் சும்மா கிடக்கிறது? வண்டியின் மேல் விறகுக் கட்டையைக் கயிற்றால் கட்டியல்லவா போட வேண்டும்?’

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஓநாய்க்கு பயம் அதிகரித்தது!

உழவனை நோக்கி, “நண்பா, என்னை உடனடியாக வண்டியின் மேலே கட்டிப் போடு. இளவரசன் வரும் நேரத்தில், ஏதாவது வம்பில் மாட்டிக் கொள்ளப் போகிறேன்’ என்று கெஞ்சியது!

உழவனும் இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து ஒரு கயிற்றை எடுத்து, ஓநாய் சிறிதும் அசைய முடியாதபடி மிகவும் இறுக்கமாகக் கட்டிப்போட்டுவிட்டான்.

இப்போது அந்த நரி, அருகிலிருந்த மூன்றாவது குன்றின் மேலே ஏறி நின்று குரல் கொடுத்தது:

“ஏ! உழவனே, வேட்டைக்கு வந்த இளவரசன் வேட்டையாடிவிட்டுப் போய்விட்டான். உன் வண்டியின் மேலே கிடப்பது யார்?’

உழவன் மிகவும் சாமர்த்தியமாகச் சொன்னான்: “‘வேறு ஒன்றுமில்லை! ஒரே ஒரு விறகுக்கட்டைதான் கிடக்கின்றது?’

ஆமாம்..! நன்றாக இறுகக் கட்டப்பட்டுக் கிடக்கும் அந்த ஓநாய், இப்போது வெறும் விறகுக்கட்டைதானே! அந்த ஓநாயினால் இனி ஆபத்து இல்லை என்று அறிந்து கொண்ட உழவன் கவலை ஏதுமின்றி பாட்டுப் பாடிக் கொண்டே மகிழ்ச்சியுடன் தனது வேலையைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தான்.

– மு.பழனி இராகுலதாசன் (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *