சிறுகதைகளில் சமூகச் சிக்கல்கள் – முனைவர் அ.தேவகி

 

சிறுகதைகள் சமூகத்தை அடிப்படையாய்க் கொண்டு எழுந்தவையாகும். சமூகத்தில் காணும் குறைபாடுகளையும், சிக்கல்களையும் சிறுகதைகள் வெளிப்படுத்தத் தவறுவதில்லை. சமூகச் சிக்கல்களைக் கதைக்கருவாகக் கொண்டு சிறுகதைகள் உருவாகியுள்ளன. அவற்றிற்குத் தீர்வுகளையும் கண்டுள்ளன. சில சிறுகதைகள் புரட்சிக் கருத்துகளாகி நம்மைச் சிந்திக்கவும் வைக்கின்றன.

சிறுகதைகள், சமூகத்தை வெளிப்படுத்தும் அளவில் அவை சமூகக் கடமையாற்றுவதை அறிய முடிகிறது. அவை மக்களுக்குச் சமூகம் சார்ந்த அறிவினைக் கொடுத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சமூகச் சிந்தனைகளுக்கும் இடம்தருகின்றன. இப்பகுதியில் சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்தும் சிறுகதைகளாக மூன்று சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றைக் காணலாம்.

மு.வரதராசனாரின் ‘குறட்டை ஒலி’

சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்தும் சிறுகதைகளில் முதலாவது சிறுகதையாக இது இடம்பெற்றுள்ளது. இதன் கதைச்சுருக்கத்தைப் பார்க்கலாம்.

கதைச் சுருக்கம்
பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை வெளிப்படுத்தும் சிறுகதையாக இது விளங்குகிறது. ஓரிடத்தில் குடியிருக்கும் வடபகுதி மற்றும் தென்பகுதியில் வாழும் குடும்பங்களைப் பற்றி மேல்மாடியில் குடியிருப்பவர்கள் பார்த்த காட்சிகளாகக் கதை விவரிக்கப்படுகிறது. கணவன், மனைவி, ஆறு குழந்தைகள், பாட்டி, ஒரு நாய் என்று தன்பகுதியில் இருப்பவர்களின் குடும்பம் பெரிது. அவர்களின் வறுமையும் பெரிது. வடபகுதியில் வாழ்பவர்கள் செல்வத்தால் செழித்தவர்கள். குழந்தை இல்லாத நிலையில் கணவன், மனைவி என்று இருவர் மட்டுமே இருந்தனர். அதனால் அவர்கள் வீட்டில் வைத்த பொருட்கள் வைத்த இடத்தில் இருந்தன. அப்பகுதி தூய்மையானதாகத் தும்மல், இருமல், ஏப்பம், கொட்டாவி தவிர எந்த ஒலியும் இல்லாமலிருந்தது. தென்பகுதிக் குடும்பமோ ஆரவாரம் மிக்கது. அங்கு குழந்தைகளின் அமர்க்களமும், குழந்தைகளைத் தண்டிக்கும் வகையில் போலீஸ் நிலையம், நீதிமன்றம், சிறைக்கூடம் எல்லாமும் இருந்தன. பாட்டி மருமகளைத் திட்டிய நேரம் போக, எஞ்சிய நேரத்தில் இடைவிடாத இருமல் ஓசையையும், பாக்கை உலக்கையால் தட்டும் ஒலியையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். இடையிடையே நாய் குரைக்கும் ஒலி எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருக்கும். வடபகுதியில் இருந்தவர்களுக்கு இது சற்றும் பிடிக்காததால், மனம் ஒன்றாத நிலையிலேயே இரு பகுதியினரும் வாழ்ந்து வந்தனர்.

நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த ஏழையின் மனைவி ஒரு நாள் ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை அடிக்கடி அழுது கொண்டிருந்தது வடபகுதியினருக்கு எரிச்சலாக இருந்தது. சில நாட்களில் ஏழையின் வீட்டு நாயும் குட்டிகளை ஈன்றது. மூன்றாவது நாள் வெளியில் சென்ற தாய் நாய் திரும்பிவரவில்லை. பாலின்றிக் குட்டிகள் ஓயாமல் கத்திக் கொண்டிருந்தன. பாட்டி, மருமகளிடம் குட்டிக்குக் கஞ்சியாவது வார்க்கக் கூடாதா? என்றாள். அதற்குக் கஞ்சி வார்த்தால் குட்டிகள் செத்துப்போகும் என்றாள் மருமகள். பிள்ளைகளை அனுப்பித் தாய்நாயைப் பிடித்துக்கொண்டு வரச்சொன்னாள் மருமகள். கணவன் வந்ததும் அவனையும் தேடிவர அனுப்பினாள். நாயை முனிசிபாலிட்டியில் பிடித்துச் சென்றிருந்ததால் நாளைதான் மீட்கமுடியும் என்றான் அவன். குட்டிகள் இரவெல்லாம் கத்திக் கொண்டிருக்குமே என்று வருந்தினாள். அதற்குள் செல்வரின் மனைவி ‘நாய்க்குட்டிகளின் சத்தம் தாங்க முடியவில்லை. அதை எங்கேயாவது கொண்டு போய் விட்டுவிட்டு வரச்சொல்லுங்கள்’ என்றாள். மேல்மாடியில் இருப்பவர்களும் அதைக் கேட்டுவிட்டு, ஏழையின் மனைவியிடம் கூற, ‘நாளை பணம்கட்டி நாயை மீட்டு வந்துவிடுவோம். அதுவரை பொறுத்துக்கச் சொல்லுங்கள்’ என்றாள். அதை வட பகுதியினரிடம் அவர்கள் தெரிவிக்க, அவர்கள் கதவு, சன்னல்களை அடைத்துக்கொண்டு தூங்க முடிவு செய்தனர். வட பகுதியினர் குங்குமப்பூப் போட்டுச் சுண்டக்காய்ச்சிய பாலை அருந்தி விட்டு, ஏப்பம் விட்டுவிட்டு உறங்கச் சென்றனர்.

ஏழையின் மனைவி, கணவன் உட்பட அனைவரும் உறங்கியபிறகு, குட்டிகளை வருடிக் கொடுத்துக்கொண்டு தன் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கக்கூட மறந்தாள். இரவு வெகுநேரம் வரை குட்டிகள் கத்திக் கொண்டேயிருந்தன. சிறிதுநேரத்தில் அவற்றின் ஒலியும் குறையத் தொடங்கியது. அதற்கு என்ன காரணம் என்று அறியும் பொருட்டு மேல் மாடியினர் எட்டிப்பார்த்தனர். அந்த ஏழையின் மனைவி தாய்ப்பாலைக் கொட்டாங்கச்சியில் எடுத்து அதைப் பஞ்சில் நனைத்துக் குட்டிகளின் வாயில் வைத்தாள். குட்டிகள் அதைச் சுவைத்துச் சுவைத்து அமைதியாயின. சிறிது நேரத்தில் பசியடங்கிக் குட்டிகள் உறங்கத் தொடங்கின. அதைப்பார்த்துத் திருப்தியடைந்தவளாய் ஏழையின் மனைவி மகிழ்ந்தாள். இதைப் பார்த்து மேல்மாடியினரும் மனத்தில் பாரம் குறைந்த நிலையில் படுக்கச் சென்றனர். ஏப்ப ஒலி வந்த திசையில் குறட்டை ஒலி வந்துகொண்டிருந்தது என்பதோடு கதை நிறைவடைகின்றது.

கதை காட்டும் சிக்கல்கள்
இக்கதையின் மூலம் பொருளாதார அடிப்படையில் மாறுபடும் சமூகச் சிக்கல்கள் காட்டப்படுகின்றன. வசதியிருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவாத நிலையிலேயே பொருளாதாரச் சிக்கல் அதிகமாவது காட்டப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்னடைந்தவர்களிடம் பிற உயிர்களின் உணர்வுகளைப் போற்றும் பண்பு இருப்பது காட்டப்படுகிறது. செல்வம் மிக்கவர்கள் சுயநலவாதிகளாக இருப்பதையும் அறியமுடிகிறது. இதுவே சமூகச் சிக்கல்களுக்கும், குறைபாடுகளுக்கும் இடம் தருவதாக உள்ளது. தென்பகுதியினரின் ஆரவாரமும், அழுகுரலும் பொருளாதாரச் சிக்கலைத் தெளிவுபடுத்துவதாயுள்ளன. வடபகுதியினரின் ஏப்ப ஒலியின் மூலம் ஏற்றத் தாழ்வுமிக்க சமூகங்களை அறியமுடிகின்றது. இதன் மூலம் மனிதநேயம் இல்லாத வசதி படைத்தவர்கள் சமூகச் சிக்கல்களைத் தூண்டி விடுபவர்களாகவே காட்டப்படுகின்றனர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாகவே சமூகச் சிக்கல்கள் ஊக்குவிக்கப்படுவதை அறிய முடிகின்றது.

தீர்வுகள்
இக்கதை குறைபாடுடைய மனிதர்களையும், மனிதநேயம் இல்லாத மனிதர்களையும் சுட்டி, அவர்களைப் போன்றவர்கள் பிறருக்கு உதவுவதன் மூலமே சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்பதைக் கூறுகிறது. வடபகுதியினர் தாங்கள் அருந்தும் பாலில் ஒரு சிறிது அந்த நாய்க்குட்டிகளுக்குக் கொடுத்திருந்தால்கூட அவற்றின் சிக்கல்களைப் போக்கியிருக்கலாம். குழந்தையில்லாத அவர்கள் ஏழைக்குடும்பத்தினரின் பொருளாதார இடர்ப்பாடுகளை ஓரளவிற்குக் குறைத்திருக்கலாம். இவற்றிற்கெல்லாம் மனமில்லாத அவர்கள் ஏழ்மையைக் கேலிசெய்து பேசுவது (பால் வாங்கக் காசு இல்லாதவங்க ஏன் நாயை வளர்க்க வேண்டும்) என்பது குறைபாடுடைய மனிதர்களைக் காட்டுவதாயுள்ளது. இந்நிலையில் மனிதநேயம் மிக்க மனிதர்கள் சமூகத்தில் உருவாக வேண்டும். வசதிபடைத்தவர்கள் மற்றவர்களைப் புண்படுத்தாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். பிறர் துன்பத்தில் பங்குகொள்ளாத மனிதர்களைச் சமூகம் ஒதுக்க வேண்டும் என்பது தீர்வு ஆகின்றது.

இதுபோன்ற செயல்பாடுகள் மூலமே சமதர்மச் சமுதாயத்தை உருவாக்க முடியும். மேலும் சிறுகுடும்ப நெறியினை உணர்ந்து, அதைப்பின்பற்றி வாழ்வதன் மூலமும் ஏழ்மையைக் களையலாம். ஒவ்வொருவரும் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தைச் சமன்படுத்தி வாழ முயற்சிசெய்யும் அளவிலேயே இத்தகைய சமூகப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வுகள் காண இயலும் என்பது தெளிவாகிறது.

இந்துமதியின் ‘ஆமைச் சமூகமும், ஊமை முயல்களும்’

இச்சிறுகதை சமூகச் சிக்கல்களை வெளிக்கொண்டு வரும் இரண்டாவது கதையாக இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன் கதைச்சுருக்கம் பின்வருமாறு அமைகிறது.

கதைச் சுருக்கம்
அஞ்சலையின் குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால் அவள் நான்கு நாட்களாய் வேலைக்கும் செல்லவில்லை. அவள் குழந்தைக்குக் காய்ச்சல், இருமலோடு வயிற்றுப்போக்கும் ஆரம்பிக்கவே தனியார் ஆஸ்பத்திரிக்குப் போக அவளுக்குப் பணம் தேவைப்பட்டது. வேலைசெய்யும் இடத்தில் பணம் வாங்குவதற்காகப் பயந்துகொண்டே செல்கிறாள். வீட்டுக்கார அம்மாள் எது சொன்னாலும் கோபப்படக்கூடாது என்ற எண்ணத்தோடு செல்கிறாள். மாறாக அந்த அம்மாள் குழந்தை நன்றாக ஆனால்தானே அஞ்சலை வேலைக்கு வருவாள் என்ற எண்ணத்தில் கோபப்படவில்லை. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் டாக்டரின் பெயரைக்கூறி அவரிடம் சென்று வைத்தியம் பார்த்துவரப் பணம் கொடுத்து அனுப்புகிறாள். ‘காலையில் சீக்கிரம் சென்று டாக்டரைப் பார்த்துவிடு, இல்லாவிட்டால் கூட்டம் வந்துவிடும்’ என்கிறாள். ‘அப்புறம் எப்ப வேலைக்கு வரே’ என்று கேட்டவளுக்கு அஞ்சலை, ‘குழந்தை கொஞ்சம் நல்லானாக் கூட நாளைக்கே வந்து விடுவேன்’ என்று கூறிச் செல்கிறாள்.

மறுநாள் ஆறுமணிக்குக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தனியாகக் கிளம்புகிறாள். குழந்தைக்கு ஒரு மாற்றுத்துணி எடுத்துக்கொண்டாள். வீட்டில் சோறு இல்லாத காரணத்தால் டீக் குடித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கிளம்பினாள். டீக்கடை மூடியிருந்ததால் டீயும் குடிக்காமல் கிளம்பினாள். பஸ் வந்தது. கூட்டம் இல்லாததால் ஏறி அமர்ந்தாள். பஸ்ஸில் அமர்ந்திருந்த காய்கறி விற்பவர்கள் ‘கொட்டும் பனியில் காய்ச்சல் இருக்கிற குழந்தையை இப்படியா தூக்கி வருவே? கொஞ்சம் நேரம் கழித்துக் கிளம்பக் கூடாதா?’ என்று திட்டுகின்றனர். ‘சீக்கிரம் போனால்தான் டாக்டரைப் பார்க்க முடியுமாம்’ என்று கூறிக்கொண்டே இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கினாள்.

டாக்டர் வீட்டை அடைந்தபோது நான்கு கார்கள் வெளியில் நின்று கொண்டிருந்தன. ஆறு பேர்கள் உள்ளே அமர்ந்திருந்தனர். எல்லோரும் விழாவுக்கு வந்தவர்கள்போல் மேக்கப் போட்டிருந்தனர். குழந்தைகளும் அந்த மாதிரியே தெரிய, தான் மட்டும் வித்தியாசப்பட்டிருப்பதை உணர்ந்தாள். அவர்கள் யாரும் அவளுக்கு இடம்கொடுக்கவில்லை. யாருக்குப்பின் தான் செல்லவேண்டும் என்பதையும் அவளால் நிச்சயிக்க முடியவில்லை. இவர்கள் அனைவரும் போன பின்புதான் போகவேண்டும் என்ற நிலையில் வெளியில் கான்கிரீட் தரையில் அமர்ந்தாள். அவள் உட்காரக் காத்திருந்ததுபோல் குழந்தை வெளிக்குப் போயிற்று. வேறு துணியில்லாத காரணத்தால் அதே துணியை அப்படியே மடித்துப் போட, உள்ளே அமர்ந்திருந்தவர் முகம் சுளித்தார். அதைப் பார்த்ததும் ‘இவர்களுக்கு என் நிலை வந்தால் தெரியும்’ என்று எண்ணிக் கொண்டாள். அப்பொழுது இரண்டு கார்கள் வந்தன. அவர்கள் முன்னவர்களை விட அதிகமாக மேக்கப் செய்து கொண்டிருந்தனர். அழகாய் ஆங்கிலம் பேசினர். அவர்களைப் பார்த்தவுடன் உள்ளே இருந்தவர்கள் எழுந்து இடம் கொடுத்தனர். ‘அடப் பாவிகளா, குழந்தையைப் பனியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் எனக்கு இடம்கொடுக்கத் தோணலை’ என்று முணுமுணுத்தாள்.

அதன்பின் குழந்தை மீண்டும் வாந்தி எடுத்தது. மாற்றுத் துணியில்லாமல் புடவைத் தலைப்பில் போர்த்தினாள். அதன் பின்னரும் ஸ்கூட்டர் மற்றும் கார் வந்தது. காரில் வந்தவர் டாக்டரைப் பார்க்க நேரே உள்ளே சென்றார். டாக்டரும் அவரை வரவேற்றார். இங்ஙனம் அடுத்தடுத்து வந்தவர்கள் டாக்டரைப் பார்க்கச் சென்றனர். அஞ்சலையால் நான்தான் அடுத்துப் போகவேண்டும் என்று சொல்ல வாய்வரவில்லை. அதற்குள் குழந்தையும் பாலின்றி அழுது ஓய்ந்து தூங்கிவிட்டது. எல்லோருக்கும் கடைசியாக அவள் டாக்டரைப் பார்க்கச் சென்றபொழுது ‘பதினொரு மணிக்குமேல் நான் பார்க்கிறது இல்லைன்னு தெரியாதா? உன் வேலையை முடித்துக்கொண்டு நிதானமாய் வந்தால் எப்படி’ என்று கேட்க. அவள் ஒன்றும் பேசவில்லை. ‘குழந்தைக்கு என்னென்று சொல்லு’ என்றபோது பயத்தில் வார்த்தைகள் வராதவளாய் உதட்டைக் கடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள் என்பதோடு கதை நிறைவடைகின்றது.

கதை காட்டும் சிக்கல்கள்
ஆமைச் சமூகமும், ஊமை முயல்களும் என்ற தலைப்பே சிக்கலைக் கூறுவதாய் உள்ளது. அஞ்சலையைப் போன்ற ஊமை முயல்கள் இருக்கும் வரை ஆமைச் சமூகமாக இருந்தாலும் அது முயலைத் தோற்கடித்து, சிக்கலையே உண்டாக்கும் என்பது உணர்த்தப்படுகிறது. நாகரிகம் இல்லாதவர்களையும், வசதி குறைந்தவர்களையும் சமூகம் ஏற்றுக்கொள்ளாத நிலை சிக்கலுக்கு உரியதாகக் காட்டப்படுகிறது. பகட்டு வாழ்க்கைக்கு உரியவர்களையே சமூகம் ஏற்றுக்கொள்வது சமூகக் குறைபாட்டினைக் காட்டுவதாயுள்ளது. அஞ்சலை குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் நிலையில், அவளுக்கு எந்த உதவியும் செய்ய முன்வராத சமூக அமைப்பு சிக்கலை அதிகப்படுத்துவதாய் உள்ளது. அஞ்சலை, தனக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம் டாக்டரைப் பார்த்துவிட்டுச் செல்வதைப் பார்த்தும், அவர்களிடம் ‘அவள் சென்ற பிறகு தான் மற்றவர்கள் செல்ல வேண்டும்’ என்று கூறாதநிலையில் அவளுக்கு மேலும் மேலும் சிக்கல்கள் ஏற்படுவதைக் காண முடிகிறது. தனிமனிதர்கள் தங்களின் உரிமையை, தங்கள் நிலையினை நிலைநாட்டிக் கொள்ளாவிட்டால் இதுபோன்ற சிக்கல்களே ஏற்படும் என்பது காட்டப்படுகிறது. இறுதியில் டாக்டர், ‘முன்னாடியே வந்திருக்க வேண்டியதுதானே’ என்று கேட்கும்பொழுது, அவரிடமும் வாய்திறந்து தன் நிலையைச் சொல்லாமலிருப்பது சிக்கல்களை ஊக்குவிப்பதாக அமைகிறது. இச்சிறுகதையில் உயர்மட்டச் சமூகம், கீழ்மட்டச் சமூகம் என்று சமூக அமைப்புகள் மாறுபடும்பொழுதுதான் சிக்கல்கள் எழுவதாகக் காட்டப்படுகிறது.

தீர்வுகள்
தனிமனிதர்கள் தங்கள் உரிமையைப் பெறுவதிலும், சமத்துவத்தை நிலைநாட்டுவதிலும் அக்கறை கொள்வது சிக்கலைத் தவிர்க்க உதவும். அஞ்சலை படிக்காதவள். கீழ்மட்டத்தைச் சார்ந்தவள். தன்னைச் சுற்றி நடப்பது அநியாயம் என்று தெரிந்தாலும் அவளால் அதை எதிர்த்துக் கேட்க முடிவதில்லை. இதற்குக் காரணம் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவள் தாழ்வு மனப்பான்மை கொள்வதுதான். இந்நிலை மாற வேண்டுமெனில் தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் கல்வியறிவினைக் கீழ்மட்டத்தினரும் பெறவேண்டும். அங்ஙனம் பெறுவதன் மூலமாக அவர்கள் மேல்மட்டத்தினரை எதிர்கொள்ள முடியும். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதை உணர்ந்து செயல்பட முடியும். மேலும் மனிதநேயத்தோடு ஒவ்வொருவரும் செயல்படுவதன் மூலம் இத்தகைய குறைபாடுகளுக்கான தீர்வுகளைக் காண இயலும்.

அறிஞர் அண்ணாவின் ‘செவ்வாழை’

சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்தும் சிறுகதைகளுள் இது மூன்றாவது சிறுகதையாக இடம்பெற்றுள்ளது. இதன் கதைச்சுருக்கத்தைப் பின்வருமாறு காணலாம்.

கதைச் சுருக்கம்
செங்கோடன் அந்தச் செவ்வாழைக் கன்றைச் செல்லப்பிள்ளைபோல வளர்த்து வந்தான். தன் நான்கு குழந்தைகளிடம் காட்டும் அதேயளவு பாசத்தை அந்தச் செவ்வாழையின் மீதும் வைத்திருந்தான். அவன் செவ்வாழை மீது காட்டிய அக்கறை அவன் மனைவி குப்பிக்குச் சில வேளைகளில் பொறாமையைக்கூட ஏற்படுத்தியது. ‘குப்பீ! மரத்தை பத்திரமாய் பார்த்துக்கோ. மாடுகீடு வந்து மிதிச்சிவிடப் போவுது. செவ்வாழைன்னா சாதாரணமில்லே. ரொம்ப ருசி. பழத்தைக் கண்ணால் பார்த்தால்கூடப் பசியாறிப்போகும்’ என்று அவன் மனைவியிடம் பெருமையாகப் பேசுவான். இதே பெருமையை அவளின் குழந்தைகளும் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளிடமும் பரிமாறிக் கொள்வர். அவர்கள் பெருமை பேசுவதற்கு மோட்டார், ரேடியோ, வைரமாலை இல்லாத காரணத்தால் செவ்வாழை அவர்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

மூத்த பையன் கரியன், ‘செவ்வாழை குலை தள்ளியதும் ஒரு சீப்பு எனக்குத்தான்’ என்பான். அதற்கு எதிர்க் குடிசை எல்லப்பன், ‘நான் உனக்கு மாம்பழம், வேர்க்கடலை தந்திருக்கிறேன். நினைவு இருக்கட்டும். எனக்கும் பங்கு வேண்டும்’ என்பான். அவன் தங்கை காமாட்சியோ, ‘உனக்கு ஒரு சீப்புன்னா, எனக்கு இரண்டு தெரியுமா? அம்மாவைக் கேட்டு ஒன்று அப்பாவைக் கேட்டு ஒன்று’ என்றாள். மூன்றாவது பையன் முத்து, ‘சீப்புக்கணக்குப் போட்டு ஏமாந்திராதிங்க; பழமாவதற்குள் யார் யார் என்ன செய்வார்களோ, யார் கண்டாங்க’ என்றான். திருடியாவது மற்றவர்களை விட அதிகமாகத் தின்றுவிட வேண்டும் என்று தீர்மானித்தே விட்டான்.

செங்கோடன் வேலைசெய்யும் பண்ணையில் உழைப்பு அதிகம். மானேஜரின் ஆர்ப்பாட்டமும் அதிகம். இவ்வளவையும் சகித்துக் கொள்வான். செவ்வாழையைப் பார்த்ததும் சகலமும் மறந்துபோகும். இந்தச் ‘செவ்வாழை’ ஒன்றுதான் அவன் சொந்தமாக, மொத்தமாகப் பலன் பெறுவதற்கு உதவக்கூடிய உழைப்பு. இதன் முழுப்பயனும் தன் குடும்பத்துக்கு. இதில் பண்ணையார் குறுக்கிட முடியாது என்ற சந்தோஷம் அவனுக்கு. செவ்வாழையைப் பார்த்தவுடன் அவன் பூரிப்படைவதற்கு இதுவே காரணம். செவ்வாழை, குலை தள்ளிற்று. செங்கோடனின் நடையிலேயே ஒரு புது முறுக்கு ஏற்பட்டது. பண்ணையாரின் மருமகப்பெண் அணிந்திருந்த வைரமாலையை விடச் செவ்வாழை மதிப்புள்ளதாகத் தோன்றியது. பண்ணையாரின் நிலத்திற்காகச் செலவிட்ட உழைப்பில் இது நூறில் ஒரு பாகம்கூட இராது. இருந்தாலும் உழைத்ததன் பலன் முழுதும் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் பண்ணையாருக்கு வயல் சொந்தமானதாக இருப்பதால் பெரும் பகுதிப் பலனை அவர் அனுபவிக்கிறார். உழைப்பவனுக்கு நிலம் சொந்தம், பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும் காலம் எப்போதாவது வருமா? இங்ஙனம் பலவாறு அவன் எண்ணினான். பண்ணையாரின் மருமகப்பெண் முத்துவிஜயாவின் பிறந்தநாளைக் கொண்டாட வாழைப்பழம் தேவைப்பட்டது. சமயம் பார்த்துக் கணக்குப்பிள்ளை சுந்தரம், ‘கடையில் நல்ல பழங்கள் இல்லை. நம் செங்கோடனின் கொல்லையில் தரமாக ஒரு செவ்வாழைக்குலை இருக்கு. அதைக் கொண்டு வரலாம்’ என்று கூற, பண்ணையாரும் சரி என்றார்.

செங்கோடனின் உழைப்பு, இன்பக்கனவு, மகிழ்ச்சி, பெருமை, நம்பிக்கை இவற்றிற்கு மரண ஓலை தயாரித்துவிட்டான் சுந்தரம். தெருவிலே சென்ற செங்கோடனிடம் இதைப்பற்றிக் கூற, அவனுக்குத் தலைசுற்றியது; நாக்குக் குழறியது. இதைத் தரமாட்டேன் என்று சொன்னால் ஊர் ஏசும். ‘அப்பா! ஆசைகாட்டி மோசம் செய்துவிடாதே. நாங்கள் என்ன காசு போட்டுத் திராட்சை, கமலாவா? வாங்கித்தரச் சொல்கிறோம். நம் கொல்லையில் வளர்த்தது அல்லவா?’ குழந்தைகள் அழுகுரலுடன் கேட்பது மனக்கண்ணில் தெரிந்தது. கோபத்துடன் எதிர்க்கும் மனைவியும் அவன் கண்ணில் தென்பட்டாள். ஆனால் எதிரே நிற்பவனோ பண்ணைக் கணக்குப்பிள்ளை. என்ன செய்வது?

அரிவாளை எடுத்துக் குலையை வெட்ட, குழந்தைகள் ஆசையுடன் சூழ்ந்து கொண்டனர். குலையைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டனர். செங்கோடன் கண்களில் நீர்துளிர்த்தது. ‘கண்ணு! இந்தக் குலை ஆண்டைக்கு வேணுமாம்; கொண்டு போறேன். அழாதீங்க. அடுத்த மாதத்தில் இன்னொரு குலை தள்ளும். அது உங்களுக்குத் தான்’ என்று கூறி எடுத்துச்சென்றான். செங்கோடனின் குடிசை அன்று பிணம் விழுந்த இடம் போல் ஆயிற்று. அழுது அழுது குழந்தைகள் களைத்துத் தூங்கி விட்டன. செவ்வாழையைச் செல்லப்பிள்ளைபோல் வளர்த்து என்ன பலன்? பண்ணை ஆயிரம் குலைகளை நினைத்த மாத்திரத்தில் வாங்க முடியும். ஆனால் செங்கோடன் ஒரு குலைக்காக எவ்வளவு பாடுபட்டான்! எல்லாம் ஒரு நொடியில் அழிந்ததை எண்ணி வருந்தினான்.

நான்கு நாட்களுக்குப் பிறகு கோவிலுக்குச் செல்லும் முத்து விஜயாவின் வெள்ளித்தட்டில் ஒரு சீப்புச் செவ்வாழை. கணக்குப்பிள்ளை நாலு சீப்புச் செவ்வாழையைக் கடைக்காரனுக்கு விற்றிருந்தான். அது கடையில் தொங்கிக் கொண்டிருந்தது. நாலு நாட்களாகச் சமாதானம் கூறியும் அடங்காத கரியனுக்குக் குப்பி காலணாக் கொடுத்துக் கடையில் பழம் வாங்கிக் கொள்ளச் சொன்னாள். ஆனால் கடைக்காரனோ காலணாவுக்குத் தரமுடியாது என்று விரட்டினான். அவனுக்குத் தெரியுமா அவன் வீட்டில் விளைந்த பழம் எட்டாத உயரத்தில் இருக்கிறது என்று. வறுத்த கடலை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான். அப்பொழுது செங்கோடன் வாழை மரத் துண்டுகளுடன் கொல்லையிலிருந்து வந்தான். கரியன் ‘இதுவும் பண்ணை வீட்டுக்கா?’ என்றான். ‘இல்லப்பா, நம்ம பார்வதிப் பாட்டி இறந்திட்டாங்க. அவங்க பாடையில் கட்ட’ என்றான். இதைக் கேட்டவுடன் கரியன் பெருமையாகப் பாடையைக் காட்டி, ‘எங்க வீட்டுச் செவ்வாழைடா’ என்றான். ‘செங்கோடனின் செவ்வாழை தொழிலாளர் உலகிலே சர்வசாதாரணம்’ என்பதோடு கதை முடிவடைகிறது.

கதை காட்டும் சிக்கல்கள்
இக்கதையில் ஆண்டான் – அடிமைச் சமுதாயச் சிக்கல்கள் வெளிப்பட்டுள்ளன. அதிகார பலத்தைப் பயன்படுத்தி ஏழைகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் சமூக அமைப்புக் காட்டப்படுகிறது. உழைப்பின் பெரும்பகுதி ஆண்டைக்குச் செல்வதால் உழைப்பவர்கள் பலனின்றி, பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஆளாவது காட்டப்படுகிறது. செங்கோடன் கஷ்டப்பட்டு வளர்த்த செவ்வாழையின் பயனைப் பிறர் அடையும் நிலையில் அவனும், அவன் குழந்தைகளும் அதைக் கொஞ்சமும் அனுபவிக்காமல் அவலத்திற்கு ஆளாகும் சிக்கல், சமுதாயச் சிக்கலாகிறது. ‘செங்கோடனின் செவ்வாழை தொழிலாளர் உலகிலே சர்வ சாதாரணம்’ என்பதன் மூலம் தொழிலாளர்களின் சிக்கல்கள் வெளிப்படுகின்றன. பிறரின் துன்பத்தில் இன்பம் காணும் சுந்தரம் போன்றவர்கள், சமூகச் சிக்கல்களுக்குக் காரணமானவர்களாகக் காட்டப்படுகின்றனர். ‘உழைப்பவனுக்கு நிலம் சொந்தம்; உழைக்காதவனுக்கு நிலம் இல்லை’ என்ற நிலையை எதிர்நோக்கியிருக்கும் சமூகம், சிக்கலுக்கு உரியதாகக் காட்டப்படுகிறது.

தீர்வுகள்
இச்சிறுகதை காட்டும் சிக்கல்களுக்கான தீர்வுகள் படைப்பாளரால் கதை முழுவதிலும் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன. அதிகாரவர்க்கமாக இருந்தாலும் சரி, தொழிலாளர் வர்க்கமாக இருந்தாலும் சரி ‘உழைப்பவர்களுக்கே பலன் சேர வேண்டும்’ என்ற நிலை ஏற்படின் தீர்வுகள் ஏற்படும். ‘உழைப்பவர்களுக்கே நிலம் சொந்தமாக வேண்டும்’ என்ற நிலை ஏற்படின் தொழிலாளர்களின் பொருளாதார இடர்ப்பாடுகளைப் போக்க முடியும் என்பது உரைக்கப்படுகிறது. அதிகாரத்தைப் பயன்படுத்தி, மற்றவர்களை அல்லல்படுத்தும் நிலை மாற வேண்டும். மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்பதும் தீர்வுகளாகின்றன. உழைப்புக்கு ஏற்ற பலன் ஒவ்வொருவருக்கும் கிட்டும்போது சமூகச்சிக்கல்களுக்குத் தீர்வுகள் கிட்டிவிடும் என்பது இக்கதையின் மூலம் உணரமுடிகிறது. படைப்பாளர் மூலம் சமதர்மச் சமூகம், ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூகம், உழைப்புக்கு உயர்வு அளிக்கும் சமூகம் ஆகியவைகள் உருவாவதன் மூலமே ஆண்டான் – அடிமை மற்றும் முதலாளி – தொழிலாளி சிக்கல்களுக்கு விடைகிட்டும் என்பது உரைக்கப்படுகிறது.

– முனைவர் அ. தேவகி (நன்றி: http://www.tamilvu.org/ta/courses-degree-p203-p2033-html-p2033444-30226)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *